Published:Updated:

ஆலயங்கள் அற்புதங்கள்!

பிள்ளையார் சந்தனம்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளையார் சந்தனம்!

பிள்ளையார் சந்தனம்!

ஆலயங்கள் அற்புதங்கள்!

பிள்ளையார் சந்தனம்!

Published:Updated:
பிள்ளையார் சந்தனம்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளையார் சந்தனம்!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கூடுவாஞ்சேரி. நந்திதேவர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அதனால் இதற்கு நந்திகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு.

மாமரத்துப் பிள்ளையார்
மாமரத்துப் பிள்ளையார்
dev


இங்கு ஆதிகாலத்தில் பூந்தோட்டங்கள் அதிகம் உண்டு. பூக்களைச் சேகரித்து மாலைதொடுத்து ஆலயங்களுக்கு அனுப்புவார்கள். ஆகவே பூ இடுவாஞ்சேரி எனும் பெயரும் இவ்வூருக்கு உண்டு என்கிறார்கள். இங்கே ரயில்வே நிலையம் அருகில் அருள்பாலிக்கிறார் மாமரத்துப்பிள்ளையார்.

இந்த ஊரில் மூதாட்டி ஒருவர் சுண்டல் விற்று பிழைத்து வந்தார். ஒருநாள் சுண்டல் விற்பனையாகவில்லை. சோர்வுடன் ரயிலடி அருகில் உள்ள மாமரத்தடியில் அமர்ந்து தனது இஷ்ட தெய்வமான பிள்ளை யாரைப் பிரார்த்தித்துக் கொண்டார். சற்று நேரத்திலெல்லாம் ஒவ்வொருவராக வந்து சுண்டல் வாங்க, சிலமணி நேரங்களில் சுண்டல் விற்றுத் தீர்ந்தது.

அடுத்தடுத்த நாட்களும் மூதாட்டி அந்த இடத்துக்கு வந்து கடை விரிக்க விற்பனையும் அமோகமாக இருந்தது. அந்த மாமரத்தில் ஏதோ விசேஷம் இருப்பதாகப் பட்டது மூதாட்டிக்கு. அன்று விற்பனை முடிந்ததும் மாமரத்தை நன்கு உற்றுக் கவனித்தார். மரத்தின் அடிப்பகுதில வேர் முடிச்சிகள் எல்லாம் சேர்ந்து, பார்க்க ஒரு பிள்ளையார் போல் காட்சியளித்தது. மூதாட்டி சிலிர்த்துப்போனார். கணநாதனை வணங்கித் தொழுதார். அவர் மூலம் அக்கம்பக்கத்து சனங்களுக்கும் விவரம் தெரிய வர தினமும் அந்த விநாயகரை வழிபட கூட்டம் சேர்ந்தது. மெள்ள மெள்ள ஆனைமுகத்தானின் சாந்நித்தியம் பொங்கிப் பெருகிட, அங்கே அற்புதமாக கோயில்கொண்டார் மாமரத்து விநாயகர்.

மட்டுமன்றி இந்த ஆலயத்தில் மாமரத்து ஈஸ்வரர், அன்னை லலிதாம்பிகை, ராசி மண்டல தட்சிணாமூர்த்தி, துர்கை, லிங்க வடிவில் அருளும் தர்மசாஸ்தா, தேவியருடன் அருளும் நவகிரக மூர்த்தியர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இந்த அம்சத்தை அகோர கணநாத சொரூபம் என்பார்கள். இதையொட்டி இந்தத் தலத்தில் சதுர்த்தி தினங்களில் அகோர கணநாத மூர்த்திக்குரிய மூல மந்திரத்தைச் சொல்லி செய்யும் அகோர கணநாத ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அமோகம். எதிரிகள் தொல்லைகள் தீரும். நோய்கள் விலகும். அதேபோல், இங்கு சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு சந்தனம் சாத்தும் வழக்கம் உண்டு. அப்படி சாத்தப்பட்ட சந்தனம் சகல வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்து என்பது ஐதிகம்.

ருப்பாச்சிலாச்சிராமம் எனப்படும் திருவாசி
ருப்பாச்சிலாச்சிராமம் எனப்படும் திருவாசி

பிணிகள் தீர்க்கும் நடராஜர்!

சிவனடியார்களுக்கு மிகவும் பரிச்சயமானது, ‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற பதிகம். அந்தப் பதிகத்தைத் திருஞானசம்பந்தர் பாடிய திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் எனப்படும் திருவாசி. திருச்சிக்கு அருகே அமைந்திருக்கும் தலம் இது.

இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரை வரதீஸ்வரர் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. இங்கு சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், அக்னி மூலையில் மேற்கு நோக்கி (ஒருவரையொருவர் பார்ப்பதுபோல) அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

கர்ப்பக்கிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழே சுயம்புநாதராகக் காட்சி தருகிறார் மூலவர். திங்கள்கிழமையில் இவருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு முயலக நோய் (வலிப்பு நோய்) பீடித் திருந்தது. மன்னன் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனில்லை. திருஞான சம்பந்தர் இங்குவந்தபோது, மன்னன் மகளின் பிணி பற்றி அறிந்தார். சிவனை வேண்டி ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க...’ எனும் பதிகத்தைப் பாடி வணங்கினார்; மன்னன் மகள் குணம்பெற்றாள்.

சிவபெருமான் அவளது முயலக நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜரின் காலுக்குக் கீழே மற்ற கோயில்களில் இருப்பதுபோல் முயலகன் உருவம் இருக்காது; இறைவன் திருவடியின்கீழ் சர்ப்பம் திகழ, அதன் மீது நடன மாடும் திருக்கோலத்தில் திகழ்கிறார்.

நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன இத்தலத்து நடராஜரை வழிபட குணமாகும். இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர வேண்டும். இதனால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும்.

வையம் காத்த பெருமாள்
வையம் காத்த பெருமாள்

வையம் காத்த பெருமாள்!

கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கூடலூர் எனும் ஆடுதுறையில் அருளும் வையம்காத்த பெருமாள் மகிமைகள் மிகுந்தவர் (சீர்காழிக்கு அருகே இருப்பது வேறு ஆடுதுறை). மதுரை நகருக்கும் கூடலூர் என்ற பெயர் வழங்கப்படுவதால், இத்தலம் ‘வட திருக்கூடலூர்’ என்றும் ‘சங்கம க்ஷேத்ரம்’ என்றும் வழங்கப்படுகிறது.

அசுரன் இரண்யாட்சனிடமிருந்து பூலோகத்தை மீட்டு வர வராகமாய் அவதரித்தார் பெருமாள். அப்போது, இங்கே இந்த ஆடுதுறையில் மண்ணுக்குள்ளே தோண்டிப் புகுந்து, முஷ்ணத்தில் பூமாதேவி யுடன் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. வையகத்தை மீட்டு வந்தவர் என்பதால், `வையம் காத்த பெருமாள்’ என்று திருப்பெயர்.

இத்தலத்தில் பெருமாளின் சங்கு, சக்கரம் இரண்டுமே பிரத்யட்சமாகக் காட்சி தருகின்றன. பெருமாள் கையில் இருக்கும் பிரயோகச் சக்கரமும், பலா மரத்தில் வெளிப்பட்டுள்ள சங்கு வடிவமும் இங்கே மிகவும் விசேஷமானவை.

நந்தக முனிவரின் மகளான உஷை மீது, அவள் கணவனும் சந்திரகுல மன்னனுமான விஸ்வஜித் சந்தேகம் கொண்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிவிட்டான். அதனால் உண்டான பாவத்தால் செல்வம் அழிந்து, தொழுநோயும் பீடித்து துன்புற்றான். விமோசனம் தேடி அலைந்தான் மன்னன். அவன் துயரைக் கண்ட துறவி ஒருவர், `திருக்கூடலூர் பெருமாளை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்; உன் மனைவி உன்னை வந்தடைவாள்’ என்று வழிகாட்டினார். அதன்படியே அவன் இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைச் சரணடைந்து பலன் பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக, பெருமாளுக்குத் தேர் ஒன்றைச் செய்து கொடுத் ததாகவும் கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி சேர்வதற்கான பிரார்த்தனைத் தலம் இது. தொடர்ந்து 16 நாள்கள், ஜகத்ரட்சகப் பெருமாளுக்கு வெண்ணெய், கல்கண்டு நைவேத்தியம் செய்து, வெள்ளை மலர்களால் (மல்லிகை, முல்லை) அர்ச்சனை செய்து, நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். இருவருக்குமிடையில் அந்நியோன்யம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

சிங்கவரம் பெருமாள்!
சிங்கவரம் பெருமாள்!

சிங்கவரம் பெருமாள்!

செஞ்சிக்கு அருகே சுமார்4 கி.மீ தொலைவில் உள்ள தலம் சிங்கவரம். பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான சிம்மவிஷ்ணு ஆட்சி செய்த காலம். பெருமாள் வராக உருவில் வந்து, மன்னனின் கவனம் ஈர்த்து இங்குள்ள ரங்கநாதர் திருமேனியைக் காட்டி அருளியதாக தல புராணம் சொல்கிறது.

ஆலயம் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 150 படிக்கட்டுகளைக் கடந்து மேலே சென்றால் ஆலயத்தை அடையலாம். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அருள்மிகு வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம். அவரை வழிபட்டு வலப்புறமாக உள்ளே சென்றால், சுனை ஒன்று உள்ளது. லட்சுமி தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் கருவறையில் திருமால் ‘பள்ளிகொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். இந்த மூர்த்தி ஒரே பாறையிலேயே உருவானவராக பிரமாண்டமாகக் காட்சியருள்கிறார்.

துளசி சமர்ப்பித்து இவரை வழிபட்டால் பாவங்களும் தோஷங்களும் பொசுங்கிவிடும்; எதிர்காலம் சிறக்கும்; சகல யோகங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷன்மீது அனந்த சயன கோலத்தில் பெருமாள் அருள்புரிய, அருகே, பிரம்மதேவர், மது-கடைபர், நான்முகன், கந்தர்வர், கருடன், திருமாலின் பாதமருகே பூதேவி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

இந்தக் குடைவரையில் வலப்புறமாக ரங்கநாயகி தாயார் தனி சந்நிதி கொண் டிருக்கிறார். அதே அறையின் பின்புறமாக குடைவரையை ஒட்டியபடி உக்கிரமான துர்கையும் வீற்றிருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், துர்கையம்மனை ஜன்னல் வழியாகவே தரிசிக்க முடியும்.

செஞ்சிக் கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ராஜாதேசிங்குக்கு இத்தலத்து இறைவன் குலதெய்வம் என்றும் அம்மன்னன் எங்கு போருக்குச் சென்றாலும் ரங்கநாதரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தலத்தில் இருக்கும் கருடர் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர் என்கிறார்கள். இந்தக் கருடரை வணங்கினால் ஆரோக்கியம் மேம்படு வதோடு மனபயமும் அகலும் என்கிறார்கள்.

திருச்சேறை
திருச்சேறை

கடன் தீர்க்கும் ஈஸ்வரர்!

உலகத்து ஜீவர்களுக்கு உண்டாகின்ற பிறவிப் பெருங்கடன்களை எல்லாம் அழித்து, செம்மையாக நல்வழிப்படுத்தி ஆட்கொண்டு ஈசன் அனுக்கிரஹம் செய்யும் தலம் திருச்சேறை. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

இங்கு அருள்மிகு ஞானாம்பிகையுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சாரபரமேஸவரர். கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் மார்க்கண்டேயரால் அமைக்கப்பட்ட தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத் தின் நீர், ஒரு துளி பட்டாலே சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தின் விருட்சமான மாவிலங்கை மரமும் ஓர் அதிசயம்தான். இந்த மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும்.

சாரபரமேஸவரருக்கு செந்நெறியப்பர் என்ற திருப்பெயரும் வழங்கப் படுகிறது. மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந்துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம், இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய

கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய

தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய - எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பூஜித்துப் பிரார்த்தித்து, 11-வது திங்களன்று அபிஷேக- ஆராதனைகள் செய்தால், கண்டிப்பாகக் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அனுவாவி அனுமன்!
அனுவாவி அனுமன்!

அனுவாவி அனுமன்!

கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ளது. அனுவாவி ஆஞ்சநேயர் ஆலயம். இங்கு மலைமீதுள்ள முருகன் கோயில் பிரசித்திபெற்றது. அடிவாரத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார்.

ராமாயண காலம். யுத்தத்தில் இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மூர்ச்சை யானார் இளைய பெருமாள். அதைக்கண்டு அண்ணல் ராமனும் கலங்கினார். லட்சுமணனைக் குணப்படுத்த சஞ்ஜீவி மூலிகை தேவைப் பட்டது. அனுமன் புறப்பட்டார். சஞ்ஜீவி மலையையே பெயர்த்தெடுத்து திரும்பினார். அவ்வாறு அவர் திரும்பும் வழியில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது அனுமனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அனுமன் எங்கு தேடியும் அந்த மலையில் தண்ணீர் கிடைக்கவில்லை.

ஆகவே, சிவபெருமானை மனதுள் தியானித்தார் அனுமன். தனது அம்சமான அனுமனின் தாகத்தைப் போக்க சித்தம் கொண்டார் சிவபெருமான். ஆகவே மைந்தன் முருகனை அழைத்து, `அனுமனின் தாகம் தணிக்க ஒரு வாவி உண்டாக்குக’ எனப் பணித்தார்.

வாவி என்றால் நீரூற்று. முருகக்கடவுளும் வேலாயுதத்தை ஊன்றி இந்தப் பகுதியில் மலைமீது ஓர் ஊற்றை உருவாக்கினார். அதில் நீரருந்தி அனுமன் தன் தாகம் தீர்த்தார். அனுமன் வாவியில் நீரருந்தியதால், இந்தத் இடத்துக்கு அனுமன்வாவி என்று பெயர் வந்தது. அதுவே அனுவாவி என்று மருவியது என்கிறார்கள். தன் தாகம் தீர்க்க உதவிய முருகப்பெருமானிடம், `இந்த இடத்திலேயே கோயில்கொள்ளவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம் அனுமன். அதன்படியே மலைமீது முருகன் கோயில் கொண்டுள்ளார்.

மலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் சுமார் 45 அடி உயரத்தில் விஸ்வரூப கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய நந்தவனத்தில் ராமர் பாதமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு அனுமத் ஜயந்தி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விசேஷ தினங்களில் அனுமனுக்கு நடைபெறும் தேனபிஷேக வழிபாடு விசேஷம்.

இந்த அனுமனை தரிசித்து வழிபட்டால் செல்வகடாட்சம் பெருகும், சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியதடாகம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism