பிரீமியம் ஸ்டோரி

ஞ்சை மாவட்டத்தில் புராதனமான கோயிற் கலைகளில் இசை, நாட்டியத்துடன் அபிநயித்து நடிக்கப்படும் பக்தி நாடகங்கள் ‘பாகவத மேளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த நாடகங்களில் பாரம்பர்யமாக ஆண்களே (பெண் வேடங்களிலும்) நடிக்கவும் பாடவும் செய்வார்கள். ஆண்டுதோறும் வைகாசி மாதத்து பௌர்ணமிக்கு முதல் நாள் வரும் நரசிம்ம ஜயந்தியன்று `பிரகலாத சரித்திரம்' என்ற நாடகம் நடைபெறுவது வழக்கம்.

தஞ்சை மாவட்டத்தில் மெலட்டூர், சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் தற்போது நடத்தி வருகிறார்கள். முன்பு ஊத்துக்காடு, சூலமங்கலம், நல்லூர் முதலான ஊர்களிலும் நடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நாடகம் அந்தந்த ஊர்களில் உள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வழிபாட்டுடன் இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கி விடிய விடிய நடைபெறும்.

தஞ்சையை ஆண்ட அச்சுதராயர் காலத்திலும் பின்னர் பிரதாப சிம்மன், ஏகோஜி, சரபோஜி முதலான அரசர்கள் காலத்திலும் சில ஊர்களை அந்தணர் களுக்குத் தானமாக அளித்து இந்த நாடகக் கலையை வளர்த்துள்ளார்கள்.

நாடகம்
நாடகம்

இந்த இசை நாடகங்கள் தெலுங்கு மொழியி லேயே எழுதப்பட்டுள்ளன. பிரகலாதன், ருக்மாங்கதன், ருக்மணி கல்யாணம், உஷாபரிணயம், ஹரிசந்திரன், சீதாகல்யாணம், கம்சன் முதலான பல நாடகங்கள் மெலட்டூர் வேங்கடராம சாஸ்திரி என்பவரால் எழுதப்பட்டன. இதற்கான இசைப்பாடல்கள், நாட்டியத்துக்கான தனித் தன்மையுடன் இசை அமைக்கப்பெற்று பக்தி வழிபாட்டு முறையில் தயாரிக்கப் பெற்றுள்ளன. இவர் சங்கீத மும்மணிகள் காலத்துக்கு முற்பட்ட வர். 1432-ல் ‘விப்ரநாராயண சரித்திரம்’ என்ற பாகவதமேளம் நாடகம் நடைபெற்றதாம். 18-ம் நூற்றாண்டு முதல் இந்த நாடகங்கள் மேற்கண்ட பல ஊர்களிலும் நடைபெற்று வந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் பரதம் நடேசய்யர், பத்மஸ்ரீ பாலு பாகவதர், கலைமாமணி பி.கே.சுப்பய்யர், குரு கே.பி.இட்டப்பாபிள்ளை (நட்டுவாங்கம்) கலைமாமணி டி.ஜி. பாவு பிள்ளை போன்ற இசை நாட்டிய ஆசார்ய பெருமக்களால் வளர்க்கப்பெற்றன.

தற்போது, ‘மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக டிரஸ்ட்’ என்ற பெயரில் தொழிலதிபர் நல்லி குப்புசாமிச் செட்டியார் தலைமையில் இயங்கி வருகிறது. மெலட்டூரில் தோன்றிய தொழிலதிபர் வி.டி.சுவாமி, இந்த நாடகத்தை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த மெலட்டூரில் ஓர் இடத்தை வாங்கி இச்சங்கத்தாருக்கு அளித்துள்ளார். ஆண்டுதோறும் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் இந்த நாடகங்கள் பாரம்பர்யமாக இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல மாநிலங்களிலும், சென்னையில் சில சபாக்களிலும் இந்த இசை நாடகங்கள் மக்களின் பாராட்டைப் பெற்று வருகின்றன.

கடந்த ஜனவரி 5 - ம் தேதி சென்னை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ஆதரவில் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில், மெலட்டூர் பாகவத மேளா குழுவினர் ‘மார்க்கண்டேயா’ என்ற நாட்டிய நாடகத்தை வழங்கினர்.

மிருகண்டு முனிவர் பிள்ளைப்பேறு வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமான் அருளால் பிள்ளை வரம் கிடைக்கிறது. ஆனால், “நூறு ஆண்டு வாழக் கூடிய மகாபாவியான மகன் வேண்டுமா அல்லது பதினாறே வயதுடைய மகா உத்தம புத்திரன் வேண்டுமா” என்று சிவபெருமான் கேட்க, மிருகண்டு முனிவரும் அவர் மனைவியும் பதினாறு வயதுடைய பிள்ளையை இறைவனிடம் வேண்டிப் பெறுகின்றனர்.

மார்க்கண்டேயன் என்ற பெயருடைய அந்தக் குழந்தை நன்கு வளர்ந்து வரும் நாளில் நாரதர், பிரம்மா ஆகியோர் காட்சியளித்து சிரஞ்ஜீவியாக வாழ ஆசி வழங்குகிறார்கள். சிவபூஜை செய்வதற்கு மந்திர உபதேசம் செய்கிறார் பிரம்மா. அதன்படி மார்க்கண்டேயன் பாரதத்தின் பல்வேறு ஸ்தலங்களிலும் குறிப்பாக காசி, சிதம்பரம், திருவையாறு, மெலட்டூர், ராமேஸ்வரம் முதலான தலங்களில் சிவபூஜை செய்து வருகிறான்.

பதினாறு வயது நிரம்பும்போது திருக்கட வூரில் அமிர்தகடேஸ்வரரை பூஜை செய்யும் தருணத்தில், யமன் வந்து அவனை யமலோகத்துக்கு அழைக்க, மார்க்கண் டேயன் தீவிரமாக பூஜை செய்ய யமன் பாசக் கயிற்றை வீசுகிறான்.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிக்க சிவபெருமான் வெளிப்பட்டு யமனை சம்ஹாரம் செய்கிறார் (காலனைக் கடந்த ஊர் ஆதலால் கடவூர் என்று பெயர். திருக்கடையூர் என்று அழைப்பது தவறு. அது கடைப்பட்ட ஊர் என்று பொருளாகி விடும்). யமன் இல்லாததால் பூமியில் இறப்பேயில்லை. பூமிபாரம் தாங்காமல், பூமாதேவி பிரார்த்திக்க இறைவன் யமனை மீண்டும் உயிர்ப்பித்து அவன் தொழிலைத் தொடங்க ஆசி வழங்குகிறார்.

மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடகங்களில் பல்வேறு வேடங்களில் 60 ஆண்டுகளாக நடித்துள்ள இந்த டிரஸ்ட்டின் இயக்குநர் கலைமாமணி ஆர். மகாலிங்கம் (மாலி), மிருகண்டு முனிவராகத் தோன்றி அற்புதமாக நடித்தார். 36 ஆண்டுகளாக லீலாவதி, சந்திரமதி, ராமன், கிருஷ்ணன் என்று பல்வேறு வேடங்களில் நடித்து வரும் எஸ்.நாகராஜன் (வங்கி துணைப் பொது மேலாளர்) மிருகண்டு முனிவரின் மனைவி மருத்துவவதியாகத் தோன்றினார். அவருடைய அபிநயமும், பெண்மையின் நளினமும், முகபாவங்களும் மிக அற்புதமாக இருந்தது. அவருடைய மகன் (எட்டாவது வகுப்பு படிக்கும்) ஹரிஹரன் மார்க்கண்டேயனாக நடித்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளச் செய்தான்.

யமனாகத் தோன்றி நடித்த பல் மருத்துவர் எஸ்.அரவிந்தின் நடிப்பும், சிவபிரானாகக் காட்சியளித்த எஸ்.ஆனந்தின் கம்பீரமும் மிக அருமை. கோணங்கி மற்றும் யமகிங்கிரனாக நடித்த சுவாமிநாதன், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி மற்றும் பிரம்மாவாக இரு வேடங்களில் வந்த அருணாசலம், நாரதர் மற்றும் யமகிங்கரனாகத் தோன்றிய ராகவன் ஆகியோர், திறம்பட நடித்து நாடகத்தை ரசிக்க வைத்தார்கள்.

இந்த இசை நாட்டிய நாடகத்தில் பிரதான பாடகர் டாக்டர் முரளி ரங்கராஜன் (வேதியியல் முதன்மை பேராசிரியர்). இணைந்து பாடியோர் கலிய மூர்த்தி, சக்திவேல். மிருதங்கம் - அரவிந்த், நட்டுவாங்கம் - ஹரிஹரன் ஹேமாம்பரநாதன், வயலின் - விஜயகுமார், புல்லாங்குழல் - சிவகுமார் ஆகிய அனைவரும் நாடகத்துக்குக் சிறப்பு சேர்த்தனர். தஞ்சை கதிரவனின் ஒப்பனை பாராட்டத்தக்கது. இதில் நடிப்பவர்கள் அனைவருமே தொழில்முறை கலைஞர்கள் அல்லர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இக்கலையை வளர்ப்பதில் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு உழைத்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் அரசர்களின் ஆதரவால் தெலுங்கு மொழி யில் எழுதப்பட்டும் நடிக்கப் பட்டும் வந்தாலும் இன்று நடிப்பவர்கள் அனைவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். எனவே இந்த நாடகங்கள் தமிழ்மொழியில் நடிக்கப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் பரவலாகச் சென்று மக்கள் ரசித்து இன்புறுவார்கள் என்று ரசிகர்கள் பலர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

- கீதைநாயகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு