Published:Updated:

மழலைப்பேறு ஏக்கம் தீர்க்கும் ‘பூவாய் சித்தர்' வழிபாடு!

பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் உடனுறை பாலாம்பிகை ( dixithphotography )

குழந்தைப்பேறு பிரச்னைகளை உடைய பெண்கள், பாலாம்பிகை அம்மனையும் பூவாய் சித்தரையும் மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு, தங்களின் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி, சித்தர் திருவுரு உறைந்திருக்கும் கல்தூணில் கட்டிவிட்டு, பிரார்த்திக்க வேண்டும்.

மழலைப்பேறு ஏக்கம் தீர்க்கும் ‘பூவாய் சித்தர்' வழிபாடு!

குழந்தைப்பேறு பிரச்னைகளை உடைய பெண்கள், பாலாம்பிகை அம்மனையும் பூவாய் சித்தரையும் மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு, தங்களின் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி, சித்தர் திருவுரு உறைந்திருக்கும் கல்தூணில் கட்டிவிட்டு, பிரார்த்திக்க வேண்டும்.

Published:Updated:
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் உடனுறை பாலாம்பிகை ( dixithphotography )

உடல்ரீதியாக பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பைக் கோளாறு! இந்தப் பிரச்னைகளுக்கு மருத்துவரை நாடுவதுடன், நம்பிக்கை கொண்டு இறைவனையும் பிரார்த்தனை செய்கிறார்கள் பெண்கள். மாதவிடாய்ப் பிரச்னைகள், கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள், கரு தங்காமை என்று நீளும் பிரச்னைகளால் பாதிப்படைந்த பெண்களுக்காகத் தீர்வும் நம்பிகையும் தரும் தலமாய்த் திகழ்கிறது, பேட்டவாய்த்தலை சிவாலயம். இங்கு சித்தர் உருவம் உள்ள தூண் ஒன்றில் பிணிகள் தீர பிரார்த்தனைச் சீட்டு கட்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பேட்டவாய்த்தலை எனும் ஊரில் அமைந்திருக்கிறது, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் ஆலயம். இங்கு அருளும் அன்னை பாலாம்பிகை, பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு அபயம் அளித்து, குணமாக்குகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பேட்டவாய்த்தலைகோயில்
பேட்டவாய்த்தலைகோயில்
dixithphotography

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய ஆலயம் இது. அந்த மன்னன், தன் முன்னோர் திருவிடைமருதூரில் எழுப்பிய ஆலயத்தில் உறைந்துள்ள இறைவனின் திருப்பெயரான ‘மத்யார்ஜுனேஸ்வரர்’ என்ற பெயரையே, இங்குள்ள இறைவனுக்கும் சூட்டி மகிழ்ந்தானாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்ப்பப் பை பிரச்னை தீர்க்கும் பரிகாரத் தலம் இது. ஏன் தெரியுமா?

அந்தக் காலகட்டத்தில் மாதவிடாய்த் தொந்தரவுகளால் அவதிப் பட்ட பெண்களுக்கு `பொற்றாளம் பூவாய் சித்தர்’ மருத்துவம் பார்த்திருக்கிறார். எனினும், அவருடைய வைத்தியத்துக்கு எந்தப் பலனும் இல்லாமல் போனதாம்.

இதனால் மனம் கலங்கிய பூவாய் சித்தர், ‘‘இந்தப் பெண்களின் பிரச்னையைத் தீர்க்க மாட்டாயா?’’ என்று பேட்டவாய்த்தலை பாலாம்பிகையிடம் முறையிட்டுள்ளார். அவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்த அம்பாள், பூப்படையும் நாள் முதல், மாத விலக்கு நிற்கும் காலம்வரை பெண்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் காத்து அருள்புரிகிறாள் என்பது நம்பிக்கை.

பூவாய் சித்தர் சந்நிதி
பூவாய் சித்தர் சந்நிதி
dixithphotography

பரிகார வழிபாடு எப்படிச் செய்யவேண்டும்?

குழந்தைப்பேறு மற்றும் கருப்பை சம்பந்தமான பிரச்னைகளை உடைய பெண்கள், பாலாம்பிகை அம்மனையும் பூவாய் சித்தரையும் மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு, தங்களின் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி, சித்தர் திருவுரு உறைந்திருக்கும் கல்தூணில் கட்டிவிட்டு, பிரார்த்திக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அந்தப் பிரார்த்தனைகளைப் பூவாய் சித்தர் வாசித்துக் காட்டி, பக்தைகளின் பிணியை நிவர்த்திசெய்து அருள்புரிய வேண்டுகிறார் என்பது ஐதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயிலிலேயே பிரார்த்தனைச் சீட்டு விற்கப்படுகிறது. அதை வாங்கி, நமது மன, உடல் ரீதியான பிரச்னைகளை எழுதி, அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றித் தருமாறு சுவாமி, அம்பாள் மற்றும் சித்தரை வேண்டி, பூவாய் சித்தர் தூணில் கட்டிவிட வேண்டும்.

பின்பு, கோயிலில் வழங்கப்படும் படத்தினை வீட்டில் பூஜையறையில் வைத்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதமிருந்து, ஒரு டம்ளர் பாலை சுவாமி படத்தின் முன் வைத்து, கீழ்க்காணும் ஸ்லோகத்தை 11 முறை சொல்லி, வழிபட வேண்டும். பிறகு நிவேதனம் செய்த பாலில், சிறிது விபூதி பிரசாதத்தைப் போட்டுப் பருகலாம்.

இதுபோல தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். இடையிலே ஒரு வாரம் தடைபட்டால்கூட, மறுவாரத்திலிருந்து தொடர்ந்து செய்யலாம். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கைமேல் பலன் நிச்சயம் உண்டு என்கிறார்கள், அனுபவித்து பலன்பெற்ற பக்தர்கள்.

பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் உடனுறை பாலாம்பிகை
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் உடனுறை பாலாம்பிகை
dixithphotography

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்.

இந்தக் கோயில் எங்குள்ளது... எப்படிச் செல்வது?

திருச்சி - கரூர் வழித்தடத்தில், திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 51 கி.மீ தொலைவிலும் பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது தேவஸ்தானம். பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம். திருச்சி - ஈரோடு ரயில் மார்க்கத்தில், பேட்டவாய்த்தலை ரயில் நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism