மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

பக்தியை வளர்க்கும் உன்னத கருவிகளாகவே நம் கலைகள் உருவாயின.

ண்மையான பக்தியே ஜீவனை முக்தியடையச் செய்யும் திறவுகோலாக அமைகிறது.

அழிவில்லா தேகம், பகையில்லா உறவு, பக்குவமான ஞானம், நிரந்தர நிம்மதி, நிலைக்கும் அமைதி... இவை எதையும் செல்வ வளத்தால் பெற்றுவிட முடியாது. ஆழ்ந்த பக்தியும் அதன் வெளிப்பாடான அன்புமே எதையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது.

பக்தியை வளர்க்கும் உன்னத கருவிகளாகவே நம் கலைகள் உருவாயின. பக்தியை விலக்கி விட்டால் நம் இசையும் நாட்டியமும் சுவை குன்றிய வெறும் பாடங்களாகவே இருந்துவிடும். இசையால் ஈசனைத் துதிக்கும்போதும், நாட்டியம் கண்டு நடராஜரை வியக்கும்போதும் அந்தக் கலைகள் புத்துயிர் பெறுகின்றன. ஆம், இசையும் நாட்டியமும் இறைவனின் கலைகள். இவற்றைக்கொண்டே இறைப்பணி செய்து வரும் கலைஞர்கள் இருவரே, இந்த இதழில் நாம் காணப்போகும் புண்ணிய புருஷர்கள்.

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

தஞ்சை மாவட்டம் - பாபநாசம் திருப்பாலைத்துறை அருள்மிகு பாலைவனநாதர் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் அடியார்கள் சொல்லித்தான் இந்தச் சகோதரிகளைச் சந்தித்தோம். ஈசன், அடியார்கள் திருக்கூட்டம், திருமுறைகள் என்று பேசும்போதெல்லாம் இவர்கள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி!

“இசையும் நாட்டியமும் இறைவனைத் தொழுவதற்கான மகிழ்ச்சியான முறை ஐயா...’’ என்று பேசத் தொடங்கிய இருவரிலும் மூத்தவர் பெயர் சிவஜெகதீஸ்வரி; பத்தாம் வகுப்பு பயில்கிறார், இளையவர் பெயர் சிவஸ்ரீலக்ஷிதா; ஆறாம் வகுப்பு பயில்கிறார்.

மூன்று வயது முதலே இசை மற்றும் நாட்டியப் பயிற்சிகளைத் தொடங்கிய இவர்கள், தங்கள் கலையை சிவத் தொண்டாக செய்துவருகிறார்கள். ஆலயம்தோறும் சென்று திருமுறைகளைப் பாடி, அடியார் பெருமக்களை மகிழ்வித்து வருகிறார்கள். திருமுறைகளை உரிய தமிழ்ப் பண்ணோடு பாடவேண்டும் என்பதற்காக கலைமாமணி சங்கீத சாம்ராட் திருச்சி நா.சுவாமிநாதன் ஓதுவாரிடம் ஆறு வருடங்களாக முறைப்படி பயின்றுள்ளார்கள். அப்படி தாங்கள் பயின்றதை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தின் அநேக ஆலயங்களில் கணீரென்று ஒலிக்கும் இவர்களின் திருமுறைப் பாடல்களின் ஒலி, ஈசனுக்கான பூஜை மணி ஓசையாகவே ஒலிக்கிறது எனலாம். தந்தை சீனிவாசன், சுயதொழில் செய்து வருகிறார். தாயார் தேவிலக்ஷ்மி, இசை மற்றும் நாட்டிய ஆசிரியராக இருந்து வருகிறார். ஆக, தாயே குருவாக இருந்து இவர்களின் சிறுவயதில் கலைகளைக் கற்றுத் தந்தாராம். தலைமுறை தலைமுறையாக சிவனடியார்களாகத் திகழ்ந்த குடும்பம் இவர்களுடையது.

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

`பாடினால் திருமுறைகள்... ஆடினால் ஈசனின் அருள் வியந்து...’ என்ற நிலையில் இவர்கள் வாழ்க்கை மாறிப்போக, தமிழகமெங்கும் இவர்கள் இசைக்கும் திருமுறை தனிக் கச்சேரிகள் பிரபலமாகி வருகின்றன.

“இசையின் வடிவான ஈசனை, நாயன்மார்கள் வகுத்தளித்த தமிழ்ப்பண் முறைகொண்டு பாடும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. சகல இன்னல்களுக்கும் தீர்வாக அருமருந்தாகத் திகழும் திருமுறைகளை உணர்ந்து உருகிப் பாடும்போது, அந்த இறைவனை நேரில் தரிசித்த பேரின்பம் உண்டாகிறது ஐயா. ஓசையையும் அதைக் கடத்தும் காற்றையும் அவனே படைத்தான் எனும்போது, இங்கு எதை நாம் செய்கிறோம்... வெறுமனே நாம் வாயசைக்கிறோம்; இசைப்பதும் இசையாவதும் அவன்தானே ஐயா” என்கிறார்கள் இவர்கள்.

திருவாவடுதுறை ஆதீனம் அளித்த பண்ணிசை மணிகள் விருது, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா நினைவு அறக்கட்டளை அளித்த விருது, வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் ஐயா அவர்களின் சுந்தரவல்லி அம்மையார் நினைவு அறக்கட்டளை வழங்கிய பரிசு என பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர்கள் இந்தச் சகோதரிகள்.

இசை மற்றும் நாட்டியத் தொண்டு மட்டுமன்றி, விரைவில் குடமுழுக்கு காணவிருக்கும் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் ஆலயத் திருப்பணியில் இவர்கள் குடும்பமே இயங்கி வருகிறது.

``எங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் எங்கள் குருவே காரணம். ஜோதிமலை இறைப்பணிக் கூட்டத்தின் குருவான திருவடிக்குடில் சுவாமிகளே எங்கள் ஞான குரு. அவர்கள் வழிகாட்டலின்படியே நாங்கள் இந்த எளிய பணியைச் செய்து வருகிறோம். அவர் திருவருளால் ஒரு குறையுமில்லாமல் வாழ்ந்துவருகிறோம். எங்களுக்கு எல்லாமே ஈசன் என்னும்போது, எங்கள் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அவன் காட்டிய திருவருள் அநேகம் ஐயா. நாங்கள் பண்ணிசை மணிகள் விருது பெற்றதே இறைவன் கருணையால்தான்.

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

ஓர் அற்புதம்... சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால் உண்மை! கும்பகோணத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நம் பாரம்பர்ய கலைஞர்களைத் தேடி விருது வழங்க பரிந்துரைத்து வந்துள்ளார். நாங்கள் பண்ணிசை மணிகள் விருதுபெற்ற அந்த ஆண்டு, கண்ணன் ஐயாவின் கனவில் தோன்றிய ஈசன், எங்களுக்கு விருது வழங்குமாறு அருள்பாலித்தாராம். அதன்படியே திருப்பாலைத்துறைக்கு வந்த அவர், அங்கிருந்த அடியார் பெருமக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு எங்களைச் சந்தித்தார். ஈசன் தன் கனவில் வந்து கட்டளையிட்டதை அவர் கூறியபோது, உணர்ச்சிப் பெருக்கால் உருகிவிட்டோம் ஐயா. எளியோர்க்கு எளியோனான எங்கள் ஈசன், நம்பியவர் எவரையும் நலம் கொள்ளச் செய்வார்” என்று சிலிர்ப்பும் பரவசமுமாகப் பகிர்ந்துகொண்ட சகோதரிகள் இருவரும், வேறோர் அனுபவத்தையும் விளக்கினார்கள்.

``ஒருமுறை முருக பக்தரான முதியவர் ஒருவர், ‘தகப்பன் ஸ்வாமியான எங்கள் முருகப்பெருமான் மீது பாட மாட்டீர்களா!’ என்று கேட்டார். கேட்டவர், முருகப்பெருமானின் அம்சமே என்று எண்ணி வணங்கினோம். இறைவன் திருவருள் உண்டென்றால், முருகப்பெருமானைப் போற்றும் திருப்புகழால் பாடித் துதிக்கும் பாக்கியத்தை அவரே அருளட்டும் என்று வேண்டிக்கொண்டோம். என்ன ஆச்சர்யம் பாருங்கள்... சில நாள்களிலேயே அடியார்கள் சிலர் பரிந்துரைக்க, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தார், சென்னை வடபழநி ஆலயத்தில் திருப்புகழ் பாடும் பேற்றினை அளித்தார்கள். இப்படி எண்ணிய வாய்ப்புகளையெல்லாம் அருளியவர்கள் ஈசனும் அவர்தம் அடியார்களும்தான்” என்கிறார்கள் இந்த இறைப்பணி சகோதரிகள்.

``2016-ம் ஆண்டு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா அவர்கள் நினைவுப்பரிசை என் பெரிய பெண் பெற்றபோது, அவள் வயது 12. திருமுறைகளைத் தமிழ்ப்பண்ணில் பாடி முதல் பரிசை இவளுக்கு அளிக்க வந்தபோது, கடம் விநாயக்ராம் மகிழ்ந்து பாராட்டி, இவள் பாடலுக்கு கடம் வாசித்தும் ஆசீர்வதித்தார். இந்தப் பெருமைகள் எல்லாம் ஈசனுக்கே உரியது’’ என்று நெகிழ்கிறார் இவர்களின் தந்தை சீனிவாசன்.

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

``சோலையின் சொந்தக்காரன் காய்களையும் மட்டைகளையும் எடுத்துக்கொள்வான். கவிஞனோ அதன் சுகந்தங்களையெல்லாம் எடுத்துக் கொள்வான் என்பார்கள். இந்த விருதுகளும் செல்வங்களும் எங்களை ஊக்கப்படுத்துகின்றன என்றாலும், திருமுறைகளின் வழியே இறைவனை உணர வேண்டும். உலகமெல்லாம் திருமுறைகள் ஓதப்பட்டு சைவம் செழிக்க வேண்டும். அதற்கு இந்த எளியவர்களின் பணி சிறிதேனும் பயன்பட்டால், அதுவே நாங்கள் பெறும் பேறு’’ என்கிறார்கள் இந்தப் பெண்கள்.

``பெரியவளுக்குச் சுந்தரமூர்த்தி நாயனார்மீது அளவற்ற பக்தி. சிறியவளுக்கு திருஞானசம்பந்த மூர்த்தி பெருமான்மீது பக்தி. அதனால் இருவருமே அவர்கள்மீது ஒரு நாட்டிய நாடகம் இயற்ற விரும்பி, தற்போது எழுதி இசையமைத்து வருகிறார்கள். கூடிய விரைவில் இறைவன் அருளால் சுந்தரமூர்த்தி நாயனார், சம்பந்த பெருமான் பெருமைகளைச் சொல்லும் நாட்டிய நாடகம் அரங்கேறவுள்ளது’’ என்கிறார் இவர்களின் தாயார்.

``என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் நாவுக்கரசப் பெருமான். அதேபோல் ஈசனின் கடன் ‘அடியேனையும் தாங்குதல்’ என்றார். அதாவது ஈசன் தன்னைக் காப்பதால், அவர்தம் அடியார்க்குப் பணி செய்து கிடப்பதே தன் கடன் எனத் தொண்டாற்றினார் வாகீசப் பெருமான். எங்களுக்கும் அதே ஆசை. ஈசனையும் ஈசனின் அடியார்களையும் பணிந்து வாழ்வதே எங்கள் பணியாக இருக்க வேண்டும். அதற்கு எங்கள் திருப்பாலைவனநாதர் அருள வேண்டும்.

பெறற்கரிய மானிடப் பிறப்பை அளித்த எங்கள் ஈசனாருக்கு எங்கள் இசையும் நாட்டியமும் அர்ப்பணமாக வேண்டும். எங்கள் கலையும் வாழ்வும் சிவபெருமானுக்கான தொண்டாக அமைய வேண்டும். அதுவே எங்கள் பெற்றோர், குருமார்களின் விருப்பமும்’’ என்று கூறி இறைவனை நெகிழ்ந்து நெக்குருகி வணங்கினார்கள் இளம் சகோதரிகள் இருவரும்.

சுயநலமில்லா பொதுநல விருப்பங்கள் எதையும் இறைவன் எப்போதும் நிறைவேற்றி வைப்பார் என்பது அடியார்களின் சாட்சி வாக்கு. இசையும் நாட்டியமுமாக வாழும் இந்தச் சிறுமிகளின் வாழ்வும் சிறப்பாக அமைய நாமும் அந்தச் சிவபெருமானை வேண்டிக்கொண்டு விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள் ...

சந்தனமும் தகிக்கும்!

ஸ்ரீராகவேந்திரர் சந்நியாசம் பூணுவதற்கு முன்பு அவரது பெயர் வேங்கட பட்டர். ஒரு முறை அவர் செல்வந்தர் ஒருவரது வீட்டில் நடந்த யாகத்துக்குச் சென்றிருந்தார்.

புண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா!’

அங்கு யாகம் நடத்திய புரோகிதர், வறுமைக் கோலத்தில் இருந்த வேங்கட பட்டரை ஏளனத்துடன் பார்த்து, வந்திருப்பவர்களுக்குச் சந்தனம் அரைத்துத் தரும் வேலை தந்தார். வேங்கட பட்டரும் மந்திரங்களை ஜெபித்து சந்தனம் அரைத்து வழங்கினார்.

சந்தனத்தைப் பூசிக்கொண்டவர்களுக்கு சற்று நேரத்தில் உடம்பு நெருப்பாகத் தகிக்க ஆரம்பித்தது. உடல் எரிச்சலால் தவித்த அவர்களது நிலையைக்கண்ட புரோகிதர், வேங்கட பட்டரிடம் விசாரித்தார்.

வேங்கட பட்டர், ‘‘அக்னி மந்திரம் உச்சரித்த வண்ணம் சந்தனம் அரைத்ததால் இப்படி நிகழ்ந்திருக்கலாம். இப்போது வருண மந்திரம் ஜபிக்கிறேன். எரிச்சல் அடங்கி விடும்!’’ என்று வருண மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தார். அடுத்த கணமே எல்லோருக்கும் உடல் எரிச்சலும் சட்டென நீங்கியது. வேங்கட பட்டர் ஒரு பெரிய மகான் என்பதை புரோகிதரும் அங்கிருந்த மற்றவர்களும் உணர்ந்தனர்.

- ஆர்.ராஜலட்சுமி, கரூர்.