விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் தேவாங்கர் குலம் துப்புலார் வம்சக் குலதெய்வம் ஸ்ரீபூலூரு அம்மன் 1986-ம் ஆண்டு முதல் தனிக் கோயிலில் சாமுண்டியுடன் மேற்கூரை இல்லாத தனி சந்நிதி ஒன்றில் தன் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

பூர்வகுடிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் குலதெய்வங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஓர் இனத்தில் குலதெய்வம்தான் பூலூர் அம்மன். மிகவும் சக்தி வாய்ந்தவளாகவும் வேண்டும் வரம் அருள்பவளாகவும் திகழ்கிறாள் பூலூரு அம்மன்.

800 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட வணிகர் ஒருவர் தென்காசி பக்கம் வியாபாரத்துக்குப் போயிருந்தபோது அங்கே ஓர் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். ஒரு சின்னப் பெண் காலில் கொலுசு ஒலிக்க அக்னியிலிருந்து தோன்றி வெளியே வருவதைக் கண்டாள். அவளைத் தொழுது அருள்பெற்ற வணிகர், அந்த தெய்வத்தையே என் குலதெய்வமாகக் கொண்டாள். அவளே பூலூரு அம்மன் என்கிறார்கள். அவள் சௌடம்மனுக்கு அக்கா முறை என்கிறார்கள். அதன்பின் அந்த வணிகர் இனமக்களுக்கு பூலூரு அம்மனே குலதெய்வமானாள்.

1987-ம் வருடம் பூலூர் அம்மனுக்கு அருப்புக் கோட்டையில் கோயில் எடுக்க முடிவு செய்து பூர்வீகக் கோயில் இருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே அம்மனை நிலை நிறுத்தினார்கள். இப்போதும் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று எந்த மூலையில் இருந்தாலும் அந்த ஆண்களும், பெண்களும் தவறாமல் இங்கு நடக்கும் பூஜைக்கு வந்துவிடுவது வழக்கம். பூலூரு அம்மன் கோயிலில் ஸ்ரீசங்கரேஸ்வரர் நந்தியுடன் வீற்றிருக்க, கன்னிமூலை கணபதியும், ஸ்ரீ கல்யாண முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளியிருக்கிறார்.
இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் வைகாசி 10 -ம் நாள் (24/5/23) புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

வேண்டுபவர்க்கு வேண்டியதை அருளும் தெய்வமாகத் திகழும் பூலூரரு அம்மனையும் சௌடம்மனையும் கும்பாபிஷேக தினத்தில் தரிசித்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்கிறார்கள். அத்தகைய வரப்பிரசாதியான அம்பிகையின் கோயிலுக்கு நீங்களும் வந்து வழிபட்டு அன்னையின் அருளுக்குப் பாத்திரராக வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
எப்படிச் செல்வது ? : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஜவஹர் சங்கம் வடக்குத் தெரு, சொக்கலிங்கபுரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
- மோகனா சுகதேவ்