மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 26

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

சிவமே பரிபூரணம் அவரே நம் செல்வம்!

ஒரு ரிஷி மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரை அணுகிய ஒருவன், ``இவ்வழியே ஒருவர் சென்றார்.

அவரைக் கண்டீர்களா சுவாமி?'' என்று கேட்டான். ரிஷி சிரித்தபடியே ``30 ஆண்டுகளாக நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன், இன்னும் கண்டபாடில்லை. நீ யாரையோ பார்த்தாயா என்கிறாயே, வேடிக்கைதான் போ''என்றாராம்.

ஆம்... இதுதான் ஆன்மிகம். தன்னைத் தானே உணர்ந்துகொண்டு தான் ஒன்றுமே இல்லை என்பதை அறிந்துகொண்டு, தனக்கும் மேலான ஒன்றைப் பற்றிக்கொண்டு அதை ஊருக்குச் சொல்லிக்கொடுக்கும் நிலையே ஆன்மிகம். எதையும் துறப்பதில்லை ஆன்மிகம். ஆனால், எதையும் துறக்கத் தயாராக இருக்கும் நிலையே ஆன்மிகம். அறிந்ததிலிருந்து விடுபட்டு, உணர்ந்து கொள்ளும் நிலையே ஆன்மிகம். அறிந்து கொண்டது அறிவென்றால், உணர்ந்து கொண்டது ஞானம். இளமையிலேயே ஞானம் கொண்டவன் இறைவனுக்கு பிரியமானவன் எனலாம். கண்ணப்பர், சம்பந்தர், சுந்தரர்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே சிவத்தொண்டில் ஈடுபட்டு முழுமையான ஞானியாக ஓர் இளைஞர் வாழ்கிறார் என்று கேள்விப்பட்டு தூசி மாமண்டூர் சென்றோம்.

அங்கிருந்து அவர் தக்காம்பாளையம் என்ற ஊருக்குச் சென்றுள்ளார் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அங்கே குளத்தின் கரையில் சோலைகள் சூழ்ந்த ஓர் இடத்தில் அமைந்துள்ள லிங்கத் திருமேனியின் முன்பு அமர்ந்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். உருக்கமான அவர் குரலில் சிவபுராணம் தேனாக வடிந்து கொண்டிருந்தது. வழிபாடுகள் முடிந்ததும் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

``தன்னுடைய அம்சமாகவே மனிதனை ஈசன் படைத்தார். தன்னுடைய குணங் களையும் அவனுள் காண விரும்பினார். மனிதனோ தன்னையும் மறந்து ஈசனையும் மறந்து வாழ்ந்து வருகிறான். ஆனால், மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் ஈசனோடு இணைந்து வாழ்ந்து வருகின்றன. இந்தத் தென்னை மரத்தைப் பாருங்கள். இவை காய்த்து விருப்புவெறுப்பின்றி எவருக்கும் பலன் கொடுக்கும். தான் படைக்கப்பட்டதன் பலனைக் கொடுத்துவிட்டு அவை மறையும். நாம் அப்படியா வாழ்கிறோம்...'' என்று அவர் கேட்டதும் சிந்தை விரித்தோம்.

``ஓர் அடியார் சொர்க்கம், நரகம் என்ற பலன்களை எண்ணி சேவை செய்யக் கூடாது. சேவை செய்வதே வாழ்க்கை என்று வாழ வேண்டும். நம் பிரார்த்தனைகளிலும் இது வேண்டும்; அது வேண்டாம் என்று இருக்கக் கூடாது. `வேண்டத்தக்கது அறிவோய் நீ' என்றார் மாணிக்கவாசகர். விடியல் வேண்டும் என்று வேண்டுகிறாய்; இரவைப் படைத்தவனுக்கு விடியல் தரத் தெரியாதா என்ன... காத்திருக்க வேண்டும்; பொறுமை வேண்டும். அதுவே நம் தவம்.

உண்மையில் கடவுளை எண்ணி நாம் காத்திருப்பதில்லை. மாறாகக் கடவுள்தான் ஒவ்வொரு கணமும் நம்மை எண்ணிக் காத்திருக்கிறார். கர்மவினைகளை ஒழிக்கப் பிறப்பெடுத்தவன் தம்மை மேலும் மேலும் பந்தத்துக்குள் மூழ்கடித்துப் பிறப்பை நீட்டித்துக்கொள்கிறானே என்று வருத்தப்படு கிறார். மோதிரம் தொலைந்துபோனால் மோதிரம் வருந்துவதில்லை. தொலைத்தவனே வருந்துவான். நாம் மோதிரம். சீக்கிரம் விரலை அடைய வேண்டும் என்று வேண்டுவோம்'' என்று தத்துவமாக உதிர்த்துக்கொண்டிருந்தார்.

இவர் பெயர் கிருஷ்ணன். மற்றவர்கள் அழைப்பது சின்னமணி. ஊர், காஞ்சிபுரத்தை அடுத்த தூசி மாமண்டூர். எட்டாம் வகுப்புவரை படித்துள்ளார். வயது 27. விவசாயமும் மாடு மேய்த்தலும்தான் இவரின் குடும்பத் தொழில். அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகள், நான்கு அண்ணன்கள் எனப் பெரிய குடும்பம். விவரம் தெரியாத வயதிலேயே தூசி மாமண்டூர் சிவாலயத்தில் விளையாட்டாக வழிபாடு செய்யத் தொடங்கியவர் இன்றுவரை 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறார்.

தூசி மாமண்டூர் திருமால் நந்தீஸ்வரர் ஆலயத்தின் வெளியே உள்ள வில்வவன நாதரை தினமும் அலங்கரித்து வழிபடுவது இவர் வழக்கம். உழவாரப் பணிகள், திருவிழாக்களில் அலங்காரப் பணிகள் என ஓடிக்கொண்டே இருந்தாலும் எந்தச் சூழலிலும் ஆலய வழிபாட்டை நிறுத்தியதே இல்லையாம். தொடர்ந்து அவரிடம் பேசினோம்.

புண்ணிய புருஷர்கள்
புண்ணிய புருஷர்கள்

``வரலாற்றுச் சிறப்பும் புராணப் பெருமை களும் கொண்ட ஊர் தூசி மாமண்டூர். தூசி என்றால் குதிரைப்படை நிறுத்துமிடம் என்று பொருள். காஞ்சிக்கு அருகே உள்ள இந்த ஊரில்தான் பல்லவர்களின் குதிரைப் படை நிறுத்தப்பட்டிருந்ததாம். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலக் குடைவரைக் கோயில்களும் அவன் பெயரிலேயே அமைக்கப் பட்ட சித்திரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள தமிழி கல்வெட்டுகள் மிகவும் அரிதான தகவல்களைக் கூறுவன.

பழைமையான ஊரில் பிறந்ததாலோ என்னவோ சிறுவயது முதலே இறை வழிபாட்டில் மனம் ஈடுபட்டது. ஆரம்பத்தில் ஊரில் எந்த அடியாரும் இல்லாத நிலையில் தனித்து ஆலயப் பணிகள் செய்து வந்தேன். அடியார் கூட்டம் ஒன்றை அடையாளம் காட்டச் சொல்லி ஈசனிடம் விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தேன். கன்னியப்பன் என்ற ஓர் அடியார் ஒருமுறை என்னை உழவாரப் பணிக்காக அழைத்துச் சென்று அடியார் கூட்டத்தில் என்னை இணைத்துவிட்டார். அன்றிலிருந்து முறைப்படித் திருமுறைகள் பாடவும், பூஜைகள் செய்யவும் கற்றுக் கொண்டேன். லௌகிக வாழ்வில் எந்த நாட்டமுமின்றி இறை வழிபாட்டிலேயே என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆரம்பத்தில் என் வீட்டிலேயே எனக்கு எதிர்ப்புகள் வந்தன.

`சாமியெல்லாம் வேண்டாம், ஒழுங்காகப் படி' என்று சொல்லி வந்தார்கள். ஆனால், என்னை ஆட்டுவித்த ஆடல் பெருமான் தயவால் அடியார் சேவையே சகலமும் என்று இருந்துவிட்டேன். `சிவனை வணங்காதே, சோதனைகள் வரும்' என்றெல்லாம் பலரும் பயமுறுத்தினார்கள். யார் சொல்லியும், வழி காட்டியும் நான் இந்தப் பாதைக்கு வரவில்லை. எல்லாம் ஈசன் செயல் என்று சுவாமி உணர்த்திய வழியிலேயே தொடர்கிறேன். முன்பைவிட இப்போது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்கிறேன். இது போதும். சிவாய நம என்று சொல்லக்கூட ஆள் இல்லாத ஊரில் இப்போது பல அடியார்கள் உருவாகிவிட்டார்கள். எல்லாம் திருவருளும் குருவருளும் காட்டிய கருணை.

ஊர் ஊராகச் சென்று திருப்பணிகள் செய்துவந்தபோது இந்தத் தக்காம்பாளையம் என்ற ஊரில் ஒருமுறை என் குருவோடு சென்றுகொண்டிருந்தேன். அப்போது, `இந்தத் திருக்குளத்தில் சுவாமி மறைந்திருக்கிறார். அவரை வெளியே எடுத்து வழிபட வேண்டும்' என்று என் குருநாதர் அருளினார். அதன்படியே இந்தக் குளத்திலிருந்து இந்த சுவாமியையும் ஒரு பைரவர் மூர்த்தத்தையும் எடுத்தோம்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்தத் திருமேனி ஒரு காலத்தில் பெரிய சிவாலயத்தில் இருந்திருக்க வேண்டும். அந்நியர் படையெடுப்பில் இவ்வாறு வீசப்பட்டு மறைந்து போயுள்ளது. வெளியே எடுத்த நாளிலிருந்து இன்றுவரை இவரை அலங்கரித்து வழிபட்டு வருகிறேன். ஒருநாள் நிச்சயம் இவருக்கெனப் பெரிய ஆலயம் எழும். அதை என் பெருமானே நிகழ்த்துவார் என நம்புகிறேன்.

ஈசனுக்கான பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் அவருக்காக இல்லை ஐயா. எனக்காக என்றே தோன்றுகிறது. மனமுருகி அவரை வணங்கும்போதெல்லாம் அழுகை முட்டுகிறது. என்னுள் ஆன்ம விசாரணைகள் எழுகின்றன. திருமுறைகளே சைவ வேதம். அதில் எல்லா ஞானங்களும் உள்ளன. அதை உள்ளுணர்ந்து வாசித்தவர் எல்லோருமே ஞானவான்கள்தான். ஞானம் வந்ததால்தான் நாதன் தாளைப் பற்றிக்கொண்டோம்.

இவன் ஈசன்; இவனைப் பற்றிக் கொண்டால் பிறவிப் பெருங்கடலை நீந்திவிடலாம் என்று தெரியாமலே எண்ணி ஆறே நாள்களில் சிவபதம் பற்றும் பேற்றினை அடைந்த கண்ணப்ப நாயனாரை அறிந்த பின்னர் மனம் வேறு எந்த விஷயத் திலும் ஈடுபடுமா! வேடுவர் குலத்தில் பிறந்து வேறெந்தக் கல்வியும் பெறாத நிலையிலும் கண்ணப்பரின் அன்பல்லவா ஈசனைக் கட்டி வைத்தது. `அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெல்லாம் நமக்கினியன' என்று ஈசனாரே போற்றிப் புகழ்ந்த அன்புருவம் அல்லவா கண்ணப்பர். அதனால்தானே மாணிக்கவாசகரும்

`கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்...'

என்று நெக்குருகிப் பாடினார். மேலும் `கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், `நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்' எனப் பட்டினத்தடிகளும் பாடிப் பாடி பரவசப்பட்டார்கள். ஈசனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னவர் கண்ணப்பர்.

பணம், புகழ் எதிலும் பற்று இல்லை ஐயா. ஈசனோடும் அவரின் அடியாரோடும் இணக்கமாக வாழ வேண்டும். அதுவே என்னைக் கடைத்தேற்றி விட்டுவிடும். `பணம்தான் பெரிது; அதைத் தேடும் வழியைப் பார்' என்று சொல்கிறார்கள். நாம் மதிப்பு கொடுப்பதால்தான் அது பணம். ஒரு கழுதையிடம் அதைக் கொடுத்துப் பாருங்கள்; அதன் மதிப்பு தெரிந்துவிடும். ஈசனே பரிபூரணன்; அதனால் அவனே செல்வம். அந்த செல்வத்தைச் சேர்த்துக்கொள்வோம். அதுவே கடைவழிக்கான செலாவணி. மறுமைக்கான செல்வம் சிவனே என்று உணர்ந்துகொண்டவர், சித்த விகாரக் கலக்கத்தில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.

எல்லா உயிரையும் நேசிப்பவன் இறைவனால் நேசிக்கப்படுகிறான். படைப்பை அறிந்தவன் படைத்தவனை அறிகிறான் என்பதே சைவ சித்தாந்தத்தின் சாராம்சம். எல்லாவற்றிலும் இருக்கும் ஈசனை எப்போதும் அன்போடு ஆராதிக்க வேண்டும் என்பதே இந்த எளியோனின் விருப்பம். பக்தியைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. உணர வேண்டும். உணர்ந்து பாருங்கள், என் ஈசனை. மற்ற எல்லாமே வெறும் தூசாகப் போய்விடும்'' என்று மெய்யன்போடு பேசி முடித்தார் சின்னமணி.

உண்மையான நேசத்தோடு இறைவனை ஆராதிக்கும் சின்னமணி ஐயாவின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். சத்தியமான வார்த்தைகள் யாவும் ஓர் அழியாத கல்வெட்டுதான். ஒரு சுடரைப்போல இவரிடம் சத்தியம் ஒளி வீசுகிறது. அதில் சமூக இருள் விலகட்டும் என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றோம்.

-அடியார்கள் வருவார்கள்...