திருக்கதைகள்
Published:Updated:

முருகன் தலத்தில் மூலிகைத் திருநீறு!

ஊதி மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஊதி மலை

ஊதி மலை

முன்னொரு காலத்தில் நம் தமிழகத்தில் தங்க வேட்டை நிகழ்ந்த இடம் ஒன்று உண்டு. அற்புத மூலிகைகளால் உருவான சர்வரோக நிவாரணியாய் அற்புத மருந்து வழங்கப்பட்ட இடம் அது. இறந்த உயிர்களை உயிர்பெறச் செய்த அபூர்வச் சுனையும் அங்கு உண்டு. சிவபாலன் என்ற இளவரசனைச் சித்தனாக்கியதும் அந்த இடம்தான். அதன் பெயர் ஊதி மலை!

ஊதி மலை
ஊதி மலை

ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது `பொன்னூதி’ எனும் ஊதி மலை. இங்கே மலைக்குக் கீழே பழைமையான சிவாலயம் அமைந்திருக்க, மலைக்கு மேலே உத்தண்ட வேலாயுத ஸ்வாமியாக முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் காங்கேயத்துக்கு அருகில் இருந்த சுந்தரபுரி எனும் தேசத்தின் இளவரசன் சிவபாலன். ஒருமுறை இவன் ஊதி மலைக் காட்டுப்பகுதியில் வேட்டையை முடித்துக்கொண்டு, உச்சியில் இருந்த சுனையில் தன் உடைவாளைக் கழுவினான். யதேச்சையாக அந்த நீரானது, அருகில் கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகளின் மீது பட, அவை உயிர்ப்பெற்று எழுந்தன. `சிவோ ஹம்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’ என்று வணங்கிக் கூவியபடி, காட்டுக்குள் ஓடி மறைந்தன.

சிவபாலன் வியந்தான். `சிவம் சரி; யார் அந்த சித்தன்’ என்று தேட முயன்றான். விளைவு போகரின் தரிசனம் கிடைத்தது. `நீயே அந்தச் சித்தன்; உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்’ என்று உரைத்தார் அவர். தொடர்ந்து, சந்திரகாந்தக் கல்லில் அமர்ந்து செய்த பெரும் தவத்தால் பல ஸித்திகள் கைவரப் பெற்றான் சிவபாலன். போகரின் அறிவுரைப்படி, உரிய தீட்சைகள் பெற்றான்.

கொங்கணவர்
கொங்கணவர்

தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் அருளால், தொட்டது யாவும் தங்கமாகும் எனும் வரமும் கிடைத்தது அவனுக்கு. வரப்பயனால் கிடைத்த பொன்னை ஏழைகளுக்கு வழங்கினான். நற்பணிதான் என்றாலும் அதன் பொருட்டு சிறு கர்வமும் எழுந்தது அவனுக்குள்.

ஒருமுறை தம்மீது எச்சமிட்ட பறவையைச் சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பஸ்பமாக்கினான். இதுபோன்ற வல்லமையும் அவன் கர்வத்தை அதிகப்படுத்தியது போலும். ஒருநாள், கடும் பசியோடு வள்ளுவ நாயனார் வீட்டுக்குச் சென்ற சிவபாலன் பிக்ஷை கேட்டுக் குரல் எழுப்பினான்.

வள்ளுவரின் தர்மபத்தினி வாசுகி அம்மையோ, தன் கணவருக்கான பணிவிடைகளை முடித்துக்கொண்டு வெகுநேரம் கழித்து வந்தார். சினத்தால் தம்மைச் சுட்டெரிக்குமாறு பார்த்த சிவபாலனை நோக்கி, ``கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’ என்று பரிகசித்துக் கேள்வி எழுப்பினார். ஆடிப்போனார் சிவபாலன். ஆம், இளவலான சிவபாலன் போகமகரிஷி கூறியபடியே வாசுகி அம்மையார் மூலம் `கொங்கணவர்’ என்று பெயர் பெற்றார்.

பிழையை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்ட கொங்கணவர், அம்மையார் பிக்ஷையிட்ட மண் பாத்திரத்தைப் பொன்னாக்கி அளித்தார். அந்த அம்மை அதைத் தன் கணவரிடம் காண்பிக்க, அவரோ சிரித்தபடி, தான் குடித்துவிட்டு வைத்திருந்த நீரை வெளியே இருந்த பாறைமீது வீசினார். பாறை சொக்கத் தங்கமாக மின்னியது. திகைத்து நின்றார் கொங்கணவர்.

ஊதி மலை
ஊதி மலை
தம்பிரான் சமாதி
தம்பிரான் சமாதி
கொங்கணவர் குகை
கொங்கணவர் குகை
சொர்ணாகர்ஷண பைரவர்
சொர்ணாகர்ஷண பைரவர்

`உழைப்பால் வரும் செல்வமே நிலைக்கும்; சித்து வேலைகளை நிறுத்து; அது ஆபத்து’ என்று அறிவுறுத்தி அனுப்பினார் வள்ளுவ நாயனார். கொங்கணவரும் இனி தங்கம் வரவழைக்கும் மந்திரத்தை உபயோகிப்பதில்லை என்று முடிவெடுத்தார். மீண்டும் ஊதி மலை சென்று தவமியற்றினார். 800 ஆண்டுகள் கழிந்தன.

பெரும் பஞ்சம் தோன்ற மக்கள் தவித்தார்கள். வேறு வழியின்றி இந்த முறை மூலிகைகளைக் கொண்டு ரசவாதம் செய்து, சாதாரண உலோகங்களைத் தங்கம் ஆக்கி அளித்தார். போகர் தோன்றி தடுத்தும் கொங்கணவர் கேட்கவில்லை. அவர், மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால், அந்த மலை பொன்னூதி மலையானது.

மக்களுக்கோ பேராசை... அதிகம் பொன் வேண்டும் என்று அலையலையாய் தேடி வந்தனர். கொங்கணர் அந்த இடத்தை விட்டு அகன்றார். அதன் பிறகு அவர் கர்நாடகாவின் கொள்ளேகால் பகுதிக்குச் சென்றதையும், குடகுமலையில் தங்கம் உருவாக்கும் சூட்சுமத்தை விவரிக்கும் ஓலைச்சுவடிகளைச் சாம்பலாக்கியதையும், தஞ்சையில் `சிவத்தை அடக்கிய சித்தன்’ என்று பெயர்பெற்ற கதையையும் சிலாகித்துச் சொல்கின்றன ஞானநூல்கள்.

பேராசை கொண்ட மனிதர்களால் `போதும் இந்தப் பிறவி’ என்று எண்ணிய கொங்கணவர், மீண்டும் ஊதி மலைக்குச் சென்று தவமியற்றினார். போகர் பழநியில் பிரஷ்டை செய்த நவபாஷாணச் சிலையைப்போல தானும் மூலிகைகளால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையை மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார். பிறகு, ஈசனின் கட்டளைப்படி திருமலை திருப்ப திக்குச் சென்று சமாதிநிலை கொண்டார் கொங்கணவர்.

இன்றைக்கும் ஊதி மலையில் தாம் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் கொங்கணவர் சுயம்புவாகக் காட்சியளிப்பதை தரிசிக்கலாம். அவர் அருள்பாலிக்கும் கொங்கணவ குகை அபூர்வமானது. உள்ளே நுழைந்தால் 50 பேர் அமர்ந்து தியானிக்கும் அளவு இடம் உள்ளது. இந்தக் குகையிலிருந்து பழநி, அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்ததாம்.

பச்சைப்பயிறு சாதம்
பச்சைப்பயிறு சாதம்
அபூர்வச் சுனை
அபூர்வச் சுனை

50 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு வந்து தங்க வேட்டையாடிய மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட சித்தர் உருவாக்கிய ஊதும் மண் குழல்கள் கிடைத்ததாகவும் அதில் பொன் ஒட்டிக்கிடந்து, அதை சிலர் எடுத்துப் போனதாகவும் சொல்கிறார்கள் இங்குள்ளோர்.

அதுமட்டுமா? கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டன. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டதாம். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்ப்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலிலிருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது.

இந்தக் கோயிலுக்கு இடப்புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப் பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். உச்சியில் கொங்கணவர் கோயிலில், கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சித்தர்பெருமான். கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை’ உள்ளது.

சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி ஆகிய நாள்கள் சித்தரைத் தரிசிக்க விசேஷமானவை. பௌர்ணமி நாள்களில் 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

இனிப்பைத் தவிர ஐந்து வகை ருசியுடன் திகழும் இந்தத் தீர்த்தம் அற்புத மருந்து; இது, முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானது, தற்போது அந்த அளவுக்கு மூலிகைகள் கிடைப்ப தில்லை என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகினாலும் ஒட்டுமொத்தகளைப்பும் நீங்கிவிடுமாம். பக்தர்களுக் குப் பசியாற பச்சைப்பயிறு சாதம் வழங்கப்படுகிறது.

மூலிகை நீரை வடித்தெடுத்த மூலிகைத் திப்பிகளே யாகசாலையில் எரிக்கப்பட்டுத் திருநீறாக வழங்கப்படுகிறது. இதுவும் உடல் - உள்ளப் பிணிகளைத் தீர்க்கும் அருமருந்து எனக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்!

பெளர்ணமி அற்புதம்!

பொன்னூதி மாமலையில் பௌர்ணமி தினங்களில் தங்கினால் பல அபூர்வ அனுபவங்களைப் பெறலாம். குறிப்பாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பௌர்ணமியில் இங்கு அழைத்து வந்து, கோயிலுக்கு வெளியே கிடைக்கும் சந்திரகாந்தக் கல்லின் மீது அமர வைத்தால், படிப் படியாக குணமாவார்கள் என்பது நம்பிக்கை. இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். தைப்பூச நன்னாளில் இந்த மலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது விசேஷம்.

அடிக்கும் கோல் தண்டம். அப்படியான தண்டம் ஏந்தி முருகன் பல இடங்களில் தண்டாயுதபாணியாக அருள்கிறான். உத்தண்டமோ கொடுக்கும் கோல். அதை ஏந்தி உத்தண்டபாணியாகத் திகழும் வேலாயுதனை ஒருமுறை தரிசித்து வந்தால், நாம் விரும்பும் வரங்களை அள்ளி அள்ளிக் கொடுப்பான் அந்த அழகன். அவன் அருளாலும் கொங்கணவரின் குருவருளும் கைகூடி, மலை போல் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.