மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 28

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

ஆலயத்தைச் சுற்றியுள்ள இடத்தில் ஒரு வனத்தையே உருவாக்கியிருக்கிறார்.

மதுரைக்குக் கடம்பம், மயிலைக்குப் புன்னை, திருவொற்றியூருக்கு மகிழம், காஞ்சிக்கு மா, குற்றாலத்துக்குக் குறும்பலா என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தல விருட்சமாக முதன்முதலில் அமைத்து, பெருமை கொண்டவன் கோச்செங்கணான்.

சோழப் பேரரசன் என்று தம்மைப் போற்றுவதைவிடவும், சிவனடிமை என்று தன்னை அடியார்கள் ஏற்றுக்கொள்வதையே பாக்கியமாகக் கொண்டவன் கோச்செங்கணான்.

திருவானைக்காவலில் வழிபட்ட சிலந்தி, மறுபிறவியில் மாமன்னன் ஆனது. அவனே கோச்செங்கணான். இந்த மன்னவனே யானை புக முடியாத 70 ஆலயங்களை எழுப்பி 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினான். அதுமட்டுமா... காடுகள் திருத்தப்பட்டு பல நகரங்கள் உருவானதும் இவன் காலத்தில்தான். அவ்வகையில், எந்தத் தலத்தில் எவ்வகை விருட்சங்கள் அடர்ந்திருந்தன என்பதை எதிர்காலத்துக்கு அறிவிக்க நினைத்து, அதையே அங்குள்ள கோயில்களில் தல விருட்சமாகவும் அமைத்து வைத்தான். அதன் மூலம் அபூர்வமான விருட்சங்களை அழிந்துவிடாதபடி காத்தான் என்றே சொல்லலாம்.

புண்ணிய புருஷர்கள் - 28

ஆலயம்தோறும் வளாகத்திலும் சுற்றுப் புறத்திலுமாக நூற்றுக்கணக்கான தல விருட்சங்கள் இருந்த காலம் போய் இன்று வில்வம், வன்னி, புன்னை, மா, வாழை போன்ற சில தல மரங்கள் மட்டுமே உள்ளன. தில்லையம்பதியின் தல விருட்சமான தில்லை மரம் இப்போது இல்லை என்பது சோகமான உண்மை. இப்படி, அழிந்துவரும் பல வகையான தல விருட்சங்களை மீட்டெடுக்கும் புண்ணிய காரியத்தைச் செய்து வருகிறார் கிருஷ்ணமூர்த்தி என்ற அடியவர் என்று அறிந்தோம். `அவரின் வாழ்வே ஒரு தவம் என்று சொல்லத்தக்க வகையில் வாழ்ந்து வருகிறார்’ என்று அடியார் பெருமக்கள் பலரும் சொல்ல, அவரைச் சந்திக்க விரும்பினோம். வாலாஜா வட்டம், வள்ளுவம்பாக்கம் என்ற கிராமத்துக்கு விரைந்தோம்.

அந்தக் கிராமத்தின் வெளியே அற்புதமான வழிபாடுகளுடன் திகழும் ஒரு சிவாலயம் உள்ளது. அதைச் சுற்றி பல வகை மரங்களைக் கொண்ட ஒரு சிறிய வனமும் இருக்கிறது. அங்குதான் கிருஷ்ணமூர்த்தி ஐயாவைச் சந்தித்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதர்மண்டிக் கிடந்ததாம் இந்த இடம். புதர்களைக் களைந்து இடத்தைத் திருத்தி, ஐந்து ஆண்டுகளாக அங்கேயே தங்கியிருந்து ஆலயத்தைப் புனரமைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி ஐயா.

புண்ணிய புருஷர்கள் - 28

அதுமட்டுமா... ஆலயத்தைச் சுற்றியுள்ள இடத்தில் ஒரு வனத்தையே உருவாக்கியிருக்கிறார். இதுகுறித்து விவரம் கேட்டால் வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

“என்னமோ... ஸ்வாமி கட்டளை யிட்டாற்போல இருந்தது. இங்கேயே கிடந்து இந்தப் பணிகளைச் செய்து வருகிறேன்” என்கிறார்.

அதே ஊரிலேயே இவர் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இவரோ இறைப்பணிக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார் எனலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆலயப் பணி மற்றும் விருட்சங்களை வளர்க்கும் பணியை மட்டுமே செய்துவருகிறார். விருட்சப் பணியின் மகத்துவம் குறித்து அவரே விளக்கினார்.

``கோயிலின் தல விருட்சம் என்றால் சும்மா இல்லை. ஒரு கோயில் கட்டப் படுவதற்கு முன்பு, இறைவன் எழுந்தருளி இருந்த இடம் விருட்ச ஸ்தானம் என்றே சொல்லலாம். அதனால் கடவுளுக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு. மரங்களே இறைசக்தியின் நுட்பமான வெளிப்பாடு. நம் தென்னாட்டை நாவலந்தீவு என்றே ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். மரங்களின் பெயரால்தான் நம் தமிழ்நாட்டில் அநேக ஊர்கள் அமைந்துள்ளன.

புண்ணிய புருஷர்கள் - 28

சங்க இலக்கியங்கள், மரங்களை வழிபாட்டுக்குரியவை என்று குறிப்பிடுவதுடன், அவை எந்த கடவுளுக்குரியவை என்றும் குறிப்பிடு கின்றன. ஆலமரம் என்பது சிவன், கடம்பம் என்பது முருகன்... இப்படி விருட்சங்களின் தெய்வத் தன்மையை அவை சுட்டிக்காட்டுகின்றன.

மரங்கள் இறைத்தன்மையுடன் திகழ்வதைத் தாண்டி, அந்த மரங்களின் கீழே தெய்வத்தை வைத்தும் மனிதன் வழிபடத்தொடங்கினான். இதை ‘வ்ரிக்‌ஷ சைத்தியர்’ என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அடர்ந்த மரங்கள் நிறைந்த வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கங்களை தேவர்கள் வழிபட்டார்கள் என்றும் அந்த வனத்தில் பெரும்பான்மையாகத் திகழ்ந்த மரமே பிற்காலத்தில் அங்கு அமைந்த தலத்தின் விருட்சமானது என்றும் ஒரு கருத்து உண்டு.

அதேபோல், ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு மரம் அடையாளமாக இருந்தது என்றும் அதை அந்தக் குலத்தினர் தாங்கள் குடிபெயரும் இடங்களிலும் நட்டு வளர்த்து, அங்கே கோயில் எழுப்பி, அந்த மரத்தையே தல விருட்சமாக்கினார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு. எது எப்படியோ ஸ்வாமிக்கு நிகரானவை மரங்கள். அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அழிந்துபோன பல அபூர்வத் தல விருட்சங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த எளியேனின் விருப்பம்’’ என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி, பேச்சைச் சற்று நிறுத்தி. சில கணங்கள் அங்கிருந்த விருட்சங்களின் மீது பார்வையைச் செலுத்தினார். அவ்வேளையின் அவரின் திருமுகத்தில் பூரிப்பு - பரவசம்!

புண்ணிய புருஷர்கள் - 28

விளக்கத்துக்குச் சற்று இடைவெளி விட்டவர், பிறகு மீண்டும் தொடர்ந்தார்...

``கவனத்தில் கொள்ளுங்கள்... ஓர் ஆலயம் சிதிலமடைந்து போனால் காலப்போக்கில் அதன் தல விருட்சமும் அழிவைச் சந்தித்திருக்கும். அப்படியான ஆலயங்களையாவது இனம் கண்டு புனரமைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தல விருட்சங்களை எப்படித் தேடுவது. ஆகவே, தல விருட்சங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இப்போது எங்கெங்கோ அலைந்து திரிந்து விதைகளையும் மரக்கன்றுகளையும் தேடிக் கொண்டு வந்து நட்டு, மரங்களை வளர்த்து வருகிறோம். விழல், விழுதி, வெல்வேல், காரை, கல்லத்தி, கவம்பு, கட்டாத்தி... என எத்தனையோ மரங்களை தொலைத்துவிட்டோம். ஸ்வாமியின் பெயரால் பாதுகாக்கப்பட்ட இப்படியான மரங்களையெல்லாம் நாத்திகம் பேசி அழித்துவிட்டோம். அவற்றோடு நம் பாரம்பர்ய மருத்துவமும் அழிந்துபோகும் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு விருட்சமும், அவை வளர்ந்து நிற்கும் பகுதியில் அடிக்கடி உருவாகும் நோய்க்கான மருந்து என்பதை நாம் உணரவே இல்லை!’’ - தன் வேதனையைப் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தி ஐயா, `இனி விருட்சங்களைப் பாதுகாப்பதற்கு இதுதான் வழி...’ என்று தன் திட்டங்களையும் முன்வைத்தார்.

``ஆலயத்தோடு மரங்கள் இருப்பது அவசியம். ஒவ்வொரு கோயிலிலும் நந்தவனங்கள் அமைக்கப்பட வேண்டும். அடியார்கள் அனைவரும் தங்கள் ஊர் ஆலயத்தில் பல்வேறு மூலிகைகளைக் கொண்ட நந்தவனங்களை அமைக்க வேண்டும். நுண்கிருமிகளை விரட்டும் அபூர்வ மூலிகை வனங்கள் திருக்கோயில்களின் பெயரால் வளர்க்கப்பட வேண்டும். இதுவே இப்போதைய அவசியம்.’’

அவர் கூறியதை ஆமோதித்தபடி, ``ஐயா! உங்களுக்கென்று விருப்பம், ஆசை என்று எதுவுமே இல்லையா?’’ என்று கேட்டோம்.

``பொருளாதார அடிப்படையில் இந்த எளியேனால் என் ஈசனுக்கு எதையும் செய்ய முடியாது. ஆனால், தேக உழைப்பால் செய்ய இயலும். என்னால் இயன்றதைச் செய்து ஈசனைத் தொழுகிறேன். இந்த உடலும் உணர்வும் ஈசன் போட்ட பிக்ஷை, அவற்றை அவனுக்காகவே அர்ப்பணிப்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. எனக்கான லௌகீக வாழ்வில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த இடத்தைத் தவிர வேறெங்கும் எனக்கு நிம்மதியும் இல்லை.

ஒவ்வொரு நாளும் இங்கு ஈசனோடு தங்குகிறேன். இந்த இடத்தில் ஈசன் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஒவ்வொரு நாள் இரவிலும் இங்கு விபூதி வாசத்தை நுகர்கிறேன்; மெல்லிய அளவில் டமருகத்தின் ஓசையையும் செவிமடுக்கிறேன்... சிவத்தின் இருப்பை உணர்கிறேன். எனக்கு, ஸ்வாமி மட்டும் போதும் ஐயா. இந்தப் பிறவியைக் கடக்கவும் சிவ பதத்தை அடையவும் சிவம் மட்டுமே போதும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அதைத் தவிர வேறெதையும் நான் எப்போதும் எங்கேயும் வேண்டியதில்லை. எனக்கென்று எந்த ஆசையும் இல்லை. அதனால் எனக்கு வருமானமோ, உலக தொடர்புகளோ தேவையில்லை. பூனைக்கு மீனிருக்க, புளியங்காயைத் தேடுவானேன்!’’

இமைகளை மூடி, கண்கள் கசிய, இறைச் சிந்தையோடு கிருஷ்ணமூர்த்தி ஐயா பேசப் பேச... உருகிப்போனோம் நாம்.

இந்தச் சிவப்பணியில் இவருக்கு ஐந்து நண்பர்கள் உதவி செய்கிறார்கள். பொன் பொருள் என்று சேர்ப்பவர்களுக்குத்தானே சிரமங்களும் பிரச்னைகளும். எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டவர்களுக்கு சகலத்திலும் சுதந்திரம் அல்லவா... அவ்வித உணர்வோடும் மகிழ்வோடும் இமைப்பொழுதும் மறவாமல் ஈசனை ஆராதித்து மகிழ்கிறார்கள் இவரைப் போன்ற அடியார்கள்.

``ஈசனோடு மானசீகமாகப் பேசிக்கொள்வதும் பழகிக்கொள்வதும் தான் எனக்கான ஒரே சந்தோஷம். நீங்களும் ஈசனோடு பழகிப் பாருங்கள். அவனே தாயாகவும் குழந்தையாகவும் இருந்து மகிழ்விக்கும் பேரின்பத்தை உணர்வீர்கள்’’ என்று நமக்கான ஆசியுரை போன்று அடியவர் சொல்ல, நெகிழ்ச்சியின் விளைவாய் எதுவும் பேசத் தோன்றாமல், அவரை வணங்கி விடைபெற்றோம்.

சிறிது தூரம் கடப்பதற்குள் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் கணீர் குரல் கேட்டது.

`கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்த எல்லை இலாதானே எம் ஈசனே ...”

அடியார் உரக்கக் குரலெடுத்துப் பாடுவது கேட்டது. மேனியெங்கும் சிலிர்க்க நாம் திரும்பி நின்று வணங்கினோம்.

அந்த ஆலயத்துக்குள் மட்டுமல்ல, அது அமைந்திருக்கும் இடம், சுற்றியுள்ள வனம், அடியாரின் பாட்டு... அனைத்திலும் சத்திய சொரூபமாய் வியாபித்திருந்தது சிவம்!

- அடியார்கள் வருவார்கள்...

தீர்த்தபுரிகள்!

ங்கை முதலான தீர்த்தங்களால் சிறப்புப் பெற்ற காசிக்கு `தீர்த்த ராஜ தலம்' எனும் சிறப்பு உண்டு. தென்னக்கத்திலும் பல தலங்கள் தீர்த்தபுரி, தீர்த்த நகர் எனப் பெயர் பெற்று விளங்குகின்றன.

புண்ணிய புருஷர்கள் - 28

திருத்துறைப்பூண்டியை நவகோடி தீர்த்த புரம் என்று புராணங்கள் சிறப்பிக்கின்றன. இவ்வூர் தலபுராணம் இங்கு உறையும் இறைவனை நவகோடி தீர்த்தேசுவரர் என்றும் தியாகேசரை தீர்த்தவிடங்கர் என்றும் அம்பிகையைத் தீர்த்தவல்லி என்றும் போற்றுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஆரூருக்கு அருகில் உள்ள தீர்த்தமலையும் தீர்த்தங்களுக்குப் பெயர் பெற்றது.

காஞ்சியில் சர்வ தீர்த்தக் குளத்தின் கரையில் தீர்த்தேசுவரம் ஆலயத்தில், ஈசன் தீர்த்தேசுவரராக அருள் கிறார்.

ஓவியம்: கார்த்தியாயினி