மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 21

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

இறைப்பணியில் சிவத் தளிர்கள்!

ம் பிள்ளைகள் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்; மருத்துவர்கள் ஆகவேண்டும் என்றெல் லாம் விரும்புவோம். ஆனால், நம்மில் எவரேனும் நம் குழந்தைகளை ஒரு ஞானியாக, துறவியாக, சிவப்பணி ஆற்றும் அடியார்களாக மாற்ற விரும்புவோமா?!

ஞானிகள் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்வதைக்கூட மறந்துவிட்ட தற்கால சூழலில் நம் அடுத்த தலைமுறையைப் பணம் ஈட்டும் யந்திரங்களாகவே உருமாற்றி வருகிறோம். தினமும் ‘படி படி’ என்று நச்சரிக்கிறோம். என்றாவது ‘திருமுறைகளைப் படி’ என்று சொல்லியிருக்கிறோமா... `வாரத்தில் ஒரு நாளாவது கோயிலுக்குப் போங்கள்’ என்று அறிவுறுத்துகிறோமா... இல்லை, இல்லவே இல்லை! பிறகெப்படி நம் பிள்ளைகள் நம் கலாசாரத்தைத் தெரிந்துகொள்வார்கள்; நம் பண்பாட்டின் மகிமையை அறிவார்கள்!

ஆனால், சில இறையடியார்களின் இல்லங் களில் அந்த அற்புதத்தைக் காண முடிந்தது. தூசி மாமண்டூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் இறையடியார் குழந்தைகளின் எண்ணிக்கை அநேகம். சக்தி விகடன் உழவாரப்பணிகளில் அடியார்களின் குழந்தைகளும் ஈடுபாட்டுடன் சுறுசுறுப்பாகப் பணி செய்வதைக் கண்டு வியந்திருக்கிறோம்.

``இந்தக் குழந்தைகள் எப்போதுமுதல் உழவாரப் பணிக்கு வந்தார்கள்'' என்று விசாரித்தபோது, பிறந்த சில மாதங்களிலேயே அவர்களின் பெற்றோரோடு வந்து, ஆலயத் திருவளாகத்திலேயே வளர்த்தெடுக் கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, நெகிழ்ந்தோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

இந்தக் குழந்தைகளின் திருமுறை முற்றோது தலும் கயிலாய வாத்திய இசை முழக்கமும் மெய் சிலிர்க்கவைப்பவை. இவர்கள் பள்ளிக் கல்வியோடு சைவப் பாடங்களையும் கற்று வளர்கிறார்கள். திருவண்ணாமலை தீபத்தையொட்டி, `சக்தி விகடன்' சார்பில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்ட ருத்ராட்ச லிங்கம், மூலிகை லிங்கம் போன்றவை உருவாவதற்குப் பெரும் உழைப்பைக் கொடுத்த இளங்கன்றுகள் இவர்கள்.

இந்தக் குழந்தைகள் சினிமா, தொலைக்காட்சி பார்ப்பதில்லை. பள்ளிப் பாடங்கள், திருமுறைகள் தவிர வேறு புத்தகங்கள் படிப்பதில்லை. சைவ உணவுதான். எளிமையான பாரம்பர்ய உடைகள்தாம். அவ்வளவு ஏன்... எப்போதும் சிவப்பணியிலேயே இருப்பதால் விளையாடுவது கூட இல்லையாம்!

உழவாரப்பணிகள், மரம் நடுதல், கோயில் கட்டுமானம் போன்ற காரியங்களில் பெரிய வர்களைவிடவும் இவர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவதைக் கண்டால், நமக்கே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!

மாமண்டூர் கோகுல் (வயது 7), சங்கரன்பாடி மோனிகா (வயது 14), சங்கரன்பாடி ஜனனி (வயது 15), அவலூர்பேட்டை தினேஷ் (வயது 12), ஏகாம்பரநல்லூர் கார்த்திக் (வயது 14), சங்கரன்பாடி பத்மநாபன் (வயது 13), சங்கரன்பாடி தாமரைச்செல்வன் (வயது 13), மாமண்டூர் இலக்கியா (வயது 12), மாமண்டூர் சந்தோஷ் (வயது 10) ஆகியோர் சென்ற வாரம் ஏகாம்பரநல்லூரில் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

“ஐயா, சுவாமியை வணங்குவதும் அவருக்காகப் பணியாற்றுவதும்தான் எங்களின் தலையாயப் பணி. நல்ல பெற்றோர் கிடைத்தால் பிள்ளைகள் ஒழுக்கமாக வாழ்வார்கள். அதிலும் அருள் நிறைந்த சிவ வடிவமாகவே எங்களுக்கு ஒரு குரு கிடைத்துள்ளார். அவருக்குக் கீழ்ப்படிந்து செயலாற்றும் அடியார்கள் நாங்கள்.

