Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 24

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

`ஈசனோடு பயணிக்கிறேன்'

புண்ணிய புருஷர்கள் - 24

`ஈசனோடு பயணிக்கிறேன்'

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

ந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே பயணிக்கின்றன. உயிருள்ளவை மட்டுமல்ல, உயிரற்றவையும் பயணிக்கின்றன. கோள்கள், துணைக்கோள்கள் என அனைத்துமே இந்தப் பால்வீதியில் ஒரு தாள லயத்தோடு பயணிக்கவே செய்கின்றன. ஊழிக்காலம்வரை இந்தப் பயணம் தொடரும்.

பயணங்களால்தான் உலகில் நாகரிகங்கள் உருவாகின. அனுபவத்தைத் தேடும் பயணம் லௌகிக லாபங்களைக் கொடுக்கலாம். ஆன்மாவைத் தேடும் உள்முகப் பயணம் இறைவனை உங்களுக்கு உணர்த்திவிடும். சாதாரண நீர் இறைவனை எண்ணி கொடுக்கும்போது தீர்த்தமாவதைப்போல் இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் யாத்திரையாகிவிடுகிறது.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

அப்படி ஒரு யாத்திரையாக சிதம்பரத்துக்குச் சென்றிருந்தோம். ஆடும் நாயகனை தரிசித்து முடித்ததும் அங்கே காஞ்சிபுரத்திலிருந்து ஓர் அடியார் சைக்கிளிலேயே சிதம்பரம் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சிபுரத்தை அடுத்த பனைமுகை என்ற ஊரைச் சேர்ந்தவர் குணா என்ற அடியார். வயது 19. காவேரிப்பாக்கம் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிசிஏ படித்துவரும் இவர் தமிழகமெங்கும் இருக்கும் சிவாலயங்களை தரிசிப்பதையே முக்கிய கடமையாகக் கொண்டுள்ளார். ஆலய தரிசனத்துக்காக பயணிக்க பஸ்ஸில் செல்லவோ ரயிலில் செல்லவோ வசதியில்லாத இவர், எவ்வளவு தொலைவானாலும் தன்னுடைய சைக்கிளிலேயே பயணிக்கிறார்.

“ஐந்து ஆண்டுகளாகத் திருப்பணி செய்து வருகிறார். பெரும்பசி கொண்டவன் உணவைப் புசிப்பதைப்போல் சிவனைப் பற்றிய சகல விஷயங்களையும் கற்றுக்கொள்ளத் துடிக்கும் இளையவர் இவர். வீட்டில் மட்டுமல்ல, கல்லூரியிலும் மரியாதையோடு நடத்தப்படும் அளவுக்குக் கண்ணியமானவர். படிப்பு, வீட்டில் தனது கடைமைகள் என எல்லாவற்றையும் செவ்வனே முடித்தபிறகே சிவகைங்கர்யங்களில் ஈடுபடும் சிவநெறியாளர். திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாலங்காடு, திருவலம் என சைக்கிளில் ஊர்தோறும் சுற்றி வருகிறார். யாரிடமும் எந்த உதவியும் கேட்காத வைராக்கியம்கொண்ட அடியார் இவர்” என்கிறார்கள் அடியார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“யாத்திரைக்காகச் செலவு பண்ணும் வசதியெல்லாம் எங்களிடம் இல்லை ஐயா. அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா! எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கிளம்பிவிடுவேன். ஈசனை தரிசிக்கப் போகிறேன் என்பது சும்மா. எங்கும் எப்போதும் இருக்கும் அந்த கருணைக் கடலை எங்கிருந்தும் தரிசிக்கலாம். இந்த எளியோன் பயணிப்பது என்னைத் தெரிந்துகொள்ளவே. நான் யார்; எங்கிருந்து வந்தேன்; என்னுடைய நோக்கம் என்ன... இப்படி பலவிதக் கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும், அதற்கு விடை தேடவுமே இந்த யாத்திரைகள். ஆத்ம விசாரணை செய்துகொள்ள, தனிமையான யாத்திரையே சிறந்தது என்பதால் இந்த அடியேன் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த

என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்

குன்றாத செல்வத்தை எங்கெங்கும் கண்டிருக்க...

- யாத்திரைகளின் வழியே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அரிதினும் அரிதான மானிடப் பிறவியை அளித்து அதனினும் அரிதான அடியார்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்திருக்கும் என் ஈசனை என்னவென்று போற்றுவது ஐயா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தல யாத்திரை என்னும் அற்புத வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர் காரைக்கால் அம்மையார். அதுமட்டுமா... தமிழ் இலக்கியத்தின் பல வடிவங்கள் எல்லாம் அந்தப் பெருமாட்டியின் கருணையினால் தோன்றியவை அல்லவா!

