மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 9

சந்திரமௌலீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரமௌலீஸ்வரர்

ஆவலைத் தூண்டும் ஆன்மிகத் தொடர்

`ஆலயம் தேடுவோம்' தொடருக்காக சென்ற ஆண்டு (2.1.18) திண்டிவனம் கீழ்ப்பசார் கிராமம் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். அப்போதுதான் சுகுணாராணி அம்மையாரைச் சந்தித்தோம்.

‘வாழும் திலகவதி அம்மையார்’ என்று அவரை அறிமுகப்படுத் தினார்கள் அந்தப் பகுதி மக்கள். யாருடனும் பேசுவதில்லை; சதா சிவத்தொண்டிலேயே நாட்டம்; மனமும் உதடும் ஒவ்வொரு நொடியும் ஸ்மரணை செய்யும் மந்திரம்... `ஓம் நமசிவாய'. அவருடைய திருத்தொண்டு நம்மை நெகிழவைத்தது.

இம்முறை சந்தித்தபோதும், அவரைப் பற்றி எழுதவும் புகைப்படம் எடுக்கவும் அனுமதி மறுத்தார். அடியார்களின் இலக்கணப்படி ‘இந்த எளியவளைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது. எனக்கும், உங்களுக்கும், எல்லோருக்கும் நற்கதியை அளிக்கும் நம் தகப்பனைக் (சிவபெருமானை) குறித்து எழுதுங்கள்’ என்றார். எங்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஒருவழியாக எழுத அனுமதி கொடுத்தார்.

“ஒளியைத் தவிர வேறெதுவும் இருட்டை விரட்ட முடியாது. அதனால்தான் அதை இறைவனாக வணங்குகிறோம். ஒளியை ஆதாரமாகக் கொண்டதே உயிர். அதனால் ஒளியே சிவமாகிறது; சக்தியைப் பிறப்பிக்கிறது. அது, வெறும் காட்சியல்ல. எல்லா காட்சிகளையும் காணவைப்பது. அதுதான் சிவம். சிவம்தான் சகலமும்!” என்று தொடங்கினார் அந்த அம்மையார். ``உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...'' என்றதும் பேச்சை நிறுத்திவிட்டார். அந்த ஊர் இளைஞர்கள் எங்களிடம், அந்த அம்மையார் குறித்துத் தனியாகச் சந்தித்து, அவர் குறித்த விவரங்களைச் சொன்னார்கள். அந்த அம்மையார், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் (சீனியர் அசிஸ்டன்ட் சர்ஜன்) பணியாற்றுகிறார். ஈசனின் மீதுகொண்ட அளவற்ற பக்தியால் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. உறவென்று சொல்ல யாருமில்லை. தனித்து வாழ்ந்து வருகிறார். `சிவன் இவருக்குக் கடவுளல்ல; தகப்பன்!' அப்படியோர் அன்போடு ஈசனைக் கொண்டாடுகிறார்.

புண்ணிய புருஷர்கள் - 9

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு யாரோ ஓர் அன்பர் கொடுத்த சிவபெருமானின் திருவுருவப்படம் ஒன்றுதான் இவரை அடியாராக மாற்றியதாம். எந்த அடிப்படை வசதியுமில்லாத கிராமத்திலிருந்து படித்து முன்னேறி, மருத்துவரானவர்.

ஆரம்பத்தில் இவர் தன் ஊரிலிருந்த சிவாலயத் திலேயே திருத்தொண்டையும் அபிஷேக கைங்கர்யத்தையும் செய்துவந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தக் கைங்கர்யத்தில் சிக்கல் எழ, அருகேயிருக்கும் ஊர்களில் ஏதாவது சிவாலயம் இருக்கிறதா என்று தேடியிருக்கிறார். அன்பர் ஒருவர் சொன்னதன்பேரில் கீழ்ப்பசாருக்கு வந்திருக்கிறார். சவுக்கு மரங்கள் சூழ்ந்த வனம்; அங்கே ஒரு பெரிய அரச மரம்; அதைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடந்ததாம். புதரின் மறைவில் சிதைந்துபோன சிவாலயம். கையோடு அபிஷேகப் பொருள்களையும் நைவேத்தியங்களையும் கொண்டுவந்திருந்த அம்மையார், புதருக்குள் குதித்து, சிவலிங்கத் திருமேனியைக் கண்டிருக் கிறார். பல ஆண்டுகளைக் கடந்தும் பளபளப்பு குறையாமல் காட்சியளித்த ஈசனைக் கண்டதும், மனம் கசிந்து கதறியிருக்கிறார். உடனே அந்த இடத்தைத் தன்னால் முடிந்த அளவுக்குச் சுத்தம் செய்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட்டிருக்கிறார். கருநாகங்கள் அதிகம் உலவும் அந்த இடத்தில் பயமின்றி இந்த அம்மையார் வழிபாடு செய்தது குறித்து இன்றும் அந்த ஊரார் வியக்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 9

பிறகு, அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரைக் கூட்டி வந்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்து சிவலிங்கத் திருமேனியை வெளியே எடுத்து, தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்திருக்கிறார்.

தற்போதும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விடுகிறார். 5 லிட்டர் பால், 5 லிட்டர் தயிர், தேன், இளநீர் என அபிஷேகப் பொருள்களை, பேருந்து வசதியில்லாத அவர் ஊரிலிருந்து கீழ்ப்பசாருக்குத் தலைச்சுமையாகச் சுமந்துவருகிறார். 4 கி.மீ தூரம் நடந்தே வருகிறார். கைங்கர்யத்தை முடித்ததும் பணிக்காக திண்டிவனம் சென்று வருகிறார். ஆரம்பத்தில், கீழ்ப்பசார் மக்கள் இவர் தொண்டைப் பாராட்டினாலும் `உச்சிவேளையில் அங்கு சென்றால், தீய சம்பவம் எதுவும் நடந்து விடும்' என்று பயமுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 9

ஆனால், `பிற்காலச் சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய அந்த ஊரின் சிவபெருமான் ஆலயத்தை மீண்டும் கட்டியே தீருவேன்' என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டார் அம்மையார். ஊர் மக்கள் இவருக்கு ஒத்துழைப்பு தந்ததோடு, சிவாலயப் பணிக்கு அரச மரத்தையும், சுற்றி இருந்த நிலத்தையும் அளித்திருக்கிறார்கள். அம்மையாரின் அயராத பக்தியைக் கண்டு வியந்த ஊர் இளைஞர்கள், இவரோடு இணைந்து திருத்தொண்டு செய்யத் தொடங்கினார்கள். இந்தக் கோயில் திருப்பணிக்கென ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்க, அந்த வங்கிக் கணக்கில் முதல் வரவாக, இந்த அம்மையார் பெரும் தொகையைச் செலுத்தியிருக்கிறார். தனது சேமிப்பு மற்றும் பூர்விகச் சொத்துகளை விற்று, இந்தப் பணத்தை அளித்திருக்கிறார்.

இன்றும் தினமும் சுமார் 1,500 ரூபாய் மதிப்பிலான அபிஷேக, அலங்காரப் பொருள்களை வாங்கி வந்து ஐயனுக்கு அபிஷேகம் செய்கிறார். ஒரு பெரியவரை அபிஷேகம் செய்வதற்காக நியமித் திருக்கிறார். ‘ஐந்து லிட்டர் பால், தயிர் எதற்கு... குறைத்துக் கொள்ளலாமே' என்று ஊர் இளைஞர் ஒருவர் கேட்க, `என் தகப்பன் குளிரக் குளிர வாழ வேண்டும். எதையும் குறைத் துக்கொள்ள மாட்டேன்' என்றிருக்கிறார். ஒருநாள் விடாமல் நான்கு ஆண்டுகளாக இந்தக் கைங்கர்யம் தொடர்கிறது. அப்பனுக்குச் சமர்ப்பிப்பது அனைத்தும் உயர்வானதாக இருக்க வேண்டும் என்று பட்டாடையால் ஈசனை அலங்கரித்துவருகிறார் இந்த அம்மையார். அபிஷேகத்தின்போது நீரை வேகமாக லிங்கத் திருமேனி மீது ஊற்றினால்கூட தவித்துப்போவாராம்!

இவரது ஊதியப் பணம், சேமிப்பு, சொத்துகள் எல்லாவற்றையுமே அளித்து இன்று பிரமாண்ட ஆலயத்தை உருவாக்கியிருக்கிறார். ஆலயப்பணியை மேற்கொண்டுவரும் ஊர் இளைஞர்களிடம் இன்றுவரை தான் கொடுத்த பணம் குறித்து எந்தக் கணக்கு வழக்கும் கேட்டதில்லையாம் இவர். ஆலயம் ஓரளவு எழும்பிவிட்டாலும், `ராஜகோபுரம் கட்டிய பிறகே குடமுழுக்கு செய்யவேண்டும்' என்று ஆசைப்படுகிறார்.

`அதற்கு அதிகம் பணம் தேவைப்படும்... வேண்டாமே' என்று ஊர் மக்கள் சொன்னால், `என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொடுக்கிறேன்... போதுமா?' என்கிறார் இந்த அம்மையார்.

புண்ணிய புருஷர்கள் - 9

முதுமைக் காலத்தில் 'உங்களுக்கென பணம் வேண்டாமா' என்று கேட்டால், ‘சிவபெருமானே நிதிதான். அவரைவிட பெரிய செல்வம் எது... சொல்லுங்கள். எனக்கென எதுவும் வேண்டாம். இந்த ஆலயத்திலேயே ஒண்டிக்கொண்டு என் வாழ்நாளைக் கழித்துவிடுவேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று தீர்க்கமாகச் சொல்கிறார்.

சுகுணாராணி அம்மையாரின் சிந்தனை, சொல், செயல் அத்தனையும் சிவத்தின் மீதுதான். சிவத்தை நோக்கிச் சிந்தையைச் செலுத்திவிட்டார். கர்மங்களைவிட்டு விடுதலையாகி விட்டார் என்றே சொல்லலாம். புண்ணிய புருஷர்களில் இவர் ஒரு ஜீவன் முக்தர். உள்ளொளியை உணர்ந்துவிட்ட அந்த அம்மையாரை வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

`ஆவலைத் தூண்டும் ஆன்மிகத் தொடர்'

சைவ அடியார்களின் வாழ்வு, திருத்தொண்டு, முக்திபெற்ற நிலை ஆகியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் கூறுவதே பெரிய புராணத்தின் நோக்கம். அதேவழியில் `புண்ணிய புருஷர்கள்' தொடர், சிவனடியார்களின் பெருமையைச் சொல்லும் புண்ணிய கைங்கர்யத்தைச் செய்துவருகிறது.

புண்ணிய புருஷர்கள் - 9

ஒவ்வோர் அத்தியாயத்திலும் வெவ்வேறு அடியார்களின் தியாக வாழ்வு பற்றிய செய்திகள் எங்களை ஆச்சர்யப்படவைக்கின்றன.

அடியார்களின் எளிய வாழ்வு, திருத் தொண்டு, அவர்கள் கடைப்பிடிக்கும் சைவ நெறி, ஈசன் அவர்களை ஆட்கொண்டவிதம்... என ஒவ்வோர் இதழிலும் வெளியாகும் தகவல்கள் எங்களைக் கசிந்துருகவைக்கின்றன.அன்பே சிவமென்று வாழும் அந்த அடியார்களை எண்ணி எண்ணித் துதிக்கிறோம் நாளும்.

தெய்வத் திருவருள்கொண்ட சேக்கிழார் பெருமானே, `தொண்டர் பெருமையைச் சொல்ல முடிவதில்லை' என்று வியக்கிறார்; நாங்கள் எம்மாத்திரம்!

ஆரம் கண்டிகை

ஆடையும் கந்தையே

பாரம் ஈசன்பணி

அலதுஒன்று இலார்

ஈர அன்பினர் யாதுங்குறைவு இலார்

வீரம் என்னால் விளம்பும் தகையதோ”

- கி. வெங்கடேஷ் பாபு

சீனியர் தயாரிப்பு நிர்வாகி

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி,

சென்னை - 32