Published:Updated:

எல்லாமும் தருபவர் எங்கள் பெருமாள்!

ஆயலூர் பெருமாள் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயலூர் பெருமாள் கோயில்

திருத்தொண்டர்

பெரும் புதையல்கள் ரகசியமாக எங்கோ ஆழத்தில் கிடப்பதுபோல நம் தேசத்தின் பல புண்ணிய தலங்களும் பரபரப்பில்லாத கிராமங்களில் தனித்திருக்கின்றன. அவற்றை நாடிச் சென்று பலன் பெறுபவர்கள் மிகவும் குறைவு. மக்கள் பயன்பாடு இல்லாமல் தம் பொலிவை இழக்கின்றன பல ஆலயங்கள்.

எல்லாமும் தருபவர் 
எங்கள் பெருமாள்!

ரு சில குடும்பங்கள் அப்படிப்பட்ட ஆலயங்களைப் பராமரிக்கவும் பூஜிக்கவுமே தம் ஆயுளைப் பணயம் வைக்கின்றன. பெரிய வருமானம் இருக்காது. உடையையும் உணவையும் தவிர வேறு சௌகர்யங்கள் கிடைக்காது. நாகரிக உலகில் இருக்கும் எதுவும் அவர்களுக்கு அறிமுகமாகியிருக்காது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சுவாமி... சுவாமி... சுவாமி மட்டுமே. அப்படிப்பட்ட திருத்தொண்டர்களைத் தேடித்தான் நம் பயணம் தொடர்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டைக்கு அருகே இருக்கிறது ஆயலூர் என்னும் கிராமம். இந்த ஊருக்குப் புராணங்களில் கோபாலக்ஷேத்திரம் என்று பெயர். ஆயர்கள் அதிகம் இருந்ததனால் ஆயர்கள் ஊர் என்று வழங்கப்பட்டு, பின்னர் ஆயலூர் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். ஆயர்கள் என்றாலே அவர்களின் தலைவன் அந்த சுந்தரராஜன்தானே. ஶ்ரீசுந்தரராஜப்பெருமாள் சுந்தரவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருக்கும் அற்புதத் திருத்தலம் இந்த ஆயலூர்.

இந்த க்ஷேத்திர மகிமையும் சுந்தராஜப் பெருமாளின் மகிமையும் ப்ரம்ஹ கைவர்த்த புராணத்தில் 175-ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குள் சென்றபோது சந்நிதிக்கு அருகேயிருந்து நம்மைக் கண்டதும் ஓடி வந்தார் அந்த அர்ச்சகர். அவர் பெயர் தாமோதரன். கடந்த 40 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் சேவை செய்பவர் அவர்தான். நாம் சென்றிருந்தபோது, ஒரு சிறு விபத்தில் அவர் கண்களில் முள்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எப்படி நிகழ்ந்தது என்று கேட்டோம்.

எல்லாமும் தருபவர் 
எங்கள் பெருமாள்!

“மழையினால் காலைல கோயில் வரத் தாமதமாகிடுச்சி. பூஜை காலந்தவறிவிடக் கூடாதேன்னு அவசரமா வந்தேன். அப்போ ரோட்டோரம் இருந்த முட்செடி காத்துல ஆடிக் கண்ணுல குத்திருச்சி” என்றார்.

“யாராவது வந்து காத்திருந்தார்களா...” என்று கேட்டதற்கு, “மனுஷாள் காத்திருக்கலாம் தப்பில்லை. பெருமாளைக் காத்திருக்க வைக்கலாமா... அதான் ஓடிவந்தேன்” என்றார் தாமோதரன்.

அந்தக் கோயிலுக்குத் தினமும் ஓரிருவர்கூட வருவதில்லை. விசேஷ நாள்களில் சிலர் வருவார்கள். அதேபோல், இந்தத் தலத்துக்கு வந்து பலன் கண்டவர்கள் சொல்லிச் சிலர் வருவார்களாம். ``ஆனாலும் தாமோதரன் கோயில் பூஜைகளில் ஒரு குறையும் வைப்பதில்லை’’ என்றார் நம்மோடு வந்த ஊர்க்காரர். தாமோதரனிடம் அவர் குறித்துக் கேட்டோம்.

“என்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கு... இது எங்க பரம்பரைக் கோயில். தலைமுறை தலைமுறையா அர்ச்சகரா இருக்கோம். அதனால எங்களுக்குச் சம்பளம்னு ஒண்ணு கிடையாது. கொஞ்சம்போல நிலம் இருக்கு. அதுல வர்ற நெல்தான் எங்களுக்கு. அதை வச்சித்தான் எங்கப்பா நாலு பிள்ளைகளையும் வளர்த்தார். இந்தக் கிராமத்துல வேற பொழுதுபோக்கே கிடையாது. அதனால எப்பவும் கோயிலோடையே இருந்து இருந்து எனக்குப் பெருமாள் மேல பெரும் ஈடுபாடு வந்துடுத்து. அதனால வேற ஊருக்கோ வேலைக்கோ போக மனசே வரலை.

சொந்தக்காரங்க பலர் சிட்டில பெரிய கோயில்கள்ல இருக்காங்க. அவங்க எல்லாம் நீ இங்க வந்துடு. இங்கே வந்தா நல்ல பணம் கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, என் மனசு கேட்காது. பணத்துக்குன்னு போய்ட்டா, இந்தப் பெருமாளுக்கு யாரு கைங்கர்யம் பண்ணுறது?

எல்லாமும் தருபவர் 
எங்கள் பெருமாள்!

புராணக் காலத்துக் கோயில் இது. சப்த ரிஷிகளும் பெருமாளை நினைச்சு தவம் செஞ்ச பூமி. பெருமாள் அவங்களுக்குக் காட்சி கொடுத்து, இத்தலத்தோட மகிமையையும் இங்கே இருக்கிற புஷ்கரிணியோட மகிமையையும் எடுத்துச் சொல்லும்படிக் கட்டளை இட்டாராம். அவர்கள் பாரத தேசம் முழுவதும் பயணித்து இத்தல மகிமையை எடுத்துச் சொல்லியிருக்காங்க. கடைசியா நைமிசாரண்யம் போய் உபன்யாசம் செஞ்சு கோபால க்ஷேத்திரத்தோட மகிமையைச் சொல்லியிருக்காங்கன்னு, நான் சொல்லலை... புராணம் சொல்றது.

இங்கே ஒன்பது வாரம் வந்து சுந்தரவல்லித் தாயாரை தரிசனம் செஞ்சி மஞ்சள் சமர்ப்பிச்சு, பானகம் நிவேதனம் பண்ணி வேண்டிக் கிட்டா விரைவில் கல்யாண வரம் கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தன்னைக்கு திருமஞ்சனம் செய்து, விரதம் இருந்து மாலை 4:30லிருந்து 5:30-க்குள் சிரவண தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும். இங்கே நாகராஜனுக்குச் சந்நிதி இருக்கு. அங்கே பால் அன்னத்தை நிவேதனம் செய்து வழிபட்டால், ராகு கேது தோஷம் நீங்குவதோடு, புத்திரப் பாக்கியம் வேண்டுபவர்களுக்கு உடனே கிடைக்குது. இப்படிப் பல வேண்டுதல்களுக்கான பரிகாரங்கள் நிறைந்த ஆலயம் இது. இப்படிப்பட்ட ஆலயத்தை விட்டுட்டு நான் எங்கே போறது சொல்லுங்க...

எனக்கு ரெண்டு பசங்க. அவங்களும் கோயில்களுக்கு பூஜைக்குத்தான் போறாங்க. அதுல மூவாயிரம், நாலாயிரம்னு வருமானம் வருது. இதை வச்சித்தான் காலம் ஓடுறது. என் வரைக்கும் நான் சுவாமி கைங்கர்யத்தைத் தவிர வேற எதையும் செய்யுறதில்லை” என்றார்.

நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

எல்லாமும் தருபவர் 
எங்கள் பெருமாள்!

“சம்பளமே இல்லாமல் வேலை பார்த்தால் எப்படி... கஷ்டம் இல்லையா ?”

நீண்ட மௌனத்துக்குப் பிறகு... ``சார், கஷ்டம் நம்ம கர்மா. அதைத் தாண்டித்தான் வாழணும். பொறந்ததிலேர்ந்து எவ்வளவோ கஷ்டத்தைப் பார்த்தாச்சு. இன்னைக்குப் பிள்ளைகள் தலையெடுத்துட்டாங்க. ஆனா இதுக்கு முன்னாடிப் பல நாள் எப்படிடா நாளைக்கு விடியப்போறதுன்னு இருந்த நாள் எல்லாம் உண்டு. ஆனா, பகவான் மனக் கஷ்டத்தை எல்லாம் ஒரு நிமிஷத்துல போக்கிடுவார். ஏதாவது ஒருவிதத்திலே படியளப்பார். இதெல்லாம் அவன் அருள் இல்லாம எப்படி சாத்தியம்?

நினைச்சா, வேற ஊருல பெரிய கோயில்கள்ல போய்ச் சேர்ந்திடலாம். ஆனா இவர் எங்க பெருமாள். அதனாலே இவருக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கணும். பணம், வசதி எல்லாம் அப்புறம்தான். இந்தப் பெருமாள் பிரத்யட்சமான தெய்வம். இங்கு வந்து வேண்டிக்கிட்டா கிடைக்கிற மன நிம்மதியே அதற்கு சாட்சி. அதற்காகவாவது நிறைய பேர் இங்கே வரணும். அவ்வளவுதான் என் ஆசை! ஒவ்வொரு முறை பெருமாளுக்கு ஆரத்திக் காட்டும்போதும் இந்த லோகம் நல்லா இருக்கணும், உன்னை வந்து சேவிக்கறவா நல்லா இருக்கணும்னு வேண்டிப்பேன். யாருக்காகவாவது அந்த ஆரத்தியைக் காட்டும்போது, `இவா பிரார்த்தனையை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கணும் பெருமாளே’ன்னு வேண்டிப்பேன். பெருமாளை நம்பி வர்றவாளுக்காக உரிமையோடு பெருமாள்கிட்ட பேசுற சொகம் இருக்கே, அது கோடி பெறும்” என்று சொல்லி அவர் முடிக்கும்போது நமக்குக் கண்களில் கண்ணீர் திரண்டது.

தாமோதரனுக்குக் கண்கள் ரொம்ப வலித்ததுபோல அடிக்கடிக் கண்களை உருட்டிக்கொண்டும் சுருக்கிக் கொண்டும் இருந்தார். இந்த வலியோடும் செய்ய வேண்டிய பூஜைகளைக் குறைவரச் செய்து முடித்திருந்தார். அதற்கு சாட்சியாக சுந்தரராஜபெருமாள் கருவறைச் சுடர் ஒளியில் புன்னகையோடு மிளிர்ந்தார்.

அவசியம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அப்படிச் செல்பவர்கள் இயன்ற பங்களிப்பையும் வழங்கலாம். பக்தர்களின் வருகையும் வழிபாடுகளுமே தாமோதரன் போன்ற நல்ல ஆன்மாக்களுக்கு உற்சாகம் தரும்.

- தொண்டர்கள் வருவார்கள்...