Published:Updated:

அம்மனின் வீதியுலா அணைக்கப்படும் மின் விளக்குகள்!

பரநாச்சி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பரநாச்சி அம்மன் கோயில்

பட்டமங்கலம் அருகில் பரநாச்சி அம்மன் கோயில்

அம்மனின் வீதியுலா அணைக்கப்படும் மின் விளக்குகள்!

பட்டமங்கலம் அருகில் பரநாச்சி அம்மன் கோயில்

Published:Updated:
பரநாச்சி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பரநாச்சி அம்மன் கோயில்

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் அருகில் உள்ள பரநாச்சி அம்மன் கோயிலில் `சிறப்பு கொடுத்தல்’ வழிபாடு மற்றும் புரவி எடுப்புத் திருவிழா மிகவும் விசேஷம் என்று பார்த்தோம்.

அந்த வகையில் எவரேனும் வேண்டுதல்பேரில் சிறப்பு கொடுக்கப் போகிறார்கள் எனில், அதுபற்றி முன்கூட்டியே ஊரில் தகவல் சொல்லிவிட வேண்டும்.

பரநாச்சி அம்மன்
பரநாச்சி அம்மன்


அப்படி தெரிவித்துவிட்டால், பூசாரி களின் குடும்பங்களைச் சேர்ந்த 7 பெண் கள், 10 நாள்கள் சுத்தபத்தமாக விரதம் இருந்து, வெள்ளைப்புடவை கட்டிக் கொண்டு விதைப்பு நெல்லை உரலில் இட்டு குத்திக் கொழித்து, முறத்தில் போட்டுப் புடைத்து, அரிசியை எடுத்துத் தருவார்கள். அந்த அரிசியையே பால் சோறு பொங்கல் வைக்க பயன்படுத்துவர்.

கோயிலுக்குள் இருக்கும் 3 மண் அடுப்புகளில் 3 புதுப் பானைகள் வைத்து, அவற்றில் பால் ஊற்றி அது பொங்கியதும், அரிசியைப் போட்டு பால் சோறாகப் பூசாரிகள் பொங்குவார்கள். அன்று மட்டும் அந்தப் பால்சோறு அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும். அத்துடன் இளநீரும் உளுந்த வடையும் நைவேத்திய மாக வைக்கப்படுகின்றன.

கோயிலில் ஆங்காங்கே நிறைய கல் உரல்கள் காணப்படுகின்றன. மாவிளக்கு போடுவதாக வேண்டிக்கொண்டவர்கள், அங்கேயே வந்து அரிசியை ஊறவைத்து இடித்து மாவிளக்கு தயாரிப்பார்களாம். புரவி எடுப்பின்போது எக்கச்சக்கமான பக்தர்கள் மாவிளக்கு இடிப்பதைக் காண லாம் என்கிறார்கள் பக்தர்கள்.

பங்குனியில் புரவி எடுப்புத் திருவிழா

பெண்களுக்குத் தூரத்தில் இருந்தே காட்சி கொடுக்கும் இந்த பரநாச்சியார், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை- பங்குனி மாதம் கடைசிச் செவ்வாய்க் கிழமை அன்று மட்டும், கைக்கெட்டும் தூரத்தில் பெண்களுக்குக் காட்சி தருகி றாள். இந்தத் திருவிழா வேறெங்கும் காண்பதற்கரிய மிக வித்தியாசமான விழாவாக இருக்கிறது.

அதுகுறித்து விளக்குகிறார் அந்த ஊரைச் சேர்ந்த அ.வெ.அடைக்கப்பன்.

“இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி கடைசிச் செவ்வாயில் திருவிழா. அந்த நாள் அஷ்டமியோ, கரிநாளோ... அதெல்லாம் பார்ப்பதில்லை. என்னவாக இருந்தாலும் அன்று திருவிழா நடக்கும்.

விழா நடக்கும் வருடத்தில் தை மாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று, ஊர்க் கூட்டம் போடுவர். தை மாதம் வளர்பிறையில் வரும் செவ்வாய்க் கிழமையில் சேங்கை (கோயிலுக்கு எதிரே இருக்கும் குளம்) வெட்டிப் பிடிமண் கொடுப்பது என ஊர் மக்கள் அனைவரும் ஏக மனதாகப் பேசி முடிவெடுப்பார்கள்.

இந்த விஷயம் தண்டோரா மூலம் ஊருக்கும் தெரிவிக்கப் படும். அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் ஆண்கள் அனைவரும் சேங்கையில் பிடி மண் வெட்டி பூசாரியிடம் தர, பூசாரி அதைத் தட்டில் வைத்து குயவரிடம் கொடுப் பார். கோயிலுக்கான மண் பதுமைகளைச் செய்வதற்கு என்றே பரம்பரையாகக் குயவர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் பிடி மண் ணைப் பெற்று, மற்ற மண்ணு டன் கலந்து பரநாச்சியின் புதிய பிம்பத்தையும் திரு விழாவுக்கான மற்ற பிம்பங்களையும் செய்வார்கள்.

தை மாதம் தொடங்கி பங்குனி மாதத்திற்குள் முதலில் காவல் பூதங்கள், பரிவார தேவதைகள், புரவிகள் (குதிரை பொம்மை) எல்லாம் செய்துவிடுவார்கள். நிறைவாக திரு விழாவுக்கு முதல் வாரம்தான் அன்னையின் பிம்பத்தைச் செய்யத் தொடங்குவர். புதன்கிழமை காலையில்தான் உருவத்துக்கு அடிபோடு வார்கள். பிம்பத்தைச் செய்து விளாரிமாரில் வைத்திருந்து. பின் பூவில் (சூளை நெருப்பில்) வைத்து எடுப்பார்கள்.

விளாரிமார் எடுத்து வந்து...

திருவிழாவுக்கு சுமார் பத்து நாள்களுக்கு முன்பே, காப்புக் கட்டியதும் தண்டோரா போட்டுவிடுவார்கள்.

அன்றிலிருந்து ஊர்க் கட்டுப் பாடுகள் அமலுக்கு வரும். கர்ப்பிணிகள், மாதவிலக்கு ஆன பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் போன்றோரை ஊருக்கு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, திருவிழா நடக்கும் நாளில் ஏதேனும் அதுபோல தீட்டு ஆகிவிட்டால்கூட, பின் வாசல் வழியாக அனுப்பிவிடுவார்கள்.

கருங்குளத்துக்கு இந்தப்பக்கம் சொக்கநாதபுரம்; அந்தப் பக்கம் பட்டமங்கலம். ஏதேனும் ஒரு ஊருக்குப் போய்விடுவார்கள். ஊருக்குள்ளேயே இருக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. அதை இன்றளவும் பின்பற்றி வருகிறோம். தவறிப்போய், தெரியாமல் ஏதாவது சுத்தமாக இல்லாமல் போய் விட்டால் எப்படியாவது தடங்கல் ஏற்பட்டுச் சுட்டிக்காட்டிவிடும். எங்கள் குடும்பத்திலேயே அப்படி நடந்து, நாங்களே பார்த்திருக் கிறோம்.

திருவிழாவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று விளாரி மார் சேகரிக்கச் செல்வோம். அப்படிப் போகும் நபர்களும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். நான் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த வைபவத்துக்குப் போகிறேன். விளாரிமார் சேகரிக்க அருகிலிருக் கும் நாச்சியார் புரம் என்னும் ஊருக்கு நடந்தே செல்வோம்.

அப்போதெல்லாம் கையில் சாப்பாடு கட்டிக்கொண்டு செல் வோம். வழியில் கம்பனூரில் கண்மாய்க்கரையில் இருக்கும் பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் சாப்பாட்டு தூக்குகளைக் கட்டி வைத்து விட்டுப் போவோம்.

அங்கே விளாரி செடிகள் பச்சைப் பசேலென புதர்களாக மண்டிக் கிடக்கும். ஆட்கள் அதை வெட்டித் தர, நாங்கள் கட்டித் தூக்திக்கொண்டு வருவோம். மாலை 7 மணி ஆகிவிடும். கையில் அரிக்கன் விளக்கு, டார்ச் எல்லாம் கொண்டு போவோம்.

மீண்டும் கம்பனூர் வர இரவு ஆகிவிடும். அவரவர் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு படுத்து விடுவோம். ஆலமர விழுதில் சாப்பாடு தூக்குச்சட்டிகளை கட்டிவிடுவது ஏன் தெரியுமா? விளாரிமார் வெட்டச் சென்றவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ளத்தான். யாராவது வரவில்லை எனில், அவருடைய சாப்பாட்டு தூக்கு விழுதிலேயே தொங்கும் அல்லவா! செல்போன் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் அனைவரும் வந்துவிட்டார்களா என்பதைக் கண்டறிய பயன்படுத்திய யுக்தி இது. பிறகு சனிக் கிழமை அதிகாலையில் எழுந்து பாதயாத்திரையைத் தொடர்ந்து, கருங்குளம் வந்து சேர்வோம்.

பரநாச்சி அம்மன் கோயில்
பரநாச்சி அம்மன் கோயில்


முன்பெல்லாம் ஊர்க்காரர்கள் 200, 300 பேர் மட்டுமே விளாரிமார் சேகரிக்கச் செல்வோம். இப்போது, பரநாச்சி தாயாரைக் கும்பிட்டுப் பலனடைந்த பல வெளியூர்க் காரர்களும் வருவதால், சுமார் 2000 பேருக்கு மேல் போகிறோம். இப்போது பாதையை நன்கு சீராக்கி, மின்விளக்கு போட்டு வைத்திருக்கிறார்கள். அதேபோல், இப்போது விளாரிமார் வெட்டச் செல்பவர்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கெட், பழங்கள், நீர் மோர் என எல்லாமே வழியெல்லாம் வழங்கப் படுகின்றன. எனவே இப்போது யாரும் சாப்பாடு கட்டிச் செல்வதில்லை.

இப்படி நாங்கள் சுமந்துவரும் விளாரிமாரை கோயிலுக்கு வெளியே வயலில் பரப்பி வைத்துவிடுவோம். பின்பு அதை வேளாரிடம் கொடுக்க, அவர் பூசாரியிடம் கொடுத்துவிடுவார். ஞாயிறன்று காலையில் அம்மனுக்குப் பூசை செய்யும் உரிமையுள்ள குடும்பத்தினர் எல்லாரும் வந்து, கோயிலின் விதானம் மற்றும் பக்கவாட்டில் இருக்கும் விளாரி மார்களைக் களைந்து அப்புறப்படுத்துவார்கள்.

பிறகு புதிய மார்களைக் கொண்டு கோயிலை நிர்மாணிப்பார்கள். பெண்கள் யாருமே அந்தப் பக்கம் கூட வர மாட்டார்கள். அனைத்து வேலை களும் ஆண்களால் மட்டுமே பார்க்கப்படும்.

அம்மனுக்குத் தைல அபிஷேகம்!

செவ்வாய் அன்று காலையில் கோட்டி அம்பலத்தை (பெரிய அரிவாள்) ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். ஊர்வலம் கோயிலுக்கு வந்து சேர்ந்ததும், அனவைரும் அன்னையை அழைத்து வரப் புறப்படுவார்கள்.

புதியதாகச் செய்த அன்னையை ஊரின் நடுவே உள்ள சவுக்கையில் (சதுக்கம்) கொண்டு வந்து வைத்து ‘கண் திறக்கும்’ நிகழ்வு நடைபெறும். பிறகு அம்மனுக்கு ‘தைலாபிஷேகம்’ எனப்படும் எண் ணெய் அபிஷேகம் ஆரம்பிக்கும்.

பக்தர்களே அம்பாளுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வார்கள். இது இந்தக் கோயிலின் மற்றும் ஒரு சிறப்பு. குடம் குடமாக எண்ணெய் ஊற்றப்படும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே அம்மனின் தரிசனம் என்பதால், பெண்கள் கூட்டம் அதிகம் திரண்டிருக்கும். லாரிகளில் கொண்டு வந்து டின் கணக்கில் எண்ணெய் வியாபாரம் நடக்கும்.

அம்மனுக்கு ஊற்றப்படும் எண்ணெயைச் சேகரிக்க பெரிய தொட்டி கட்டியிருக்கிறார்கள். இந்த முறை... கொரோனாவுக்கு பிறகு இப்போதுதான் திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம்!

தைலாபிஷேகம் செய்த பிறகு, அம்பாளைத் துடைத்து, கேடகம் என்னும் தேர் போன்ற அமைப்பில் தூக்கி வைப்போம். சொர்ண அங்கி சாத்தி, வைர நகைகள் சாத்தி, கையில் கிளி வைத்து, பூஜைகள் செய்யப்படும். பார்ப்பதற்கு ஜாஜ்வல்யமாக இருப்பாள். இரு கண்கள் போதாது தரிசிக்க! அவ்வளவு அழகாக இருப்பாள் பரநாச்சியார்!

அம்மனுக்கு முன்பாக, கோயில் வீட்டிலிருந்து பூசாரிகளால் கட்டி எடுத்து வரப்பட்ட கரகத்தை பூசாரி தூக்கிச் செல்வார். அப்போது அருள் வந்து அவர் ஆடுவதைப் பார்க்க சிலிர்ப்பாக இருக்கும். அந்நேரம் அவர் கூறும் அருள்வாக்கு பலிக்கும் என்பது நம்பிக்கை.

அணைக்கப்படும் மின் விளக்குகள்!

இரவு அம்பாளின் ஊர்வலம் ஊருக்குள் புறப்படுவதற்கு முன்னர் அதிர்வேட்டு போடப்படும். உடனே ஊரிலுள்ள அத்தனை மின்விளக்குகளும் அணைக்கப்பட்டுவிடும். வீடுகளிலும் மின்விளக்குகளை அணைத்து விடுவார்கள். எல்லோர் வீடுகளிலும் விருந்தினர்கள் வந்திருப்பார்கள்... இரவு சாப்பாடு நடந்துகொண்டிருக்கும்... என்றாலும் மின்விளக்கை அணைத்துவிடுவார்கள்.

வாத்தியங்களின் ஒலியில் எட்டுப்பட்டியும் அதிர, சுற்றிலும் தீவட்டிகள் (தீப்பந்தம்) மற்றும் அம்பாளுக்குக் காட்டப்படும் மத்தாப்பு ஒளியில் ஜெகஜ்ஜோதியாகக் கிளம்புவாள் அம்மா! புரவி வாங்கி வைப்ப தாக வேண்டிக் கொண்டவர்கள் குதிரை பொம்மைகளைத் தூக்கி வருவார்கள்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் மதலை எனப்படும் குழந்தைப் பொம்மையை வாங்கி, ஒரு புதிய துவாலையில் சுற்றி, குழந்தையைப் போல கைகளில் ஏந்தியபடி அம்மன் ஊர்வலத்தின் பின்னே வருவார்கள்.

இன்னும் காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைத்தையும் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். வீட்டில் பூச்சி, பல்லி, வண்டு போன்றவை வராமல் இருக்க, அந்தந்த உருவ பொம்மைகளை வாங்கி வைப்பவர்களும் உண்டு (அம்மன் கோயிலை அடைந்ததும், இவற்றை எல்லாம் வாங்கி, கோயிலுக்குப் பின்னே வைத்துவிடுவார்கள்).

அந்த ஒரு நாள் மட்டும் அம்பாள் நம் வீட்டு வாசலுக்கே வந்து பார்ப்பாள். வீட்டுக்கு வீடு அம்பாளுக்கு மண்டகப்படி அர்ச்சனைகள் நடைபெறும். பின்னர், ஊருக்கு நடுவே உள்ள பொட்டலில் வந்து அமர்வாள் அன்னை. இரவு முழுக்க அங்கேதான் இருப்பாள். கரும்புத் தொட்டில் கட்டுவது, நேர்ந்துகொண்டு உண்டியலில் போடுவது எல்லாம் அப்போது தான். மகப்பேறுக்காக வேண்டிக்கொண்ட பலரும் தங்கத் தொட்டில், தங்கப் பிள்ளை, வெள்ளிப் பிள்ளை எல்லாம் செய்து கொண்டு வந்து போடுவது இங்கே சகஜம்.

கேட்பதைக் கொடுப்பாள் பரநாச்சி அம்மன்!

விடியற்காலை 5 மணி வரையில் அம்பாள் அங்கே பக்தர்களுக்கு அருளாட்சி புரிவாள். அதன் பின்னர் ஊர்வலம் கிளம்பி கோயிலை வந்தடையும். விடியும் நேரத்தில் புதிய அம்பாளின் திருவுருவம், புதியதாக வேய்ந்த கோயிலுக்குள் போய்விடும். உள்ளே போய் விட்டால், அடுத்து இரண்டு வருஷம் கழித்துத்தான் அவளைப் பார்க்க முடியும்.

அம்பாளுக்குப் பின்னேயே கருப்பரைத் தூக்கி வருவார்கள். அவரையும் பொட்டலில் இறக்கி வைத்திருப்பார்கள். மறுநாள் காலை அம்பாளைக் கொண்டுசெல்லும்போது, கருப்பரையும் கோயிலுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். அம்பாள் உள்ளே சென்றதும், சூலத்துக்குப் பக்கவாட்டில் கருப்பர் அமர்ந்துவிடுவார். ஏற்கெனவே அங்கு இருக்கும் பழைய கருப்பரை, மண் சுவருக்கு வெளியே பிராகாரத்தில் வைத்து விடுவார்கள். புதன்கிழமை மதியம் மஞ்சு விரட்டுத் தொழுவத்தைத் திறந்து விட்டால் திருவிழா நிறைவு பெற்றதாக அர்த்தம்.. அதுவரை நாங்கள் யாரும் ஊரை விட்டுக் கிளம்ப மாட்டோம்; அதன் பிறகுதான் எல்லோரும் கிளம்புவோம்.

மிக நல்ல அதிர்வலைகள் கொண்ட இடம் இது. இந்த அன்னையிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் நடக்கிறது. எனக்கே பல அனுபவங்கள் உண்டு. கேட்டதைக் கொடுக் கும் வரப்பிரசாதி எங்கள் பரநாச்சி அம்மன்” என்று மனமுருகிப் பேசி முடித்தார் அடைக்கப்பன். திருவிழாவின்போது ஊரில் எந்த இடத்தி லும் மின்விளக்கு ஒளிராதபோதும் இது வரையில் சிறு அசம்பாவிதம் கூட நடந்தது இல்லை என்கிறார் அவர். இதுவும் அம்மனின் அருளே!

வித்தியாசமான கோயில்... வியக்க வைக்கும் அம்மன் திருவுருவம்... விசேஷமான திருவிழா! தரிசித்த நொடியிலிருந்து மனம் முழுவதும் ஆக்கிரமித்துவிட்டாள் பரநாச்சியார்.

தொலைவிலிருந்து அரைகுறையாகப் பார்த்துக் கும்பிட்டபோதே இத்தனை ஆகர்ஷிக்கும் சக்தி என்றால்... திருவிழாவின் போது, தீவட்டி மற்றும் மத்தாப்பூ ஒளியில் பிரகாசிக்கும் அம்மனை, அருகிலிருந்து தரிசித்தால் எப்படி இருக்கும்!

அடுத்த இரு வருடங்களில் வரும் பங்குனி புரவி எடுப்புக்காக இப்போதிருந்தே காத்திருக்கத் துவங்கிவிட்டேன்... அம்மா உன்னை அருகிலிருந்து தரிசிக்க!

விபூதி
விபூதி

ஐந்து வகை விபூதி!

நிலையான செல்வம், தீவினைகளை விலகி ஓடச் செய்யும் வல்லமை, கடன் இல்லாத வாழ்வு, நல்ல குடும்பம், ஆரோக்கியமான வாழ்வு, நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைத் தரும் சிவ ஐஸ்வர்யம்தான் விபூதி.

எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும் முதலில் கறுப்பாகும்; மேலும் மேலும் நெருப்பில் சுட்டால் நீற்றுப் போய் சாம்பலாகிவிடும். சாம்பலின் நிறம் வெளுப்பு. அதை மீண்டும் நெருப்பில் இட்டாலும் அதன் நிறம் மாறாது. அதுவே நிறைவான நிலை. ஆக, நீரற்றுப் போனதே திருநீறு ஆகும். திருநீற்றை பஸ்பம் என்றால், சிவபெருமான் மகா பஸ்பம் ஆவார்.

விபூதியிலும் ஐந்து வகை உண்டு. சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து வகை விபூதி தோன்றியது என்கின்றன ஞானநூல்கள்.

விபூதி - விரும்பிய செல்வத்தை அளிக்கும்.

பசிதம்- பரசிவத்துடன் நம்மை ஒன்றவைக்கும்.

பஸ்மம் - பாவங்களை விலக்கும்

சாரம் - துன்பங்களை நீக்கும்

ரக்ஷை - தீமைகள் அணுகாது

- கே.சுந்தர், திருச்சி