திருக்கதைகள்
Published:Updated:

குரு தரிசனம்! - பாம்பன் சுவாமிகளும் அற்புதங்களும்!

பாம்பன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பாம்பன் சுவாமி

கந்தக் கடவுளை உளமார வணங்கிவிட்டு, கீழே கிடந்த பனை ஓலை ஒன்றை எடுத்தார். இடுப்பில் இருந்து எழுத்தாணியைக் கையில் எடுத்தார்.

ராமேஸ்வரத்துக்குத் தென்மேற்கில், பாம்பன் என்னும் சிற்றூரில் உள்ள சிவாலயத்தில் பணிசெய்தவர் சாத்தப்பா பிள்ளை. இவரின் மனைவி செங்கமலத்து அம்மாள். இந்தத் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ஸ்ரீபாம்பன் சுவாமிகள். குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய பெயரே அப்பாவு.

பாம்பன் சுவாமி
பாம்பன் சுவாமி


இளமையில் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் கல்வி பயின்ற அப்பாவுக்கு அவ்வப்போது தெய்விகக் காட்சிகள் தெரிவது உண்டு. ஒருநாள், தன் நண்பர்களுடன் குந்துகால் என்ற இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஜோதிடர் ஒருவர் அப்பாவுவின் கைரேகைகளை ஆராய்ந்து பார்த்தார். ‘`குழந்தாய்! எதிர்காலத்தில் நீ பெரிய ஞானியாகவும், வாக்கு வன்மை உடையவனாகவும் பிரகாசிப்பாய்’’ என்று ஆசி கூறினார்

அவரின் வாக்கு அப்படியே பலித்தது. அப்பாவு என்ற அந்த ஞானக்குழந்தை ஸ்ரீபாம்பன் சுவாமிகளாக மிளிர்ந்து, கந்தனின் அருளால் இந்த உலகம் உய்வடைய ஆன்ம ஒளி பரப்பியது. இவரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களும் இவர் அருளிய நூல்களும் நமக்கான பாடங்களும் கவசமும் ஆகும். அவற்றில் சில உங்களுக்காக!

முதல் பாடல் பிறந்தது!

பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல்கள் ஏராளம். சுவாமிகளது வழிபாடு எங்கே நடந்தாலும் அவரது குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் முதலான பாடல்கள் அங்கே பிரதானமாக இருக்கும். சரி, சுவாமிகள் முதன் முதலாகப் பாடத் தொடங்கியது எப்போது?

ஒருநாள், வைகறைப் பொழுதில் பாம்பனில் உள்ள தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்குச் சென்றார் சுவாமிகள். தோப்புக் குள் தந்தையார் இருப்பதை அறிந்து வாயிலிலேயே நின்றார். கந்தர் சஷ்டி கவசம் போன்ற பாடல்களைத் தானும் எழுதவேண்டும் என்கிற உத்வேகம் அப்போதுதான் அவருக்குள் எழுந்தது.

கந்தக் கடவுளை உளமார வணங்கிவிட்டு, கீழே கிடந்த பனை ஓலை ஒன்றை எடுத்தார். இடுப்பில் இருந்து எழுத்தாணியைக் கையில் எடுத்தார். அப்போது, ‘கங்கையைச் சடையிற் பரித்து’ எனும் வரி, அவர் மனதில் தோன்றியது. அதையே தொடக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார்.

இதன் பிறகு சுவாமிகள் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். பரிபூரணானந்த போதம் - சிவசூரிய பிரகாசம் - சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம் - சதானந்த சாகரம், சிவஞான தீபம் - காசி யாத்திரை, குமாரஸ்தவம், என இந்த வரிசை நீளும்!

கந்தன் கொடுத்த பாதக்குறடு!

ஒருநாள், தமது தென்னந்தோப்பு வழியாகப் பாம்பன் சுவாமிகள் சென்றபோது, முள் ஒன்று இவரது காலில் குத்தி ரத்தம் வழிந்தது. வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் கசிந்து வருந்தினார். ‘`இந்த முள் குத்திய வலியையே தாங்க முடியவில்லை என்றால், உயிர் விடும்போது இந்த உடல் எவ்வளவு துன்பம் தருமோ பெருமானே!’ என்று கண்ணீர்விட்டார்.

பாம்பன் சுவாமிகள் தமது காலில் பாதக் குறடு (காலணி) இல்லாமல் சென்றதால்தான் முள் குத்தியது. அதனால் அவர் அடைந்த வேதனையை உணர்ந்த கந்தவேள், அன்றிரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த தச்சர் ஒருவரின் கனவில் தோன்றி, ‘`என் அன்பனான அப்பாவுக்குப் பாதக்குறடு செய்து கொடு’’ என்று கட்டளையிட்டார்.

தச்சரும் அவ்வாறே பாதக் குறடு செய்து அளித்ததுடன், கந்த வேள் தனக்கு இட்ட உத்தரவையும் சொன்னார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார் பாம்பன் சுவாமிகள்.

பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் சமாதி
பாம்பன் சுவாமிகள் சமாதி
பாம்பன் சுவாமிகள் சமாதி
பாம்பன் சுவாமிகள் சமாதி
பாம்பன் சுவாமிகள் கோயில்
பாம்பன் சுவாமிகள் கோயில்
பாம்பன் சுவாமிகள் கோயில்
பாம்பன் சுவாமிகள் கோயில்


முருகனின் உபதேசம்!

ஒருமுறை பாம்பன் சுவாமிகள் பிறப்பன் வலசை என்ற ஊரில், மயானத்தில் 35 நாள்கள் சதுரக் குழியில் இருந்தபடி தவம் செய்தார். அந்த தவத்தின்போது, 6-வது நாள் அவரது மனம் அடங்கியது. 7-வது நாள் இரு முனிவர்களும் (அகத்தியர் மற்றும் அருணகிரி நாதர்), ஓர் இளைஞரும் இவர் முன்னே தோன்றினர்.

ரகசிய மொழியில் இவருக்கு உபதேசம் செய்தார் இளைஞனாக வந்த முருகன். 35-வது நாள் இவர் தலைக்கு மேல் பேரொலி உண்டா யிற்று. ஓர் ஒளியும் பரவியது. உடனே, உச்சி மேல் கைகுவித்து அந்த இடத்தை மும்முறை வலம் வந்து வணங்கி எழுந்தார்.

இந்த நிஷ்டையில் இருந்தபோது கிடைத்த உபதேச நிதியே பின்னர் ‘தகராலய ரகசியம்’ என்னும் நூலாக சுவாமிகளால் பாடப்பெற்றது

மருத்துவமனையில் நிகழ்ந்த அற்புதம்!

அது 1923-ம் ஆண்டு. ஒருநாள் சென்னை தம்புச் செட்டித் தெருவில் சுவாமிகள் வரும்போது, ஒரு குதிரை வண்டிச் சக்கரம் இவரது இடது கணுக்கால் மீது ஏறி, கால் எலும்பு முறிந்துவிட்டது. சென்னை பொது மருத்துவ மனையில் இவரைச் சேர்த்தார்கள்.

கால் எலும்பு இணைவது கடினம் என மருத்துவர்கள் கூறி விட்டனர். சுவாமிகளின் சீடரான சுப்ரமண்ய தாசர் என்பவர் அவரது கால் குணமாக வேண்டி சண்முக கவச பாராயணத்தை திடபக்தியுடன் செய்தார். அப்போது, சுவாமிகளின் முறிந்த கால் எலும்புகளை இரண்டு வேல் முனைகள் இணைந்து நிற்பதுபோலும், அடியிலே ஒருவேல் முனை தாங்கி நிற்பதுபோலும் தாசருக்கு அற்புதக் காட்சி கிடைத்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-ம் நாள் இரவு படுக்கை அருகில் இரண்டு மயில்கள் நடனமாடுவதை சுவாமிகள் மனக்காட்சியில் கண்டார். கைகூப்பித் தொழுதபோது, அவரது படுக்கையில் ஒரு செந்நிறக் குழந்தை அவரது அருகில் கால் நீட்டிப் படுத்து மறைதலையும் கண்டார். கந்தனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்!

இதன்பிறகு, மருத்துவர்கள் சுவாமிகளுக்குக் கால் முறிந்த இடத்தை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். என்ன ஆச்சர்யம்... முறிந்த எலும்பு பொருந்தியிருந்தது. அதைக் கண்டு வியந்த மருத்துவர்கள், சுவாமிகளை வணங்கினர். தாம் கண்ட மயில் வாகன அற்புதக் காட்சியை, ‘அசோக சால வாசம்’ என்னும் பெயரில் எட்டு பதிகங்க ளாகப் பாடியுள்ளார் சுவாமிகள்.

இந்த அருட்காட்சியை நினைவுகூரும் வகையில் ‘மயூர வாகன சேவனம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் விழா நடத்தினார். தற்போதும் அது நடைபெற்று வருகிறது.

கந்தன் வந்தான் பாடலை ரசித்தான்!

திருச்செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து வந்தவர்- அனந்த சுப்பய்யர். மூத்த அர்ச்சகர். இவரும் கிராமத்து அன்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும் இணைந்து பாம்பன் சுவாமிகள் எழுதிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைப் பாராயணம் செய்து வந்தனர். இடையில் ஒருநாள், இந்தப் பாராயணத்தால் கவரப்பட்டு முத்தம்மையார் என்ற மூதாட்டியும் சேர்ந்துகொண்டார்.

திருச்செந்தூரில் உள்ள மண்டபம் ஒன்றில் இருவரும் மாலை வேளையில் ராக ஆலாபனையுடன் விடிய விடிய பாராயணம் நிகழும். 1918-ம் ஆண்டு சித்திரை மாதம், ஒரு வியாழக் கிழமை. இரவு 8 மணி இருக்கும். பாராயண மண்டபத்துக்குள் இளைஞன் ஒருவன் நுழைந்தான். ஒரு தூணின் மறைவில் இருந்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் யாராக இருக்கும் என்று முத்தம்மையார் மெள்ள நகர்ந்து அவனை விசாரிக்க முற்பட்ட போது சட்டென மறைந்து போனான்!

விஷயத்தை மற்ற இருவரிடமும் பிரமிப்புடன் பகிர்ந்துகொண்டார் அந்த மூதாட்டி. மறுநாள் விடிய விடிய பாராயணம் நிகழ்ந்தது. அதிகாலை சுமார் 4 மணியளவில் அதே இளைஞன் மண்டபத்துக்கு வந்தான். இப்போது மூதாட்டி அவனைப் பிடித்துக் கொண்டார்.

‘`யாரப்பா நீ?’’ என்று கேட்டாள். ‘`நான் இதே ஊர்தானம்மா. என்னைப் பின்தொடர்ந்து வந்தால், நான் இருக்கும் இடத்தைக் காட்டுவேன்’’ என்றான். முத்தம்மையாரும் அவனுடன் நடந்தாள். வீதியில் இறங்கி நடந்த இளைஞனுடன் சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் இணைந்து கொண்டாள்.

திருச்செந்தூர் வீதிகளில் அவர்களைப் பின்தொடர்ந்தாள் முத்தம்மையார். திருக்கோயிலின் திருமண மண்டபத்தை வந்தடைந்த இளைஞன், முத்தம்மையாரைத் திரும்பிப் பார்த்து, ‘`அந்தணர்கள் இருவரும் பாடிய பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. என்ன ஒன்று... இன்னும் இசை அதில் சேர்க்கப்பட வேண்டும். இதை அவர்களிடம் சொல். இந்தப் பாடல்கள் இசையுடன் இணைந்து எங்கு ஒலிக்கிறதோ, அங்கே நான் எழுந்தருளுவேன். எனது இருப்பிடம் இந்தத் திருக்கோயில்தான்’’ என்றான். மறுகணம் அவனும் உடன் வந்த பெண்ணும் மறைந்து போனார்கள்.

வந்தது முருகனே என்றுணர்ந்த முத்தம்மையார் மெய்சிலிர்த்துப் போனார். இப்போது முருகன் அடியார்கள் `பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் முருகனுக்குப் பிடித்தமானது’ என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள்!

பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்


திருவான்மியூரில்...

பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள மொத்தப் பாடல்கள் 6,666. இவை 6 மண்டலங்களாக வகுக்கப்பெற்றுள்ளன. இவர் இயற்றி யுள்ள உரைநடை நூல் 32. சுவாமிகள் தம் எழுத்துப் பணியால் சுயமாகச் சம்பாதித்துச் சேர்த்திருந்த தொகையைக் கொண்டு, இன்றைய சென்னையில் உள்ள திருவான்மியூரில் ஓர் இடத்தை வாங்கச் செய்தார். சுக்கில வருடம் வைகாசி மாதம், வியாழக்கிழமை (30-5-1929) அமர பட்ச சஷ்டி திதி, அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் அவரது ஆன்மப் பேரொளி முருகன் திருவடியில் கலந்தது. திருவான்மியூரிலேயே (கலாக்ஷேத்ரா அருகில்) அவருக்குச் சமாதி எழுப்பப்பட்டது.

‘முருகப்பெருமானைப் பாடிப்பரவுவார் யாவரும் மகாதேஜோ மண்டலத்தார்’ என்னும் குகநெறி ஒருமைப்பாட்டை உருவாக்கிய பாம்பன் சுவாமிகள், இன்றும் தம்மை நாடிவரும் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.