Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 22

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

`மலைகளில் மரங்கள்... மனங்களில் மகேசன்!'

புண்ணிய புருஷர்கள் - 22

`மலைகளில் மரங்கள்... மனங்களில் மகேசன்!'

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

ருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஈசன் மலை, ஞான மலை, காஞ்சனகிரி இங்கெல்லாம் போயிருக்கிறீர்களா? அங்கெல்லாம் இயற்கை எழிலை இறுமாந்து சொல்லிக் கொண்டிருக்கும் வானளாவிய மரங்களையும் அற்புத மூலிகை வனங்களையும் கண்டிருக்கிறீர்களா? ஆச்சாள், ஆயா, பாதிரி, வெண்நாவல், தவிட்டான், கருங்காலி, வலம்புரி, கல்லாலம் போன்ற அபூர்வ மரங்களையும் நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, புளியாரை, புளி நாரை என நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளையும் விழி விரியக் கண்டிருக்கிறீர்களா?

இவை அனைத்தும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போகும் இறையடியார்களின் வருடக்கணக்கான உழைப்பில் உருவானவை என்பது தெரியுமா... தெரிந்ததும் வியந்துபோனோம். இவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டுக்கு அருகே உள்ள பொதட்டூர்பேட்டைக்குச் சென்றோம். ஆனால், அவர்கள் அங்கு இல்லை. அனைவரும் மலையில் மரக்கன்றுகள் நடுவதற்காக வேலூர் அருகே சென்றிருப்ப தாக அறிந்து உடனே அங்கு சென்றோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெயிலுக்காகவே புகழ்பெற்ற வேலூர் வெயிலில் தகித்துக்கொண்டிருந்தது.அங்கு மலைப்பாறைகளை அகழ்ந்து மரக் கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள் இறையடியார்கள். பார்த்ததுமே அவர்களைப் படமெடுக்க ஆரம்பித்தார் எங்கள் புகைப்படக்காரர். உடனே பதறிப்போன அவர்கள் ‘எங்களை ஏன் ஐயா படமெடுக்கிறீர்கள்’ என்று விசாரித்தார்கள். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களைப் பற்றி எழுத அனுமதி கேட்டோம். உடனே மறுத்தவர்கள், ‘எங்கள் பணி இயற்கையின் வழியே இறைவனை ஆராதிக்க மட்டுமே ஐயா; விளம்பரம் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். ஒருவாறு அவர்களிடம் சம்மதம் பெற்று பேசத்தொடங்கினோம்...

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் அடியார்கள் இவர்கள். பழநி, ராஜா, சீனு, தியாகராஜன், ஜெயராஜ், பாலசுப்ரமணியன், ஓசூர் (இவரை இப்படித்தான் அழைக்கிறார்கள்), கண்ணதாசன் என்பது இவர்கள் பெயர். இவர்களில் சிலர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெசவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்த இவர்கள், சிவனடியார்களாக மாறி செய்துவரும் தொண்டுகள் அநேகம். குறிப்பாக, மரக்கன்றுகளை நடுவது, பட்டுப்போன மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது என உழவாரப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

“13 ஆண்டுகளாக இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறோம். உழவாரத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வேலை என்று எங்கள் குரு நியமித்துள்ளார். சமையல் பணி செய்பவருக்கு மரம் வெட்ட அனுமதி இல்லை. மரம் வெட்டுபவருக்குக் கட்டுமான வேலை தரமாட்டாது. அவரவர் பழகிய வேலை அவரவருக்கு. அந்த வகையில் மரம் நடுவது எங்கள் வேலை. அதிலும் மலைகளில் மரம் நட்டு அவை வளர்ந்து பெரிதாக மாறும்வரை அங்கேயே தங்கியிருந்து பணிபுரிவோம். ஈசன் மலையில் ஐந்து ஆண்டுகள் வரை மாறி மாறி தங்கியிருந்து மரங் களை வளர்த்தோம். பொதட்டூர்பேட்டை மற்றும் தூசி மாமண்டூர் சித்ரமேகத் தடாக ஏரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்திருக்கிறோம். தமிழகமெங்கும் பல மலைகளில் ஏரிக்கரைகளில் காடுகளை வளர்த்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். எல்லாம் எம் ஈசன் செயல்” என்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

“அதென்ன மலைகளில் காடுகளை வளர்ப்பது?” என்று கேட்டோம்.

