
படிக்காசு விநாயகர்
சிவபெருமான் நேத்ரார்ப்பண ஈஸ்வரர் எனும் திருப்பெயருடன் அம்பாள் சுந்தர குஜாம்பிகையோடு கோயில் கொண்டிருக்கும் ஊர் திருவீழிமிழலை. கல்யாண வரம் தரும் அற்புத க்ஷேத்திரம் இது. இறையனாருக்கு வீழியழகர் எனும் பெயரும் உண்டு. மயிலாடுதுறை - திருவாரூர் வழியில் உள்ளது திருவீழிமிழலை.

திருமால் இத்தலத்தில் சக்கரம் வேண்டி பூஜை செய்த போது, ஒருநாள் ஒரு மலர் குறையவே தம் கண்ணையே அளித்து சக்கரத்தைப் பெற்றார் என்கிறது தலபுராணம். இவ்வூரின் சிறப்பம்சம் அருள்மிகு மாப்பிள்ளை சுவாமி எனச் சிறப்பிக்கப்படும் கல்யாண சுந்தரரின் தரிசனம். இங்கு வந்து இவரை வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆம், இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் இது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இங்கு வந்தபோது, இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் நிலவியது. இருவரும் இறைவனை வேண்டிக் கொள்ள, சிவனார் தினமும் ஒவ்வொரு பொற்காசு வீதம் வழங்கி அருளினார்.
அப்பர் பெற்ற பொற்காசுக்கு வணிகர்கள் உடனே பொருள் கொடுத்தனர். அதைக் கொண்டு அவர் அடியார்களுக்கு அமுதளித்து உதவினர். ஆனால் சம்பந்தர் பெற்ற காசுக்கோ, வாசி (வட்டம் - கமிஷன்) கேட்டனர். அதனால் சம்பந்தப்பெருமான் அடியார்களுக்கு உணவளிக்கத் தாமதமாயிற்று. ஆகவே, ‘வாசிதீரவே காசு நல்குவீர்...’ என்று பதிகம் பாடி, வாசியில்லா காசு பெற்றாராம். இங்ஙனம் படிக்காசு வைக்கப்பட்ட பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.
மேற்கு கோபுரத்தின் வழியே நுழைந்தால் பலிபீடத்தின் அருகே படிக்காசு விநாயகரின் சந்நிதி உள்ளது. அடியார்களுக்கு உணவளிக்கத் தேவையான படிக் காசுகளை இறைவன் ஆணைப்படி விநாயகர் வைத்தார் என்ற செய்தியை ‘பாரறிய அனுதினமும் வீழிநகர்தனில் முன் படிக்காசு வைத்த கணபதி’ என்று தலபுராணம் போற்றுகிறது. இந்தப் பிள்ளையாரை வழிபட பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கும்; கடன் தொல்லைகள் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.