Published:Updated:

`ஆயிரம் ஆண்டு பழமை.. நான்கு பக்கமும் நீர்'- கடைசியாய் தேவாரப்பாடல் பெற்ற திருவிடைவாய் கோயில்!

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்பது அனைவரும் அறிவர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் கடைசியாய் சேர்க்கப்பட்ட ஆலயம் இது.

ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்
ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்பது அனைவரும் அறிவர். ஆனால் திருவிடைவாய் தலத்தின் மீது, சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் அருளிய பாடல்கள் 1917 -ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக 275 -வது தலமாக ஸ்ரீ அபிராமி உடனாய ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம் சேர்க்கப்பட்டது.

ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்
ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கி.மீ. தூரம் பயணித்தால் திருஇடைவாய் (திருவிடைவாய்) என்றழைக்கப்படும் ஸ்ரீ புண்ணியகோடி நாதர் திருத்தலத்தை அடையலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழைமை வாய்ந்த ஆலயம் கோயிலின் மேற்கே காவிரியின் கிளை நதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ அற்புதமாய் இக்கோயில் அமைந்துள்ளது.

விடையன் என்னும் சூரிய குலத்து மன்னன்இத்தலத்தில் வழிபட்டான் என்றும், அதனால் அந்த மன்னன் பெயரிலேயே இத்தலம் திருவிடைவாசல் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் `விடை' உள்ளது. ஆக சிவனின் விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் இவ்வூர் திருவிடைவாசல் எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் "விடைவாயே' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.

ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்
ஸ்ரீ புண்ணியகோடி நாதர் ஆலயம்

இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பால சாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். ஈசனார், சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ புண்ணியகோடி நாதர் என்ற திருநாமம் கொண்டு அருள்கிறார்.

அம்பாள் ஸ்ரீ அபிராமி வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் கருணையுள்ளம் கொண்டவளாக வீற்றிருக்கிறாள். ``இத்தல ஈசனை வழிபட்டால் பிறவிப் பாவங்கள் விலகும். பல ஆலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமணத் தடை விலகும். புத்திரப் பாக்கியம் கிடைக்கும். உடற்பிணி நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர்" என்பது ஐதிகம்.