Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 23

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

தனிப்பெரும் கருணை!

புண்ணிய புருஷர்கள் - 23

தனிப்பெரும் கருணை!

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

தாய் தந்தையே தெய்வமென அவர்களைத் தோளில் சுமந்த சிரவணன், வளர்ப்பு அன்னையின் சொல்லுக்காக அரியணையைத் துறந்த ஸ்ரீராமன், தந்தை யயாதிக்காக இளமையைத் தானமளித்த புரூவரஸ், தந்தைக்காகத் திருமணமே செய்து கொள்ளாத பீஷ்மர்... இப்படி பெற்றோரைக் கொண்டாடியவர்களைக் கொண்ட நம் தேசத்தில் முதியோர் காப்பகங்கள் பெருகிவருவது வருத்ததற்குரியது!

சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்றோர்களைத் தவிக்கவிடும் தற்காலச் சூழலில், வடலூர் அருகில் ஒரு மனிதர்... இல்லையில்லை... ஒரு புனிதர் 50 முதியோர்கள் மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரித்துக் காப்பாற்றிவருகிறார் என்ற தகவலை பெங்களூரு வாசகி நித்யா பகிர்ந்துகொண்டார். நாம் உடனடியாக அந்த அன்பரைச் சந்திக்கும் ஆவலுடன் வடலூருக்குப் புறப்பட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அன்பரின் இடத்தில் நாம் கண்ட காட்சிகள் மிகவும் கலங்கவைத்தன. இதுவரை புண்ணிய புருஷர்களின் அத்தியாயங்களை எழுதும்போது பெருமிதமும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வைப் பெற்றிருக்கிறோம். சில இடங்கள், சில அன்பர்கள் நம்மை வியக்கவைத்ததும் உண்டு. ஆனால், இந்த அத்தியாயத்தைக் கண்ணில் நீர்க்கசியும் நிலையிலேயே எழுதுகிறோம். நீங்களும் மனம் கசிய வாசியுங்கள்; மற்றவருக்கும் சொல்லுங்கள்...

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

வடலூர் - மேட்டுக்குப்பம் ஸித்தி வளாகம் பகுதியில், வடலூர் வள்ளல்பெருமான் ஞான ஸித்தி அடைந்த வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது வள்ளலார் சென்னை அறக்கட்டளை. தெய்வத்திரு வீர.சண்முகனார் ஆரம்பித்துவைத்த இந்த அறக்கட்டளையை இப்போது நிர்வகிப்பவர் நடராஜன் ஐயா. அவரைச் சந்திக்கவே சென்றோம். வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஸித்தி வளாகம் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்தோம்.

`சென்னை சத்திரத்துக்குப் போகிறோம்' என்றதும் ஆட்டோ ஓட்டுநர் உற்சாகமாக பேசத் தொடங்கினார். “ஐயாவை எனக்கு 15 வருஷங்களா தெரியும். அவரை மாதிரி ஆள்கள் இருப்பதால்தான் இன்னமும் மழை பெய்யுது. எத்தனை அநாதை முதியவர்களை இந்த ஆட்டோவில் ஏற்றி வந்திருக்கிறேன் தெரியுமா... அவங்க எல்லோரையும் பராமரித்து வருகிறார் நடராஜன் ஐயா. அவர் ஒரு தெய்வம் மாதிரி சார். உதவிக்குக்கூட ஆள் வைத்துக்கொள்ளாமல் சமைப்பது, சுத்தம் செய்வது, முதியவர்களைப் பராமரிப்பது என சகலத்தையும் அவரே செய்து வருகிறார். கழிவறையைக்கூட அவரே சுத்தம் செய்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்று ஆட்டோ ஓட்டுநர் பாராட்டியபடியே வந்தபோது. நமக்குள் நடராஜன் ஐயா குறித்து பிரமிப்பு எழுந்தது.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

சத்திரத்தை அடைந்தோம். ஒரு துண்டை மட்டுமே இடுப்பில் அணிந்து கொண்டு பம்பரமாக சுழன்று கொண் டிருந்தார் நடராஜன். மதிய வேளை என்பதால் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நடமாட முடியாத முதியவர்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று உணவு கொடுப்பதும், மதிய உணவுக்காக வெளியிலிருந்து வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாறுவதுமாகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

சுமார் 110 அன்பர்கள் பசியாறியிருக்க, நடராஜன் அடுத்த வேலைக்குத் தயாரானார். அங்கு வளர்க்கப்படும் ஏழு மாடுகளுக்கு வைக்கோல், கஞ்சித் தண்ணீர் வைத்துவிட்டு வந்தார். இத்தனை வேலைகள் செய்தும் ஓர் அலுப்பில்லை; சலிப்பில்லை. சிநேகமாகப் பேசத் தொடங்கினார்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

“மன்னிக்கணும் ஐயா, அதிகாலைல இங்கே இருந்த பெரியவர் ஒருத்தர் தவறிட்டார். வேலூரில் இருக்கும் அவரோட பேரப்பிள்ளைகளை வரச் செய்து, அவரின் உடலை அனுப்பிவைக்க வேண்டிய சூழல். அதற்குப்பிறகு உணவு தயார் செய்து இந்தப் பெரியவங்களுக்குப் பரிமாறிட்டு வர தாமதமாகிவிட்டது'' என்று கூறியபடியே வந்தார் பெரியவர் நடராஜன்.

பரட்டைத் தலையாய்க் கேசம், நீண்ட தாடி, உழைத்து உழைத்து வைரம் பாய்ந்த உடல், எப்போதும் சிரித்திருக்கும் திருமுகம் என நடராஜன் ஐயா ஒரு மனிதப் புனிதராகவே தெரிந்தார் நமக்கு!

“பெரியவங்களை கவனிக்கிறது குழந்தை களைக் கவனிச்சுக்கிறது மாதிரி ஐயா. திடீர்னு கோவிச்சுப்பாங்க, அழுவாங்க... ரொம்ப அக்கறையா கவனிச்சிக்கிட்டாதான் நல்லது. முதியவங்க, மன வளர்ச்சி இல்லாதவங்க, மாற்றுத் திறனாளிங்கன்னு எல்லாருமே இங்கே இருக்காங்க. எங்களுக்கு சாதி மத பேதம் எல்லாம் இல்லை.

தினமும் இரண்டு வேளை பெரியவங்களைக் குளிப்பாட்டறது, உடம்பு துடைத்துவிடறதுன்னு சுத்த பராமரிப்பும் செய்திடுவோம். மூணு வேளையும் அவங்களுக்கு ஏத்துக்கிற மாதிரியான உணவைக்கொடுக்கிறோம். அவங்களுக்காகவே பால் பாக்கெட்டெல்லாம் வாங்காம, மாடு வளர்த்து பால் கறக்கிறோம். அவங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதையெல்லாம் முடிஞ்ச அளவுக்கு பண்ணிடுறோம். அவங்கதான் என் உலகம்.

புண்ணிய புருஷர்கள் - 23

இவங்க மட்டுமல்ல, மூணு சின்ன பிள்ளைங் களும் இருக்காங்க. அவர்களை வடலூர் எஸ்.டி. ஈடன்கார்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளில படிக்க வைக்கிறோம். அந்தப் பள்ளியிலும் சலுகைக் கட்டணத்தில் இந்தப் பிள்ளைகளை ஏத்துக்கிட்டாங்க. அவங்களோட அப்பா அம்மா இருந்தா எப்படி கவனிச்சுப்பாங்களோ, அப்படி கவனிக்கணும். அதுதான் எங்க ஆசை.

தினமும் இந்தப் பெரியவங்களைப் பரிசோதிச்சு மருந்து மாத்திரை கொடுக்க சுதா ஹாஸ்பிடல் டாக்டர் சரவணன் வந்துடுவார். எல்லாமே இலவசமாதான் பண்றார் அவர். மேலும் வடலூர் ஜி.ஹெச், குறிஞ்சிப்பாடி ஜி.ஹெச், புதுச்சேரி அறுபடை மெடிக்கல் காலேஜ்... இங்கெல்லாமும் எங்களுக்கு நல்லா உதவுறாங்க. இப்படி நிறைய நல்லவங்க உதவி பண்றதாலயும் வள்ளல்பெருமான் அருளாலும் ஒரு குறையும் இல்லாமல் போகுது ஐயா” என்று சிரிக்கிறார் நடராஜன் ஐயா.

இந்த ஐயா, இந்தப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டது குறித்துக் கேட்டோம்.

“வீர.சண்முகம் ஐயா ஆரம்பிச்சு வெச்ச இந்த அன்னதான சாலையை அவருக்குப் பிறகு லட்சுமி நாராயணன் ஐயா பார்த்துக்கிட்டார். ஏதோ திருவருள் புண்ணியம்... அவருக்குப் பிறகு நான் பார்த்துக்க ஆரம்பிச்சேன். ஒரு மூணு நாலு மாசம் பார்த்துப்போம். பிறகு, வேற யாருக்கிட்டயாவது ஒப்படைப்போம்னுதான் வந்தேன். ஆனால், வள்ளலார் ஸ்வாமியும் சண்முகம் ஐயாவும் இந்த எளியவனையே பார்த்துக்கும்படி வெச்சிட்டாங்க.

வள்ளலார் ஸ்வாமி, இதுவரை யாருகிட்டயும் போய் கையேந்தி `காசு கொடு'ன்னு கேட்க வைக்கல. எல்லாம் அவங்களோட தனிப் பெருங்கருணை. எப்பவாவது காசு இல்லாம தவிச்சா, வள்ளலார் ஸ்வாமி ஜோதியோடு ஐக்கியமான அறைக்குள்ள போய் உரிமையோடு முறையிடுவேன். ஸ்வாமியும் உடனுக்குடன் எங்கள் தேவையை நிறைவேற்றிடுவார். அதேபோல், எத்தனையோ சிக்கலான நேரங்கள்ல ஜோதி ரூபமா ஸ்வாமி காட்சிதந்து எங்களைக் காப்பாற்றியும் இருக்கார்'' என்றவர், அங்குள்ள பெரியவர்களைப் பற்றி விவரித்தார்.

``இங்கே இருக்கிற எல்லோர் பின்னாடியும் ஏகப்பட்ட கண்ணீர்க் கதைகள் இருக்கு. இன்னிக்குக் காலைல இறந்துபோனதா சொன்னேனே... அந்தப் பெரியவரின் பேரப்பிள்ளைங்க வந்ததுமே `எங்க தாத்தா என்னென்ன பொருள் வெச்சிருந்தார்'ன்னுதான் கேட்டாங்க. போன மாதம் ஒரு பெரியவர் இறந்துட்டார். அவங்க வீட்டுக்கு போன் செய்து தகவல் சொன்னோம். ‘எங்களுக்கு நேரம் இல்லை. நீங்களே அடக்கம் பண்ணிடுங்க. நாங்க இங்கே சிராத்தம் கொடுத்துக்கறோம்'னு சொல்லிட்டாங்க.

சடங்குக்குக் கொடுக்கிற மரியாதையைக்கூட மனுஷங்களுக்குக் கொடுக்கறது இல்லை பாருங்க. நிறைய பெரியவங்க அவங்க வாரிசுகளாலேயே அடித்து விரட்டப்பட்டு இங்கே வர்றாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. உறவுகளைத் தவிக்க விட்டுட்டு எதை சாதிக்கப்போறோம்னு தெரியலை!

கடந்த பதினெட்டு வருஷங்களா நான் ஆழ்ந்து தூங்கினது இல்லை. எந்த நேரம் யாருக்கு என்ன ஆகுமோ மனம் பதைபதைச்சுக்கிட்டே இருக்கும். இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியாத பெரியவங்களையும் பரிதவிக்க முடியாம பார்த்துக்க நினைப்பேன். அப்பப்போ அவங்க படுக்கைக்குப் போய் பார்த்துட்டு வருவேன்'' என்றார் நடராஜன் ஐயா.

இருக்கும்போது பரிவோடு கவனித்துக்கொள்வதோடு, பெரியவர் எவரேனும் இறந்துபோனால் அவருக்கான இறுதிச் சடங்குகளையும் குறைவின்றி செய்துவருகிறார் நடராஜன் ஐயா. இதுவரை 62 பெரியவர்களைக் கரையேற்றியிருக்கிறார்.

``பெரியவங்க யாராவது தவறிப்போனா மனசு கலங்குமே ஐயா...'' என்று கேட்டோம்.

``ஆமாம். பல காலமா எங்களோட இருந்தவங்க திடீர்னு காலமாயிட்டா ரொம்ப கலக்கமாகத்தான் இருக்கும். அவங்க இறந்துபோனது ஒரு துக்கம்னா அவங்களை அடக்கம் பண்ணுவதற்கான ஏற்பாடுகள் ரொம்ப ரொம்ப கஷ்டமானவை. ஒருத்தரோட வாழ்க்கைப் பயணம் எவ்வளவு வேணா கஷ்டமா இருக்கலாம். ஆனா, அவங்களோட இறுதிப் பயணம் நிம்மதியா இருக்கணும். எங்கெங்கோ இருந்து வரும் இவர்களை இந்தச் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்களில் அடக்கம் பண்ண விடுவதில்லை. அதனால் காவல் துறை அனுமதியோடு கடலூர் மஞ்சக்குப்பம் இடுகாடு வரை சென்று அடக்கம் பண்றோம். இங்கிருந்து 48 கி.மீ தூரம் ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டுப் போவதற்கான செலவும் உண்டு. இதுபோன்ற சிரமங்களுக்குத் தீர்வு கிடைக்கணும். பார்க்கலாம்... பெருமான் நிச்சயம் கருணை செய்வார்.''

வேறு என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார் இந்த ஐயா. அதுபற்றி அவரிடமே கேட்டோம்.

``நாளுக்கு நாள் இங்கே தங்கவும் சாப்பிடவும் வர்ற அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டே வருது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தங்குவதற்கு வசதி இல்லை. சத்திரத்தோட பழைய கட்டடம் சிதிலமாகிட்டு வருது. அதனால்தான் புதுசா பக்கத்துல கட்டிக்கிட்டு வர்றோம். அதற்கும் அதிகம் செலவு பிடிக்குது.

தினமும் 100 பேருக்கு மேல் மூணு வேளை உணவுச் செலவு, பெரியவங்களுக்கு சோப், தேங்காய் எண்ணெய், துணி சோப், டெட்டால், போர்வை, நைட்டி, பாவாடை, வேட்டி... இப்படி நிறைய தேவைப்படுது. மனசு இருக்குறவங்க கொடுத்து உதவினால் அவங்க தலைமுறைக்கும் நல்லா வாழ பிரார்த்திப்போம் ஐயா'' என்றவர், தனக்கான தனிப்பட்ட சிரமங்களையும் எதிர்கொள்ளும் சங்கடங்களையும் பகிர்ந்துகொண்டார்.

``முப்பது வயசுலயே எல்லா செல்வத்தையும் பார்த்தவன் ஐயா நான். புதுச்சேரிதான் சொந்த ஊர். உறவுகளெல்லாம் அங்கேதான் இருக்கு. ஒரே கணத்தில் எல்லாத்தையும் உதறிட்டு இங்கே வந்துட்டேன். எதைப் பற்றியும் கவலையில்லை. என் கவலை எல்லாம் இங்கே இருக்கறவங்க யாரும் கஷ்டப்படக் கூடாதுங்கறதுதான். இவர்களை வைத்துக் கொண்டு நான் சம்பாதிப்பதாக ஆரம்பத்தில் என்னைத் திட்டினார்கள்; அடிக்கவும் செய்தார்கள். இன்னமும் பல எதிர்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் கவலை யில்லை. வள்ளலார் காட்டிய வழி இது. தொடர்ந்து பயணிப்பேன்.

இங்கே இருக்கிற ஒவ்வொருவரையும் என் தாயா தகப்பனாதான் பார்க்கிறேன். தவறிப்போன ஒவ்வொருவருக்கும் மகனா நின்னு காரியம் பண்ணியிருக்கேன். ‘இனி பிறப்பே வேணாம், நீங்க பட்டது போதும்'னு சொல்லியே தகனம் பண்ணுவேன்.

`வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய்'

என்று பட்டினத்தார் அருளிய பாடல் களைப் படித்தால் இன்னமும் நமக்கு கண்ணீர் வருகிறது. காசு எல்லாத்தையும் மரத்துப்போக வெச்சுடுமா ஐயா” என்று வேதனையோடு குறைபட்டுக்கொண்டார். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை நமக்கு.

நாங்கள் கிளம்பும்போது பல முறை சாப்பிட்டுவிட்டு போகச்சொன்னார் நடராஜன் ஐயா. என்னமோ மனசு சரியில்லை; மறுத்துவிட்டுக் கிளம்பினோம்.

நடராஜன் ஐயாவைப் போன்ற மனிதர் களைப் பார்க்கும்போதுதான் நமக்குள் கடவுள் நம்பிக்கை இன்னும் உறுதியாகிறது. எது எதற்கோ செலவுகள் செய்கிறோம். அவை எல்லாம் அர்த்தமானவையா என்றால் விடை கிடைக்காது. ஆனால் இந்த முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பாருங்கள். பல மடங்கு திரும்பி வரும் புண்ணியமாக. ‘ஜீவகாருண்யத்தைத் தவிர வேறெந்த வழியிலும் ஆண்டவனை தரிசிக்க முடியாது’ என்ற வள்ளலாரின் வாக்கை மெய்ப்படுத்தித் திகழும் புண்ணிய இடம் வடலூரில் உள்ள சென்னை சத்திரம்!

- அடியார்கள் வருவார்கள்...

நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களுக்கு

NAME - VALLALAR CHENNAI CHARITABLE TRUST,

KOTTAGAM VILLAGE

CURRENT ACCOUNT NUMBER - 35574846711

SBI - NEYVELI

IFSC CODE - SBIN0000958

நேரில் சென்று உதவி செய்ய விருப்பமுள்ளோர்க்கு

வள்ளலார் சென்னை அறக்கட்டளை

கொட்டகம் கிராமம், ஸித்தி வளாகம்,

மேட்டுக்குப்பம் அஞ்சல்

தொலைபேசி - 94424 78493, 96299 50324