Published:Updated:

சுந்தரர் திருப்பாட்டு அருளுரை விழா!

சுந்தரர் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
சுந்தரர் திருவிழா ( சுந்தரர் விழா )

சுந்தரர் திருவிழா

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள சிவத்தலம் தெற்கு மலையம்பாக்கம் - ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோயில். இங்கு கடந்த 14.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘சுந்தரர் திருப்பாட்டு விழா’ நடைபெறுவதை அறிந்து அங்கு சென்றோம்.

அடியார்கள் திருக்கூட்டத்தால் நிறைந்திருந்தது ஊர். மேடை யில் ‘தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்’ அருளுரை ஆற்றினார். `‘திருவமுது செய்விக்க ஓர் அடியாரைக்கூட காணோமே என்று சிறுத் தொண்டர் தவித்ததாகப் பெரிய புராணம் கூறும். ஆனால் இங்கு நூற்றுக்கணக்கில் அடியார்கள் குழுமியுள்ளீர்கள். என்னே நான் செய்த தவம்...'’ என்று தொடங்கிய அவரின் மடை திறந்த பேச்சும், திருமுறை பாடல்களுமாய் அந்த இடமே சிவலோகமானது எனலாம்!

மகாலிங்க சுவாமி
மகாலிங்க சுவாமி
மரகதாம்பிகை
மரகதாம்பிகை

``தெற்கு மலையம்பாக்கம் சிவாலயத் திருப்பணி விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்'' என்று சுவாமிகள் வேண்டுகோள் விடுக்கவும், ஏழைப் பெண்மணி ஒருவர் எழுந்து தன் காதணிகளைக் கழற்றிக் கொடுத்தார். அதைக் கண்டு சுவாமிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கூட்டமும் நெகிழ்ந்துபோனது. அனைவரும் அவரை வாழ்த்தினர். இப்படிப் பலவித நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் அன்று முழுவதும் விழா களைகட்டியது.

சேக்கிழார் அடி போற்றும் உறையூர் ராகவன் ஐயாவின் தொண்டர்களும், திருவாசகச் சித்தர் சிவ.தாமோதரன் ஐயாவின் தொண்டர்களும், வாதவூரடிகளின் தொண்டர்களும் திரளாக வந்திருந்தனர். அனைவரும் சுந்தரரின் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்கள்.

சுந்தரர் விழா
சுந்தரர் விழா

விழாவில் சைதை, கோவூர், குன்றத்தூர், மாங்காடு, அம்பத்தூர், ஆவடி, மவுலிவாக்கம், காட்டுப்பாக்கம், நுங்கம்பாக்கம், திருப்பாச்சூர், திருவோலக்கம் பகுதிகளைச் சேர்ந்த அடியார்களும், அவர்களின் திருக்கூட்டத் தலைவர்களும் பங்கு கொண்டார்கள். அனைவருக்கும் அன்னை மரகதாம்பிகை சமேத மகாலிங்க சுவாமியின் தரிசனத்துடன் சுவையான அன்னதானமும் கிட்டியது.

விழா ஏற்பாடுகளைச் `பூவை சிவனடியார்கள் திருக் கூட்டம்' அமைப்பின் சார்பில் சுடலை முத்துவேல் நடத்திக் கொடுத்தார். அவரிடம் விழாவின் நோக்கம் குறித்துக் கேட்டதும், ‘தெற்கு மலையம்பாக்கம் திருக்கோயிலின் மகிமைகள் மக்களுக்குத் தெரியவேண்டும். அவர்கள் உதவியுடன் கோயிலின் திருப்பணி நடைபெறவேண்டும். அதற்காகவே இவ்விழா'' என்றார்.

மகாலிங்க சுவாமியின் அருளால் அடியார்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்!

ஞானோதயம்
ஞானோதயம்

முதல் நாளிலேயே ஞானோதயம்!

ரு கிராமத்தில், தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன் வாழ்ந்து வந்தான்.

ஞானி ஒருவர் அவனிடம், இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தைத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார்.

அதைப் பெறும் பொருட்டு அந்த ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி. அவனிடம், ``மழையில் போய் நின்றுகொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ``நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான்.

சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ``நல்லது. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!''


- அ.ஸ்வர்ணம், சென்னை-3