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

மண்டல முறையில் அந்தாதி பாடியது, பத்து பாடல்கள்கொண்ட பதிகம் பாடியது, கட்டளைக்கலித்துறையில் பாடியது, பதிகத்தில் கடைக்காப்பு வைப்பது, பதிகத்தில் இயற்றியவரின் பெயரை முத்திரை வைப்பது, முதலில் இரட்டைமணி மாலை பாடியது என பல அற்புதங்களை இயற்றிக்காட்டினார். எத்தனை அருமையான அடியார் அவர். அம்மையார் கேட்டவுடனே மாங்கனியும் கிட்டியது; முக்தியும் கிட்டியது. அதனால்தான் பந்த பாசத்தில் சிக்கிக்கொள்ளாத, பிறப்பிலா பெருமான் நெகிழ்ந்துபோய் ‘வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்’ என்று உமையிடம் கூறி வணங்கினார்.

காரைக்கால் எங்கிருக்கிறது; கயிலாயம் எங்கிருக்கிறது; எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே யாத்திரை சென்ற எங்கள் பெருமாட்டி எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்துவருகிறார். அம்மையைத் தொடர்ந்து சமயக் குரவர் நால்வரும், ஐயடிகள் காடவர் கோன், கருவூரார், நக்கீரர் என தேவாசிரியர்களும், பட்டினத்தடிகள் போன்ற பல சித்த புருஷர்களும் வழிகாட்ட யாத்திரைகள் தொடர்ந்தன; இன்றும் தொடர்கின்றன. இதனால் பல ஆலயங்கள் பிரபலமாகின்றன. பல ஆலயங்கள் கண்டுகொள்ளப்படுகின்றன. சீரில்லாமல் சிதைந்து கிடக்கும் பல ஆலயங் களைக் கண்டறிந்து சொல்லவும் யாத்திரைகள் பயன்பட வேண்டும்” என்றார் குணா.

“இந்த இளமையான வயதில் இத்தனை தீவிரமான பக்தி தேவையா...'' என்றதும்...

யமன் எப்போது வருவான், ஏட்டை எப்போது கிழிப்பான் என்று தெரியுமா ஐயா. அதனால் இளமையிலேயே தெளிவு கொண்டு இறைவனைத் தேடிக் கண்டுகொண்டால் கர்மவினைகள் கழியும். பிறவிப் பிணி அகலும். பற்றறுத்த நாயன்மார்கள் மீண்டும் பிறவி காணவில்லை; முக்தி பெற்றார்கள் என்று பெரிய புராணம் கூறும். அடியார்கள் ஒவ்வொருவருமே முக்தி வாய்க்கப் பெற்றவர்கள்தான். அதனால்தான் அவர்கள் ருத்ராட்சம் தாங்கும் பேறுபெற்றார்கள். எனவே ஈசன் உறையும் அடியார்களின் பாதங்களைப் பற்றிக்கொண்டு வாழ விரும்புகிறேன். அவர்கள் இடும் பணியை சிரமேற்கொண்டு செய்துவருகிறேன். ஆலயத் திருப்பணிகள், திருமுறைகள் ஓதுதல் என முடிந்த வேலைகளைச் செய்துவருகிறேன்.

தாய், தந்தை, அண்ணன், அக்கா, பாட்டி என பெரிய குடும்பம் எனக்குண்டு. எல்லோருமே எனக்கு ஆதரவாக உள்ளனர். விவசாயம்தான் எங்கள் தொழில். வீட்டிலேயே திருமேனி வைத்து வழிபாடு செய்து வருகிறேன். யாத்திரைக்கு என்று கிளம்பிவிட்டால் வழியில் எங்கும் உணவு உண்ணமாட்டேன். அது என்னவோ பசியும் அப்போது எடுப்பதில்லை. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் கருணா மூர்த்தி பரிதவிக்க விட்டுவிடுவாரா. வழியில் சைக்கிள் பழுதாகிவிட்டாலோ, காற்று போய்விட்டாலோகூட எவரிடமும் உதவி கேட்கமாட்டேன். ஈசன் விதித்தது என்று தள்ளிக்கொண்டே வந்துவிடுவேன்.

நான் கடவுளுக்காக பயணிக்கவில்லை ஐயா. கடவுளோடு பயணிக்கிறேன். அவரையும் மனத்தில் தியானித்துக்கொண்டு அழைத்துச் செல்கிறேன். அப்படியிருக்க என்ன குறை. ஐந்து ஆண்டுகளாக சிவவழிபாடு செய்துவந்தாலும் இந்த இரண்டு ஆண்டுகளாக பாழ்பட்ட பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுவருகிறேன். பனைமுகை, புதூர் ஆலயங்களில் பல மாதங்களாக வழிபாடு செய்துவந்திருக்கிறேன். எனினும் என்னை வழிநடத்த அடியார் கூட்டம் இல்லையே என்று பலமுறை ஈசனிடம் சொல்லி அழுதிருக்கிறேன்.

`நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்

அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்

பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே

எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே...'

எனத் திருச்சதகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் கதறியதைப்போல் தவித்தேன். என் குரல் ஈசனுக்கு எட்டியது போலும். நல்ல அடியார் கூட்டத்தில் என்னை இணைத்துவிட்டார்.

புறத் தோற்றத்தில் அடியாராக இருந்தாலும் எண்ணத்திலும் செயலிலும் ஈசனோடு ஒன்றிப் போகாதவர்களிடம் ஒதுங்கிப் போய்விடுவேன். எத்தனை கேலி, கிண்டல் செய்தாலும் கண்டு கொள்ள மாட்டேன். கல்லூரி முடித்தாலும் என் சிவ கைங்கர்யத்துக்கு பாதகம் வராத வகையில் பணி அமைந்தால் நல்லது. இல்லாவிட்டால் பணியே வேண்டாம் என்று இருந்துவிடுவேன். அடியார் கூட்டத்தோடு இணைந்து பணிபுரிவது கொடுப்பினை. சிவப்பணி என்பது எங்களுக்குப் பாடசாலை. அன்பால் கனிந்த திருக்கூட்டத்தில் அன்றாடம் பயின்று வருகிறேன். இதுபோதும் ஐயா” என்றார் குணா.

``ஐயா, சைக்கிள் பழையதாக இருக்கிறதே... புது சைக்கிள் வாங்கித் தந்தால் ஏற்றுக்கொள்வீரா'' என்று கேட்டோம்.

“மனித மனம் விசித்திரமானது ஐயா. ஒன்றை வாங்கிக்கொண்டால் மற்றொன்றுக்கும் மனம் ஏங்கும். அதிக பொருளாசையும் புகழாசையும் கொண்ட மனத்தில் ஈசன் இருப்பதில்லை. ஈசன் இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை. இருப்பதே போதும். ஈசனோடே இருக்க வேண்டும். அதற்கு அடியார்கள் உதவுவார்கள். அடியார்களின் தொண்டனாக வாழ்ந்து வர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை'' என்று பதில் வந்தது அடியார் குணாவிடமிருந்து.

எல்லாப் பறவைகளும் மரத்தில் கூடு கட்டி வாழும். ஆனால், ராஜாளி மட்டும் மலையில் வாழும். அது பறக்கும் உயரம் அப்படி. உயர்ந்த லட்சியங்கள்தாம் நம்மை உயர்ந்த மனிதர்களாக மாற்றுகின்றன. நாம் பிறப்பெடுத்ததன் லட்சியமே வாழ்க்கையைச் சிறப்பாக வாழத்தான். சிறப்பான வாழக்கையைப் பெறுவதற்கு ஈசனருள் முக்கியம். ஈசனைத் தேடி, இன்னருள் பெறுவதற்கு யாத்திரைகள் மட்டுமல்ல; இதுபோன்ற அடியார்களின் ஆசியும் அணுக்கமும் நிச்சயம் தேவை!

- அடியார்கள் வருவார்கள்...

தானங்கள் மூவை
தானங்கள் மூவை

தானங்கள் மூவை

தானங்கள் மூவகை. அறவழியில் ஈட்டிய பொருளை தவறற்ற முறையில், தவஞ்செய்த பெருமக்களுக்கு பணிவுடன் அளிப்பது தலைப்படு தானம். ஏழை-எளிய வர்க்கும் அங்கஹீனம் உள்ளவர்களுக்கும் கொடுப்பது இடைப்படு தானம். பிரதிபலன்களை எதிர்பார்த்து, புகழ் பெறும் எண்ணத் துடன் செய்யப்படுவது - கடைப் படுதானம் ஆகும்.

- கீதா சுப்பிரமணியன், சென்னை-91

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism