மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 8

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

அருள்செய் சிவனே!

ழை வேண்டி ஞானமலை முருகன் கோயிலில் விசேஷ வேள்வி ஒன்று நடைபெறவிருந்தது. ஆலய நிர்வாகிகளின் அழைப்பின்பேரில் அங்கு சென்றிருந்தோம். நாம், அடிவாரத்திலிருந்து படிகள் ஏற முற்பட்ட தருணத்தில், ‘தியாகேசா’ என்று பெயர்ப் பலகையைத் தாங்கிய சரக்கு ஏற்றும் வாகனம் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய வாலிபர்கள் இருவர், பக்தி சிரத்தையோடு பலவிதமான சமித்துகளை வண்டியிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். வேள்வியில் சகல தேவர் களுக்கும் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அந்தச் சமித்துக் கட்டுகளை அவர்கள் வெகுஜாக்கிரதையாக ஓரிடத்தில் குமித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

நம் சிந்தனை சமித்துகளை நோக்கி நகர்ந்தது. ஆன்மிக உலகில் நம்பிக்கைதான் ஆதாரம். நம்பிக்கையோடு ஆண்டவனுக்கு அளிக்கும் எந்தப் பொருளும் புனிதமடைகிறது. நீரைச் சமர்ப்பித்தால் அது தீர்த்தமாகும்; மண்ணைச் சமர்ப்பித்தாலும் பிரசாதமாகும்.

விஜய், வெங்கடேசன்
விஜய், வெங்கடேசன்

தாவரங்களின் காய்ந்த கிளைகளைச் சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தும்போது, அவற்றைச் சுள்ளி அல்லது விறகு என்போம். ஆனால், அவையே யாகத்திலோ, ஹோமத்திலோ தெய்வங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டால், `சமித்துகள்' எனும் பெருமையை அடையும். சமித்துகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது; ஒவ்வொரு சமித்துக்கும் ஒவ்வொரு பலனுண்டு என்கின்றன வேதங்கள்.

இறைவனை அக்னியின் மூலம் வழிபடுவதையே யாகம் அல்லது ஹோமம் என்கிறோம். மருத்துவக் குணங்கள் நிறைந்த பல நூறு சமித்துகளை அக்னியில் இட்டுச் செய்யப்படும் யாகத்தால், மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பலவித நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வில் சிறந்த பெரியோர்கள். யாகத் தீயில் ஒவ்வொரு தேவருக்கும் நாம் இடும் ஆகுதிகளை, அக்னி பகவான் அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அதனால் மகிழும் தேவர்கள், அந்த யாகத்தின் மூலம் வேண்டப்படும் வேண்டுதல்களை நிறைவேற்றுவர் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

அரசு, வன்னி, அறுகம்புல், எருக்கு, புரசு, அத்தி, கருங்காலி, நாயுருவி, தர்ப்பை போன்றவை நவகிரக சமித்துகள். இவை தவிர்த்து தேவதாரு, பூவரசு, பலாமரச் சமித்து, எருக்கன் குச்சி, வில்வம், துளசிச் சமித்து, சோமவல்லிக் கொடி, கரும்பு, புங்க மரம், வல்லாரைக் கொடி, வேங்கை மரம், இலந்தை எனப் பலவிதமான சமித்துகள் யாக வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. அவை முறையாகச் சேகரிக்கப்பட்டு, தூய்மையாக சமர்ப் பிக்கப்பட்டால் மட்டுமே யாகத்தின் பலன்களைப் பூரணமாகப் பெறமுடியும்.

புண்ணிய புருஷர்கள் - 8

`ஆனால் இன்றைய வணிகச் சூழலில், நிறைய பணம் கொடுத்து வாங்கினால்கூட, தூய்மையான சமித்துகள் கிடைப்பதில்லை' என்கிறார்கள், ஆன்மிக அன்பர்கள். மக்களின் நன்மைக்காகச் செய்யப்படும் புனித சடங்குகளுக்குப் பயன்படும் தர்ப்பைகூட கலப்படமாகவே கிடைக்கிறது என்பது அவர்களின் ஆதங்கம்.

“முன்பெல்லாம் வனங்கள் நிறைந்திருந்தன. புரோகிதர்களே சமித்துகளைத் தேடிச் சேமித்துக் கொண்டார்கள். இப்போது அப்படியில்லை. பணம் கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. அதுவும் வெறும் குப்பையாக...” என்று சலித்துக் கொள்ளும் நிலைமையே!

இப்படியான குறையைப் போக்கவும் முறையாக வேள்விகள் நடக்கவும் உதவுகிறார்கள், இந்த இளைஞர்கள் இருவரும்.

ஆம், யாகம் - ஹோமம் என்று எங்கு நடைபெற்றாலும், தேவைப்படும் சமித்துகள், ஆகுதிப் பொருள்களை இலவசமாகக் கொண்டுபோய் சேர்க்கிறார்களாம் இந்த அடியார்கள். வேலூர், காஞ்சி, திருவள்ளூர் பகுதிகளில் இவர்கள் செய்யும் சிவத்தொண்டு பலரும் அறிந்தது. `தியாகேசா' எனும் அந்த வாகனத்தின் உரிமையாளரான வெங்கடேசன் மற்றும் அவரின் நண்பர் விஜய் இருவரும் இணைந்து இந்தத் தொண்டினைச் செய்துவருகிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 8

இதுகுறித்துக் கேட்ட போது, “நாங்கள் செய்வது எளிய பணி ஐயா. அடியார்கள் உதவி கேட்டால், அதைச் சிவனின் ஆணையாகவே ஏற்று, சிரமேற்கொண்டு செய்துவருகிறோம். அதற்கு எங்கள் ‘தியாகேசன்’ உதவு கிறார்” என்று சொல்லி அந்த வண்டியைத் தழுவிக் கொள்கிறார்கள்.

``அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மார்க்கெட்டுக்குச் சரக்குகள் கொண்டுபோய்ச் சேர்ப்போம். அதன்மூலம் கிடைக்கும் நியாயமான கூலியைப் பெற்று, எங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறோம். அதன் பிறகு, நாள் முழுக்க சிவப்பணிதான். அடியார்களின் பொருள்களை ஆலயங்களுக்குக் கொண்டு சேர்ப்பது, விழாக்களுக்குச் சரக்குகள் கொண்டு சேர்ப்பது, ஆலயத் திருப்பணிக்கான தளவாடங்களை ஏற்றிச்செல்வது என முழுக்க முழுக்க இறைப்பணிக்காகவே எங்கள் தியாகேசனும் (வண்டி) நாங்களும் பணியாற்றிவருகிறோம்.

இவற்றில் முக்கியமானது யாகத்துக்கான சமித்துகள் சேர்ப்பது. ஆன்மிகப் பெரியவர்கள் யாகத்துக்காகக் கேட்கும் குறிப்பிட்ட சமித்துகளை, மரங்கள் அடர்ந்த பகுதிகளில் தேடி சேமித்து வைத்துக்கொள்வோம். பெரியவர்கள் சொன்னபடியே அவற்றை சேகரிக்கவும் சேமிக்கவும் செய்கிறோம்'' என்கிறார்கள்.

அதேநேரம், இதுவரை ஒரு மரக்கிளையைக்கூடத் தேவையின்றி ஒடித்ததில்லையாம். தானே காய்ந்துவிழும் மரத்தின் குச்சிகளையே சமித்துகளுக்காகச் சேகரிக் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அறுகம்புல், தர்ப்பை, நாயுருவி போன்றவற்றை மட்டும் புதிதாகவே அறுப்பார்களாம். அதற்கும் பிராயச்சித்தமாக அவர்கள் வசிக்கும் ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சுற்றி, சுமார் ஆயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு வளர்த்திருக் கிறார்கள். மூவாயிரம் பனை விதைகளை விதைத்து, மரங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்!

புண்ணிய புருஷர்கள் - 8

``சேமித்த சமித்துகளைக் களையில்லாமல் சுத்தப்படுத்தி, கட்டுகள் கட்டி வைத்துக்கொள்வோம். யார் எப்போது கேட்டாலும் கொண்டுபோய்ச் சேர்ப்போம். ஆன்மிகப் பெரியவர்கள் பலரும் எவ்வளவோ நன்மைகள் செய்கிறார்கள். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்'' என்கிறார்கள் இருவரும்.

மனைவி மகளுடன் ஏகாம்பரநல்லூரில் வசித்துவரும் வெங்கடேசன், சைவ தீட்சை பெற்று சமயத் தொண்டாற்றி வருகிறார். அவரின் நண்பர் விஜய் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவ்வப்போது விடுப்பு எடுத்துக்கொண்டு சிவப்பணி செய்துவருகிறார். சிவ வாத்தியங்களுக்குத் தேவையான மாட்டுத் தோலை இவர் பதப்படுத்தி வழங்கி வருகிறார். மேலும், இறையடியார்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் இவர்கள் செய்துவருகிறார்கள். ஞானமலையில் நடந்த அந்த விழாவிலும் சமையல் வேலை, பூ தொடுக்கும் வேலை, பெருக்கிச் சுத்தப்படுத்துவது எனத் தொடர்ந்து பணியாற்றியபடியே இருந்தார்கள்.

இன்றையச் சூழலில் இளைஞர் களைக் கவர்ந்திழுக்கும் எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆனால் அவை எதிலும் சிக்கிக்கொள்ளாமல், சிக்கென ஈசனைப் பிடித்துக்கொண்ட மாயம் என்னவென்று கேட்டோம்.

“எல்லாம் குருவருள் ஐயா! ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை நாங்களும் மனம் போன போக்கில்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். இறையருளே குருவின் வடிவில் எங்களை வந்து வழிநடத்துகிறது. நாங்களும் ஈசனை நாடி வந்துவிட்டோம். இப்போது ஒவ்வொரு நாளும் ஈசனின் திருவருளால் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ்கிறோம் என்ற திருப்தி எங்களுக்கு.

புண்ணிய புருஷர்கள் - 8

சூரியனாக இருந்தாலும் அதைப் பார்க்கக் கண் வேண்டும் அல்லவா, எங்கள் குருவே எங்களுக்குக் கண்ணாக இருக்கிறார். அவர் வழியே ஆண்டவனை உணர்கிறோம். பிறந்ததிலிருந்தே மரணத்தை நோக்கித்தான் நகர்கிறோம். அதை இறையைத் தேடும் பாதைக்கு நகர்த்தினால் வாழ்க்கை சிறப்பாகும். வேதனைகள் குறைவாகும்” என்று தத்துவமாகப் பேசுகிறார்கள் இளைஞர்கள் இருவரும்.

சொல்லாலும் செயலாலும் வெகுவாகவே ஈர்க்கிறார்கள் இந்த இளைஞர்கள். இவர்களைப் போன்று இன்னும்பலர் வரவேண்டும் என்று ஞானமலை முருகனை மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டோம்.

`அர்ப்பணிப்பதுதான் வேள்வி' என்கின்றன ஆன்மிக நூல்கள். ஞான மலை உச்சியில் பல்வேறு ஆகுதிப் பொருள்களை அர்ப்பணித்து வேள்வி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மலையடிவாரத்தில் வெங்கடேஷ், விஜய் இருவரும் தங்கள் தியாகேசனைக் (வண்டியை) கழுவிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் வாழ்க்கையும் ஒரு வேள்விதான் என்று மனம் சொல்ல, அதை ஆமோதிப்பது போல் ஒலித்தது ஆலய மணி!

- அடியார்கள் வருவார்கள்...

காலத்தை வெல்லும் திருப்பணிகள்!

புண்ணிய புருஷர்கள் தொடரின் வழியே இறையடியார்களின் சிறப்பான பணிகளையும் எண்ணங்களையும் மெய்சிலிர்க்க வாசித்துவருகிறோம். நன்றி. வரலாற்றுக் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் எத்தனையோ அடியார்கள் விதவிதமாக திருத்தொண்டுகள் செய்துவருகிறார்கள் என்பதைப் படித்து அகமகிழ்ந்தோம். கண்கள் பனிக்க இந்தத் தொடரைப் படிக்கையில், ஒவ்வொரு முறையும் எங்கள் நெஞ்சம் உங்களுக்கு நன்றி நவில்கிறது.

புண்ணிய புருஷர்கள் - 8

காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

மேவினார்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்

நாவலர்க்கு வளம்பெறுக நல்கியும் நானிலத்துள்ளோர்

யாவருக்குந் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்

- என அப்பர் பெருமானைப் பெரியபுராணம் வணங்கி ஏத்துகிறது. இந்தத் தொடரில் வரும் புண்ணிய புருஷர்களும் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இறையனாருக்கும் அடியார்களுக்கும் செய்துவரும் சேவைகள் மகத்தானவை; காலம் தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடியவை. வாழ்க அவர்களின் மக்கள் சேவை.

- சி.ரகுநாத்

அருள்மிகு வீரசோழீஸ்வரர் ஆலயம்,

வீரசோழபுரம், விழுப்புரம்