சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

கிருஷ்ணரின் மகனுக்கு விமோசனம் தந்த பொங்கல் வழிபாடு

தைப்பொங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பொங்கல்

- மகாலிங்கம் -

சூரியனைப் போற்றும் அற்புதத் திருநாள் தைப்பொங்கல் திருநாள். கதிரவன் மகர ராசியில் நுழையும் இந்தநாளை மகர சங்கராந்தி என்று போற்றுவர். இந்தத் தினத்தில் சந்திரபாகா நதிக் கரையில், பெண்கள் விரதம் இருந்து பொங்கல் இட்டு சூரியனை வழிபட்டதை பண்டைய ஞானநூல்கள் விவரிக்கின்றன. கண்ண பரமாத்மாவின் மகனான சாம்பன் இந்நாளில் சாபம் நீங்கியது குறித்த திருக்கதை ஒன்றும் உண்டு.

தைப்பொங்கல்
தைப்பொங்கல்


துவாபார யுகம் அது. கண்ணனைத் தரிசிக்க பூலோகம் வந்தார் நாரத மகரிஷி. கண்ணனின் மாளிகைக்குச் சென்றவரை அனைவரும் வரவேற்று உபசரித்தனர். ஆனால் கண்ணனின் மகனான சாம்பன் நாரதரைக் கண்டுகொள்ளவில்லை. அவனின் அலட்சியம், நாரதரை வருத்தத்தில் ஆழ்த்தியது; அவரின் முகம் வாட்டமுற்றது.

கிருஷ்ணரை தரிசித்த நாரதர், அவருடன் உரையாடிக் கொண் டிருந்தார். அப்போதும் அவரிடம் சாம்பனின் நடத்தை குறித்து நாரதர் எதுவும் கூறவில்லை. ஆனால் அவரின் முகவாட்டத்தைக் கிருஷ்ணர் கண்டுகொண்டார். என்ன காரணம் என்று விசாரித்தார்.

நாரதர் சற்று தயங்கியபடி, ‘`நான் இங்கு வந்தபோது, இளைஞன் ஒருவன், என்னிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டான். அதனால்தான்...’’ என்று அவர் கூறி முடிப்பதற்குள், கிருஷ்ணர் இடைமறித்தார்.

‘`என்னை விட, என் பக்தர்கள் உயர்ந்தவர்கள். அதிலும்... சதாசர்வ காலமும், ‘நாராயணா, நாராயணா’ என்று என் நாமத் தையே உச்சரித்துக் கொண்டிருக்கும் தாங்கள் மிக உயர்ந்தவர். உங்களை மதிக்காதவர் எவராக இருந்தாலும் அவரைத் தொழுநோய் பீடிக்கட்டும்!’’ என்று சபித்துவிட்டார்.

நாரதர் பதைபதைத்துப் போனார். ‘`பரந்தாமா! அவசரப்பட்டு விட்டீர்களே. என்னை அலட்சியப்படுத்தியது தங்களின் மகன் சாம்பன் அல்லவா?’ என்று கலங்கினார். பகவானோ ``தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்’’ என்று கூறி, நாரதரை ஆசுவாசப்படுத்தினார்.

பகவானின் சாபம் பலித்தது. சாம்பன் தந்தையிடம் ஓடோடி வந்தான்; தவற்றுக்கு வருந்தி விமோசனம் வேண்டினான். ``நாரதரிடமே மன்னிப்பு வேண்டுவாயாக. அவர் மனம் இரங்கினால் உனக்கு விமோசனம் அருளட்டும்’’ என்று கூறிவிட்டார் பகவான்.

நாரதர் சாம்பனை மன்னித்தார் விமோசனத்துக்கும் வழிகாட்டி னார். ‘`சந்திரபாகா நதிதீரத்துக்குச் செல். அங்கே நதிக்கரையில் முனி பத்தினிகள் ஒன்று கூடி, சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து- பொங்கல் வைத்து வணங்குகிறார்கள். நீயும் அங்கே செல். பொங்கல் பானை அடுப்புகளில் இருந்து வரும் புகை உன் மேனியில் படும்படி நின்று, சூரிய பகவானை வழிபாடு செய். நோய் முற்றிலும் நீங்கி குணம் பெறுவாய்; சாபம் விலகும்’’ என்று வழிகாட்டினார். அதன்படியே செய்து சாம்பன் நலம்பெற்றான். அவ்வாறு அவன் வழிபட்டது, ஒரு பொங்கல் திருநாளில்தான் என்கின்றன புராணங்கள்.

மகா தீப விரதம்

சங்கராந்தி திருநாளில் ஒரு விளக்கில் எண்ணெயும், இன்னொன் றில் நெய்யும் இட்டு தீபமேற்றி வழிபடும் விரதம்- சங்கராந்தி விரத தீபோத்யாபணம். சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் அருளைப் பெற்றுத் தரும் வழிபாடு இது. இதன் பலனாக சொர்க்கப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

மகர சங்கராந்தியை முன்னிட்டு, முதல் நாள் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதுடன் சிவபெருமானையும் ஆராதிக்க வேண்டும். இந்த நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபட்டு ‘மகா தீப விரதம்’ மேற்கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் எனப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் இன்னொரு விரதம்- மகா வர்த்தி விரதம். இந்த விரதத்தின்போது விளக்கில் பசு நெய் நிரப்பி சிவ பெருமானுக்கு தீப வழிபாடு செய்வார்கள்.

செல்வம் தரும் வழிபாடு!

தை மாத விரதங்களுள் எளிமையானது, மாச உபவாச விரதம். தை மாதத்தின் 30 நாட்களிலும் அதிகாலை எழுந்து, அறுகு சார்த்தி விநாயகரை வழிபடுவதோடு, ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி சூரியனையும் வணங்க வேண்டும். தை மாதம் முதல் நாள், 11-வது நாள் அல்லது அமாவாசை- பௌர்ணமி ஆகிய தினங்களில் இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம்.

- எஸ்.பவித்ரா, கரூர்.