Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 25

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

தமிழகமெங்கும் ஆலயங்கள் மலிந்து கிடப்ப தாலேயே அவற்றின் அருமை பெருமைகள் நமக்குத் தெரிவதில்லை.

புண்ணிய புருஷர்கள் - 25

தமிழகமெங்கும் ஆலயங்கள் மலிந்து கிடப்ப தாலேயே அவற்றின் அருமை பெருமைகள் நமக்குத் தெரிவதில்லை.

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

லரும் அந்த அலங்கோலங்களைப் பார்த் திருப்போம். புராதனமான பல ஆலயங்களின் தூண்களில், சுற்றுச்சுவர்களில், அரிதான கல்வெட்டுகளில் எனப் பல இடங்களில் பலரும் பல வார்த்தைகளைக் கிறுக்கியிருப்பதைப் பார்த்திருப்போம்.

அதுமட்டுமா, அர்ச்சகர்கள் தரும் குங்குமம், மஞ்சளைத் தூண்களில் கொட்டி அசுத்தப்படுத்தியிருப்பார்கள். விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்பவர்கள், விளக்கேற்றியதும் விரல்களில் படிந்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை அங்குள்ள தூண்களில் தேய்த்து வைப்பார்கள். அதேபோல், தேவையற்ற இடங்களிலும் கற்பூரம் ஏற்றிவைத்துச் சுவரெங்கும் புகை படியச் செய்வார்கள். தொட்டுக் கும்பிடுகிறோம் என்று ஓவியங் களைப் பாழ்படுத்துவார்கள். மீண்டும் உருவாக்கவே முடியாத பல அற்புதச் சிற்பங்களை உடைத்து மூளியாக்கியிருப்பார்கள். இவையெல்லாம் ஆலயங்களில் சகஜமாக நாம் காணும் விஷயங்கள்.

தமிழகமெங்கும் ஆலயங்கள் மலிந்து கிடப்ப தாலேயே அவற்றின் அருமை பெருமைகள் நமக்குத் தெரிவதில்லை. கோயிலைப் பாழ்படுத்து வோருக்குக் கிடைக்கும் தண்டனைகள் குறித்து பெரியோர்கள் எடுத்துச் சொல்லியபிறகும் எவரும் திருந்துவதாகத் தெரியவில்லை எனலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில் ஓர் அடியார் ஆலயம்தோறும் சென்று அழுக்கான சுவர்களை, தூண்களைச் சுத்தம் செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டு அவரைக் காண வேலூருக்கு விரைந்தோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

விக்னேஷ் என்ற அந்த இளைய அடியார் ஆலயப் பணியாக ராணிப்பேட்டை - திருவலம் அருகே சென்றிருப்பதாக அறிந்து, அங்கே சென்றோம். பாழடைந்த ஓர் ஆலயத்தில் தூண்களை, சுவர்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் அவர். போதிய வெளிச்சமில்லை; பக்கத்தில் யாருமில்லை. உள்ளே நுழைந்தால் குடலைப் புரட்டும் வாசம். அச்சமூட்டும் வௌவால்களின் நடமாட்டம். ஆனால் விக்னேஷ் கருமமே கண்ணாயிருந்தார். கருவறையில் சுவாமி இல்லை. மூலவரைப் பாலாலயம் செய்து வைத்திருந்தார்கள். வேறெந்த சந்நிதியிலும் மூர்த்தங்கள் இல்லை.

``ஐயா, கருவறையில் சுவாமி இல்லை. வழிபாடு களும் இல்லை போலும். இந்தக் கோயிலில் ஏன் திருப்பணி செய்கிறீர்கள்'' என்றதும், சிரித்தபடி ``சுவாமி எங்கும் இருக்கிறார். இந்த இடத்தைச் சுத்தம்செய்து வைப்போம். சுவாமி வராமலா இருந்துவிடுவார். மனமும் கருவறைதான் அங்கேயும் சுத்தம் அவசியம்'' என்றார்.

``அது என்ன... ஆலயங்களைச் சுத்தம் செய்யும் பணியைத் தனியாக மேற்கொண்டிருக் கிறீர்களே...'' என்றதும் ``அடியார்கள் திருக் கூட்டத்தால் எனக்கு இடப்பட்ட பணி ஐயா இது. யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாழடைந்த ஆலயங்களை நோக்கிச் சென்றுவிடுவேன். அங்கிருப்பவர்களிடம் அனுமதி பெற்று இந்த எளிய பணியை மேற்கொள்வேன்'' என்கிறார் விக்னேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அடியார் திருவலம் அருகே வசித்து வருகிறார். தாய், தந்தை, மாமா, அண்ணன், அண்ணி, தங்கை எனப் பெரிய விவசாயக் குடும்பம் அவருடையது. ஐ.டி.ஐ படித்து முடித்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாராம். அவருடைய இந்த இறைப்பணி குறித்து விளக்க மாகக் கூறும்படி கேட்டுக்கொண்டோம்.

``ஈசனுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் சேவை செய்யவே இந்த எளியேன் விரும்புகிறேன். எல்லாம் ஈசன் திருவருள். ஒன்றுக்கும் உதவாமல், ஒருவருக்கும் பயன்படாமல் திரிந்துகிடந்த என்னை நல்வழிப்படுத்தி ஊக்கம்கொடுத்து வளர்த்தவர்கள் அடியார்கள்தாம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

படிப்பே ஏறாமல் பாமரனாகக் கிடந்த என்னை உற்சாகப்படுத்தி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவைத்து உயர்த்திக் காட்டியவர்கள் அடியார்கள். அவர்கள் இல்லையென்றால் வீணே ஜடமாகக் கிடந்திருப்பேன். இந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு நல்லறிவு புகட்டி, நாதன் தாளைப் பற்றிக்கொள்ள வைத்தவர்கள் அடியார்கள். அவர்கள் என்ன வேலை சொன்னாலும் கேட்டுச் செய்வேன். சைவ நன்னெறியில் சுவாமிமீது எத்தனை பக்தி உண்டோ, அதே அளவுக்கு அடியார்கள் மீதும் பக்தி வைக்க வேண்டும் என்பார்கள்.

பரமனின் நாமம் எவ்வளவு மகிமை கொண்டதோ அவ்வளவு மகிமை கொண்டது பக்தனின் நாமமும். ஆளுடைய அரசான எங்கள் அப்பர் பெருமானின் திருநாமம் எங்களுக்கு உவப்பானது. திருத்தொண்டுக்கு இலக்கணமான நாவுக்கரசப் பெருமானின் தியாகங்களும் உழவாரங்களும் எல்லோருக்கும் வழிகாட்டும் வகையிலான திருச்சின்னங்கள். அவர் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டு பணி செய்கிறேன். ஈசனே கதி என்று சரணடைந்தால், எந்த ஓர் இக்கட்டிலும் அவர் நம்மைக் கைவிட மாட்டார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அப்பரின் வரலாறு. அவரைப்போலச் சோதனைகளைக் கண்டவருண்டா... எல்லா சோதனைகளிலும் வென்றார். ஈசன் திருப்பாதங்களைத் தலையில் சூடி நின்றார்.

அந்தமிலப் பூதிமக னரவு மாற்றி

யருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப்

புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்ட

பூம்புகலூ ரான்பாதம் பற்றுவோமே...'' -என்றவர் தொடர்ந்து தன் பணி குறித்துப் பேசினார்.

``புதிது புதிதாக ஆலயங்களைக் கட்டு வதைவிட பழைமையான ஆலயங்களைப் புனரமைத்து வழிபடுவதே நல்லது. அரசர்களும், ஞானியர்களும், தேவர்களும் எழுப்பிய ஆலயங்கள் அற்புதமானவை. நம் கலைத்திறனுக்குக் கட்டியம் கூறுபவை. ஆலயத்தில் திருப்பணி செய்வதைவிட அதைச் சுத்தமாக வைத்துக்கொள்வது சிறப்பானது. மனத்தின் விருப்பத்தை எல்லாம் ஆலயச் சுவரில் எழுதுவது பாவமான காரியம். தேர்வில் வெற்றிபெற, காதலில் வெற்றிபெற என்று கண்டதற்கும் கிறுக்கிவைத்தால் காரியம் கைகூடும் என்று நினைக்கிறார்கள். அது தவறான மூட நம்பிக்கை. ஆலயங்களைப் பாழடித் தால் அனந்தகோடி காலம் நரகத்தில் வீழ்ந்துகிடப்போம் என்று ஆகமங்கள் கூறுகின்றனவே. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சிவநிந்தனையைவிட மோசமானது அவர்தம் ஆலயத்தை மாசுபடுத்துவது!

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

அதேபோல் வேறொரு விஷயத்தையும் சொல்லியாகவேண்டும். பெரிய பெரிய ஆலயங்களில் தூண்களையும் சுவர்களையும் புதுப்பிக்க... மணலை வேகமாகப் பீய்ச்சிய டித்துச் சுவரில் உள்ள அழுக்கை, பிசுக்கை நீக்கும் ‘சாண்டு பிளாஸ்டிங்’ என்ற நவீன முறையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையால் நாளடைவில் ஆலயத் தூண்களும் சுவர்களும் விரிசல்விட்டுச் சிதைந்துபோகின்றன. மேலும், தமிழகக் கோயில்களில் உள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் அழிந்துபோகின்றன.

இந்த முறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனப் பூச்சுகளால் சிலைகள் விரிசல்விட்டு வீணாகின்றன. ஆனால், நாங்கள் அழுக்கான தூண்கள், சுவர்கள், சிலைகளின்மீது ‘மாப்பூச்சு’ செய்கிறோம். அதாவது அரிசி மாவு, தயிர் ஆகியவற்றைக் கலந்து சிலைகள் மீது தடவுவோம். அது நன்கு காய்ந்ததும் அந்த இடத்தை நீரால் கழுவி, நார் கொண்டுதேய்த்தால், எண்ணெய் பிசுக்குப் போய்விடும். இந்த முறையே அழுக்கு, பிசுக்கு நீக்கும் சிறந்த வழி.

மேலும் கருங்கல் தூண்களுக்குச் சுண்ணாம்பு அடிப்பது, கருவறையைச் சுற்றிக் கழுவ வசதியாக டைல்ஸ் பதிப்பது, சுதைச் சிற்பங்களை அகற்றிவிட்டு சிமென்ட் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது என ஏகப்பட்ட அபத்தமான காரியங்களைச் செய்துவருகிறார்கள். இவையெல்லாமே தவறு. பழைமையான கோயில் அதன் வடிவம் மாறாமல் அதேநேரம் பொலிவோடு விளங்க வேண்டும் ஐயா'' என்றவர் திருநாவுக் கரசரின் திருத்தொண்டு குறித்து விவரித்தார்.

``இசைத்தமிழில் சிறந்த ஞானம்கொண்ட தாண்டகவேந்தர் தன்னிகரில்லா அப்பர் பெருமான் வைராக்கிய பக்தி கொண்டவர். பழையாறை வடதளிச் சிவாலய ஆக்கிரமிப்பை அகற்ற அவர் மேற்கொண்ட உண்ணா நோன்பே அரசரின் கவனத்தை ஈர்க்க நடத்திய முதல் அறவழிப் போராட்டம் எனலாம்.

நாவுக்கரசருக்கு முதன்முதலில் திருநீறு அளித்து பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி தீட்சை அளித்த அவரின் தமக்கையாரான தெய்வத் திலகவதி அம்மையாரே, திருநாவுக்கரசரின் முதல் ஞான குரு. அதனால்தான் நாவுக்கரசர் திலகவதியாரைச் சிவனருளுக்கு நிகரானவர் என்று பல இடங்களில் துதிக்கின்றார். எனவே, திலகவதியார் திருக்கழல்கள் போற்றி; திருநாவுக்கரசப் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி என்று இந்தப் பணியைச் செய்து வருகிறேன். ஆலயம் என்பது மனித உடலின் அம்சம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. நாங்கள் ஈசனின் திருவடிவாகவே ஆலயங்களைப் பார்க்கிறோம். ஈசனின் திருமேனியை அசுத்தமாக இருக்கவிடலாமா! எனவே, பயபக்தியோடு என்னால் இயன்றவரை இதைச் செய்து வருகிறேன். இந்தப் புண்ணிய கைங்கர்யத்துக்கு நற்பலனாக எட்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்தது...

ஒரு பணியை முடித்துவிட்டுத் திருவலம் நோக்கிச் செல்லும் சாலையில் நடந்துசென்றேன். இரவு நேரம்; நிலா வெளிச்சம் மட்டுமே இருந்தது. தூரத்தில் வயதான ஓர் அடியார் நின்றிருந்தார். அருகே சென்று சிவாயநம என்று சொல்லி வணங்கினேன்.

சிரித்தபடி ஆசீர்வதித்த அவர், திருநீறு கொடுத்து கூடவே வெள்ளியால் பூணிடப்பட்ட ருத்ராட்ச கண்டமணியைக் கொடுத்தார். அப்போது எனக்கு எந்த நினைவும் இல்லாமல் அவர் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந் தேன். ஒளியுடன் திகழ்ந்தது அவரின் திருமுகம். மெள்ள நடந்து திருவலம் ஆலயத்தின் பக்கமாகச் சென்று இருளில் மறைந்தார். அவர் மிதந்து செல்வதுபோன்றே எனக்குப் பட்டது.

சில நிமிடங்களுக்குப் பிறகே, நடந்தது அற்புதம் என்பது புத்திக்கு உறைக்க, ஓடிச்சென்று அடியார் கூட்டத்தில் சொன்னேன். `வந்தது சாமியாகவும் இருக்கலாம்' என்று சொல்லி கண்டமணியை அவர்களே கட்டிவிட்டார்கள். இப்போது கட்டியிருக்கும் மணிதான் ஐயா அது'' என்று பரவசத்தோடு கூறி முடித்தார் விக்னேஷ்.

`நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்று தம்மை தேச வரம்பற்றவன் என்று அறிவித்துக்கொண்டவர் நாவுக்கரசர். அவர் வழி வாழும் அடியார்களின் கூட்டமும் அப்படித்தான். அவர்களுக்குள் எந்த பேதங்களும் இல்லை. அதனால்தான் சொல்கிறோம் அப்பர் பெருமானின் அத்தனை லட்சணங்களும் உண்மையான அடியார்களிடம் காணப்படும். அவர்களில் இவரும் ஒருவர் என்பதை அறிந்து வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism