Published:Updated:

அபூர்வ கற்றாழை... சாமியாடிய பெண்! - பரபரப்படைந்த கிராமம் #MyVikatan

அபூர்வ கற்றாழை
அபூர்வ கற்றாழை

இந்த அபூர்வ கற்றாழையைப் பார்ப்பதற்கு மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் திருச்சி - ராமேஸ்வரம் சாலையில் முளைத்திருக்கும் பாம்பு வடிவ கற்றாழைச் செடி புதிய வழிபாட்டுத்தலமாக மாறி இருக்கிறது. அங்கு பெண் ஒருவர் பாம்பைப் போல் படம் எடுத்து ஆடி ``சாமிக்கிட்ட இருந்து நான் பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேன்” என அருள் வாக்கு கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இந்தச் சம்பவம் காரைக்குடிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அபூர்வ கற்றாழை
அபூர்வ கற்றாழை

காரைக்குடி அருகே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவிலூர். இதையொட்டிய திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான புதர்ச்செடிகளும் கற்றாழைகளும் மண்டிக்கிடக்கின்றன. அதில் உள்ள காற்றாழைச் செடிகளில் ஒன்று மட்டும் 10 அடி உயரத்திற்கு பாம்பு போல் வளைந்து நெளிந்து இருக்கிறது. இதை அந்த வழியாகக் கடந்து செல்லும் மக்கள் முதலில் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். அடுத்து அருகில் சென்று அதன் வடிவம் பாம்பினைப் போல் இருப்பதைக் கண்டு இதைக் கடவுளின் அவதாரம், அதிசயம், சக்தி எனப் பேசத் தொடங்கினர். இச்செய்தி பல்வேறு சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் இந்த அபூர்வ கற்றாழையைப் பார்ப்பதற்கு மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

அத்துடன் மட்டுமல்லாமல் ஒரு சிலர் இதற்கு மாலை அணிவித்தும், மஞ்சள், குங்குமம், சந்தனம் தெளித்தும், துண்டுகள் போட்டும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்தக் கற்றாழைக்கு தினசரி மாலை மரியாதைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைப் பார்க்க பல்வேறு ஊர்களிலிருந்தும் பெரும் மக்கள் கூட்டம் இங்கு தினமும் வந்து செல்கின்றது.

இந்நிலையில் இப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்களும் இந்த விநோதக் கற்றாழையைப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென பாம்பு படம் எடுப்பதுபோல் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு நாக்கைத் துருத்தி, கண்களை உருட்டி, பெரும் கூச்சலுடன் முட்டிக் கால் போட்டு ஆடத் தொடங்கினார். அந்தக் கற்றாழையை நோக்கி பாம்பைப் போல் சத்தம் எழுப்பிக்கொண்டே தவழ்ந்து சென்றார். அப்போது அருள்வாக்கு சொல்வதுபோல் ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

சாமியாடிய பெண்
சாமியாடிய பெண்

``என்னை யாரும் அசைக்க முடியாது. இந்த பூமியிலிருந்து உருவாக்கி இந்த உலகத்தைப் பார்க்க வந்திருக்கேன். எல்லோரும் என்னை பார்க்க வந்துருக்கியலா.. நான் புதுசா உருவாகி இருக்கிறேன். இந்த உலகத்தை பார்க்கிறதுக்கு வந்திருக்கேன். இங்கே போறவங்களுக்கு காவலுக்காக இருக்கிறேன். என்னை யாரும் அசைக்க முடியாது. என்னைய ஒரு நாகம்மாவா இங்கே கோயில் கட்டி வைச்சு வேண்டுங்க. அப்படி வேண்டி வர்றவங்களுக்கு நான் நல்ல துணை இருந்து அந்தக் குடும்பத்தையே ஓஹோன்னு கொண்டாடுவேன். இதை ஒரு மனிதனாக நான் சொல்லலை. சிவனுக்கிட்டே இருந்து பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேன் இந்த வரம்” எனச் சொல்லி முடித்துவிட்டு இரு கைகளையும் பாம்பு படம் எடுப்பதுபோல் வைத்துக்கொண்டே தரையில் சாய்ந்து விட்டார். இதை அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் உலவ விட்டிருக்கிறார்.

`கற்றாழையின் இந்த பாம்பு வடிவத் தோற்றத்துக்கு என்ன காரணம்?' எனத் தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் என்.விஜய் ஆனந்தை தொடர்பு கொண்டு கேட்டேன்.

“ இந்தக் கற்றாழை அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது வறண்ட நிலங்கள் உட்பட எல்லா மண்ணிலும் வளரக்கூடியது. தன்னுடைய தண்டுப்பகுதியில் நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. இதனுடைய ஆயுள் காலம் 25 முதல் 30 ஆண்டுகள். இது அந்த வயதில்தான் பூக்கத் தொடங்கும். அப்படி பூத்துவிட்டால் அந்தச் செடி சிறிது காலத்திலேயே மடிந்துவிடும். அப்படி மலர்ந்திருக்கும் ஒரு மலர்க்கொத்துதான் இப்போது காரைக்குடி பகுதியில் உள்ள அந்தக் குறிப்பிட்ட கற்றாழையில் காணப்படுகிறது.

அபூர்வ கற்றாழை
அபூர்வ கற்றாழை

பொதுவாக இந்த வகை கற்றாழைப்பூ ஒரு குச்சிபோல் நீண்ட உயரத்துக்கு நேரே சென்று மலரக்கூடியது. ஆனால் இந்தக் கற்றாழையில் அப்படி அந்த மொட்டு மலரும்போது ஏதோ ஒருவித அழுத்தம் அந்தத் தண்டுப்பகுதியில் நடந்திருக்கலாம். அதனால்தான் அந்த நேரான மலர்த் தண்டில் வளைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்து சூரிய ஒளியை நோக்கி வளரும்போது முதல் வளைவில் ஏற்பட்டதுபோல் அடுத்தடுத்து ஏற்பட்டிருக்கலாம்.

முனைவர் என்.விஜய் ஆனந்த்
முனைவர் என்.விஜய் ஆனந்த்

இது நம் மனிதர்களின் ஹார்மோன்கள் மற்றும் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும்போது சில கட்டிகள் தோன்றுவதுபோல் இந்தக் கற்றாழையிலும் ஏற்பட்டுள்ளது. இது ஹார்மோன்களில் ஏற்பட்ட ஒருவிதத் தவறும் விபத்துமே இந்தக் கற்றாழை மலர்க்கொத்தின் பாம்புபோன்ற வளைவுக்கு காரணம். மற்றபடி வளைந்திருக்கும் கற்றாழை மலருக்கும் ஆன்மிகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்கிறார்.

-பழ.அசோக்குமார்

My vikatan
My vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு