Published:Updated:

பாண்டுரங்கனைக் கட்டிப்போட்ட பக்தை

பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
பாண்டுரங்கன்

சக்திதர்

பாண்டுரங்கனைக் கட்டிப்போட்ட பக்தை

சக்திதர்

Published:Updated:
பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
பாண்டுரங்கன்

பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள்.

பாண்டுரங்கன்
பாண்டுரங்கன்


இவர்களுக்கு சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தாள். தினமும் தெய்வ வழிபாட் டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தாள். ஒரு நாள் தோழிகளுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்துகொண்டிருந்தார்.

சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய், ‘‘தாத்தா, நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கிவிட்டீர்களே... இது நியாயமா?’’ என்று கேட்டாள்.

‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்துவிட்டது!’’ என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை. தனது மணல் வீட்டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார்.

மேலும், அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார். அத்துடன், குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறி மறைந்தார் அந்தப் பெரியவர்.

அதன் பிறகு அவள் எப்போதும் எட்டெழுத்து மந்திரத்திலேயே லயித்திருந்தாள். திருமண பருவம் வந்தது. சிந்து தேசத்தைச் சேர்ந்த மித்ருராவ் என்ற இளைஞனுக்கு அவ ளைத் திருமணம் செய்து வைத்தனர். கணவர் வீட்டில் சகலரும் அவளை நன்றாக வேலை வாங்கினர். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். அவளின் மனமோ பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது.

அதேநேரம், தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ரு ராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவன் உறவினரோ அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார் கள். அறையில் வைத்து பூட்டினார்கள்.

பக்தையின் துயரத்தை பகவான் பொறுப்பாரா?அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார். சக்குபாய் அவரின் கால்களில் விழுந்து வணங்கினாள். இவரால் அவள் குணப் படுவாள் என்று கணவர் வீட்டாரும் சமாதானம் அடைந்தனர்.

முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவை யானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும். ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்று அறிவுரை வழங்கிச் சென்றார். அதன்படியே கணவருடன் இனிமையாக இல்லறம் நடத்தினாள் சக்குபாய். அவர்களைக் கண்டு ஊரே வியந்தது. எனினும் தனக்கு ஆசி வழங்கிய முதியவரை மீண்டும் ஒருமுறை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும் அவளிடம் இருந்தது. அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு ஒருநாள் கிணற்றில் குதித்துவிட்டாள்.

அப்போதும் பகவான் முதியவராக வந்து அவளைக் காப்பாற்றி வீடு சேர்த்தார். இங்ஙனம் பகவானின் திருவருள் அவளை எப்போதும் காத்து நின்றது.

ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது. கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து வணங்கி, தன்னையும் பண்டரிபுரத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டாள்.

அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர். இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கணவரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள்.

கணவரோ சம்மதம் தெரிவிக்காமல், அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள் சக்குபாய். பகவான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உருவில் வந்தார். அறையின் பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார்.

‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.

வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவரைத் தூணில் கட்டிப்போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வருவ தாகக் கூறினாள்.

தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார்.

அவள் மகிழ்ந்தாள்; அவர்களுடன் பண்டரிபுரத்தை அடைந்தாள்.

சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார். அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன்றுமே நடக்காதது போல், வீட்டார் அனைவருக்கும் சேவகம் செய்து வந்தார்.

பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியில் ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள்.

அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டுவிட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர்.

அவரோ அதை நம்பவில்லை. ``சக்குபாய் இங்கு என்னுடன்தான் இருக்கிறாள்...’’ என்று கூறிவிட்டார்.

பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரி புரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து, பிறகு மறைந்தார்.

ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த்தாள்.

‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள். உடனே அந்தப் பெண், சக்குபாய்க்கு பகவானாகக் காட்சி கொடுத்தார். இன்னும் சில காலம் இல்லறத்தில் இருக்கும்படி கூறி மறைந்தார்.

வீட்டுக்கு வந்த சக்குபாய் தனக்காக, இங்கு இருந்தது பகவானே என்பதை எல்லோரிடமும் சொன்னாள். கணவரும் தன் தவறை உணர்ந்தார். செல்வம் நிறைய இருந்தும் தானம் என்பதை மறந்து வாழ்ந்ததற்காக வருந்தினார். சக்குபாயுடன் சேர்ந்து நிறைய தான தர்மங்கள் செய்தார்.

பல க்ஷேத்திரங்களுக்கு தம்பதியாகச் சென்று வணங்கினர். பிறகு பண்டரிபுரத்துக்கே வந்து இறைவன் புகழ் பாடி, தியானத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்து இறுதியில் இறைவனடி சேர்ந்தனர்.

உணவு சுத்தமானால் மனம் சுத்தமாகும்!

முகம் பார்க்கும் கண்ணாடியில் தூசி படிந்திருந் தால் அதில் நம் உருவம் தெளிவாகத் தெரியாது. தூசியை அகற்றினால், 'பளிச்'சென்று தெரியும். அதுபோலவே நம் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, இறைநாமம் உதவும்.

கடவுள் நித்ய சுத்தன்; அப்பழுக்கற்றவன். அவரது பெயரை அசை போட்டதும் மனம் சுத்தமாகி, உள்ளே இறைத் தோற்றம் பதிந்துவிடும்.

மனதைச் சுத்தப்படுத்த மற்றொரு வழி, சுத்தமான உணவு! ஆம், உணவு சுத்தமானால் மனம் சுத்தமாகும்.

உண்ணும் உணவில்- படைத்தவனையும் (பிரம்மா), அதன் சுவையில்- காப்பவனையும் (விஷ்ணு), அந்த உணவை அருந்துபவனில் - ஆட் கொள்பவனையும் (ஈசன்) நினைக்கவேண்டும். இந்த நினைவே அந்த உணவில் ஒட்டியுள்ள அசுத்தங்களை அகற்றிவிடும் என்கிறது புராணம்.

- வி.சுரேஷ், கரூர்

நீங்கள் எந்த வகை?

நண்பர்கள் இருவர் தவம் செய்தார்கள். கடவுள் தோன்றினார். ‘முதலில் யார் என்னிடம் வரம் கேட்கிறார்களோ, அதன் இரட்டிப்பு பலன் மற்றவருக்குத் தானாகவே கிடைத்துவிடும். வேண்டியதைக் கேளுங்கள்’ என்றார்.

இருவருக்கும் முதலில் வரம் கேட்கத் தயக்கம். தான் கேட்கும் வரத்தின் இரு மடங்கு அடுத்தவனுக்குக் கிடைத்து விடுமே... அதில் ஏற்பட்ட பொறாமை, இருவரையும் மௌனமாக்கியது.

கடவுளின் நிர்ப்பந்தம் வலுக்கவே, அதில் ஒருவன் துணிந்து வரம் கேட்டான்: ‘‘கடவுளே... என் ஒரு கண்ணைக் குருடாக்கி விடு!’’ அவ்வளவுதான். மற்றவனின் இரு கண்களும் தானாகவே பார்வை இழந்தன. சுயநலத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவு இது!

இந்த உலகில் நான்குவகை மனிதர்கள் உண்டு.

1. பொதுநலனில் தன்னிறைவு பெறும் சான்றோர்கள்.

2. சுயநலத்துக்கு முன்னுரிமை தந்து, அதை கவனமாக நிறைவு செய்து, பிறகு பொது நலத்தில் அக்கறை காட்டுபவர்கள்.

3. தனது சுயநலத்தை மறைத்துக்கொள்ள பொதுநலத்தைப் போர் வையாகப் பயன்படுத்துவோர் மூன்றாவது வகை.

4. சுயநலத்துக்காக பொதுநலத்தை அழிப்பவர்கள்.

என்று மனித இனத்தை நான்கு பிரிவாக வகைப்படுத்துகிறார், பர்த்ருஹரி என்ற மகான். இதில் நாம் எந்த வகையினர் என்பதைத் தெளிந்துணர்ந்து வாழ்தல் சிறப்பு.

- கெ.கவிதா, திருச்சி-3