“மலைகள்தான் மனித இனத்தின் தொட்டில். குறிஞ்சி நிலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் ஆற்றங்கரை நாகரிகத்தில் செழிப்படைந்தான். மலைகள் இல்லாமல் நம் வாழ்க்கையே இல்லை. பூமியின் தண்ணீர்க் களஞ்சியங்கள் மலைகள். மலைகள் செழிப்பான வனமாக இல்லாமல் போனால் ஆறுகளே இல்லை. அதனால்தான் வெறும் கோரையும் மஞ்சம்புல்லும் விளையும் மலைகளில் பெரிய பெரிய மரங்களை வளர்த்து மழை வளத்தைப் பெருக்கி அதன்வழியே ஓடை களும் ஆறுகளும் பெருக முயன்று வருகிறோம். இயற்கை வளங்களை வாரி வழங்கும் பெட்டகமாக மலைகள் திகழ்கின்றன.

பல நாடுகளின் பாதுகாப்பு அரணாகவும், பனி மற்றும் புயல் காற்றிலிருந்து காக்கும் கேடயமாகவும் மலைகள் திகழ்கின்றன. மலைகளும் காடுகளும்தான் மனித நாகரிகத்தின் தாய். அவை கொடுக்கும் நீர் மனிதனுக்குத் தாய்ப்பால் போன்றது. உலகின் 60 சதவிகித நன்னீர் வளத்தை மலைக்காடுகளே தருகின்றன என்கிறது ஆய்வு. மலைகளைப் பாதுகாக்க அங்கு வனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவை கல்குவாரிகளாக மாறி மலையே காணாமல் போய்விடும். கட்டுமான பணிகளுக்காக காணாமல்போன மலைகள் எத்தனை எத்தனை தெரியுமா... அதனால் மலைகளைப் பாதுகாக்க அங்கு காடுகள் உருவாக வேண்டும் என்று எங்கள் குருநாதர் முடிவு செய்து பணித்தார். நாங்கள் பணியைத் தொடங்கினோம்” என்றார் ஜெயராஜ்.

``பரந்த நிலப்பரப்பின் குளிர்சாதனப் பெட்டியாகத் திகழ்வது மலைகள்தாம். குளிர்கால கடும்பனியை மலைகள் தன்வசம் ஈர்த்துக் கொள்கின்றன. பிறகு வெயில்காலத்தின்போது தேவைப்படும் ஈரப்பதத்தை மெதுவாக வெளியிட்டு பூமியின் வெப்பத்தைக் குறைக்கின்றன. அடர்ந்த வனமாக இருக்கும் மலைச்சரிவுகள் மழைநீரை மெதுவாக உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால் மழைநீர் காட்டாறாகப் பெருக்கெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மென்மையாக ஓடி ஆறுகளைச் சென்றடைகிறது.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

மலைகளில் காடுகள் நிறைந்து இருந்தால்தான் அதில் பல வன உயிரினங்கள் வாழமுடியும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமில்லை என்பதை உரக்கச் சொல்பவை மலைகள். மலைகள் இல்லாவிட்டால் மனித இனமே இல்லை எனலாம். ஆனால், சுயநலம் கொண்ட மனிதர்கள் மலைகளை மலடாக்கி கல்லுடைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் நம் முன்னோர் ஒவ்வொரு மலையிலும் ஒரு புனிதத்தலத்தை உண்டாக்கினார்கள். இறைவனை வழிபடுவது என்பது அவன் படைத்த இயற்கையை நேசிப்பதுதானே ஐயா” என்றார் ராஜா.

``மலையே லிங்க வடிவம் என்று வணங்கப் படுவதன் காரணம், அதன் பயனும் பிரமாண்டமும் தான். கயிலை தொடங்கி திருவண்ணாமலை என பாரதத்தின் பல மலைகளும் சிவ வடிவமாகவே வணங்கப்படுகின்றன. அவை செழித்திருக்க வேண்டும் என்றுதான் மலைகளில் காடுகள் வளர்க்கவும் குளங்கள் அமைக்கவும் எங்கள் நேரத்தையும் உழைப்பையும் கொடுக்கிறோம்.எங்கள் குடும்பமும் அடியார்கள் கூட்டமும் ஒத்துழைப்பதால் இந்தப் பணி சிறப்பாக தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஞானாசிரியராக இருந்துவரும் குருநாதர் வழிகாட்டி அருள்புரிந்துவருகிறார். எது நல்லது எது அல்லது என்று அவர் காட்டும் வழியில் இந்த எளியவர்கள் நடக்கிறோம். எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துவருகிறோம்.

எங்கள் குடும்பத்துக்கான தேவை கொஞ்சமே என்பதால் தொண்டு புரிவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறோம். மரங்களை நடுவது மட்டுமன்றி விதைகளைச் சேகரித்தும் மக்களுக்குக் கொடுக்கிறோம். சில அபூர்வ விதைகளை விலை கொடுத்து வாங்கியும் கொடுக்கிறோம். எல்லாம் குருவின் திருவருள். எங்கள் குருவே கடவுளுக்கு நிகரானவர். அவரோடு பேசுவதும் பழகுவதுமே எங்கள் பாக்கியம். பொங்கல் நாளில்கூட ஐயா ஆணையின்பேரில் உழவாரப் பணி செய்தோம். அப்போது எங்கள் கூடவேயிருந்து எங்களை பாக்கியவானாக்கினார் எங்கள் குரு சரவணன் ஐயா” என்று நெகிழ்ச்சியோடு கூறினார் ஜெயராஜ்.

``காடுகள் வளர்ப்பதை சிவ புண்ணிய காரியமாக திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியுள்ளார்.

பரவப் படுவான் பரமனை ஏத்தார்

இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்

கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்

நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சினீரே

என்கிறார் திருமூலர். மேலும், திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் திருச்செங்கோடு பதிகத்தில் காடுகள் வளர்ப்பதையும் குளங்கள் வெட்டு வதையும் பெருமைமிக்க தொண்டாகக் குறிப்பிட் டுள்ளார். `அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்...’ எனத் தொடங்கும் திருச் செங்கோடு பதிகத்தின் இரண்டாவது பாடல்...

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’

- என்று சிறப்பிக்கிறது.

இப்படி மகிமைமிக்க அருளாளர்களால் போற்றப்பட்ட காடுகள் வளர்க்கும் திருப்பணியை இந்த எளியோர்களும் செய்வது பிறவிப்பயன் என்று நினைக்கிறோம் ஐயா. மாசுபட்ட உலகிலே காசு இருந்து என்ன பயன்? `நஞ்சில்லா உலகை வளர்த்து வஞ்சமிலா சமுதாயம் படைப்போம்.' என்று ஒவ்வொரு நபரும் கருதவேண்டும்.

பெருகிக்கொண்டு வரும் புவி வெப்பமடைதல் அபாயத்தை விலக்க மரங்களை வளர்க்க வேண்டும்.மலைகள், காடுகள் மற்றும் நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை உடனே செய்யுங்கள். இதுவே நம் வழிபாடு. இதுவே நம் இறைத்தொண்டு” என்று முடித்துக் கொண்டார்கள் அடியார்கள்.

மின்மினிப் பூச்சிகளிடையே நட்சத்திரங்களாக, புகைக்கூட்டங்களுக்கு நடுவே கார்மேகங்களாகத் திகழும் இதுபோன்ற அடியார்கள் வணங்கத் தக்கவர்கள். அதனால்தான் இவர்களின் எளிமைகூட கம்பீரமாகத் தெரிகிறது என்று எண்ணியபடியே வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்