Published:Updated:

ஓணம் பண்டிகை - ஆகஸ்ட் 21

ஓணம்
பிரீமியம் ஸ்டோரி
ஓணம்

எஸ்.கண்ணன்

ஓணம் பண்டிகை - ஆகஸ்ட் 21

எஸ்.கண்ணன்

Published:Updated:
ஓணம்
பிரீமியம் ஸ்டோரி
ஓணம்

`இரண்டு அடிகளா மூன்று அடிகளா?’

கா விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான மனித உருவில் நிகழ்ந்த முதல் அவதாரம் வாமன அவதாரம். காசிபர் - அதிதிக்குக் குழந்தை யாக ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வாமனராக அவதரித்த பெருமாள், மகாபலி யிடம் மூன்றடி மண் தானம் பெற்று, திரிவிக்ரமனாக ஓங்கி உலகளந்து அருள்புரிந்தார்.

இந்த அற்புதத்தைப் போற்றும் புராணங்கள் `மூவடி அளந்தான்’ என்று சொல்ல, ஆழ்வாரும் ஆண்டாளும் `குறளனாய் வந்த எம்பெருமான் ஈரடி அளந்தான் மூன்றாவது அடி தராத மாவலியைத் தண்டித்தான்’ என்று அருளியுள்ளனர். இதில் எது சரி என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் தோன்றலாம். நம்பிள்ளையின் சீடர்களுக்கும் இதே சந்தேகம் தோன்றியது.

நம்பிள்ளை அவர்கள், “அவன் ஈரடி அளந்தான் என்பதும் உண்டு. ஈரடி அளந்ததை உலகம் அறியும். மூன்றாவது அடி வைப்பை அவனே அறிவான்’’ என்று விளக்கம் தந்தார்.

அதற்குச் சான்றாக, “பெரியோனாய் வளர்ந்த, அளவிடற்கரிய பெருமைகளைக் கொண்ட இறைவனே, உனது இரண்டு அடிவைப்புகளை யாம் அறிவோம். இதற்கடுத்த மூன்றாவது அடி வைப்பை நீயே அறிவாய்” எனப் போற்றும் விஷ்ணு ஸுக்த ஸ்தோத்திரத்தை எடுத்துக் கூறினார்.

திருகாட்கரை அப்பன்!

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருகாட்கரை. பேச்சு வழக்கில் திருகாக்கரை என்று மருவியதாம். எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ, பேருந்து வசதிகள் உண்டு.

இந்த மலைநாட்டு திவ்வியதேசத்தை, வாமனர் அவதரித்த க்ஷேத்திரமாகக் கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். பரசுராமர் ஸ்தாபித்த ஆலயம் என்பது விசேஷம். இங்கே பெருஞ்செல்வநாயகி என்ற திருப்பெயருடன் தாயார் அருள்கிறார்.

கருவறையில் புஷ்கல விமானத்தின் கீழ், தெற்கே திருமுக மண்டலமாக அருள்கிறார் திருக்காக்கரையப்பன். வேண்டும் வரம் தரும் தெய்வம் இவர் என்கிறார்கள் பக்தர்கள். ஸ்வாமியின் திருவருளால் வேண்டுதல் பலித்தவர்கள், பால் பாயசம் சமர்ப்பித்து வழிபட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கும் விநியோகித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்ததாக ஐதிகம். இங்கே சிம்மாசனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த இடத்தில் விளக்கேற்றி, மகாபலியை வழிபடுகின்றனர்.

பூதகியின் கதை!

வாமன அவதாரத்தின் போது நிகழ்ந்ததாகக் கர்ணபரம்பரைக் கதை ஒன்று சொல்வார்கள் பெரியோர்கள். வாமனர் மகாபலியின் யாகசாலைக்கு வருகை தந்தார் அல்லவா?

அப்போது, தெய்வக் களை பொருந்திய அந்தப் பாலகனைக் கண்டதும் மகாபலியின் மகளுக்குத் தாய்மை உணர்வு பொங்கியதாம். `நமக்கு இப்படியொரு பாலகன் பிறந்து; அவனுக்கு நான் பாலமுது ஊட்டும் பாக்கியம் கிடைத்தால் எப்படியிருக்கும்’ என்று அவள் ஏங்கினாளாம்.

ஆனால், வாமனர் திரிவிக்ரமனாக வளர்ந்து மகாபலியைப் பாதாளத்தில் அழுத்தியதைக் கண்டதும் அவரைக் கொன்றுவிடும் அளவுக்குக் கோபம் கொண்டாளாம் மகாபலியின் மகள்.

கிருஷ்ணாவதாரத்தில் வினை தொடர்ந்தது. அவள் விரும்பியபடியே பகவானுக்குப் பாலூட்டும் பாக்கியம் கிடைத்தது. அதேநேரம், அவள் மனத்தின் வன்மமும் தொடர்ந்ததாலேயே அவள் கிருஷ்ணக் குழந்தையைக் கொல்ல முனைந்தாள்; நிறைவில் பகவானால் மோட்சப்பேறு கிட்டியது என்று விவரிக்கிறார்கள் ஆன்றோர்கள்!

மகாபலிக்கு விஸ்வரூப தரிசனம்!

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி...’ என்று ஆண்டாள் போற்றும் வாமன அவதாரத்தின் மகிமை விளக்கும் தலங்களில் முக்கியமானது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோயில். ‘தலைகுனிந்து நின்ற காரணத்தால் மகாவிஷ்ணுவின் உலகளந்த விஸ்வரூப தரிசனத்தைக் காணமுடியவில்லையே’ என்று வருந்திய மகாபலிக்கு, விஷ்ணு உலகளந்த பெருமாளாகக் காட்சிகொடுத்த தலம் இது. காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்.

கருவறையில் மிகப் பிரமாண்டமான திருமேனியுடன், எழில் கோலத்தில் காட்சி அருள்கிறார் திரிவிக்ரமப் பெருமாள்.

இந்தத் தலத்திலேயே `ஊரகம்’ என்ற பெயரில் ஒரு சந்நிதி அமைந்திருக்கிறது. இதுவொரு பிரார்த்தனைத் தலம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், இந்தச் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டு, திருமஞ்சனம் செய்வித்தும் திருக்கண்ணமுது நைவேத் தியம் செய்தும் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism