Published:Updated:

பாம்பும் புலியும் போற்றும் திருப்பட்டூர்

திருக்கோயில் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில் திருவுலா

திருக்கோயில் திருவுலா!

பாம்பும் புலியும் போற்றும் திருப்பட்டூர்

திருக்கோயில் திருவுலா!

Published:Updated:
திருக்கோயில் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில் திருவுலா

யோக சாஸ்திரத்தில் பெரும் யோகியாக விளங்கிய பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதியான தலங்கள் என்று சில ஆலயங்களைச் சொல்வது உண்டு. அவற்றில் ஒன்று திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர். புலிக்கால் முனிவரும் வழிபட்டு அருள்பெற்ற க்ஷேத்திரம் இது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள அற்புதத் தலம் திருப்பட்டூர். `இங்கு வரவேண்டும்’ என்று விதிக்கப்பட்டவர்களே திருப்பட்டூர் க்ஷேத்திரத்தை அடைவார்கள்.

அவ்வண்ணம், திருப்பட்டூர் வந்து சேரும் அன்பர்களின் தலைவிதியை நன்முறையில் மாற்றி எழுதவேண்டும் என்பது பிரம்மனுக்குச் சிவம் இட்ட கட்டளை. அதன்படி, நம் தலையெழுத்தை மாற்ற பிரம்மன் காத்திருக்கும் புண்ணியப் பதி இது!

நம் எல்லோருக்கும் திருப்பட்டூர் என்றால், பிரம்மபுரீஸ்வரர் கோயில் மட்டுமே தெரிந்து இருக்கும். அங்கு சென்று ஈசனைக்கூட அவசர அவசரமாக வணங்கிவிட்டு, பிரம்மாவிடம் தங்களின் ஜாதகத்தை வைத்து பயபக்தியோடு பிரார்த்திப்பது வழக்கம். இதனால் நம் தலை எழுத்து மாறிவிடும் என்பதும் நம்பிக்கை. அதேநேரம், திருப்பட்டூரை நாம் முழுமையாக தரிசிப்பது இல்லை.

மனம் ஒன்றி முறையாக உணர்ந்து, அங்கு எல்லா இடங்களையும் நிதானமாக தரிசிப்பது இல்லை. அவ்வளவு ஏன், அங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எப்போதும் மெய்யொளியாக சுடர் விட்டு விளங்கும் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானத்தையோ, அருகிலேயே காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள வியாக்ர பாதர் அதிஷ்டானத்தையோ கூட நாம் முறைப்படி தரிசிப்பது இல்லை.

உண்மையில் திருப்பட்டூரை நாம் எப்படி தரிசிக்க வேண்டும், அங்கு என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை இந்தத் திருக்கோயில் திருவுலா பகுதியில் தொடர்ந்து காண்போம் வாருங்கள்...

ஆனந்தப் பேரின்ப நிலையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த திருமால் அறிதுயில் நிலையிலும் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுமந்துகொண்டிருக்கும் ஆதிசேஷனுக்கு திடீரென பெருமாளின் எடை அதிகமாவதுபோல் உணர்வு. சுமப்பதில் சிரமம் தெரிந்தது.

வழக்கத்துக்கு மாறான இந்த நிலை ஏற்பட்டது, திருமாலைச் சுமப்பது பளுவாகத் தோன்றுவது ஏன்... பெரும் சிந்தனை தோன்றியது ஆதிசேஷனுக்கு. கூடவே, பெருமாளோ பூரிப்பில் புன்னகைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார். `பூரிப்புக்கும் புன்னகைக்கும் காரணம் என்னவாக இருக்கும்?’ என்று யோசித்த ஆதிசேஷன், பதில் அறிய முடியாமல், பகவானிடமே கேட்டுவிடுவது என்று தீர்மானித்தார்.

அவரின் உள்ளகிடக்கை பெருமாளுக்குத் தெரியாமல் போகுமா? அவர் ஆதிசேஷனிடம் சொன்னார் ‘ஆதிசேஷா! என் உடல் எடை அதிகரித்ததன் காரணம்தானே உனக்கு வேண்டும். சொல்கிறேன் கேள்... நான் இங்கிருந்தபடியே கயிலையில் ஆடும் வேதநாயகனின் ஆடலைக் கண்டு ரசித்தேன். அதனால் என் உள்ளமும் உடலும் பூரித்து எடை கூடினேன்... போதுமா!’ என்றார்.

ஆதிசேஷனுக்கு சந்தேகம் தீர்ந்து ஏக்கம் உண்டானது.

`‘ஸ்வாமி! அந்த ஆனந்த தாண்டவத்தை இந்த எளியேனும் காண வேண்டும். அதற்கு வழியேதும் உண்டா?’’ என்று பெருமானை வேண்டினார். பாற்கடல் கடவுளும் வழிகாட்டியது. அவரின் ஆணைப்படி கயிலையின் அடிவாரத்தில் தவமிருக்கத் தொடங்கினார் ஆதிசேஷன்.

காலம் உருண்டோடியது. தவத்தின் மேன்மை கூட கூட சிவம் ஆதிசேஷனுக்காக இரங்கியது. கயிலையை விட்டு இறங்கியது. ‘`தவத்தில் சிறந்த சீலரே, உன் வேண்டுதலை மெச்சுகிறேன். நீ பூலோகத்தில் வியாக்ர புரத்தில் காசிப முனிவருக்கும் கத்ருதேவிக்கும் மகனாகப் பிறந்து, பதஞ்சலி என்ற பெயரில் வளர்ந்து வா. உன்னை அப்போது ஆட்கொண்டு பல முக்கிய தலங்களில் என் ஆடல் திருக்காட்சியை உனக்கு அருள்வேன்’’ என்று அருள்பாலித்தது.

அதன்படி பூவுலகில் பிறந்த பதஞ்சலி, யோக சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று பெரும் யோகியானார். அவருக்கு உற்ற நண்பராக வியாக்ரபாதர் விளங்கினார். இடுப்புக்குக் கீழே பாம்பின் வடிவம் கொண்ட பதஞ்சலியும், புலியின் கால்களைக் கொண்டு விளங்கிய வியாக்ரபாதரும் இணைந்து பாரதம் முழுக்க புனித யாத்திரை புரிந்தனர்.

அப்போது இருவருக்கும் திருக்காட்சி அளித்த ஈசன், தில்லை உள்ளிட்ட நவ புலியூர்களுக்கும் வருமாறு ஆணையிட்டார். அங்கெல்லாம் தம்முடைய திருநடனத்தை தரிசிக்கலாம் என்றும் அருள் செய்தார்.

அதன்படியே ஒரு தைப்பூச தினத்தில் முதலில் தில்லை எனும் பெரும்பற்றப் புலியூருக்கு முனிவர்கள் இருவரும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மால், அயன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர் உள்ளிட்ட சிவகணங்கள் அனைத்தும் தில்லைக்கு வருகை தந்தனர். அங்கே ஈசன் கனகசபாபதியாக ஆனந்த தாண்டவம் அருளி சகலரையும் மகிழ்வித்தார்.

‘ஆதிபரன் ஆட அங்கைக்கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்றாட பாதி மதி ஆட பார் அண்டம் மீதாட நாதமோடு ஆடினார் நாதந்த நட்டமே’ என்று சகலரும் வியக்க, தில்லைப்பதியில் சிவனார் ஆடினார். அப்போது முனிவர் இருவரும் ஆனந்த மிகுதியில் கண்ணீர் பெருக, `‘ஈசனே இந்தத் திருநடனத்தைக் காணவன்றோ பிறப்பெடுத்தோம். போதும் ஐயனே போதும்... இப்போதே எங்களை உம்முள் ஏற்றுக் கொள்ளும்!’’ என்று மன்றாடினர்.

ஆனந்த தாண்டவம்
ஆனந்த தாண்டவம்


``எப்போது ஆசையோடு பிறப்பு எடுத்தீர்களோ, அப்போதே நீங்கள் மாயையில் சிக்கிவிட்டீர்கள் என்றுதான் பொருள். என் திருநடனத்தைக் காண வேண்டும் என்று ஆசை கொண்டீர்கள், அதைக் கண்டும் விட்டீர்கள். இப்போது மோட்சம் வேண்டும் என்றால் அது உடனே கிடைத்து விடுமா என்ன? நான் சொன்னபடி புலியூர்களில் மற்ற எட்டுத் தலங்களையும் தரிசிக்கச் செல்லுங்கள். நிறைவில் ஓர் அற்புதமான திருத்தலத்தில் சகலரும் காண உங்கள் ஆவல் நிறைவேறும்’’ என்று அருளியது சிவப் பரம்பொருள்.

இது பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்குமான வழிகாட்டல் மட்டுமல்ல; பிறப்பெடுத்த, இனி பிறப்பெடுக்கும் சகலருக்குமானது... ஏன், தங்களுக்குமான வழிகாட்டல் என்பதை உணர்ந்தனர் தேவர்கள். ஆகவே, அவர்களும் ஈசனைப் பணிந்து அந்த அற்புதத் தலத்தின் மகிமை பற்றி தங்களுக்கும் தெரிவிக்கவேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

`அப்படியே நடக்கும்’ எனச் சொல்வதுபோல் புன்னகைக் காட்டி அருள்பாலித்தது திருக்கயிலை தெய்வம்.

சிவக் கட்டளைப்படி புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் மீதமுள்ள எட்டு புலியூர்களையும் தரிசிக்கப் புறப்பட்டனர்.

தில்லை எனும் பெரும்பற்றப்புலியூரிலிருந்து கிளம்பி திருப்பாதிரிப் புலியூர், எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், தப்பளாம்புலியூர், பெரும்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய தலங்களை தரிசித்தனர். ஓவ்வொரு தலத்திலும் சிவதாண்டவத்தை விதவிதமாக தரிசித்து மகிழ்ந்தனர்.

நிறைவில் மீண்டும் ஈசனைப் பணிந்தனர். தங்களுடைய முக்தி குறித்தும், எம்பெருமான் ஏற்கெனவே குறிப்பிட்ட அந்தத் தலத்தின் மகிமை பற்றிய தங்களின் ஆவல் குறித்தும் விண்ணப்பித்தனர். ஜீவனின் நல்வாழ்வுக்கும் முக்திப்பேறுக்கும் வகை செய்யும் அந்த க்ஷேத்திரத்தின் மாண்புகளை சிவ வாக்காகக் கேட்டுமகிழ விரும்புவதாக தெரிவித்தனர்.

சிவம் அதுகுறித்துப் பேசத் தொடங்கியது!

- திருவுலா தொடரும்..

மெளனமே உன்னதம்!

பகவான் ரமணர்
பகவான் ரமணர்


ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த சிறு சிறு சம்பவங்களும் நமக்கான பாடங்களாக அமையும். ஒருமுறை ரமணருக்குப் பால பருவத்தில் பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர், ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். தன் பழைய மாணவனை, ஆதி குருவாகக் கண்டு பரவசம் அடைந்தார்.

ரமணரிடம் தனது ஆன்மிக சந்தேகங்களைப் போக்கும்படி வேண்டிக்கொண்டு, சில கேள்விகளைக் கேட்டார்.

உடனே ரமணர், ‘`பள்ளியில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பயந்துதான் ஓடி வந்தேன். இங்கும் கேள்வி கேட்க வந்து விட்டீர்களே!’’ என்று கூறிச் சிரித்தாராம்.

வேறொரு நாள் ரமணரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், பகவானின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். ரமணரை நூறு முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும் என்பது பக்தரின் விருப்பம்!

ஆனால் சிறிது நேரத்தில், ‘`இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் எதற்கு? மௌனமாய் இருந்து பக்தியைக் காண்பிப்பதே நல்லது!’’ என்றார் பகவான் ரமணர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism