Published:Updated:

சஞ்சலம் தீர்க்கும் ஈசன்!

மகேந்திரவாடி உமாசங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
மகேந்திரவாடி உமாசங்கரன்

மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் ஆலயம்

சஞ்சலம் தீர்க்கும் ஈசன்!

மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் ஆலயம்

Published:Updated:
மகேந்திரவாடி உமாசங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
மகேந்திரவாடி உமாசங்கரன்

சந்திரனை மனோகாரகன் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். ஒருவருக்குச் சந்திரனின் பூரண அருள் இருந்தால் அவர்கள், எடுத்துக் கொண்ட காரியங்களில் மனத் திண்மையுடன் செயலாற்றி வெற்றி பெறுவார்கள் என்பது பெரியோர் வாக்கு. அத்தகைய சந்திரனே ஒருமுறை சாபத்துக்கும் சஞ்சலத்துக்கும் ஆளானான்.

சோமநாதேஸ்வரர்
சோமநாதேஸ்வரர்
சோமநாதேஸ்வரர் ஆலயம்
சோமநாதேஸ்வரர் ஆலயம்


தன்னுடைய இந்தக் குறைகள் நீங்கிட சிவபெருமானைச் சரணடைந்து வழிபட்டு அருள்பெற்றான் என்கின்றன புராணங்கள். சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாகும். இதையொட்டி சிவனாரும் சோமேஸ்வரர், சந்திரசூடேஸ்வரர், சந்திரசேகரர் ஆகிய திருநாமங்களில் அருள்பாலிக்கிறார்.

இந்தத் தலங்களின் வரிசையில் வேலூர் மாவட்டத்திலும் சந்திரன் வழிபட்ட சிவத்தலம் ஒன்று உண்டு. அதன் பெயர் மகேந்திரவாடி. இங்கே அருளும் இறைவனின் திருநாமம் அருள்மிகு சோமநாதேஸ்வரர்.

இங்கு இந்த இறைவனாருக்குக் கோயில் எழுப்பியவர், மாமன்னன் மகேந்திரவர்மப் பல்லவன். அவன் பெயராலேயே இந்த ஊர் மகேந்திர பாடி என்று அழைக்கப்பட்டது. தற்போது மகேந்திரவாடி என்று அழைக்கப்படுகிறது. இங்கே சிவாலயம் மட்டுமன்றி, மகாவிஷ்ணுவுக்கும் குடைவரைக் கோயில் எழுப்பியுள்ளார் மகேந்திரவர்மப் பல்லவன். ஆக, மகேந்திர விஷ்ணு கிரகம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுவர் (தற்போது குடைவரை ஆலயத்தில் விஷ்ணு விக்கிரகம் இல்லை).

இந்த விஷ்ணு ஆலயத்தின் மண்டபத் தூண் ஒன்றில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகங்களின் மூலம்... ‘மகேந்திரபுரத்தில், மகேந்திர தடாகக் கரையில், உலகத்தாரால் புகழ்ந்து உரைக்கப்பட்டதும், மக்கள் கண்டுகளிக்கும்படி அழகுக்கு உறைவிடமானதுமான முராரி (திருமால்) கிருஹத்தை ‘மஹேந்திர விஷ்ணுகிரஹம்’ எனும் பெயரில் குணபரன் எனும் அரசன் செய்வித்தான்’ என்ற தகவலை அறியலாம். குண்பரன் என்பது மகேந்திரவர்மனின் இன்னொரு பெயராம்!

மகேந்திரவாடி ஆலயம்
மகேந்திரவாடி ஆலயம்


அதுமட்டுமா? மகேந்திரவாடியில் பெரியதொரு ஏரியை உண்டாக்கிய மன்னன், பாலாற்றில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டி, அந்த ஏரியுடன் இணைத்தானாம். இதற்கு மகேந்திர தடாகம் எனப் பெயரிட்டான். ஒருகாலத்தில், இந்தத் தலத்தில் பெரியதொரு கோட்டை இருந்ததாம். இப்போது கோட்டை இருந்த இடத்தில் சிறியதொரு பாறையும், அதன் மீது விநாயகர் கோயிலும் உள்ளன.

மகேந்திரவாடி
மகேந்திரவாடி
மகேந்திரவாடி
மகேந்திரவாடி


அற்புதமான இந்த ஊரின் நடுநாயகமாக, அருள்மிகு சோமநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கருங்கல் திருப்பணியால் அமைக்கப்பட்ட, சிறிய ஆலயம்; ஆனால், இறைவன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவனார் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கே சந்திரன் வழிபட என்ன காரணம்?

அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள். இவர்களைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார் தட்சன். இந்தப் பெண்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டுமே அன்பு பாராட்டினான் சந்திரன். இதனால், ஏனைய மனைவிகள் வருத்தம் அடைந்தனர்; தட்சனிடம் சென்று முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனைச் சபித்தார்.

சாபத்தின் காரணமாக சந்திரனின் அழகு தொலைந்தது; ரோக நோயால் வாடினான். சாப விமோசனத்துக்கு சிவனாரைச் சரணடைவதே உத்தமம் எனப் புரிந்துகொண்டு, தவம் செய்து அவரைத் தரிசித்து வணங்கினான்.

சந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவனார், மூன்றாம் பிறையளவு இருந்த அவனைத் தன் தலையில் சூடிக் கொண்டார். இதனால் அவருக்குச் சந்திரசேகரர் எனும் பெயர் அமைந்தது. அவரின் திருவருளால், இழந்த அழகை மீண்டும் பெற்றான் சந்திரன். தட்சனின் சாபத்தின் காரணமாகத் தேய்பிறையும், ஈசனின் அருளால் வளர்பிறையும் அமைந்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.

சந்திரனுக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் தம்மை வந்து வழிபடும் அன்பர்களுக்கும் வரம்வாரி வழங்குகிறார் இந்த ஈசன். `அடியார்தம் குறைகளையெல்லாம் களைந்து அவர்களின் சஞ்சலத்தைப் போக்கி சந்தோஷ வாழ்வை வரமாகத் தரும் ஈசன் இவர்’ என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கள்கிழமை அன்று அதில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்!

ஆலயப் பிராகாரத்தில், ஆறுமுகனுக்கும் சந்நிதி உள்ளது. ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், தேவியருடன் காட்சி தருகிறார் இந்த ஆறுமுகப் பெருமான். சஷ்டி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திர தினம் ஆகிய நாள்களில் இவரை வழிபடுவது விசேஷம். லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

``அற்புதமான இந்த ஆலயத்தில் சில வருடங்களுக்குமுன் காஞ்சி சங்கரமடத்தின் ஆதரவுடனும் ஆசியுடனும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, சந்திர புஷ்கரணி திருக்குளம் மற்றும் சில சந்நிதிகள் திருப்பணி, உற்சவர் திருமேனிகள் செய்வது, ஆலய வழிபாடுகள் ஆகியவற்றுக்கு நிதித் தேவை உள்ளது. அதேபோல், கோட்டை விநாயகர் சந்நிதிக்கும் திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. சிவ பக்தர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி இறையருள் பெறலாம்’’ என்கிறார்கள், ஆலயம் சார்ந்த பக்தர்கள்.

எப்படிச் செல்வது?: சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மகேந்திரவாடி. பாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து, சுமார் 7 கி.மீ. தொலைவு; காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள், மகேந்திரவாடி வழியாகச் செல்லும்.

ஏரிக்காத்த அம்மன்!

மகேந்திரவாடி மகேந்திர தடாகம் ஏரிக்கரையில் சப்தமாதர்களுக்காகவே ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு தெய்வங்களுடன் விநாயகப் பெருமானும் காட்சி தருகிறார். சப்தமாதர்களில், பைரவிதான் இங்கே பிரதான தெய்வம்! ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என ஊர்மக்கள் அழைக்கின்றனர்.

ஒருமுறை, ஏரியின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதாம். ஊர் மக்கள் சப்தமாதரை வழிபட்டனர். அப்போது, கரை உடைந்துவிடாமல் ஏரியையும், வெள்ளத்தைத் தடுத்து மக்களையும் காப்பாற்றியதால், இந்த அம்பிகையை ஏரி காத்த அம்மன், மதகு காத்த அம்மன் என்று வழிபட ஆரம்பித்தனராம். இந்தப் பெயர்களே ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என மருவியதாகச் சொல்கிறார்கள்!