மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் அம்பிகை வாராஹிதேவி. சப்தமாதர்களில் ஒருவள். மகாசக்தி தாருகாசுரன், சும்ப-நிசும்பன், பண்டாசுரன் ஆகியோரை வதைத்த போது துணை நின்றவள்; விஷூக்ரன் எனும் அசுரனை மாய்த்தவள் வாராஹி என்கின்றன ஞானநூல்கள்.
எலும்புக்கும் நரம்புக்கும் அதிதேவதையான வராஹி, வாதம்; பித்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துபவள். பல்வேறு ரூபங்களில் அருளும் இந்த தேவி, கலப்பையை ஆயுதமாகக் கொண்டு நம் மனங்களில் தைரியத்தை விதைப்பவள்.
வம்பு வழக்குகளிலிருந்து விடுபட, திருஷ்டி, தோஷம், அச்சம் விலகிட வாராஹி வழிபாடு அவசியம். இவளுக்கு மயில் தோகையால் விசிறி, வெண்ணெய்யும், முறுக்கும், வெள்ளரிக்காயும் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்தால் நலம் உண்டாகும்.

பஞ்சமி திதி நாள்கள் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதியில் அருளும் வாராஹிக்கு பூண்டு கலந்த, மிளகு சேர்த்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். பஞ்சமி தினத்தில் தேங்காயில் நெய் விளக்கேற்றி வைத்தும் வழிபடலாம்.
அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றிக் கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் தந்தருள்வாள், வராஹிதேவி.
-ஆர்.சிவகுமார், திண்டிவனம்