
அவ்வளவு பெரியவரான ஈசனைத் தொண்டர்கள் தம் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள்.
விண் முகில்கள் தவழும் மேற்குமலைத் தொடருக்கே ஓர் ஆபரணம் போன்று தனித்துத் திகழும் தோரணமலையின் பிரமாண்டத்தை முழுவதுமாகக் காணும் அன்பர்களுக்கு, அதன் ஒட்டுமொத்த உருவமும் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தத் தவறாது.

எப்போதுமே மலைகள், கடல்கள் போன்றவை இயற்கையின் பிரமாண்டத்துக்குச் சாட்சியாகத் திகழ்பவை. அவற்றின் முன் நாம் சிறு துரும்பாகி நிற்கும்போதுதான் `இறைவன் பெரியவன்’ என்ற எண்ணம் எழுந்து, நமக்குள் இருக்கும் அகந்தையை அறவே அற்றுப் போகச் செய்துவிடும்.
ஆனால் மூதாட்டி ஒருவர் பெரியது - பெரியவர் என்று இறை வனைக் குறிப்பிடவில்லை. எனில், வேறு யார் பெரியவர்?
நாம் வாழும் உலகம் மிகப்பெரியது. இதைப் படைத்த நான் முகன் அதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பிரம்மனோ திருமாலின் உந்தியில் (நாபியில்) தோன்றியவர். பிரம்மனைப் படைத்த திருமாலோ பாற்கடலில் துயில் கொள்கிறார். எனவே, பாற்கடல் பெரியது.
அந்தக் கடலை தன் கையால் எடுத்துப் பருகியவர் அகத்தியர். எனில், அவர்தான் பெரியவரா? இல்லையாம்! பின்னே... அந்தக் கடல் நீரை எடுத்த குடம் பெரியதல்லவா? அந்தக் குடமோ மண்ணால் ஆனது. அந்த மண்ணோ ஆதிசேஷனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. எனவே, ஆதிசேஷன் பெரியவன்.
ஆனாலும் அப்படி, மண்ணைச் சுமக்கும் ஆதிசேஷனை, தன் சிறு விரல் மோதிரமாக அணிந்திருக்கிறாள் பராசக்தி உமாதேவி. ஆக உமாதேவி மிகப் பெரியவள் என்ற முடிவுக்கு வரலாமா? அதுதான் இல்லை. அவளையும் தன் ஒரு பக்கத்தில் அடக்கிக் கொண்டிருக்கும் பரமேஸ்வரன் எல்லோரையும்விட பெரியவர் அல்லவா?
இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டால் ஆம், அவரே பெரியவர் என்போம். ஆனால் அந்த மூதாட்டி அப்படிச் சொல்லவில்லை.
அவ்வளவு பெரியவரான ஈசனைத் தொண்டர்கள் தம் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால், எல்லாரையும்விட தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரியது. அது சொல்வதற்கு அரியது என்கிறார்.
இப்படிச் சொன்ன அந்த மூதாட்டி யார் தெரியுமா? தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் ஒளவைதான்!
ஆக அடியார்களின் பெருமை அளவிடற்கரியது. அப்படியான அடியார்களுக்கு ஏதேனும் ஒன்றென்றால் பரமன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். நம் ஆறுமுகப் பரமனான தோரணமலை முருகனும் அப்படியே. தன் பக்தர்களுக்கு ஒரு துன்பம் நேரும்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். ஆகவேதான் `மனதில் ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்’ என்று அந்த வேலவனைச் சிறப்பிக்கிறார்கள் அடியார்கள்.
சென்னை தனியார் நிறுவன ஊழியரான அந்த அன்பரின் விஷயத்திலும் முருகனின் தண்ணருள் துணை நின்றது.
அலுவலகத்தில் கடும் மனச் சஞ்சலத்தைச் சந்தித்துக் கொண் டிருந்த அந்த அன்பர், வேலையை விட்டுவிடும் முடிவுக்கு வந்திருந் தார். அதேநேரம் வங்கிக் கடன்கள், பிள்ளைகள் படிப்பு... ஒவ்வொன்றும் நினைவுக்கு வர, அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்றும் வழி புலப்படாமல் போகவே, தோரண மலையானை தரிசித்த கணத்தில் மனப்பாரத்தை இறக்கி வைத்தார்.
அக்கணமே `யாமிருக்க பயமேன்’ என்று உணர்த்துவது போன்று முருகனின் திருக்கரத்தில் இருந்து பூ ஒன்று உதிர்ந்தது என்று பார்த்தோம். அந்தப் பூவாக்கு வெகு சீக்கிரம் பலித்தது.
பூஜை முடிந்து, சுற்றுப் பயணத்துக்கு வந்த அனைwவரும் பேருந்தில் ஏறுவதற்குத் தயாரான நிலையில், அன்பரின் தலைமை அதிகாரி அழைத்தார். சிறு புன்னகையோடு அந்த விஷயத்தைச் சொன்னார்: ``சுற்றுப் பயண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தீர்கள். பாராட்டுகள். நாம் கிளம்புவதற்கு முன்னதாகவே நிர்வாகத் தரப்பில் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தது. உங்களை வேறு பிரிவுக்கு மாற்றப் போகிறோம்; அதுவும் பதவி உயர்வுடன்... வாழ்த்துக்கள்’’ என்றார்!
அன்பர் அசந்துபோனார். இனி அவரைப் பாடாய்ப் படுத்தி எடுத்துக்கொண்டிருந்த தலைமையின் கீழ் பணிபுரியத் தேவையில்லை. வேறு பிரிவுக்குச் செல்கிறார். பதவியும் உயர்கிறது; அதைத் தொடர்ந்து ஊதியமும் நிச்சயமும் உயரும். எனில், வேலையை ராஜினாமா செய்யத் தேவையில்லை!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அந்த அன்பருக்கு. நா தழுதழுக்க நன்றி சொன்னார். அவரின் உதடுகள் மேலதிகாரிக்கு நன்றி சொன்னதுபோல் தோன்றினாலும், உள்ளமோ நெகிழ்வும் மகிழ்வுமாய் அந்தத் தோரணமலையானுக்கே நன்றி சொன்னது.
பிரார்த்தித்து அரை நாழிகைப் பொழுதுகூட ஆகவில்லை. அதற்குள்ளாக தன் மனச் சஞ்சலத்தைத் தீர்த்துவிட்ட தோரண மலையானின் கருணையை எண்ணி உருகிப் போனார். இவர் மட்டுமா? இவரைப் போன்றே அடியார்கள் பலரது வாழ்விலும் அனுதினமும் அந்த அழகனின் அருளால் நிகழும் அற்புதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
`மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி’ என்றொரு பாடல் உண்டு. குதம்பைச் சித்தர் அருளிய பாடல். இதற்குப் பலவிதமான தத்துவ விளக்கங்கள் உண்டு. முருகன் அடியாரான நண்பர் ஒருவர், தாம் படித்ததாகச் சொன்ன விளக்கம் இது:
``மாங்காய்ப் பால் என்பது சுப்ரமணிய அனுபூதி. தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. அதேபோல் நம்மிடமும் காமம், கோபம், மயக்கம் ஆகிய மூன்று தீமைகள் உண்டு. அவற்றை வேண்டாம் என்று விலக்கி, பெரும்பேறான அனுபூதியைப் பெற முயல வேண்டும்’’ என்று விவரித்தார்.
என்ன நிகழ்ந்தாலும் கந்தன் பார்த்துக்கொள்வான் என்று அவன் பாதாரவிந்தங்களில் சரணடைந்துவிட்டால், மலைக்கிழவோன் ஆகிய தோரணமலையான் எந்தக் கவலையும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்வான்.
வரும் பங்குனி மாதம் 22-ம் நாள் (5.4.23) புதன் கிழமை அன்று பங்குனி உத்திரத் திருநாள் வருகிறது. முருகப்பெருமானை வழிபட உகந்த புண்ணிய தினங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று.
அன்றைய தினம் அற்புதமான வழிபாடுகளுக்குத் தயாராகிறது தோரணமலை. காலை 6 மணி முதல் தொடர்ந்து 12 மணி நேரம் விரிவான வழிபாடுகள், துதிப்பாடல்கள் முற்றோதுதல், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
நீங்களும் குடும்பத்துடன் சென்று கலந்துகொள்ளுங்கள்; அந்தக் குமரனின் திருவருள் உங்கள் இல்லத்தில் எப்போதும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.
- தொடரும்..

'காவடிகள் 20'
தங்கக் காவடி: நீடித்த புகழ்.
வெள்ளிக் காவடி: ஆரோக்கியம்.
பால் காவடி: செல்வச் செழிப்பு.
சந்தனக் காவடி: வியாதிகள் நீங்கும்.
பன்னீர்க் காவடி: குறைபாடுகள் விலகும்.
சர்க்கரைக் காவடி: சந்தான பாக்கியம் தரும்.
அன்னக் காவடி: வறுமை நீங்கும்.
இளநீர்க் காவடி: இனிய வாழ்வு தரும்.
அலங்காரக் காவடி: திருமணத்தடை நீங்கும்.
அக்னிக் காவடி: தோஷம், அச்சம் நீங்கும்.
கற்பூரக் காவடி: குடும்பப் பிரச்னைகள் நீங்கும்.
சர்ப்பக் காவடி: அனுகூல வாழ்வு கிட்டும்.
மஞ்சள் காவடி: மங்கல வாழ்வு கிட்டும்.
சேவல் காவடி: எதிரிகள் தொல்லை நீங்கும்.
புஷ்பக் காவடி: நினைத்தது நடக்கும்.
தேர்க் காவடி: ஆயுள் வளர்க்கும்.
மச்சக் காவடி: வழக்குகள் தீரும்.
மயில் காவடி: இன்பம் நிறையும்.
பழக் காவடி: தொழிலில் லாபம் பெருகும்.
வேல் காவடி: ஞானம் உண்டாகும்.