நம் திருமுறைகளையும், சைவ சித்தாத்தங் களையும், புராணப் பெருமைகளையும் அன்றாடம் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். எனவே, வேறெந்த பொழுதுபோக்கு அம்சங் களையும் நாங்கள் விரும்புவதேயில்லை. கற்றவர் சொல்லும் கற்பகக் கனி இருக்க, காய் எதற்கு ஐயா?” என்றார் ஜனனி.

“காலையில் எழுந்ததும் சிவபூசை செய்து திருமுறை பாராயணம் செய்த பிறகு பள்ளிக்குச் சென்றுவிடுவோம். மாலையில் திரும்பியதும் எங்கள் பெற்றோரோடு இணைந்து சிவகைங்கர்யங்கள் செய்வதுடன், அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அந்நாளை அளித்த இறைவனுக்கு நன்றி கூறி உறங்கச் செல்வோம். விடுமுறை நாளென்றால் நிச்சயம் உழவாரப்பணி செய்யக் கிளம்பி விடுவோம். வருடத்துக்கு இரண்டு முறை ஆலய தரிசனம் செய்ய ஊர்தோறும் நடந்து சென்று வருவோம். கடந்த 2019 டிசம்பர் 25-ம் நாள் தொடங்கி 28-ம் நாள் வரை காஞ்சிபுரம் தொடங்கி சிதம்பரம் வரை 3 நாள்கள் நடந்து சென்று, தில்லை அம்பலவாணனை தரிசித்துவிட்டு வந்தோம். செல்லும் வழியெங்கும் திருமுறைகள் பாடிக் கொண்டும், கயிலாய வாத்தியங்கள் வாசித்துக்கொண்டும் அந்த சிதம்பர நாதனைக் கொண்டாடிக் களித்தோம் ஐயா” என்றார் மோனிகா.

“எங்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற எந்த லௌகிக விழாக் களும் இல்லை. கார்த்திகை தீபம், சிவராத்திரி போன்ற நாள் களில்கூட ஆலயங்களில் பணி செய்வோமே அன்றி, வேறு எந்த கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ள மாட் டோம். எங்கள் தேவை எல்லாம் சொற்பமானது. எதற்கும் ஆசைப்படக் கூடாது என்பதே எங்கள் பெற்றோரின் முதல் கட்டளை. எந்த அடியார்களைக் கண்டாலும் உடல் வளைத்து சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வேண்டும் என்பது மற்றொரு முக்கியக் கட்டளை.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

எதிரே காணும் அடியார்களை வணங்காமல் செல்வது என்பது நம்முடைய குருவை அவமதிக் கும் செயல். எங்கள் குழுவிலுள்ள நண்பர்கள் விளையாடினால்கூட மணலில் கோயில் கட்டுவது, சிவலிங்கம் அமைத்து பூஜிப்பது என்றுதான் இருக்கும். பணிந்துப்போவதும் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதும்தான் வழிபாடு என்று எங்கள் ஐயா அடிக்கடி கூறுவார். அதுவே எங்களுக்கு வேதவாக்கு'' என்றார் ஜனனி.

குழந்தைகள்தானே... இவர்களின் வழிபாட்டில் என்ன சிறப்பு இருந்துவிட முடியும் என்று எண்ண வேண்டாம். ஞானசம்பந்தர், சிறுத்தொண்டரின் மகனான சீராளன், அப்பூதி அடிகள் மகனான மூத்த திருநாவுக்கரசர், சண்டேசுவர நாயனார், நந்தியெம்பெருமான், மெய்கண்டார் ஆகிய அனைவருமே சிறுவயதிலேயே இறை தரிசனம் கண்ட மகா உத்தம அடியார்கள் அல்லவா! இந்தக் குழந்தைகளின் ஆன்மிகப் பணிகளையும் ஞான முதிர்ச்சியையும் காணும்போது மேற்சொன்ன அடியார்களை நேரில் தரிசித்த உணர்வு மேலிடு கிறது! இதை மெய்ப்பிப்பதுபோல், ``வயதில் ஒன்றுமில்லை. வாழும் முறையில்தான் பெருமை ஐயா. கருவிலேயே திருவான மெய்கண்டாரின் வாழ்க்கையே எங்களுக்குச் சிறந்த பாடம்” என்றார் ஜனனி.

“திருக்கயிலாய பரம்பரையிலிருந்து அதாவது ஈசனே குருவாக நின்று உபதேசம் அருளிய நந்தி தேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். குரவர் என்றால் குருமார்கள் என்று பொருள். அதேபோல் சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார்.

‘சிவத்துக்கு மேல் தெய்வமில்லை; சிவஞான போதத்துக்கு மேல் சாத்திரம் இல்லை’ என்பது தெய்வ வாக்கு. திருவெண்காட்டு ஈசனின் அருளால் பிறப்பெடுத்த மெய்கண்டார், மூன்று வயதிலேயே பரஞ்சோதி முனிவரால் சிவ தீட்சையும் ஞானமும் அருளப்பெற்றவர். அதனால் சிவஞானபோதம் எனும் சிவஞான நூலைப் பன்னிரண்டு சூத்திரங்களாக அருளினார். சைவ சித்தாந்தப் பேருண்மைகளைச் சொல்லும் ஞான வழிகாட்டி சிவஞானபோதம்.

இந்நூலில் ஐம்புல வேடர்களால் பிணிக்கப் பட்டுள்ள இந்த உயிர் இறைவனுக்கு உரியது எனும் கருத்தை விளக்கினார். மூன்று வயதிலேயே தன்னிலும் அதிக வயதுடைய அருணந்தி சிவாசார்யரின் ஆணவத்தைச் சுட்டிக்காட்டி அவரைத் தம் மாணாக்கராக ஏற்றுக்கொண்டவர் மெய்கண்டார். மூன்று வயதில் சிவதரிசனம் பெற்று உயர் சைவ வேதத்தை மெய்கண்டார் எழுதினார் என்பது உண்மையென்றால் குழந்தை அடியார்கள் பெருமைக்கு உரியவர்கள்தானே ஐயா” என்கிறார்கள் எல்லோரும்.

வியந்துபோனோம் சிவக்குழந்தைகளின் பேச்சைக் கேட்டு. நிச்சயம் இவர்கள் கருவிலேயே திருவானவர்கள்! அவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த சங்கரன்பாடி தாமு ஐயாவிடம் பேசினோம்...

“ஞானத்தைப் போதிக்காத சமூகம் சமூகமல்ல; அது வெறும் ஆரவாரக் கூட்டம். அங்கு எந்த பெருமையும் கிட்டாது. பிள்ளைகள் வளரும் போதே ஒழுக்கத்தையும் தர்மங்களையும் பெரியவர்கள் கற்றுத்தர வேண்டும். குற்றத்தின் அடிப்படை அறியாமை. அறியாமை நீங்க ஒரு குரு வேண்டும். அவரே அறியாமையை விளக்கும் ஞானச் சூரியன். எஜமானன் இல்லையென்றால் ஒவ்வோர் ஊழியனும் தானே எஜமானன் என்பான். வேலை நடக்காது. மூளை கட்டுப்படுத்தாவிட்டால் உறுப்புகள் செயல் படாது. அப்படித்தான் குருவே எஜமானர்.

ஒரு பட்டியில் 50 ஆடுகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆடாக வெட்டப்பட்டு விருந்தாகப் பரிமாறப்பட்டது. ஓர் ஆடுகூட வெட்டப்படும்போது கத்தவோ கலங்கவோ இல்லை. இது அந்த சமையற்காரனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. என்ன காரணம் என்று தேடியபோது, அவை மேய்ச்சலுக்குப் போன இடத்தில் ஒரு ஞானியிடம் உபதேசம் கேட்டதை அறிந்துகொண்டான். அவர் உபதேசித்த மந்திரம் இதுதான் `நீ சிங்கம், ஆடல்ல; மிரளாதே' என்று ஒவ்வோர் ஆட்டிடமும் கூறி நம்ப வைத்துவிட்டார். அவை மிரளவில்லை. இப்படித்தான் நாமும் ஈசனை நம்பி அணுகிவிட்டால் எந்த துயரமும் கலக்கமும் நம்மை அணுகாது.

ஈசன் உங்களுக்கு அருகில் இல்லை.

அதனால்தான் உங்களுக்குத் தெளிவில்லை. அருகே சென்று பாருங்கள். ஈசன் உங்களை ஆட்கொள்வான். சூடும் குளிரும் உயிருக்கில்லை; சோர்வும் வீழ்ச்சியும் தொண்டருக்கில்லை. அனைத்திலும் ஈசனைத் தேடும் ஆனந்த நிலையே சிதம்பரம். அதனால்தான் அங்கு ஆனந்த நடனம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது.

அதை தரிசிக்க எல்லோரும் அன்பாயிருங்கள். பிறந்த உடனே மரணத்தை நோக்கித்தான் பயணிக்கிறோம். மரணித்ததும் பிறப்பை நோக்கி பயணிக்கிறோம். இந்தத் தொடர்ச்சியான சங்கிலி அலுப்பானது. பிறப்பை அறுக்க பிறப்பிலா பெருமானைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு நம் தர்மங்களைச் சொல்லிக் கொடுங்கள். அவையே அவர்களுக் கான பெரிய சொத்து” என முடித்துக்கொண்டார்.

இவரைப்போன்ற குருமார்களும் அவர்களால் தர்மம் புகட்டப்படும் குழந்தைகளும் பெருகினால், நம் தேசம் நிச்சயம் உலகின் தலைமை ஏற்கும் எனும் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...