திருக்கதைகள்
Published:Updated:

கந்தல் புடவையும் பாண்டு ரங்கனும்!

பண்டரிபுரம் பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்டரிபுரம் பாண்டுரங்கன்

பண்டரிபுரம் பாண்டுரங்கன்

பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதீத பக்திகொண்டு, அந்த இறைவனின் அருளுக்குப் பாத்திரரான அடியார்களின் ஒருவர், புகழ்பெற்ற பக்த கவி ஜனாபாய். பாண்டுரங்கனின் நாமத்தையே மனதில் வைத்திருந்து, மகான் நாமதேவருக்குச் சேவை செய்வ திலேயே வாழ்நாளைக் கழித்தவர், ஜனாபாய்.

பண்டரிபுரம் பாண்டுரங்கன்
பண்டரிபுரம் பாண்டுரங்கன்

இவரின் பக்தியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் நிகழ்த்திய திருவிளை யாடல்கள் பலப் பல. ஒருநாள் இரவு பெருமழை பொழிந்தது. மகான் நாமதேவர் குடியிருந்த குடிசையின் கூரைகள் காற்றில் பறந்தன. அப்போது இறைவனே தோன்றி, தனது சக்கரத்தை குடிசைக்கு மேலே உயர்த்திப் பிடித்துக் காப்பாற்றினாராம்!

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜனா பாயும் நாமதேவரும் இறை தரிசனத்தில் மெய்ம்மறந்து நின்றனர். பிறகு, அவர்களின் விருப்பப்படி, அங்கே உணவு உண்ணச் சம்மதித்தார் இறைவன்.

நனைந்துபோன பாண்டுரங்கனின் பீதாம்பரத்தை வாங்கி, துவைத்துக் காயப்போட்டாள் ஜனாபாய். பட்டாடை களையும் ஆபரணங்களையும் துறந்து, ஜனாபாய் கொடுத்த கந்தல் புடவை யைச் சுற்றிக்கொண்டான் பாண்டுரங்கன். அவள் பரிமாறிய உண வைச் சாப்பிட்டான். பிறகு, அவர்களின் இல்லத்திலேயே படுத்து உறங்கினான் பாண்டுரங்கன்.

அதுமட்டுமா? கையால் சுற்றும் இயந்திரத்தில் ஜனாபாய் மாவு அரைக்க ஆரம்பித்ததும், எழுந்து வந்த பாண்டு ரங்கன், அவளைப் பாடச் சொல்லிவிட்டு, தானே இயந்திரத்தைச் சுற்றத் தொடங் கினான். ஜனாபாய் கண்களில் நீர் பெருக, இறைவனைப் பாமாலையால் ஆராதித் துப் போற்றினாள்.

இநிலையில், ஆலயத்தில் ஆபரணங்கள் எதுவும் இன்றிக் கந்தல் புடவையுடன் பாண்டுரங்கன் காட்சி தந்ததைக் கண்டு, கோயில் ஊழியர்களும் பக்தர்களும் பரபரப்பானார்கள். அந்தக் கந்தல் ஆடை, ஜனாபாயுடையது என அறிந்தவர்கள், விறுவிறு வென நாமதேவரின் இல்லத்துக்கு வந்தனர். அங்கே, இறைவனின் ஆபரணங்களையும் கொடியில் உலரும் பட்டுப் பீதாம்பரத்தையும் கண்டு ஆவேசமுற்றனர்.

ஜனாபாய் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி, விசாரணைக்கு அழைத் துச் சென்றனர். அப்போது, ‘ஜனாபாயின் அன்பையும் பக்தியையும் உலகறியச் செய்வதற்காக நான் நடத்திய விளையாடலே இது!’ என இறைவன் கூற, அவளைப் போற்றி வணங்கியது கூட்டம்.

- ஜி.செல்வி, சென்னை-55