Published:Updated:

திருவோணம்: பெரியாழ்வார் கொண்டாடிய தியாகத் திருநாள்... மகாபலி விரும்பும் பூக்கோலமும் ஓண சாத்யாவும்!

திருவோணம்
திருவோணம்

ஓணம் நாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் மலையாளிகள் ஒவ்வொருவர் வீட்டு வாசலில் 'அத்தப்பூ' என்ற பூக்கோலம் போடப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ இந்த கோலத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மரபு.

ஒவ்வொரு ஆண்டும் மஹாபலி மன்னர் இந்தப் பூமிக்கு வருகை தரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முதன்மைத் திருவிழாவாக விளங்கிய இது, இப்போது கேரள மக்களின் முதன்மைத் திருவிழாவாகிவிட்டது. மகாபலி இறைவனுக்காக தன்னையே தியாகம் செய்ததால் இது தியாகத் திருநாள் என்றும், கேரள மக்களின் அறுவடை திருவிழாவா என்றும் கொண்டாடப்படுகிறது.

சங்க கால இலக்கியங்களில் திருமாலின் பிறந்த நாளென்றும் வாமன மூர்த்தி அவதரித்ததும் திருவோணம்தான் என்றும் சொல்லப்படுகிறது. 'மாயோன் மேய ஓண நன்னாள்' என்கிறது மதுரை காஞ்சி. முன்பு ஆவணி அவிட்டம் ஓணப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது என்கிறார் நக்கீரர். 'ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்' என்று வருந்துகிறார் திருஞான சம்பந்தர். 'எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்' என்கிறார் பெரியாழ்வார்.

ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை

மதுரையில் பாண்டியர்கள் வீழ்ச்சியுற்ற பிறகு, அவர்கள் கேரளத்துக்குச் சென்ற பிறகு ஓணம் விழா அவர்களுக்கே உரிய விழாவானது என்கிறது வரலாறு. எப்படியோ வாமன மூர்த்தியாக திருமால் வடிவெடுத்து வந்து மகாபலியை ஆட்கொண்ட இந்த திருநாள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தியாகத் திருநாள் என்றே கூறலாம்.

தானத்திலும் தவத்திலும் புகழ் கொண்ட மகாபலியை நோக்கி தெய்வமே வருகின்றது. வரமாக மூன்றடி நிலம் கேட்கிறது. குலகுரு எச்சரிக்கிறார். மகாபலி இறைவனே என்னிடம் யாசகம் கேட்கிறார் என்றால் அது எனக்குத்தானே பெருமை என்று சொல்லிவிட்டு தானம் அளிக்கிறார். விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்துவிட்ட பரம்பொருள் 'மூன்றாவது அடி எங்கே' என்கிறது.

ஆவணி மாதச் சிறப்புகள்: துன்பங்கள் நீங்கும் மாதம் இது... ஏன், எப்படி?!

பரம்பொருளின் திருவடியையே மணி முடியாய் தலையில் ஏற்கும் பாக்கியத்தை தவறவிடக் கூடாது என்று கருதிய மன்னன் திருமாலின் திருப்பாதத்தைச் சுமந்தான். சகல லோகங்களும் வாமன பகவானோடு சேர்த்து மகாபலி மன்னனையும் வணங்கியது. மகாபலியின் பாட்டனான பிரகலாதனும் பிரம்மனும் வேண்டிக்கொள்ள மகாபலிக்கு பேரருள் செய்கிறார் திருமால்.

''மகாபலி மன்னனே! சர்வ மங்களங்களும் உண்டாகட்டும். எட்டாவது மன்வந்திரத்தில் நீயே இந்திரனாக இருக்கப் போகிறாய். அதனால் அதுவரை, விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட ஸுதல லோகத்தில் வசித்திருப்பாய். நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கக் காண்பாய். எனது தரிசனத்தால், உனது அசுர குணங்கள் நீங்கியது, நலமோடு வாழ்வாய்!'' என்றார்.

அத்தப்பூக் கோலம்
அத்தப்பூக் கோலம்

அப்போது திருமலைத் தாங்கிய தியாக வடிவாம் மகாபலி மன்னன் திருமாலை வேண்டி வரம் ஒன்றும் கேட்டான். அசுரனாகப் பிறந்தாலும் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து நல்லாட்சி புரிந்தவன் நான். அதனால் இந்த மக்களை என்னால் மறக்க முடியவில்லை. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் அவதரித்த ஆவணி திருவோண நாளில் நான் இந்த மண்ணுலகுக்கு விஜயம் செய்ய வேண்டும். அப்போது இந்த மக்களை நான் ஆசிர்வதிக்க வேண்டும். இந்த மண்ணில் விளைந்திருக்கும் செல்வங்களை கண்டு களிக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

அதன்படியே வாமன வடிவமான திருமாலும் வரம் கொடுத்தார். அதன்படியே மகாபலி விஜயம் செய்யும் திருநாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரலட்சுமி விரதம்: திருமகளின் அருளும் மாங்கல்யப் பாக்கியமும் கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

ஓணம் நாளில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் மலையாளிகள் ஒவ்வொருவர் வீட்டு வாசலில் 'அத்தப்பூ' என்ற பூக்கோலம் போடப்படும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ இந்த கோலத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மரபு. அதேபோல் ஓண சாத்யா விருந்தும் சிறப்பானது. கசப்பு தவிர ஐந்து சுவைகளில் 64 வகையான 'ஓண சாத்யா' விருந்து இந்நாளில் மகாபலிக்காகப் படைக்கப்படும். அடை, அவியல், பழக்கூட்டு, புளிசேரி, அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, நெய்ப்புட்டு, அப்பம், நேந்திரம் வறுவல், பலா வறுவல், கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என ஓண விருந்து இந்த விழாவின் சிறப்பம்சம் எனலாம். 'கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது மலையாளிகளின் பழமொழி.

காட்கரையப்பன் கோயில்
காட்கரையப்பன் கோயில்

புலிக்களி எனும் புலியாட்டம், கைகொட்டுக்களி எனும் பெண்களின் கும்மி வகை ஆட்டம், யானைத் திருவிழா, படகு போட்டிகள், கயிறு இழுத்தல் போன்றவை ஓணம் திருநாளுக்கு உரிய சிறப்பான அம்சங்கள் எனலாம். இந்த நாளில் திருமால் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

கேரளாவின் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கோவிலூர் திருவிக்கிரமன் கோயில் போன்றவை ஓணத்தின் பெருமை கூறும் ஆலயங்கள். உலகளந்த வாமனரைப் போற்றும் ஆலயங்கள். எனவே முடிந்தவர்கள் அங்கு சென்று உலகளந்த பரம்பொருளை தரிசிக்கலாம்.

எலியாகத் திரிந்து ஈசனின் திருவிளக்கைத் தூண்டிவிட்டு மகாபலி சக்கரவர்த்தியாக அவதரித்த அந்த மன்னனையும் அவனை ஆட்கொண்ட பரந்தாமனையும் இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி வணங்கி மகிழ்வோம்.
அடுத்த கட்டுரைக்கு