Published:Updated:

'நம்மை இறைவனிடம் ஒப்படைப்பதே பக்தி!' ஸ்ரீஅன்னையின் அவதார தினம் இன்று!

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

அன்னை என்பது ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல் அல்ல! அது ஒரு பண்பின் அடையாளம். அன்னை என்றால் அன்பு, அர்ப்பணிப்பு, கருணை... அன்னையின் சிறப்பான பண்புகளுக்கு அருள் வடிவமாகத் திகழ்பவர் பாண்டிச்சேரி அன்னை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நமது தேசம் தபோவனர்களின் சரணாலயம். பல நூற்றாண்டுகளாக இங்கு பல்கிப் பெருகிய யோகிகள், சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், தபஸ்விகள் என உள்நாட்டு அருளாளர்கள் மட்டுமின்றி அயல்நாட்டு ஆன்மிக அன்பர்களுக்கும் ஞான இருப்பிடமாக அமைந்ததும் நம் தேசமே. அதில் பாண்டிச்சேரி அன்னை மிக முக்கியமானவர்.

அன்னை என்பது ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல் அல்ல! அது ஒரு பண்பின் அடையாளம். அன்னை என்றால் அன்பு, அர்ப்பணிப்பு, கருணை... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் சிறப்பான பண்புகளுக்கு அருள் வடிவமாகத் திகழ்பவர் பாண்டிச்சேரி அன்னை.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

ஸ்ரீ அன்னையின் இயற்பெயர் மிரா அல்பாசா. 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள் பிரான்சில் பிறந்தார். 5 வயதிலேயே பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்ட அன்னை வண்ணங்கள் தீட்டுவதிலும், பியோனா இசைப்பதிலும் ஆர்வம் கொண்டார். ஆனந்தமயமான தியான நிலையில் இவர் இரு அருள் ஒளியைக் கண்டுகொண்டார். வடிவத்தில் அடக்க முடியாத அந்த பேரொளியை அவர் 'கிருஷ்ணா' என்று பெயரிட்டு உருவகம் கொண்டார். எப்போதும் கிருஷ்ணாவைப் பற்றிக்கொண்ட அன்னை ஆழ்ந்த ஆன்மிகக் கருத்துக்களை அறிந்து கொண்டார்.

திருமணமாகி ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான இவர் 1914-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது ஸ்ரீ அரவிந்தரை சந்தித்தார். 'இவரே நான் தேடிய குருநாதர்!' என்று தன்னுள் உணர்ந்தார். எனினும் அப்போது இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டி இருந்ததால் இவர் பாரிஸ், ஜப்பான் எனப் பல இடங்களில் வாழ்ந்தார்.

எனினும் கிருஷ்ணாவின் அழைப்பும், குருநாதரின் நினைவும் இவரை 1920-ம் ஆண்டு இந்தியாவுக்கு மீண்டும் வரவைத்தது. அதன் பிறகு இவர் 53 ஆண்டுகள் இங்கேயே தங்கி இருந்து ஆன்மிக மலர்ச்சியை எங்கும் பரவச் செய்தார். ஸ்ரீஅரவிந்தர் மகாசமாதி அடைந்தபிறகு அவருடைய பூரண யோக முறையை எல்லோருக்கும் கற்பித்தவர் அன்னை. 'மனிதன் மட்டுமே தெய்வ நிலையை அடையக் கூடிய வாய்ப்பைப் பெற்றவன், எனவே அவனே தன்னுடைய முயற்சியால் யோக, தியான நிலைகளால் ஞானத்தின் உச்சத்தை அடைய முடியும்' என்பதை சாமானியர்களுக்கும் உணரவைத்து வழிகாட்டினார்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

இவருடைய மகத்தான சேவையால் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. 1968-ஆம் ஆண்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் ஆரோவில் நகரத்தை உருவாக்கி உலக சமாதானத்தை உண்டாக்கினார். உலகெங்கும் இருந்த ஆன்மிக அன்பர்களை எந்தவித வித்தியாசமும் பார்க்காமல் ஏற்றுக் கொண்டவர் அன்னை. அவருடைய ஆசியால் ஏராளமான மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள். மனிதர்கள் மட்டுமா... மரங்களும் செடிகளும்கூட அன்னையின் கருணையால் வளம் பெற்றதை அவருடைய திருச்சரிதம் கூறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ஒருவன் எத்தனை நேரம் தியானிக்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையே உண்மையான ஆன்மிக முன்னேற்றம். இறைவனிடம், அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டுவது பக்தி அல்ல, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, இறைவனே தருவான் என்று நம்மை ஒப்படைப்பதே பக்தி.' போன்ற அன்னையின் எளிய கருத்துக்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. இப்படித்தான் பாண்டிச்சேரி அன்னை பலருக்கும் தாயானார்.

இன்றும் புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வரும் பல பக்தர்களுக்கும், அன்னையை வழிபடும் பக்தர்களுக்கும் கருணை வடிவமாக நின்று வழிகாட்டி அமைதியை அளித்துவருகிறார் . அன்னையின் திருஅவதார தினமான இன்று 21-2-2021 அவரை வணங்கி தியானத்தை மேற்கொள்வோம். உடலும் மனமும் அமைதி பெற்று வாழ்வோம்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

குழந்தை அன்னையிடமே பாதுகாப்பையும் அமைதியையும் உணரும். நம் ஆன்மாவும் அப்படியே. எங்கு கருணையும் ஆறுதலும் கிடைக்கிறதோ அங்கேயே செல்லும்.

'எந்த மனதில் பாசம் உண்டோ, அந்த மனமே அம்மா...அம்மா!' என்று கவியரசர் கண்ணதாசன் கூறியதைப் போல ஸ்ரீஅன்னையின் உள்ளம் கருணையால் நிரம்பி இன்றும் அருள் சுரக்கக் கூடியது என்பதை ஒருமுறை அன்னையை வணங்கினாலே அறிந்து கொள்ளலாம்.

அன்னையை வழிபட மந்திரங்களோ பெரும் சடங்குகளோ தேவை இல்லை. அன்னையை எண்ணி மலர்களைச் சமர்ப்பித்து உங்கள் வேண்டுதல்களை இடைவிடாது பிரார்த்தித்தாலே போதும். ஓடிவந்து அருள் செய்யும் கருணை கொண்டவர் ஸ்ரீஅன்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு