Published:Updated:

ஆலய வழிபாடுகள், தர்மங்கள்... புண்ணிய காரியங்கள் செய்தாலும் நற்பலன்கள் இல்லையே ஏன்?

 ஸ்ரீ கோகணேஸ்வரர்
ஸ்ரீ கோகணேஸ்வரர்

புண்ணிய காரியங்கள் செய்தாலும் நற்பலன்கள் இல்லையே என்று சிலரின் மனதில் வருத்தம் தோய்ந்த கேள்வி எழுவதுண்டு. அதற்கான விடையாய் அமைந்துள்ளது கோகணேஸ்வரர் ஆலயம்.

ஒருவர் எவ்வளவுதான், ஆலய வழிபாடுகள், தர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்தாலும் பித்ருக்கள் வழிபாடு செய்யவில்லை என்றால் நற்பலன்கள் ஏற்படுவதில்லை. பித்ருக்களை வழிபடுவதற்கு உரிய காலங்களாக முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள 'வ்யதீபாதம்' காலங்களில் முறையான வழிபாடு செய்வதன் மூலம் இப்பிரச்னைகள் அகன்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்.

ஆலய
புண்ணிய காரியங்கள்
ஆலய புண்ணிய காரியங்கள்

' வ்யதீபாதம்' என்பது 27 விதமான யோகங்களில் ஒன்று. அத்தகைய யோக தினத்தில் வழிபடுவதற்கு உரிய சிறந்த தலமாக நாகை மாவட்டம் திருவாவடுதுறைஅருகில் திருக்குளம்யியத்தில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தர்யநாயகி சமேத ஸ்ரீகோகணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் இந்நாளில் திருக்குளம்பியம் என்றழைக்கப்படுகிறது.

அம்பிகை பசு உருவில் பால் சொரிந்து பூஜிக்கும்போது, கால் இடறியதால் பசுவின் குளம்பு மூலவரின் பாணத்தில் வடுவாக இருப்பதை இன்றும் காணலாம். அதனாலேயே இத்தலத்து மூலவர் 'ஸ்ரீகுளம்பிய நாதர் என்ற நாமத்தையும் பெற்றுள்ளார். இத்தகைய புராதனமான இந்த ஆலயம் வ்யதீபாத வழிபாட்டுக்கு உரித்தானது எப்படி?

ஸ்ரீகோகணேஸ்வரர்
ஸ்ரீகோகணேஸ்வரர்

கருணைக் கடலான இறைவனின் படைப்பில், எல்லா நேரங்களும் நல்ல நேரங்கள்தான். ஆயினும், குறிப்பிட்ட துல்லியமான கிரகசேர்க்கைகள் ஏற்படும் நேரங்களில் செய்யப்பெறும் வழிபாடுகள், மற்ற நேரங்களில் செய்யப்பெறுபனவற்றைவிட பன்மடங்கு புண்ணியபலன்களை அள்ளித் தருபவைகளாக அமைந்துவிடுகின்றன என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.

இப்படிப்பட்ட யோக காலங்களைத் தெரிவு செய்து வழிபாடுகளை நிகழ்த்துவதன் மூலம் அளவிலாத நன்மைகளை அடைய இயலும்.

பொதுவாக யோகங்களை மூன்று விதமாக முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

1. ஜனன கால ஜாதகத்தில், கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகங்கள்.

2. நட்சத்திர சேர்க்கையின் அடிப்படையில் ஏற்படும் யோகங்கள். (சித்தயோகம், அமிர்த யோகம், மரண யோகம் போன்றவை).

3. சூரிய சந்திரனுக்கிடையே ஏற்படும் தொடர்பால் உண்டாகும் யோகங்கள்.

இந்த மூன்றாவது வகையில் விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 விதமான யோகங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் 'வ்யதீபாதம்'.

இந்த வ்யதீபாத யோகம் சுப யோகத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. இதை அசுப யோகம் என்றே சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இத்தகைய தினங்கள் பித்ரு காரியங்களான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்றவற்றுக்கு மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் மார்கழி மாதத்தில் வரும் 'வ்யதீபாத' தினம் 'மஹா வ்யதீபாதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

ஒரு சமயம் சந்திர பகவானின் பிழையான நடத்தையால் சூரிய பகவான் கோபத்துடன் நோக்க, அவரும் பதிலுக்கு சினத்துடன் பார்த்தாராம். இவ்விருவரின் சினந்த பார்வைக் கலப்பால் தோன்றிய தேவதையின் ஸ்வரூபமே 'வ்யதீபாத' யோகத்துக்கு உரியதாயிற்று. எனவேதான், இது அசுப யோகம் என்று வழங்கப்படுகிறது. இதற்குரிய அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

 ஸ்ரீ சௌந்தர்யநாயகி
ஸ்ரீ சௌந்தர்யநாயகி

பொதுவாக இத்தகைய தினங்களில் காசி, கயை போன்ற தலங்களில்தான் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து , வழிபாடுகள் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோல காவிரிக்கரைத் தலமான திருக்குளம்யியம் எனும் இந்த சிவத்தலமும் வ்யதீபாத வழிபாட்டுக்குரிய மிகச் சிறந்த தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அன்றைய தினத்தில், இத்தலத்து ஆலயத்தில் செய்யப்பெறும் வழிபாட்டில் கலந்துகொள்வோர்க்கு, பித்ரு தோஷங்கள் நீங்கப் பெற்று, சகல க்ஷேமங்களும் உண்டாகும் என்பது தல வரலாறு சொல்லும் செய்தியாகும். இத்தலத்து கோகணேஸ்வரரை அகத்தியர், போகர், கொங்கணர், திருமூலர் முதலான சித்தர் பெருமக்கள் வழிபாடு செய்துள்ளனர் என்பதும், இன்றும் பல சித்தர்கள் அரூபமாக வந்து இத்தலத்து இறையை பூஜிக்கின்றார்கள் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்.

வ்யதீபாத நாள்களில் இந்த ஆலயத்தில் ஹோமங்கள் செய்து, கலச நீரைக்கொண்டு மூலவரை அபிஷேகிக்கும்போது உண்டாகும் அதிர்வுகள் வழிபடுவாரின் மீது படும்போது, அவர்களின் பித்ரு தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது சித்தர்கள் வாக்காகும். அன்றைய தினம் இத்தலத்து ஈசனை '300 நாமாவளிகள் அடங்கிய அர்ச்சனை' செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இக்குறிப்புகள் யாவும் பழைமையான ஓலைச்சுவடிகளில் சித்தர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஒவ்வொரு மாதமும் இக்கோயிலில் நடைபெறும் வ்யதீபாத வழிபாட்டுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் ஜனவரி 1-ம் தேதி மஹா வ்யதீபாத தினமாதலால் அன்றைய நாளில் இவ்வாலயத்தை தரிசித்து, பித்ரு சாபங்கள் நீங்கப்பெற்று, முன்னோர்களின் ஆசிகளோடு, ஸ்ரீ கோகணேஸ்வரரின் அருளையும் பெற்று வாழ்வில் வளம் பெறலாமே !

அடுத்த கட்டுரைக்கு