மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள்! - 11

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

ஆரம்பத்தில் சிதம்பரம், காஞ்சிபுரம், திருவாரூர் என எங்கெங்கே திருப்பணிகள் நடந்தாலும் அங்கெல்லாம் சென்று பணியாற்றுவார் பூதம் ஐயா.

பூதம் ஐயா - இந்தப் பெயர் சிவனடியார்களின் மத்தியில் மிகப் பிரபலமானது. யாரும் செய்யத் தயங்கும் கடினமான வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு எளிதாகச் செய்துமுடித்து விடுவதால், இந்த அடியாருக்கு இப்படியொரு பெயர் உண்டானது.

பூதமய்யாவின் நிஜப் பெயர் மோகனசுந்தரம். இந்தப் பெயர் அவருக்கே மறந்துபோகும் நிலை என்கிறார் புன்னகையோடு. உழவாரத் திருப் பணிகளிலும் ஆலய விழாக்களிலும் இவருடைய பணிகள் அசாத்தியமானவை!

தஞ்சையைச் சொந்த ஊராகக்கொண்டு நிலபுலன்களோடு வாழ்ந்தவர். படித்தது எம்.ஏ, எம்.பில். தத்துவத் துறையிலும் பட்டம் பெற்றவர். தற்போது செய்யும் திருப்பணி, குடும்பத்தோடு திருப்பனந்தாள் தாடகையீச்சரம் ஆலயத்தில் குங்கிலியம் போடுவது. மடத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய வீட்டில் இவரின் மனைவி லட்சுமி, குழந்தைகள் பெரியநாயகி, தில்லைநாயகி ஆகியரோடு வசித்துவருகிறார். வெகுநாள் பிரயத்தனத்துக்குப் பிறகு இவரைச் சந்தித்தோம்.

புண்ணிய புருஷர்கள்! - 11

எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் பூதம் ஐயா சிறந்த பேச்சாளரும்கூட. நாயன்மார்களையும் சிவபெருமானையும் குறித்து இவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்! இவரின் மனைவி லட்சுமி சிவனுக்காகவே வாழ்பவர் எனலாம். உழவாரப் பணியே உயிர்மூச்சாகக் கொண்டிருக்கிறார். இவர்களின் திருமணம் நடந்தவிதமே ஆச்சர்யமானது. திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த இந்த அம்மையாரை வற்புறுத்தி, பூதம் ஐயாவுக்குத் திருமணம் செய்துவைத்ததே அடியார் கூட்டம்தான்.

“சிவபெருமானுக்குப் பணி செய்தவாறே முக்தியை அடையலாம் என்று வாழ்ந்தோம். எங்கள் இருவரையும் சிவன் அருளால் அடியார் கள் இணைத்துவைத்து விட்டார்கள் ஐயா” என்று சொல்லி நெகிழ்கிறார், பூதம் ஐயா.

அடியார் தம்பதி மட்டுமா, அவர்களின் குழந்தைகள் இருவரும் அற்புதமாகப் பதிகம் பாடுகிறார்கள். சிவபெருமான்மீது அத்தனை ஆழ்ந்த பக்தி; பசி உறக்கம்கூடக் கருதாமல் ஆலய தரிசனத்துக்கு வருவார்களாம் இந்தக் குழந்தைகள். குடும்பமே ஈசனின்மீது அவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டுள்ளது. காரணம் கேட்டால், ‘ஈசனும் எங்கள்மீது அன்போடு இருக்கிறார் ஐயா’ என்கிறார்கள்.

பின்னே... அன்பே வடிவானவர் அல்லவா நம் ஈசன். ‘இருளை உமிழுமா திருவிளக்கு!’

‘வசதியாக வாழவேண்டிய குடும்பம் ஏன் இப்படித் தங்களை வருத்திக்கொண்டு திருப்பணி செய்யவேண்டும்’ என்ற கேள்விக்கு உடனே பதில் வருகிறது.

“எது ஐயா வருத்தம்... ஈசனை மகிழ்விப்பதில் உள்ள ஆனந்தம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்குமா! எங்களுக்குச் சொத்து, சொந்தம் எதுவும் வேண்டாம். ஈசனும் ஈசனின் அடியார் களும் போதும். அவர்களைக்கொண்டே நாங்கள் கடைத்தேறிவிடுவோம். முக்தி ஒன்றே இலக்கு எனும்போது, வேறு போகங்கள் எதற்கு ஐயா. இந்தக் குழந்தைகளைக் கரையேற்றிவிட்டால் போதும். ஆலயங்கள் நோக்கி நடையைக் கட்டி விடுவோம்” என்கிறார் லட்சுமி அம்மையார்.

ஆரம்பத்தில் சிதம்பரம், காஞ்சிபுரம், திருவாரூர் என எங்கெங்கே திருப்பணிகள் நடந்தாலும் அங்கெல்லாம் சென்று பணியாற்றுவார் பூதம் ஐயா. அந்தத் தலங்களில் தங்கியிருக்கும்போது, அதிகாலை 4 மணிக்கு எழுந்து, ‘ஈசனை தரிசிக்க எழும்புங்கள்’ என்று வீதியெங்கும் சத்தமிட்டபடிச் செல்வாராம்.

இப்போது, திருப்பனந்தாள் தாடகையீச்சரம் ஆலயத்தில் தூபமிடும் திருப்பணியுடன், அவ்வூரில் தாம் கட்டியிருக்கும் நாயன்மார் ஆலயத்தையும் நிர்வகித்துவருகிறார். வீட்டில் டி.வி. இல்லை. பத்திரிகைகள் படிக்கமாட்டார். இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் எந்நேரமும் சிவப்பணி மட்டுமே. மடம் கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் வாழக்கையை நடத்துகிறார். பிள்ளைகளும் திருமடத்தின் பள்ளியிலேயே படிக்கிறார்கள். ‘வேறெந்தச் செலவும் இல்லை’ என்ற நிலையில் நிம்மதியாக வாழ்கிறார்கள். இன்றும் சுற்று வட்டாரத்தில் எங்கு எந்தச் சிவப்பணி நடந்தாலும் கோயில் பணிகளை முடித்துவிட்டு, குடும்பத்தோடு கிளம்பிவிடுகிறார்கள்!

புண்ணிய புருஷர்கள்! - 11

குங்கிலிய தூபப் பணியைப் பற்றிச் சொல்லத் தொடங்கியதும் சிலிர்த்துக்கொண்டார்.

“குங்கிலியத் திருப்பணியால் சிறப்புப் பெற்ற குங்கிலியக் கலய நாயனார் சிவலிங்கத்தை நேராக்கிய ஊரய்யா இந்தத் தாடகையீச்சரம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமிது. பனை மரம் தல விருட்சமானதால் திருப்பனந்தாள் என்று ஊர்ப் பெயரானது. தாடகை என்ற பெண் அடியார் பூஜித்த தலமிது. ஒரு நாள், தாடகை ஈசனுக்குப் பூமாலையைச் சூட்ட வரும்போது, அவரின் மேலாடை நழுவுகிறது. அவரின் மானத்தைக் காக்கவும் அவரின் வழிபாட்டை மெச்சவும் எண்ணிய ஈசன், தமக்கு அந்த அம்மையார் எளிதாக மாலை அணிவிக்கும் வகையில், தலை தாழ்த்திக் கொடுத்தாராம். இப்படி, தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் ஆலயமே தாடகையீச்சரம் என்றானது.

தாடகைக்காகச் சாய்ந்துபோன ஈசன் பிறகு நிமிரவே இல்லை. படைகளைக் கொண்டு முயன்றும் சிவலிங்கத்தை நிமிர்த்தமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பிறகு, திருக்கடவூர்ச் செல்வமான குங்கிலியக் கலயர் ஓடோடி வந்து, ஈசன் திருமேனிக்கும் தம் கழுத்துக் கும் கயிறுகட்டி இழுத்தார். அவரின் பக்திக்குக் கட்டுப்பட்டு தலையை நிமிர்த்தினார் ஈசன்.

இந்தத் திருப்பனந்தாளில்தான், இறந்துபோன தன் மகனின் உயிரை குங்கிலியர் மீட்டார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.

வறுமை நிலையிலும் குங்கிலிய தூபமிடும் பணியைத் தவறாமல் செய்தவர் இந்த நாயனார். உணவுக்கு நெல் வாங்கும்பொருட்டு மனைவியார் கழற்றிக்கொடுத்த தாலியை விற்றவர், அதைக் கொண்டும் குங்கிலியம் வாங்கி திருப்பணியைச் செய்தார். அவர் குடும்பமோ பசியில் மயங்கியது. ஈசன் பொறுப்பாரா... கலயனார் வீட்டில் நெற் குவியலையும், ஆடை ஆபரணங்களையும், பொன் மழையையும் உண்டாக்கி மகிழ்வித்தார்.

குங்கிலியக்கலயனாரின் சேவை தொடர்ந்தது. ஒருமுறை ஆளுடைய பிள்ளையாரும் (திருஞானச் சம்பந்தர்) ஆளுடைய அரசுகளும் திருக்கடவூருக்கு எழுந்தருளினார்கள். அதனால் மகிழ்ந்த கலயனார், அவர்களை எதிர்கொண்டு அழைத்து வந்து தமது மனையில் இன்னமுது அளித்து வழிபட்டார். இறுதியில் சிவபதமும் பெற்றார்.''

குங்கிலியக்கலய நாயனாரின் மகிமையைப் பகிர்ந்துகொண்ட பூதம் ஐயா, தூப திருப்பணியின் சிறப்பையும் விவரித்தார்.

``தூபம் குறித்து ஆகமங்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. `ஆறு செஞ்சடை மேல் வைத்த பூசை கான நாறு குங்கிலியம் ஈதேல் நான் இன்று பெற்றேன் நல்ல பேறு மற்றிதன் மேல் உண்டோ’ என்பது சேக்கிழார் சுவாமிகள் வாக்கு. சிவபூசைக் காலங்களில் தூபம் இல்லாமல் பூசை செய்வது அதமமாகும்.

‘தூபம் இல்லாமல் செய்யும் பூசை எனக்கு ப்ரீத்தியை கொடுக்காது’ என்பது இறைவனின் வாக்கு. காஞ்சிபுரத்தில் அம்பாள் இறைவனுக்குப் பூசை செய்யும்போது 108 விதமான தூப உபச்சாரங்கள் செய்ததாகத் தல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிந்தியாகமம், அசிந்திய விச்வ ஆகமம், நிகமஞான தேசிகர் சிவபுண்ய தெளிவு ஆகியவற்றிலும் தூபம் குறித்த விளக்கங்கள் உண்டு.

தேவதாருக் கட்டை, மேருக் கட்டை, வில்வக் கட்டை, வில்வப்பழம் ஆகியவற்றை நெய்யோடு கலந்து தூபமிட்டால், ‘சாரூப முக்தி’ கிடைக்கும். `கந்தம்' எனும் சந்தனாதி தூப விதியின்படி ‘விரவி குக்கல்’ என்ற பொருள் சேர்த்து தூபம் இட்டால் உன்னதமான சாத்விகக் குணத்தை அடைந்து உயிர்கள் முக்தி பெறும். சாதிக்காய், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், அன்னாசிப்பூ, இலவங்கம், செண்பகமொட்டு சேர்த்த ‘கந்ததூபம்’ பாவத்தைப் போக்கும். இதுபோல் பல தூபத்திரவியங்கள் உள்ளன.

இந்தத் தூபத் தொண்டு எல்லாவிதமான பாவங்களையும் போக்கி முடிவில் மோட் சத்தைக் கொடுக்கும். மேலும், இறைவனின் பாதங்களாகச் சொல்லப்படும் காமிகாமத்தில், இறைவனை எழுந்தருளச் செய்யும் போதும், ஒவ்வோர் அபிஷேகத்தின் முடிவிலும், அலங்காரம் ஆன பின்னும், நைவேத்திய காலத்திலும் தூபம் இட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்லொணாத பாக்கியங்களை அருளும் தூபச் சேவையை நியமப்படி செய்தல் வேண்டும். இந்த அடியேன் அந்தத் திருப்பணியை இயன்றவரை குறையில்லாமல் செய்துவருகிறேன். எல்லாம் ஈசன் அருள்'' என்றவர், மேலும் தொடர்ந்தார்.

``நாடெங்கும் சுற்றி சிவனை தரிசித்து வந்திருக் கிறேன். எங்குமே கிடைக்காத இன்பம் இந்தத் திருப்பனந்தாள் ஆலயத்தில் கிடைக்கிறது. என் ஈசனுக்குத் திருப்பணி செய்தவாறே நானும் என் குடும்பமும் வாழவேண்டும், அதுவே எங்கள் விருப்பம்” என்கிறார்.

ஈசனும் நந்தியம்பெருமானும் மகிழும்வண்ணம் மனமொன்றிப் பூசைகள் செய்திடவேண்டும் அதுவே முக்கியம். சிவனாருக்குச் செய்யக் கூடிய... பதிகம் பாடுதல், தூபமிடுதல், தீபமிடுதல் என எந்தத் தொண்டாக இருந்தாலும் ஒன்றிய மனதுடன் பஞ்சாட்சரம் ஜபித்துக்கொண்டே செய்யவேண்டும்.

குங்கிலியகலய நாயனாரின் திருப்பணி இப்படித்தான் இருந்தது என்கிறார், சேக்கிழார் சுவாமிகள். இவை யாவற்றையும் நெறிப்படி செய்துவருகிறார் பூதம் ஐயா.

“சேரமான் பெருமான் நாயனார் செய்யும் ஆத்மார்த்த பூசையின் நிறைவில் தினமும் நடராஜரின் சிலம்பொலி கேட்கும். ஒருநாள் சிலம்பொலி கேட்கவில்லை. அதனால் மனம் நொந்த சேரமான், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயன்றார். அக்கணமே சிலம்பொலி கேட்கும்படி அருள் செய்தார் சிவனார். நம் பூசையில் இப்படியிருக்கவேண்டும்.

சிவப்பூசையில் எதன்பொருட்டும் சலனப்படாமல் சிந்தையை சிவத்தில் நிறுத்தி சிவத் தியானமாகவே செயல்படவேண்டும். அப்படி வழிபடுவதுதான் அடியார்களின் அடை யாளம்” என்று நிறைவுசெய்கிறார் பூதம் ஐயா.

சிவனுக்குப் பிடித்த கணம் பூதகணம் என்பர். காரணம், ஈசன் ஏவிய பணிகளை உடனே செய்யும் என்பதால்தான். இந்தப் பூதம் ஐயாவும் அப்படித்தான். சிவபெருமானுக்கு மட்டுமல்ல, அவரின் அடியார்களுக்கும் விருப்பமானவர் இந்த பூதம் ஐயா.

அவரிடம் ஆசிவேண்டி வணங்கினோம். அவரோ கைகூப்பி வணங்கியபடி, ‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்று புன்னகையோடு ஈசனை வேண்டிக்கொண்டார்.

‘இவர் வேண்டியது எல்லாம் நடக்கும்; வேண்டுபவர் அப்படிப்பட்ட தூயவர்’ என்று மனம் சொல்ல அங்கிருந்து விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

பிள்ளையார் தரிசனம்!

விருத்தாசலம், அருள்மிகு பழமலைநாதர் கோயில் பிராகாரத்தில் 18 அடி ஆழத்தில் 'பாதாள விநாயகர் சந்நிதி' அமைந்திருக்கிறது. இவரை `ஆழத்துப் பிள்ளையார்' என்றும் அழைக்கிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இவருக்குச் சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால், சங்கடங்கள் அனைத்தும் நீங்கும், திருமணத்தடை விலகும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.

புண்ணிய புருஷர்கள்! - 11

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆடுதுறைக்குத் தெற்கே 2 கி.மீ தொலை வில் அமைந்திருக்கிறது மருத்துவக்குடி, ஐராவதீஸ்வரர் கோயில். இந்தத் தலத்தில் அருள்புரியும் விநாயகருக்கு `விருச்சிக விநாயகர்' என்று பெயர்.

இங்கு, விநாயகப் பெருமான் திருமேனியில், தேளுக்கு இருப்பதுப் போன்றே வரிவரியாகச் செதில்கள் காணப்படும். விருச்சிகம் போன்ற திருமேனியைக் கொண்டிருப்பதால் இந்த விநாயகருக்கு இந்தப்பெயர் ஏற்பட்டது.

- வெற்றிவேல்