Published:Updated:

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யலாமா?

கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்கள்

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

? பிரதோஷ காலத்தில் ஆலயத்துக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே நந்திதேவருக்கான வழிபாட்டைச் செய்யலாமா, எப்படிச் செய்வது?

- சி.கோகுலவாணி, திருநெல்வேலி-3

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். ஆலயம் செல்ல முடியாதபோது வீட்டிலேயே சிவபூஜை செய்து, நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் செய்யலாம். அவரின் கொம்புகள் வழியாக ஈசனை தரிசனம் செய்து அருள் பெறலாம். இப்படியும் வழிபட இயலாத நிலையில் உள்ளவர்கள், பூசலார் நாயனார் பூஜித்தது போன்று மனதிலேயே நந்தியெம்பெருமானையும் ஈசனையும் வழிபட்டு மகிழலாம். இது மானஸ பூஜை எனப்படும்.

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யலாமா?

? நண்பர்கள் சிலர் குழுவாகச் சேர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய விரும்புகிறோம். சுந்தர காண்ட பாராயணத்தை எந்த நாளில் தொடங்கலாம். மொத்தம் எத்தனை நாள்கள் பாராயணம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாள்களில் செய்ய வேண்டிய வழிபாட்டு, நைவேத்திய விவரங்களைச் சொல்லுங்களேன்.

- சி.எம்.ராமச்சந்திரன், மதுரை-4

நம்முடைய துன்பங்களைப் போக்கி இன்பம் அருளும் ஶ்ரீவால்மீகி ராமாயணத்தின் 68 அத்யாயங்களைக் கொண்ட சுந்தரகாண்டம் அருமருந்து என்றே சொல்லலாம். சுந்தரகாண்டம் பாராயணத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து அடுத்த வெள்ளியில் முடிப்பது சிலருடைய மரபு. இதுபோன்று பலரும் பல முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். பாராயணம் முடியும் நாளில் ஶ்ரீராமர் பட்டாபிஷேகம் நடத்தி வைப்பது அவசியம்.

வாயு புராணம், ஸ்கந்த புராணம் போன்ற பல புனித நூல்களில் இந்தப் பாராயண முறை குறித்து விளக்கங்கள் உள்ளன. பெரும்பாலும் தூய்மையான இடத்தில் பலரும் கூடி பாராயணம் செய்வது வழக்கம். மதியம் ஒரு மணிக்குள் செய்துவிடுவது நல்லது.

நவராத்திரியின் 9 நாள்களும் பாராயணம் செய்ய ஏற்ற நாள்கள். சர்க்கரைப் பொங்கல், அப்பம், பாயசம், எள் சாதம், தேன்குழல், தயிர் சாதம், கொழுக்கட்டை, பழங்கள், வெண் பொங்கல், சர்க்கரை கலந்த பால், கற்கண்டு என 9 நாள்களும் விதவிதமாக நைவேத்தியம் செய்யலாம். 1, 2, 3, 5, 8, 12 அல்லது 28 நாள்கள் என்ற கணக்கிலும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாம். உங்கள் குழுவின் வசதியை உத்தேசித்து, ஒரு பாகவத உத்தமரை ஆலோசித்து முடிவு எடுக்கலாம். உலகத்துக்கும் சகல உயிர்களுக்கும் நன்மை அளிக்கும் சுந்தர காண்டத்தை மனம் கனிந்து பாராயணம் செய்து எல்லோருமே பயன் பெறலாம்.

? எங்களின் குலதெய்வம் வீரபத்ரர். அவரை அனுதினமும் வழிபட ஏதேனும் துதிப் பாடல்கள் உண்டா. வீரபத்ரரை எந்தக் கிழமைகளில் வழிபட வேண்டும். வழிபாட்டு நியதிகளை விளக்குங்களேன்.

- சி.சங்கரநாராயணன், கரூர்

வீரத்தினால் நம்மைக் காப்பாற்றுபவர் வீரபத்ரர். ‘பத்ரம்’ என்றால் நன்மை. நம்மை அனைத்து ஆபத்துக்களிலருந்தும் காப்பாற்றி நன்மை அருள்பவர் வீரபத்ரர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தட்ச யாகத்தை அழிக்கத் தோன்றியவர் வீரபத்ரர். இவர் ஆயிரம் தலைகளும் ஈராயிரம் கரங்களும் கொண்டவர் என்கிறது புராணம்.

‘பலமெவையுந் தருநயன மூன்று காட்டிப்

பகருமருள் வடிவாகிக் கரங்கள் எட்டில்

வலமொளி வாள் கதையினொடு வயங்குசூல

மழுப்படைமற் றிடப் பாலிற் கபாலம் பட்ட

மிலகுமணி யொடுமுசல மினைய தாங்கி

யெய்துமடி யவரிடுக்க ணெவையும் வீட்டி

யுலகிலுயர் பறியனக ரதனுள் வாழ

மொருவீர பத்திரனை யுளத்தில் வைப்பாம்’

என்ற துதியைக் கூறி வணங்கலாம். `ஓம் வீரபத்ராய நம:’ என்று 25 முறை ஓதி நலம் பெறலாம்.

உக்கிரன், சடையோன், குரோதன் அழற்கண் வந்தோன் என்று பல திருப்பெயர்களால் இவர் துதிக்கப்படுகிறார். வேதம், ஆகமம், புராணங்கள் என பல படைப்புகளிலும் இவர் போற்றப்படுகிறார். எதிரிகளிடம் இருந்து நம்மைக் காப்பவர் இவரே.

இவருக்கு வெற்றிலை மாலை, தும்பைப் பூ, நந்தியாவட்டை, சிவப்பு மலர்கள் சாத்தி வழிபடலாம். நெய் தீபம் சிறப்பானது. செவ்வாய், ஞாயிறு, பௌர்ணமி தினங்கள் வீரபத்ர சுவாமியை வழிபட ஏற்ற நாள்கள். ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறுகளிலும் இவரைச் சிறப்பாக வழிபடலாம். மிளகு வடை, மிளகு அன்னம், பாயசம், மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், நெய்ப் பலகாரங்கள், வெண்ணெய் அடை, பானகம், நீர்மோர், தேன், நெய் கலந்த தயிரன்னம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்க லாம். வீரபத்ரரோடு பத்ரகாளியையும் வணங்க லாம். இன்றும் சப்த மாதர்களோடு இருந்து ஊர்தோறும் நம்மைக் காத்து அருள்பவர் வீரபத்ரர் என்கின்றன புனித நூல்கள்.

? ராவணனின் புஷ்பக விமானம் குறித்த ஆய்வில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. அதற்கு இந்திய அரசின் உதவியையும் நாடுகிறது எனும் செய்தி வெளியாகியுள்ளது. புஷ்பக விமானம், அணு தொழில்நுட்பம் குறித்த விளக்கங்கள் நம் புராணங்களில் உண்டா. சிலர், `அனைத்தும் கற்பனை’ என்கிறார்களே?

- கே.பாண்டியன், மதுரை-44

நம் மதம் கடல் போன்றது. எவரும் இதை முழுமையாக அறிந்தவர் இல்லை. பல நூல்களில் விமானங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன. வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் எட்டாவது அத்யாயத்தில் விமானங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பல விஷயங்கள் நம்மிடம் உள்ளன. சமீபத்தில் இலங்கை அரசு இந்த விமானங்களைக் குறித்து ஆய்வு செய்து வருகிறது. உலகில் பல பகுதிகளில் நம் கலாசாரம் மதிக்கப்படுகிறது. கற்பனை என்று கூறுவோர், காலம் வரும்போது உண்மையை உணர்வார்கள். தாங்கள் குழம்பவேண்டாம். நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்; அவர்களைப் பின்பற்றுவோம்.

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யலாமா?

? முருகனின் படை ஆயுதமான வேலாயுதத்தை வழிபடுவது போன்று, சூலத்தையும் தனியே வழிபடலாமா? அதற்கான துதிகள் - நியதிகள் என்னென்ன?

- எம்.ஈஸ்வரன், திருநெல்வேலி-4

சிவபெருமான் தனது திரிசூலத்தால் நமது மும்மலங்களையும் அழிப்பதாக சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. முச்சூலத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரும் எழுந்தருள்வதாகக் கருதி வழிபடலாம் அல்லது சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கை என்று பாவித்தும் வழிபடலாம். இல்லையெனில் `எந்த தெய்வம் சூலம் ஏந்தி வந்து நம்மைக் காக்கவேண்டும்’ என்று விரும்புகிறோமோ, அந்த தெய்வத்தை வழிபடலாம். அப்போது அந்த தெய்வ சக்தி வந்து நம்மைக் காக்கும்.

‘சூலேன பாஹி நோ தேவி!’ என்று கூறி, சூலத்துடன் வந்து எங்களைக் காப்பாற்று அம்மா என்று தேவியைப் பிரார்த்தித்து வழிபடலாம். ‘ஓம் த்ரிசூலாய நம:’ என்று ஒன்பது முறை கூறியும் சூலத்தை வணங்கி வழிபட்டு பலன் பெறலாம்.

- பதில்கள் தொடரும்...