தொடர்கள்
Published:Updated:

குருவருள் துலங்கும் பிரணவபுரம்!

ஓமாம்புலியூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓமாம்புலியூர்

ஓமாம்புலியூர்

தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரை திருத்தலங்களில் 31-வது தலமாகவும், புலிக்கால் முனிவர் தரிசித்த நவ புலியூர்களில் ஒன்றாகவும் விளங்குகிறது திருஓமாம்புலியூர். இவ்வூர், காட்டு மன்னார்கோயிலுக்குத் தெற்கே 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஓமாம்புலியூர்
ஓமாம்புலியூர்
துயர்தீர்த்தநாதர்
துயர்தீர்த்தநாதர்


இங்குள்ள சிவாலயம் சோழ மன்னர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். இங்கே மூலவர் அருள்மிகு பிரணவ வியாக்ர புரீஸ்வரர்; துயர்தீர்த்தநாதர் ஆகிய திருப்பெயர்களுடன் அருள் கிறார். அம்பிகை அருள்மிகு புஷ்பலதாம்பிகை. பூங்கொடி அம்மன் என்றும் அழைத்து வழிபடுகிறார்கள்.

இந்தக் கோயிலில் தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் சந்நிதி கொண்டிருக்க, சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி களுக்கு நடுவில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாகவும் அருள் பாலிப்பது, வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பாகும். மேலும், ஒன்பது புலியூர்களில் ஓமாம்புலியூர் குரு ஸ்தலம் எனப் போற்றப் படுகிறது.

பார்வதிதேவி தமக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்யும் படி சிவபெருமானை வேண்டி, இலந்தை மரத்தின் அடியில் கடும் தவம் புரிந்தாள். அவளின் தவத்தை மெச்சி, தட்சிணாமூர்த்தி வடிவில் பார்வதிதேவிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் சிவபெருமான். இதற்காக நந்திகேஸ்வரரை வாயிலில் காவல் வைத்தார். அப்போது முருகப்பெருமான் உள்ளே நுழைய முயன்றார். நந்திதேவர் அவரைத் தடுத்தார். ஆகவே, முருகன் வண்டு ரூபம் எடுத்து அபிஷேகத் தாரை விழும் துளையின் வழியே உள்ளே நுழைந்தார்.

அங்கே அம்பிகையின் தலையில் அவர் சூடியிருந்த பூவில் அமர்ந்துகொண்டு தந்தை செய்த பிரணவ மந்திர உபதேசத்தைச் செவிமடுத்தார். இதன்பிறகே சுவாமி மலையில் தந்தைக்கே பிரணவ மந்திர உபதேசம் செய்தாராம். அப்போது இது உனக்கு எப்படித் தெரியும் என்று சிவபெருமான் கேட்க, ஓமாம்புலியூரில் நிகழ்ந்ததை விவரித்தார் முருகப்பெருமான் என்கிறது புராணம்.

இங்ஙனம் பார்வதியும் முருகப்பெருமானும் பிரணவ மந்திரத்தை உபதேசம் பெற்றதால் ஓமாம்புலியூருக்கு `பிரணவபுரம்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டு என்கிறார்கள்.

பிரபஞ்சத்திலேயே, ஈசன் தம்முடைய திருவாய் மலர்ந்து தம் திருமொழியாலேயே `ஓம்’ என ஓதி, அம்பிகைக்கு ஓம்கார உபதேசம் செய்த தலம் இது. ஆகவே, மகா பிரணவமாகவே மகா தட்சிணாமூர்த்தி அருளும் இத்தலத்தில், அவரின் திருமுன் சிவ தீட்சை பெறுவதை பெரும்பேறாகக் கருதுகிறார்கள், சிவபக்தர்கள்.

புலிக்கால் முனிவர் பூசித்தமையால் `புலியூர்’ எனவும் பெயர் பெற்று விளங்குகிறது. சதானந்தன் என்ற அரசன் இந்தத் தலத்து `வரதனாங்குட்டை’ தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, தொழுநோய் நீங்க பெற்றான் என்கிறது தலவரலாறு. திருஞான சம்பந்தர், அப்பரின் பதிகம் பெற்ற தலம் இது.

இங்கே இரண்டு குருபகவான்களின் சக்தி மேலோங்கி இருப்ப தால் சூரியன், சனிபகவான் ஆகியோரைத் தவிர மற்றவர்களுக்குச் சிலைகள் இல்லை.

ஸ்வாமி இங்கே அம்பாளுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தது, ரேவதி நட்சத்திரத்தன்று. ஆகவே இந்தத் திருத்தலம் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. மட்டுமன்றி திருமணத் தடை நீங்கவும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் அருள் புரியும் தலம் இது. சரஸ்வதிதேவியும் இங்கே அருள் பாலிக்கிறாள். ஆகவே குருவருளுடன் கல்வி - கலைஞானம் அருளும் க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியூர்!