Published:Updated:

அயோத்தியில் ராமர் கோயில்! - ராமநாதபுரத்தில் பூஜை செய்த செங்கல்களுடன் பயணமான பக்தர்கள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்தது ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்களை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பூஜை செய்தனர்.

கட்டப்படவுள்ள அயோத்தி ராமர் கோயில்
கட்டப்படவுள்ள அயோத்தி ராமர் கோயில் ( விகடன் )

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு யாக பூஜை செய்யப்பட்ட செங்கல்களை ராமபக்தர்கள் ரயில் மூலம் அயோத்தி எடுத்துச் சென்றனர்.

 அயோத்தி வழக்கு. உச்சநீதிமன்றம் தீர்வு.
அயோத்தி வழக்கு. உச்சநீதிமன்றம் தீர்வு.
விகடன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில் கடந்த 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளின் ஒரே தீர்ப்பாக வழங்கப்பட்ட இதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலையில் இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் எனவும், இக்கோயிலைக் கட்ட தனி அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மேலும், அயோத்தியில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

நாடு முழுவதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டில் எந்தப் பகுதியிலும் பிரச்னைகள் ஏதும் எழவில்லை. எனினும் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனிடையே நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையில் இந்து மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட செங்கல் பூஜை
அயோத்தி ராமர் கோயில் கட்ட செங்கல் பூஜை
உ.பாண்டி

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்தது அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்களை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வைத்து வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பூஜை செய்தனர். அந்தச் செங்கல்களில் ஸ்ரீ ராமா என எழுதி ராம நாம ஜப வேள்வி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தினர்.

அயோத்தி ராமர் கோயில் கட்ட செங்கல் எடுத்துச் சென்றவர்கள்
அயோத்தி ராமர் கோயில் கட்ட செங்கல் எடுத்துச் சென்றவர்கள்
உ.பாண்டி

பின்னர் பூஜை செய்யப்பட்ட செங்கல்களை ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அயோத்திக்குப் புறப்படும் சாரதா விரைவு ரயிலில் பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இவர்கள் வரும் 13-ம் தேதி புதன்கிழமை அயோத்தியில் உள்ள கரசேவபுரத்தில் ராமர் கோயில் நிர்வாகி நித்திய கோபால்தாஸ் ஸ்வாமிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். இவர்களுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒன்றாக இணைந்து அயோத்தி செல்கின்றனர்.