மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 18

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

`பசுக்களின் தலைவன் என் ஈசன் அல்லவா?'

லகிலேயே பொறுமையான பணியென்றால் அது ஆநிரைகளை மேய்ப்பதுதான். அடங்கியவற்றைப் பாதுகாப்பதும் அடங்காதவற்றை அடக்கி நெறிப்படுத்துவதும் என இது ஓர் யோக முறையென்றே கூறலாம். அதனால்தான், கடவுளர்களும் சித்தர்களும் ஆடு மாடுகளை மேய்த்து புலனடக்கத்தை வலியுறுத்தும் ஒரு தத்துவ ஞானத்தை உலகத்துக்கு அளித்திருக்கிறார்கள். சகல தெய்வங்களும் உறையும் - நடமாடும் திருக்கோயிலாகவே ஒரு பசு வணங்கப்படுகிறது. தனது கன்றுக்கும் மனிதர்களுக்கும் பால் எனும் அமுது கொடுக்கும் பசுக்களை இம்சிப்பது மகா பாவ காரியம் என்கிறது ஆன்மிகம்.

பசுவின் பால் மனிதர்களின் மூளைத் திசுக்களைச் சிறப்பாக இயக்குகின்றன என்கிறது மருத்துவம். காமம், குரோதம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தை நோக்கி அழைத்துச்செல்லும் கதவுகள் என கீதை சொல்கிறது. அந்தப் பாவங்களைப் போக்கும் வழி, ஆவினங்களைப் பராமரிப் பதே என்றும் சொல்கிறது (பகவத் கீதை 16.21). நவீன நாகரிகத்தின் பெரும்பாலான தொழில்கள், பாவத்தை நோக்கியே மக்களை அழைத்துச் செல்கின்றன. ஆனால், பசு பராமரிப்போ பாவங்களைக் குறைத்து மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்கிறது. பசுக்களை அன்புடன் வளர்ப்பது மிகச்சிறந்த புண்ணி யம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பசு பராமரிப்புக்கு இணையான இன்பத்தை வேறு எந்த தொழிலும் வழங்க இயலாது என்பதை நம் புராணங்களும் வரலாறும் கூறுகின்றன. வைகுந்தத்தை ஆளும் பரந்தாமன் பசுவினங்களைக் காக்கும் ‘கோவிந்தனாகவே’ இருக்க ஆசைப்படுவான் என்று பெரியாழ்வார் பல பாசுரங்களில் பாடியிருப்பதை அறியலாம். இப்படி ஆவினங்களைப் பாதுகாக்கும் புண்ணியத் தொழிலை மேற்கொண்டு சிவ கைங்கர்யம் செய்துவரும் ஓர் அடியாரைப் பற்றிக் கேள்விப்பட்டு ராணிப்பேட்டை ஏகாம்பரநல்லூருக்குச் சென்றோம்.அவர் பெயர் பாலாஜி. சொந்த ஊர் பொதட்டூர்பேட்டை. தாய், தந்தை, சகோதரிகள் என உறவுகள் நூறு இருந்தாலும் `ஈசனே கதி' என்று ஏகாம்பர நல்லூருக்கு வந்து பத்து ஆண்டுகளாக மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். உங்களைப் பற்றி சொல்லுங்களேன் என்றதும்... `நாயேனைப் பற்றிச்சொல்ல ஒன்றுமில்லை ஐயா. எல்லாம் சிவனருள்' என்கிறார். இவர் நிறைகுடமல்ல... நீலப்பெருங்கடல்..!

புண்ணிய புருஷர்கள் - 18

எளிமையான தோற்றம், எளிதில் விளங்காத தத்துவ உரையாடல் என பாலாஜி ஐயா நம்மை வியக்கவைத்தார். “ஈசனே பசுக்களைப் பாதுகாக்கும் பதியானவர்தானே . மாலுக்கும் அயனுக்கும் இடையானவர். சகல குணங்களுக்கும் இடையில் இருப்பவர். அதனால் ஈசன் இடையர் என்றும் போற்றப்படுகிறார். அதனால்தானே மாணிக்கவாசகர் ‘பாதியுமாய் முற்றும் ஆயினார்க்கு; பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு; ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு' என்று கொண்டாடினார். ஆட்டுக்கோன் அரசனான எங்கள் அரனாரின் திருப்பணிக்காகவே மாடு மேய்க்கிறேன். ஆம்,

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கலம் நமசிவாயவே - என்று அப்பர் சொல்லியவாறு பசுக்களுக்குப் பெருமை சிவ வழிபாட்டுக்கான பஞ்சகவ்வியத்தைக் கொடுப்பதுதான். நான் மேய்க்கும் நாட்டு மாடுகளிலிருந்து அபிஷேகத்துக்காகப் பாலும் தயிரும் எடுக்கிறேன். தீபமேற்ற நெய்யும், ஆலயத்தைத் தூய்மைப்படுத்த கோமயமும் சாணமும் எடுக்கிறேன். நாவினுக் கருங்கலம் நமசிவாயவே என்பதற்கேற்ப பஞ்சாட்சரம் சொல்லியவாறே செய்யப்படும் இந்தப் புண்ணியப் பொருள்களை ஆலயங்களுக்காக இலவசமாகக் கொடுத்துவிடுகிறேன். மாடுகளுக்கு உணவாக அடியார்களால் இங்கேயே இயற்கைத் தீவனங்கள் வளர்க்கப்படுகின்றன. அடியேன் வயிற்றுக்கு அடியார்களாலேயே உணவும் வழங்கப்படுகிறது. பிறகு ஏன் இதை வணிகமாக்கவேண்டும்.

ஈசனால் மலர்மகுடம் சூட்டப்பட்ட சண்டேஸ்வரரும் மாடு மேய்த்தவரே. நந்தியெம்பெருமான் காளையின் வடிவாகவே இருந்து ஈசனைச் சுமக்கும் பாக்கியம் பெற்றவர். பசுக்களின் வழிபாடே சிவ வழிபாடு. சிவச் சின்னமான திருநீற்றை அளிப்பது பசுக்கள். அளவிலா செல்வத்துக்கு அதிபதியான நந்தகோபரின் அருந்தவப் புதல்வன் ஆதி கேசவன் மாடு மேய்த்தது எதற்காக, வயிறு வளர்க்கவா... நம்மை வழிநடத்த வந்தவன் என்பதை உணர்த்தவல்லவா! தமிழ் முழுதும் கற்றுணர்ந்தேன் எனச் சற்றே இறுமாந்த ஒளவையின் செருக்கை நறுக்கவந்த சிங்காரவேலன் தோன்றியதும் தண்டமேந்திய மேய்ப்பனாகத்தானே. எல்லா கடவுளரும் மாடு மேய்க்க, அடியேனும் அதைச் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

புண்ணிய புருஷர்கள் - 18

திருவாசகம், தேவாரம் ஓதியபடி மாடு மேய்ப்பதும், பால் கறப்பதும், சாணம் எடுப்பதும், மாடுகளைச் சுத்தம் செய்வதும் சுகமான காரியம். துள்ளித்திரியும் கன்றுகளின் சேட்டைகளை ரசிப்பது, அனுபவித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆனந்தம். ஆதரவற்ற பசுக்களைக் காக்கும் காரியம் கோடி கோடி யாகங்களைச் செய்த புண்ணிய பலனைத் தருமாம்.

ஈசனருகே அமர்ந்து பாடம் கேட்கும் பெருமை படைத்தவர் சுந்தரநாதர். நந்திதேவரின் சீடரான இவர், புகழ்பெற்ற தலங்களை தரிசித்து வரும்போது சாத்தனூரை வந்தடைந்தார். அப்போது மூலன் என்ற மேய்ப்பன் மரணமடைந்திருக்க, அவனிடம் மிகுந்த பாசம்கொண்ட மாடுகள் அவன் உடலைச் சுற்றி நின்றவாறு கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தன. அவற்றின்மீது கருணை கொண்ட அந்த யோகி, தனது தவத்தால் தம்முயிரை இறந்துகிடந்த மூலனின் உடலில் செலுத்தி மூலனாய் எழுந்தார். பசுக்கள் மகிழ்ச் சியுடன் அவரைச் சுற்றி வந்து துள்ளி விளையாடின.

பசுக்களை அதனதன் சொந்த இடங்களில் சேர்ப்பித்துவிட்டு தமது சொந்த உடலைத்தேடி சென்றார். இறையின் திருவிளையாட்டால் அவ்வுடல் அந்த இடத்தில் காணப்படவில்லை. `எல்லாம் இறைவன் செயலே' என்று உணர்ந்த மூலன் எனும் யோகி திருவாவடுதுறை திருக் கோயிலின் மேற்றிசையில் இருந்த ஓர் அரச மரத்தின் கீழ் பல ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்தார். ஈசன் திருவருளால், திருமந்திரம் என்கின்ற ஒப்பற்ற தமிழ் வேதத்தை மூவாயிரம் பாடல்களில் பாடினார். இப்படி ஈசனோடு இருந்தபோதுகூட வராத சைவ தத்துவ போதனைகள் மூலனாருக்கு மாடுகள் மேய்த்தபோதுதான் வந்தது என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அத்தனை ஆழ்ந்த கைங்கர்யம் இது'' என்கிறார் பாலாஜி ஐயா.

``காலையில் எழுந்து உடலையும் மனதையும் தூய்மையாக்கிக் கொண்டு இந்தக் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வேன். அவற்றுக்கு நடுவே அமர்ந்துகொண்டு தேவார, திருவாசக பாடல் களைப் பாடி வகுப்பெடுப்பேன். அவற்றுக்கும் நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் வெகுசாந்தமாகிவிட்டன என்பதே அதற்குச் சாட்சி '' என்று புன்னகைக்கும் பாலாஜி ஐயா, பால், தயிர், நெய் எடுப்பது, சாணத்தை எரித்து விபூதி தயாரிப்பது, வெண்ணெய் எடுத்து மிஞ்சும் மோரை தீவனங்கள் விளையும் நிலத்தில் உரமாக ஊற்றுவது என எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்.

புண்ணிய புருஷர்கள் - 18

``பாசமான இந்த ஜீவன்கள் உண்மையிலேயே நம் செல்வங்கள்தாம். இவற்றையும் சிலர் அடிமாடாக விற்கிறார்களே... அதை நினைக்கும்போதுதான் கவலை சூழ்கிறது. பால் வற்றிப்போனால் தாயை விற்றுவிடலாமா ஐயா! அது தப்புதானே'' என்கிறார் ஆதங்கத்தோடு.

பதில்சொல்ல இயலவில்லை நம்மால். எனினும், பசுக்களின் மேன்மையை நன்கு உணர்ந்தோம்.வேர்கள் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், கனியும் மலர்களுமாய்த் திகழும் விருட்சங்களைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பவை வேர்களே. நமது தர்மத்தின் வேர்கள் இவரைப் போன்ற அடியார்கள். அவர்கள் நலமோடும் வளமோடும் வாழட்டும் என்று பிரார்த்தனை செய்தவாறே விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்