Election bannerElection banner
Published:Updated:

கேரளாவில் புனிதர் பட்டம் பெறும் 3-வது பெண் மரியம் திரேசா சிரமெல்... யார் இவர்?

சிரெமல்
சிரெமல்

மரியம் திரேசா சிரமெல் அவர்களுக்கு புனிதர் பட்டத்தினை வாடிகன் அறிவித்தது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தன்சிராவைச் சேர்ந்தவர் சிரமெல். 1876-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையுடன் பிறந்தவர்கள் ஏழு பெண்கள். அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அதிகமாக வரதட்சணை கொடுத்ததன்பேரில் இவரது குடும்பம் ஏழ்மையானது.

சிரெமல்
சிரெமல்

செல்வச் செழிப்புடன் இருந்த தன் குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் மனம் உடைந்த இவரது தந்தை தோமா குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஆனால், இவரது தாய் தாந்தா மிகுந்த பக்தியுள்ளவர் என்பதால், சிரமெல் உள்பட அவருடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். குறிப்பாக இறை பக்தியுள்ள குழந்தைகளாக வளர்த்தார்.

அம்மாவைப்போலவே சிரமெல்லும் பக்தியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். தினமும் தவறாமல் ஜெபம் செய்தார். இந்நிலையில் சிரமெல்லுக்கு 12 வயதாகும்போது அவரது தாய் தாந்தா இறந்துவிட்டதால், பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். ஆனாலும், ஜெபம் செய்வதை மட்டும் சிரமெல் விடவில்லை. அப்போது ஒருநாள் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது தன்னைக் கடவுள் அழைப்பதை உணர்ந்தார்.

Jesus
Jesus

இதற்கிடையே அன்னை மாதா மீதான அன்பின் காரணமாகத் தன் பெயருடன் 'மரியம்' என்று சேர்த்துக் கொண்டார். அதேபோல் அவிலா தெரசா என்ற புனிதரின்மீது கொண்ட பற்றின் காரணமாக 'திரேசா' என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார். 'சிரமெல்' என்ற இவரது பெயர் பிற்காலத்தில் 'மரியம் திரேசா சிரமெல்' என்று அழைக்கப்பட்டது.

சிரமெல்லுக்கு மூன்று தோழிகள் உண்டு. இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து திருக்குடும்ப சபை என்ற ஒன்றைத் தொடங்கும் எண்ணத்தில் அப்போதைய ஆயரிடம் அனுமதி கேட்டனர். சிரமெல் மற்றும் அவரது தோழிகளுக்கு 13, 14 வயதே ஆகியிருந்தது என்பதால், 'கார்மெல்' என்ற பெயரில் இயங்கிவரும் கன்னியாஸ்திரிகளுக்கான சபையில் சேர்ந்து செயல்படுங்கள்' என்றார்.

சர்ச்
சர்ச்

மேலும் 'சிறு வயது என்பதால், முதிர்ச்சி இருக்காது' என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி 'சபை தொடங்கும் திட்டம் வேண்டாம்' என்றார் ஆயர். ஆனால், சிரமெல் உறுதியாக இருப்பதைப் பார்த்த ஆயர், பின்பு சபை தொடங்க அனுமதி வழங்கினார்.

திருக்குடும்ப சபை (Holy Family) என்ற பெயரில் கன்னியாஸ்திரிகளுக்கான சபையைத் தொடங்கிய சிரமெல் மூன்று முக்கியப் பணிகளை கையில் எடுத்து சிறப்பாகப் பணியாற்றினார். குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும்விதமாக அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை முதன்மைப் பணியாக செய்தார்.

ஜீசஸ்
ஜீசஸ்

அடுத்து குடும்பப் பிரச்னைகளைக் கையில் எடுத்தார். அதாவது, பல்வேறு காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்தார். மூன்றாவதாக, நோய்களால் அவதிப்படுபவர்களைச் சந்தித்து அவர்களது தனிமைத்துயரைப் போக்கியதுடன் சிகிச்சை பெறவும் உதவினார்.

அன்றைய காலகட்டத்தில், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று நிறைய எதிர்ப்பு இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் மீறி இந்தப் பணிகள் அனைத்தையும் சிறப்பாக செய்தார் சிரமெல். மேலும் இந்தப் பணிகளின்போது இவரது அளவுகடந்த பக்தி, ஜெபம், ஒறுத்தல் முயற்சி போன்றவை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

ஜீசஸ்
ஜீசஸ்

சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இவர் தன்னைப் பற்றி கவனம் செலுத்தவில்லை. சர்க்கரைநோய் தாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட காலில் மரக்கட்டை ஒன்று விழுந்தது. இதனால் ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, 50-வது வயதில், 1926-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந்தேதி சிரமெல் மரணமடைந்தார்.

அடக்கம் செய்யப்பட்ட பிறகு இவரது கல்லறையில் ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து ஜெபித்து செல்வது வழக்கம். கால் வலி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள் இவரது கல்லறையின் மண்டியிட்டு ஜெபம் செய்ததையடுத்து, நோய் நீங்கி நலம் பெற்றார்களாம். இதுதவிர மரியம் திரேசா சிரமெல் மீது நம்பிக்கை வைத்து ஜெபம் செய்தவர்களது வேண்டுதல்கள் நிறைவேறின. இவையெல்லாம் அற்புதங்களாகக் கருதப்பட்ட நிலையில், 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி `வணக்கத்துக்குரியவர்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு (2000) ஏப்ரல் 9-ம் தேதி `அருளாளர்' பட்டம் தரப்பட்டது.

சிரமெல்
சிரமெல்

அப்போதைய போப் ஆண்டவரான திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த இரண்டு பட்டங்களையும் வழங்கினார். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 13-ந்தேதி மரியம் திரேசா சிரமெல்லுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வாடிகன் நகரிலிருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள கன்னியாஸ்திரிகளில் இதுவரை இரண்டு பேருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மரியம் திரேசா சிரமெல் மூன்றாவது புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு