Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 20

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

தொழுவதும் உழுவதும் அடியார்களுக்காக!

புண்ணிய புருஷர்கள் - 20

தொழுவதும் உழுவதும் அடியார்களுக்காக!

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

ந்த வருடம் திருவாரூர் ஆழித்தேர் வைபவத்தின் போதுதான் தணிகைவேல் என்ற சிவனடியாரைச் சந்தித்தோம். பக்தர்களுக்குத் திருவமுது படைக்கும் கைங்கர்யத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.

மாகேஸ்வர பூஜைக்கு முக்கனிகள் தேவை என்ற நிலையில் 50 பலா பழங்கள் தேவைப்பட்டன. அப்போது சீசன் இல்லை என்றபோதிலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து பழங்களை வாங்கி வந்துவிட்டார். அப்போதுதான் அடியார்கள் இவரை `கர்ம வீரர்' என்று பாராட்டுவது ஏன் என்பது புரிந்தது. எல்லா உழவாரப் பணியிலும் கலந்து கொள்வார். அடியார்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் ஓட்டுவது, மரம் நடுவது, திருக்குளங்களில் தூர் வாருவது, கல் சுமப்பது, கட்டட வேலை... என இவர் பார்க்காத வேலைகளே இல்லை எனலாம். எல்லாம் சிவனுக்காகவே, அவரின் அருளுக்காகவே என்று எண்ணி செய்பவர் இவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சிபுரம் பெரும்புலியூர் கிராமத்துக்கு அருகே அடியார்கள் இணைந்து இயற்கை விவசாயம் செய்ய ஒரு நிலத்தை வாங்கி யுள்ளார்கள் என்றும் அந்த நிலத்தில் தணிகைவேலும் அவர் நண்பர் அருள் என்ற அடியாரும் இணைந்து விவசாயப் பணிகளைச் செய்துவருகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு அங்கு சென்று சந்தித்தோம்.

புண்ணிய புருஷர்கள் - 20

தணிகைவேல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால், இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் துடிப்பான இளைஞர். இவர் தாய், தந்தை, தம்பி, தமக்கை என்று அனைவரும் சிவனடியார்களாக மாறிவிட ஐவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக சிவத் தொண்டு செய்துவருகிறார்கள். இவர் வீட்டில் டி.வி. முதலான எந்தவித பொழுதுபோக்கு விஷயங்களையும் பார்க்க முடியாது. எப்போதும் சிவ சிந்தனையாக வாழும் குடும்பம் இவருடையது.

``இதற்கெல்லாம் காரணம், நல்ல குருவை நாங்கள் அடைந்ததுதான். குருவைப் பிடித்துக் கொண்டவன் இறைவனை எளிதாக அடைய முடியும். அப்படி ஒரு குரு வழி காட்டுகிறார். எளியோர்களான நாங்கள் அர்த்தமோடு எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம்'' என்கிறார் தணிகை ஐயா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரோடு இணைந்து பணியாற்றும் அருளும் சிவனையே சித்தத்தில்கொண்டு வாழும் அடியார்.

“ஐயா இது என்ன புதிதாக விவசாயி கோலம்” என்றதும் சிரித்தார். தொடர்ந்து, “அடியார்களின் கூலி ஆள்கள் ஐயா நாங்கள். எந்த வேலை செய்தால் என்ன... சிவப்பணியாக இருந்தால் மட்டும் போதும்” என்கிறார் புன்னகை மாறாமல்.

புண்ணிய புருஷர்கள் - 20

“சிவனாரே பிட்டுக்கு மண் சுமந்த கூலியாள் தானே ஐயா” என்று நாம் கூற, பதைபதைத்துப் போனார்.

“சிவ சிவா.. பெருமானே... ஈசன் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் வாழ்ந்துகாட்டிய அருள் விளையாட்டு அது. ஈசனே சகலமுமானவர்; அவருக்கே தொண்டு செய்து வாழும் எளியோர்கள் நாங்கள்” என்றார்.

மேலும், ``அடியார்களுக்கு அமுது செய்விப்பதே மிகப்பெரிய தொண்டு என திருமுறைகள் கூறுகின்றன. `மண்ணினில் பிறந்தார் பெறும்பயன் மதி சூடும் அண்ணலாரடியார் தமை யமுது செய்வித்தல்' என்கிறது தேவாரம். ஆனால் அடியார்களுக்கு நாம் அளிக்கும் அமுது தீங்கில்லாததா என்று கேள்வி எழுப்பினால்... உறுதியான பதில் கிடைக்காது. செயற்கை உரங்களும் மருந்துகளும் போட்டு வளர்க்கப்படும் தானியங்களும் காய்கறிகளும்கொண்ட உணவு எப்படி அடியார்களுக்கு அமுதாகும்!

`குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே!' என்று திருவாசகம் ஈசனைக் குறைவிலா உணவா கவே கொண்டாடியுள்ளது. விடமுண்ட கண்டன்; வேத முதல்வனுக்கு விஷம் ஒரு பொருட்டில்லை. ஆனால், அவன் அடியார்களுக்கு நல்லதையே கொடுக்கவேண்டும் அல்லவா! அதனால்தான் அடியார்களே இணைந்து இங்கு இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் வேளாண் உற்பத்தி செய்வதால், தரமான உணவுப் பொருள்களைப் பெறுகிறோம்.

மண்புழு உரம், சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் மட்கிய தாவர உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மண்ணையும் வளமாக்கி மகசூலையும் பெருக்கி நெல்லையும் காய்கறிகளையும் விளைவிக்கிறோம். குணப் பசலம், தேங்காய்ப்பால் மோர், அமிர்தக் கரைசல், பஞ்சகவ்யம் போன்றவை மட்டுமே உபயோகித்து, பூச்சிகளை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறோம்... ‘கொல்கிறோம்’ இல்லை ஐயா'' என்று சொல்லி சிரித்தவர் தொடர்ந்து பேசினார்.

நீண்ட விளக்கமாக... இல்லையில்லை தேவை யான பாடமாக அமைந்தது அவரது பேச்சு.

``இங்கு விளையும் நெல், கீரைகள், காய்கறிகள் யாவுமே அடியார்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அடியார்களுக்கு என்றில்லை எல்லோருமே விஷமற்ற உணவை எடுத்துக்கொள்ள வேண்டிய தருணத்துக்கு வந்துவிட்டோம். எத்தனை எத்தனை வியாதிகள் பெருகிவிட்டன. எல்லாவற்றுக்கும் நல்ல மருந்து தரமான உணவுதான். உணவே மருந்து என்பதை நமது ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. உணவுதான் உங்கள் குணங்களைக்கூட தீர்மானிக்கிறது என்கிறது ஆன்மிகம்.

அன்பில்லாமல் பரிமாறப்படும் உணவுகூட உங்கள் உடல்நலனை பாதிக்கும். அதனாலேயே முன்பு பெரியவர்கள் வெளியிடங்களில் சாப்பிடாமல் இருந்தார்கள். அது வெறும் ஆசாரம் மட்டுமல்ல; உணவுக் கட்டுப்பாடு என்று புரிந்துகொள்ளுங்கள். கொடிதினும் கொடிது என ஒளவை கூறுவது ‘அன்பில்லா பெண்டிர் கையில் உண்பது’ என்று கூறவில்லையா! சிவநாம பாராயணத்தோடு தயாரிக்கப்படும் உணவு உங்களைச் சாத்விகப்படுத்தும் என ஆகமங்கள் கூறுகின்றன. அப்படியான வகையில் அடியார்களுக்கு அமுது படைக்கவே இந்தப் புண்ணிய கைங்கர்யத்தை செய்துவருகிறோம்.

63 நாயன்மார்களில் 13 பேர் விவசாயப் பெரு மக்களாக இருந்தது கவனிக்கவேண்டிய அம்சம். அரிவாட்டாயர், இளையான்குடி மாறனார், கோட்புலியார், கலிக்காமர், முனையடுவார் ஆகியோர் தாமே விளைவித்து திருவமுது செய்த பெருமக்கள்! அவர்கள் வழியில் அடியார்களுக்கு நல்லமுது படைப்பதே நம் நோக்கமாகவேண்டும்.

பஞ்ச பூதங்களின் தலைவன் ஈசன். ஆலயங்களில் ஈசனை வணங்குவது மட்டுமே பக்தியில்லை. அவர் உறைந்திருக்கும் ஒவ்வோர் அம்சத்தையும் பாதுகாக்கவேண்டும். அதுவே பக்தி; அதுவே அவனுக்கான திருத்தொண்டு. பஞ்ச பூதங்களையும் மகிழச்செய்யும் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும்போது, அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண்முறையைச் சொல்லித்தருவதுடன் ஆரோக்கியமான உணவுக் கும் வழிவகை செய்து வலிமையான பிள்ளைகளை உருவாக்குகிறோம் என்று உணரவேண்டும்.

உலகுக்கே இயற்கையை வணங்க சொல்லித்தந்த கூட்டம் நம் கூட்டம். இயற்கையோடு இணைந்த அந்த வாழ்வு மீட்டெடுக்கப்பட வேண்டும். விதைப்பதைக்கூட விவரத்தோடு செய்தவர்கள் நாம். ‘நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட’ என்று இடைவெளி விட்டு வளர்த்தவர்கள்.

பசி வந்தால் கோபம் வரும். கோபம் வராமலிருக்கவே விரதங்கள். அளவுக்கதிகமான உணவு உண்டால் குரோதம் வளரும். வாழ்க்கை முறைக்கு ஏற்காத உணவு உடலை நாசம் செய்யும். கிளர்ச்சியூட்டும் சுவை உணவு காமத்தை வளர்க்கும். எனவே, உணவில் கவனம் செலுத்தினால் மட்டுமே வாழ்க்கை சீராகும்.

எப்போதும் விரதமிருப்பதே அடியார்க்கழகு; விரதம் என்றால் உணவை வெறுப்பதல்ல; பசியோடும் பசித்த பின்னர் உடலுக்கானத் தேவையாக மட்டுமே புசிப்பதும் அடியார்கள் வழக்கம். உடல் உணவை எடுத்துக்கொள்ளும் போது உணர்வுகள் சாட்சியாக இருக்கலாமே தவிர, ருசிக்கு நம்மை அடிமையாக்கத் தூண்டக் கூடாது. அதற்கு சைவ ஆகமங்கள் வழி காட்டுகின்றன. கோதிலா அமுது அடியார்களின் அடையாளம். உடலை வளர்க்கவே உணவு; உணர்ச்சிகளைத் தூண்ட அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உணர்ந்து பிறருக்குக் கற்றும் கொடுங்கள்.

நம்முடைய தர்மங்கள் வளர்ச்சி பெற்றுவரும் காலமிது. கூட்டம் கூட்டமாக இளைஞர்களும் குழந்தைகளும் இணைந்து சிவத்தொண்டாற்றி வருகிறார்கள். பெருகிவரும் இந்த அடியார்கள் கூட்டம் விரைவில் நமது பாரம்பர்யப் பெருமைகளை மீட்டெடுக்கும். நமது தேசம் தன்னிறைவு பெற்ற ஆரோக்கியமான தேசமாக மலர்ந்தெழும்'' என்று நம்பிக்கையோடு பேசினார்.

விலங்கிலிருந்து மனிதனை காலம் உருவாக்கியது. மனிதனிலிருந்து ஞானிகளை ஒழுக்கமும் நல்ல உணவு முறையும்தான் உருவாக்கும் என்பதைப் புரிந்துகொண்ட நாங்களும் அவர்களை வாழ்த்தி வணங்கி விடைபெற்றுக்கொண்டோம்.

- அடியார்கள் வருவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism