Published:Updated:

தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி... பயம் நீக்கி பலம் சேர்க்கும் பயன்மிகு பதிகங்கள், பாசுரங்கள்!

Lord Shiva
Lord Shiva

இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் எல்லோரும் பயம் நீங்கி சுகத்தோடு வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வழிபட கூட்டுப் பிரார்த்தனை அவசியம்...

உலகெங்கும் கொரோனா என்னும் கொடிய நோய் அச்சுறுத்தி வருகிறது. அரசுகளின் அக்கறை, அர்ப்பணிப்பு மிக்க மருத்துவர்கள், செவிலியர்களின் கவனிப்பு, தூய்மைப் பணியாளர்களின் சேவை என எல்லாத் தரப்பிலும் இந்த நோயை விரட்டும் பணியைச் செய்து வந்தாலும் ஏனோ இனம்புரியாத அச்சம் மக்களை வாட்டி வருகிறது. திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள்.

சிவபெருமான்
சிவபெருமான்

இருளில் தவிப்பருக்கு வெளிச்சமாகத் திகழ்வதே பக்தியின் வேலை. வீண் வதந்திகளில் மனம் செல்வதை விடுத்து உங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வேண்டிக் கவலை, பயத்திலிருந்து விடுபடலாம். ஆன்மிகத்தின் சிறந்த பணியே துக்கத்தை விலக்குவதுதான். இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் எல்லோரும் பயம் நீங்கி சுகத்தோடு வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வழிபட கூட்டுப் பிரார்த்தனை அவசியம். உண்மையான கூட்டுப் பிரார்த்தனை ஒரு நல்ல அதிர்வை, நேர்மறை சக்தியை உருவாக்கும். அப்போது நம்மை மீறிய ஒரு சக்தி செயல்பட்டு நிலைமையைச் சீராக்கும்.

நம் முன்னோர்கள் இறைவழிபாட்டுக்கால முறைகளை வகுக்கும்போது அதில் பூஜை முறைகளோடு பிரார்த்தனை செய்ய ஸ்லோகங்கள், பதிகங்கள், பாசுரங்கள் ஆகியனவற்றையும் உருவாக்கியுள்ளன. இத்தகைய பிரார்த்தனைப் பாடல்களைப் படிக்க, பாட, கேட்கக் கிடைக்கும் பலன்களையும் கண்டறிந்து வழங்கியுள்ளனர்.

அவற்றுள் சில நோய்தீர்க்கும் பாடல்களாக அறியப்படுகின்றன. இவற்றை மனம் உருகிப் பாடி வழிபட நல்லதே நடக்கும்; நலன்கள் கிடைக்கும். திருவிளக்கேற்றி ஸ்வஸ்திக் கோலமிட்டு சுவாமியின் முன்பு அமர்ந்து இந்தப் பாடல்களைப் பாடலாம்

இதோ அத்தகைய சில பாசுரங்கள், பதிகங்கள் உங்களுக்காக...

திருவாய்மொழி

தீராத வினைகளைத் தீர்க்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இந்தப் பாசுரம் பாடி வேண்டினால் குடந்தை சாரங்கபாணியின் திருவருளால் நலம் பல கிட்டும் என்பது உறுதி.

ஆழ்வார்
ஆழ்வார்

வாரா வருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!

ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்

தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை

ஊரா! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

தேவாரம்

புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரைப் போற்றி, திருநாவுக்கரசர் பாடியருளிய இந்தப் பதிகம், தேவாரம் 6-ம் திருமுறையில் உள்ளது. இதை, பக்தியோடு பாடி துதிக்க நோய்களின் தாக்கம் குறையும் என்பர்.

பேராயி ரம்பரவி வானோர் ஏத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

அபிராமி அந்தாதி

உலக உயிர்களுக்கெல்லாம் அன்னையாக விளங்கும் அந்த அபிராமியம்மையைத் தொழுவோர்க்கு இன்னலும் நோய்களும் இல்லை என்பார் அபிராமிபட்டர். அவர் இயற்றி அருளிய இந்தப் பாடலைப் பாடி வழிபட்டால் வந்த பிணி ஓடும்; வாட்டும் துயர் வாடும்.

அபிராமி அம்மன்
அபிராமி அம்மன்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே...

தன்வந்திரி ஸ்லோகம்

சகல நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரத்தை நாளும் 18 முறை சொல்லிவர எந்த நோயும் அணுகாது என்பார்கள் பெரியோர்கள்.

‘ஓம் நமோபகவதே வாசு தேவாய

தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய

மகா விஷ்ணவே நம’

திருப்புகழ்

திருப்புகழே நோய்கள் தீர்க்கும் மகாமருந்தென ஆன்றோர்கள் கூறுவர். இதில் பழநி மலை ஸ்ரீதண்டாயுதபாணி பெருமானைப் போற்றி, அருணகிரிநாதர் அருளிய இந்தத் திருப்புகழ் தீராத நோய் தீர்க்கும் இது உறுதி.

திருப்புகழ்
திருப்புகழ்

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம

விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி... யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்... விதியாதே

மேலும் மர்மக் காய்ச்சலை விரட்டிய ஞானசம்பந்தரின் `அவ்வினைக்கு இவ்வினை' பதிகம், பாண்டியனின் வெப்பு நோயை நீக்கிய `மந்திரமாவது நீறு' பதிகங்களையும் பாடலாம். ஆரோக்கியம் தரும் சூரிய பகவான் 108 போற்றி, விநாயகர் அகவல் போன்ற தெய்விகப் பாடல்களையும் பாடி நலம் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு