Published:Updated:

நள்ளிரவில் ஆகம விதிப்படி பூஜை.. திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்! - மாவூற்று வேலப்பர்கோவில் காட்சிகள்

போலீசாரின் சோதனைச் சாவடி
போலீசாரின் சோதனைச் சாவடி

ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர்கோவிலில் வருடா வருடம் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு, இன்று பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலம். இங்கு கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கு, தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுகணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம். நள்ளிரவில் வீட்டில் இருந்து புறப்படும் மக்கள், நடந்தே வேலப்பர் கோவிலுக்கு வருவர். சித்திரை முதல்நாள் மட்டும், கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பர்.

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீறி, சுவாமி தரிசனம் செய்ய வேலப்பர் கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கோவில் அருகே போலீசாரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. சிலர், சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். அவர்களை எச்சரித்த போலீசார், திருப்பி அனுப்பினர்.

மாவூற்று வேலப்பர் கோவில்
மாவூற்று வேலப்பர் கோவில்

இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கும் போது, “நள்ளிரவில் ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் ராஜக்காபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் என மிக குறைவான நபர்களே கலந்துகொண்டனர். ஊரடங்கை மீறி திருவிழாவிற்கு பக்தர்கள் வரக்கூடாது என்பதற்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவிழாவிற்கு வர வேண்டாம் என முன்னரே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அறியாத சிலர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை சோதனைச்சாவடி அமைத்து, தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினோம்.” என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு