
புத்தக விமர்சனம் - கீதை நாயகன்!

ஶ்ரீவில்வ அஷ்டோத்திர ஸதநாமஸ்தோத்திரம்
வெளியீடு : ஶ்ரீதர்மவல்ல அறக்கட்டளை, உடையார்கோயில்.
‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்பது திருமூலர் வாக்கு. சிவ வழிபாட்டில் வில்வம் அர்ச்சனையில் முதலிடம் பெறுகிறது. வில்வம் மகாலட்சுமியின் அம்சம் என்றும் வில்வ இலையால் சிவனை அர்ச்சித்து மகாவிஷ்ணுவின் மார்பில் இடையறாமல் இருக்கும் பேற்றை மகாலட்சுமி அடைந்தாள் என்றும் கூறுவர். எனவே வில்வமரம் `விருட்சம்' என்று அழைக்கப்படும். தேவாரப்பாடல் பெற்ற திருவல்லம், திருக்கொள்ளம்பூதூர், திருவைகாவூர் ஆகிய தலங்களில் இறைவன் வில்வநாதேஸ்வரர், வில்வவனேஸ்வரர் என்று அழைக்கப்பெறுகிறார்.
பிருங்கிரிஷி செய்துள்ள இந்த தோத்திர நூலில் க்ரந்த எழுத்திலும், சம்ஸ்கிருதத் திலும், தமிழிலும் மூல ஸ்லோகங்களுடன் அதன் பொருளைத் தமிழிலும் அருமையாக அச்சிட்டுள்ளார்கள். 113 மந்திர அர்ச்சனையுடன் பல ஸ்ருதியும் சேர்ந்துள்ளது. இல்லத்திலும் திருக்கோயில்களிலும் சிவபிரானுக்கு வில்வ அர்ச்சனை செய்ய மிகவும் உகந்த நூல். சிவநேயச் செல்வர்களுக்கு வரப் பிரசாதம்!

திருமந்திரத்தில் பதி, பசு, பாசம் ஒரு அறிமுகம்
வெளியீடு : திருமூலர் திருமந்திரம் பெருமன்றம்,
சாத்தனூர்.
திருமூலர் அவதாரத் தலமாகிய (திருவாவடுதுறை அடுத்துள்ள) சாத்தனூரில் திருமூலருக்கு ஒரு சிறந்த ஆலயம் அமைத்து, ஆண்டுதோறும் குருபூஜை, பள்ளி மாணவர்களுக்குத் திருமந்திரம் ஒப்புவித்தல் போட்டி, அன்னதானம் ஆகிய பணிகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர் திருமூலர் திருமந்திரப் பெருமன்றத்தார். அத்துடன் ஆண்டுதோறும் திருமந்திரம் தொடர்பான ஒரு பயனுள்ள நூலை வெளியிட்டுத் திருமந்திரச் சிந்தனையை வளர்த்து வருவது பாராட்டிப் போற்றுதற் குரியது.
சைவ சித்தாந்தத்தில் அடிப்படைக் கொள்கையான பதி, பசு, பாசம் ஆகியவற்றை விளக்கும் வகையில், இந்நூல் சீடன் கேட்டும் கேள்விகளுக்கு குரு விளக்கம் தரும் முறையில் அமைந்துள்ளது. ‘வேத ஆகமச் செய்திகளைத் தமிழில் நன்றாகச் சொல்வதே தனக்கு இறைவன் இட்ட ஆணை’ என்ற திருமூலர் கருத்துப்படி வேதம், உபநிடதம், ஆகமம் முதலானவற்றை மேற்கோளுடன் விளக்கி, திருமந்திரத்தை நன்கு புரிந்துகொள்ள இம்மாதிரி ஓர் ஒப்பீட்டு நூல் மிகவும் அவசியம் என்பதை நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணரும் வகையில் தொகுக்கப் பெற்றுள்ளது சிறப்பாக உள்ளது.