Published:Updated:

வாட்ஸ்அப், ஸூம் மூலம் தர்ப்பணம், பூஜைகள்... அதிகரிக்கும் ஆன்லைன் சேவைகள்!

பூஜை
பூஜை

லாக்டௌன் நாள்களில், மிக எளிமையாக வீட்டளவிலேனும் பூஜைகளையும் சடங்குகளையும் மக்கள் பின்பற்ற விரும்புகின்றனர். குறிப்பாக, அமாவாசை தர்ப்பணம் போன்ற உணர்வுபூர்வமான சடங்குகளை மக்கள் தவிர்க்க விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ஆன்லைன் பூஜை சேவைகள்.

லாக்டௌன், மக்களை வீடுகளுக்குள் முடக்கியிருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்த பிற சேவைகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. மனிதர்களின் உணர்வுகளோடு ஒன்றியவை வழிபாடுகளும் சடங்குகளும். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பல விசேஷ தினங்களும் வந்துபோகின்றன. இந்த நாள்களில் மிக எளிமையாக வீட்டளவிலேனும் பூஜைகளையும் சடங்குகளையும் மக்கள் பின்பற்ற விரும்புகின்றனர். குறிப்பாக, அமாவாசை தர்ப்பணம் போன்ற உணர்வுபூர்வமான சடங்குகளை மக்கள் தவிர்க்க விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ஆன்லைன் பூஜை சேவைகள். அதிலும் கைவசமிருக்கும் செல்போன் செயலிகள் மூலம் இந்தச் சேவைகளை வழங்கத் தயாராகிவருகிறார்கள் சென்னை பண்டிட்கள்.

ஆன்லைன் பூஜை சேவைகள்
ஆன்லைன் பூஜை சேவைகள்

இதுகுறித்து நங்கநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் சாஸ்திரிகளிடம் பேசினோம். ``ஆன்லைனில் பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்துவைப்பதெல்லாம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இதற்கென்று பல இணையதளங்கள்கூட இருக்கின்றன. நானே இதற்கு முன்பாக ஸ்கைப், வாட்ஸ்அப் மூலமாக வெளிநாடுகளில் உள்ள பக்தர்களுக்கு பூஜைகள் செய்துவைத்ததுண்டு. தற்போது, பக்கத்துத் தெருவில் இருப்பவரைக்கூட பார்க்க முடியாத நிலை. சாஸ்திரத்தைத் தவறவிட முடியாது என்பதால், எல்லோரும் ஆன்லைன் பூஜைகளை நாடுகிறார்கள்.

பூஜைகள்கூட அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். அதற்கு சாஸ்திரிகள் அவசியம் என்று இல்லை. ஆனால், அமாவாசை போன்ற பித்ரு காரியங்களைச் செய்துவைக்க சாஸ்திரிகள் அவசியம். இந்த நிலையில்தான் வேறு வழியின்றி மொபைல் மூலம் அவற்றைச் செய்துவைக்கவேண்டியுள்ளது. உள் நாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இதுபோன்ற சடங்குகளைச் செய்துவைக்கிறேன். இதில் என்ன பிரச்னை என்றால், 15 நிமிடத்தில் முடிக்கவேண்டிய தர்ப்பணம் சுமார் 45 நிமிடங்கள் வரைகூட ஆகிவிடுகிறது.

காரணம், நாம் சொல்லும் மந்திரத்தை அவர் சரியாக திருப்பிச் சொல்கிறாரா என்பதைக் கேட்டு அடுத்த மந்திரத்துக்குப் போகவேண்டும். செய்யும்போது முறையாக இடது வலது பக்கங்களை அறிந்து செய்கிறாரா என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிசெய்ய வேண்டும். தேவையான பூஜைப்பொருள்களை எடுத்துவைத்துக்கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும். இடையில் அது இல்லை இது இல்லை என்றால், அதை மீண்டும் தேடி எடுத்துவர தாமதமாகும்.

அமாவாசை...
அமாவாசை...

இதுவே நேரில் என்றால், நாம் போனதும் ஒரு பார்வையிலேயே அனைத்தையும் சரிபார்த்துவிடுவோம். அதெல்லாம் ஆன்லைனில் பண்ணிவைக்கும்போது உள்ள சிக்கல்கள். வழக்கமாக 10 பேருக்கு தர்ப்பணம் செய்துவைப்போம் என்றால், ஆன்லைன் மூலம் செய்யும்போது அதில் பாதிபேருக்குத்தான் செய்துவைக்க முடியும்.

உலகமே இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு தவித்துவரும் இந்தச் சூழ்நிலையில், மக்களுக்கு சடங்குகளைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படலாம். அதைத் தவிர்க்க நான் வழக்கமாக பூஜை மற்றும் தர்ப்பணம் செய்துவைக்கும் அன்பர்களுக்கு அமாவாசை தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி ஆடியோவாக அனுப்பிவிட்டேன். அவரவர்கள் அதைப் போட்டுக் கேட்டு அதில் சொல்வதன்படி வீட்டிலேயே அவர்களே செய்துகொள்ளலாம்.

சுரேஷ் சாஸ்திரிகள்
சுரேஷ் சாஸ்திரிகள்

எப்படியும் ஒருவருக்கு அனுப்பினால் அது வாட்ஸ்அப் மூலம் ஊரெல்லாம் பரவிவிடும். அதையும் தாண்டி யாரோ ஒருசிலர்தான் ஆன்லைன் மூலம் செய்துவைக்கச் சொல்லிக் கேட்பார்கள். அவர்களுக்கு, படிப்படியாக செய்யச் சொல்லி செய்துவைக்க வேண்டும்.

சீக்கிரம் இந்தச் சூழல் மாறி, மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு