ராமாயணம் நம் தேசத்தின் ஆன்மாவோடு கலந்த இதிகாசம். அதில் ஸ்ரீராமரே நாயகன். ராம பக்தியினாலும் தமிழில் அந்த அற்புதம் இருக்க வேண்டும் என்ற ஆவலிலும் கம்பர் தமிழில் ராமாயணக் காப்பியம் படைத்தார். அதில் ஒவ்வொரு கவியும் அற்புதமானது. அதற்கு அறிஞர்கள் நாள்தோறும் ஒரு நவ பொருள் ஒன்றைச் சொல்கிறார்கள். அனைத்தும் கேட்க இனிமையும் அற்புதமும் ஆனவை.

ராமன் முடிசூடாமல் தவ வேடம் பூண்டார், அரசு பரதனின் பொறுப்பில் வந்துவிட்டது. அதற்குக் காரணமானாள் கைகேயி. அன்னை கைகேயியின் சொற்களை ஏற்று ராமன் கிளம்பினார். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராவண சம்ஹாரம் முடித்து அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமர். ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதைப் பாடுகிறார் கம்பர்.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே ராமனுக்கு முடி சூட்டினார் என்பது இந்தப் பாடலின் பொருள்.

இந்தப் பாடலில் அற்புதமான ஒரு கருத்தை கம்பன் முன்வைக்கிறார். அதுவும் வசிட்டனே என்று ‘ஏ’ கொண்டு முடிப்பதன் மூலம் ஒரு பெரும்பொருளை உணர்த்த முயல்கிறார் என்கிறார் சுமதி ஸ்ரீ. இன்றைய தினம்தோறும் திருவருள் பகுதியில் இந்த அற்புதமான பாடலை முன்வைத்து கம்ப நயத்தை நமக்கு உணர்த்துகிறார். இதை விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.