Published:Updated:

`ஞாயிறு போற்றுதும்...’ சூரிய வழிபாடு குறித்த 9 சுவாரஸ்யமான தகவல்கள்! #PongalCelebrations

சூரிய வழிபாடு நம் பாரத நாட்டின் பழைமையான வழிபாடுகளில் ஒன்று. சௌமாரம் என்று தனி வழிபாடாக இந்த நானிலம் எங்கும் பரவியிருந்தது. அதற்கான சான்றுகளாக இன்றும் காணப்படும் பழைமையான ஆலயங்களும் வேத இதிகாச சான்றுகளுமே ஆகும்.

ஜோதிட சாஸ்திரத்திலும் சூரியனே மையம். இந்தப் பொங்கல் திருநாளில் கண்ணுக்குத் தெரியும் கடவுளாக தினமும் தரிசனம் தரும் சூரியபகவான் வழிபாடு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.

சாத் அல்லது சூர்ய சஷ்டி

தினமும் காலையிலும் மாலையிலும் நாம் சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். இவை தவிர சூரியனை வழிபடும் சிறப்பான சில விழாக்களும் நம் மண்ணில் உண்டு. அவற்றில் ஒன்று சாத் அல்லது சூர்ய சஷ்டி விரதம்.

பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி தொடங்கி சப்தமி திதி வரை நான்கு நாள்கள் இந்த விரதம் நீடிக்கும். அதிகாலை நீராடி உதிக்கும் சூரியனை வழிபட்டுப் பின்னர் பலவகை இனிப்பு உணவுகள் செய்து படையலிட்டு வணங்கிடுவர். மூன்றாம் நாள் நீர் அருந்துவதையும் தவிர்த்துக் கடும் விரதம் காத்து காலை, மாலை வேளையில் நீராடி அர்க்கியம் அளித்து ஆதவனை வழிபாடு செய்வர். நான்காம் நாள் அதிகாலை சூரியனைக்கண்டு விருந்து படைத்து விரதம் முடிப்பர். இந்த நாளில் பீகாரில் தட்சிணார்க்க சூரியன் கோயிலில் ஆராதனைக்கு மக்கள் கூட்டமாக வருவதைக் காணலாம். ராமாயணத்தில் ராமனும் சீதையும் மற்றும் மகாபாரதத்தில் திரௌபதியும் இவ்வழிபாடு செய்ததாகக் கூறுவர்.

சூரிய வழிபாடு
சூரிய வழிபாடு

சாம்ப தசமி

மார்கழி மாத வளர்பிறை தசமி அன்று ஒரிசாவின் கிழக்கு கடலோரப்பகுதிகளில் இந்த விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கோனர்க்கில் சூரியக் கோயிலில் வழிபாடு செய்ய ஏராளமான மக்கள் வருவர். கண்ணனின் மகன் சாம்பனின் பெயரால் அழைக்கப்படும் இவ்விழா சூரிய தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. தன் பன்னிரு வருடத் தவத்தின் பயனால் சூரியனின் அருள் பெற்று தன் நோய் நீங்கப் பெற்ற சாம்பர் இந்த விழாவை நடத்தி நன்றி கூறியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

ரதசப்தமி அல்லது சூரியஜயந்தி

காசிப முனிவர் அதிதிக்கு மகனாக சூரிய தேவன் அவதரித்த நாளே ரத சப்தமியாகக் கொண்டாடப்படுகிறது. தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமி திதியே ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. ஆதித்தியனின் அளவற்ற சக்தியைப் போற்றி வழிபடும் இவ்விழா சூரியன் கோயில்கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடப்படும்.

பன்னிரு ராசிகளில் ஒவ்வொருமாதமாக ஒளிரும் சூரியனை பன்னிரு ஆதித்தியர்களாகப் போற்றுகின்றன புராணங்கள். திருக்கழுக்குன்றத்தில் சிவனாரை இவர்கள் வழிபட்டதாகவும் அதனால் இத்தலம் தினகரபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் திருக்கழுக்குன்றம் புராணம் குறிப்பிடுகின்றது.

சூரியனே கோள்களின் நாயகன். பிற கோள்கள் அவரைச் சுற்றிவருகின்றன. காலங்கள் வருடங்களால் அழைக்கப்படுகிறது. ஆண்டுகள் சூரியனால் பகுக்கப்படுகிறது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயனம் மற்றும் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றன.. சூரியன் 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிப்பார். சூரியன் மகரத்தில் பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது. அன்றே நாம் தைப்பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறோம்.

சூரியனார்கோவில்
சூரியனார்கோவில்

ஒரிஸ்ஸாவில் கோனார்க்கில் 13 - ம் நூற்றாண்டில் நரசிம்ம தேவன் எனும் அரசனால் கட்டப்பெற்ற சூரியன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘கருப்பு பக்கோடா’ என்றழைக்கப்படும் இவ்வாலயம் அழகுற அமைந்தது. ஒருநாளின் 24 மணி கால அளவைக் குறிக்கும் 24 பெரிய சக்கரங்கள் கொண்ட தேரினை ஏழு குதிரைகள் இழுக்கும் தோற்றம் கொண்ட அருமையான அமைப்பு. சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே விழுமாறு உள்ள சூரிய தேவனின் சிலையை சில போர்ச்சுகீசிய மாலுமிகள் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சபா மண்டபமும் ஒரு நடன மண்டபமும் மட்டுமே தற்போது உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குவாலியரில் மொதேராவில் புஷ்பவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சூரியன் கோயில் ஸோலங்கி அரசில் பீம்தேவால் 1026 ல் வடிவமைக்கப்பட்டது. சூரிய குண்டம், சபா மண்டபம், பிரதான் மண்டபம் என மூன்று பிரிவுகள் கொண்டது. சிற்பங்கள் உள்ள தூண்கள் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும். உத்தராயண காலத்தில் சூரியனின் கதிர்கள் சிலை மேல் விழுமாறு அமைப்பு இங்கு காணப்படுகிறது. சிதலமடைந்த இக்கோயிலில் சிகரங்கள் இல்லை. எனினும் முன் மண்டபமும், சிக்கலான சிற்பங்களும் இப்போதும் விழாக்காலத்து நடன நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

கோனார்க்
கோனார்க்

1988-ல் ஜி.டி. பிர்லாவால் அமைக்கப்பட்ட ‘சூரியமந்திர்’ எனும் ஒரு கோயிலும் குவாலியரில் உள்ளது. வெளியே சிவப்பு மணற்கற்கள், உள்ளே வெள்ளை பளிங்கு என அமைக்கப்பட்ட கண்கவர் கலைச்சிறப்பு இது.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் 800 வருடப் பழைமைகொண்ட சோழர்களால் பராமரிக்கப்பட்ட சூரியனார் கோயில் காஞ்சனூர் அருகே உள்ளது. நவகிரக வழிபாட்டில் முதல் இடம் பெறும் தலம் இது. சூரியனார் இரு தேவியருடன் மணக்கோலத்தில் கைகளில் தாமரை மலர் ஏந்திப் புன்னகையுடன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். எதிரே வியாழபகவான் சூரியனை நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிறார். இதர கிரகங்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். ஒன்பது கிரகங்களும் ஒன்றாக அருளும் ஆலயமாக இது.

- லீலா நாராயணசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு