ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

விருந்திட்ட மல்லிகார்ஜுனர்!

பர்வதமலை
பிரீமியம் ஸ்டோரி
News
பர்வதமலை

பர்வதமலை

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் கல்லூரி நண்பர்கள் 15 பேரும் பர்வத மலைக்குக் கிளம்பிச் சென்றோம். சென்னையிலிருந்து இரு சக்கர வாகனங்களில் முதல் நாள் மதியமே கிளம்பி, ஆரணியில் ஒரு விடுதியில் தங்கினோம். மறுநாள் அதிகாலையிலேயே கிளம்பி பர்வதமலை ஏறுவதாக ஏற்பாடும் செய்து இருந்தோம்.

பர்வதமலை
பர்வதமலை


என் தந்தையார் பர்வத மலையில் அப்போது கட்டப்பட்டு வந்த மடத்தில் பேசி, நாங்கள் மலைக்கு மேல் வரும்போது வழிபடவும் காலை உணவு மற்றும் குடிநீர் வசதிக்கும் அங்கே ஏற்பாடு செய்திருந்தார். அதை நம்பிக்கொண்டு நாங்களும் அதிகாலை கிளம்பி பர்வதமலை ஏறத் தொடங்கிவிட்டோம். அது சாதாரண நாள் என்பதால் கூட்டமே இல்லை. வேறு நபர்கள் எவரும் எங்களோடு மலை ஏறவில்லை.

மலை மீது அடியவர்களுக்கு அன்னதானம் நடக்கும். அதன்பொருட்டு, நாங்கள் எங்கள் பங்குக்கு மடத்தில் ஒப்படைக்க... ஆளுக்கு 2 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, டீத்தூள் என மாளிகைப் பொருட்களைச் சுமந்துகொண்டு மலையேறினோம். கொஞ்ச தூரம் போனதுமே குறுக்கிட்ட ஒரு குரங்கு, எங்களிடம் இருந்து பருப்பைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டது.

`சரி... பக்தர்களுக்குக் கொண்டு வந்ததை, அனுமன் வாங்கிக் கொண்டு விட்டார்' என்று எண்ணிக்கொண்டு ஏறினோம். நேரம் செல்லச் செல்ல வெய்யில் வாட்டத் தொடங்கிவிட்டது.கொண்டுபோன தின்பண்டங்கள், குடிநீர் யாவும் தீர்ந்து போனது. வழியில் எந்த கடையும் இல்லை. ரொம்பவும் தளர்ந்து போய், ஒருவழியாக ஆபத்துக்கள் பல கடந்து 4560 அடி உயரமுள்ள மலை உச்சியை அடைந்தோம்.

அங்குதான் ஓர் அதிர்ச்சியும் காத்திருந்தது. கோயிலை அடுத்த மடத்தில் இரண்டு பேரே இருந்தனர். அவர்களும் உணவு, குடிநீர் வசதி செய்வது தருவது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்கள். கடுமையான பசி, தாகம் எங்களுக்கு. மிகுந்த சோர்வோடு மல்லிகார்ஜுனரையும் பிரம்மராம்பிகையையும் பூஜித்து வழிபட்டோம்.

மலையின் காற்று உற்சாகத்தைத் தந்தாலும் மீண்டும் கீழே இறங்க தெம்பு வேண்டுமே, `குடிநீர் கிடைத்தால்கூட போதுமே' என்று எண்ணும்போதே, பெரிய பாத்திரங்களோடு ஐந்து பேர் வந்து சேர்ந்தார்கள். சோர்வோடு அமர்ந்திருந்த எங்களிடம் ``ஐயா சாம்பார் சாதம் கொஞ்சம் உள்ளது. சாப்பிட வாருங்கள்' என்று உரிமையோடு அழைத்தார்கள்.

குடிநீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருக்க சாப்பாடே கிடைத்ததும் பெரிதும் மகிழ்ந்தோம். அந்த உணவு தேவாமிர்தமாக சுவைத்தது. `அப்பருக்கும் சுந்தரருக் கும் விருந்திட்ட ஈசனே, இந்த எளியோருக்கும் இப்படி ஒரு கருணையா!' என்று வியந்தோம்.

``ஆரணி பக்கத்துல ஒரு கோயில்ல உழவாரப் பணி... அங்க மிச்சமான உணவை எடுத்துட்டுப் போகும்போது, இங்கே யாராவது பசியோட இருப்பாங்கன்னு நினைச்சி மேலே ஏறி வந்தோம். நிஜமாகவே 4 மணி நேரம் இந்த வெய்யில்ல ஏறி வரணுமான்னுதான் நினைச்சோம். ஏதோ சிவம் முந்தித் தள்ளி கூட்டிக்கிட்டு வந்துடுச்சு. உங்க பசியும் தீர்த்துடுச்சி'ன்னு சொல்லிகிட்டே அவங்க கிளம்பினாங்க. நாங்க கொண்டு போன மளிகைப் பொருட்களை அவர்களை வற்புறுத்திக் கொடுத்து விட்டு, அவர்களோடு சேர்ந்து இறங்கினோம்.

ஆள் அரவமே இல்லாத அந்த இடத்தில் நடந்த அந்த அற்புதத்தை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது!

- கே.ஹரி பிரசாத், சென்னை