மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 29: 'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

அடியார்களைச் சிவமாகப் போற்றும் அடியார்!

வேடர் கண்ணப்பரையே தரிசிப்பது போலிருந்தது, அந்த அடியாரைப் பார்த்தபோது. எளிமையும் கருணையும் நிறைந்த தோற்றம்.

அதிகம் படித்ததில்லை; ஆன்மிகம் குறித்தும் அதிகம் தெரிந்திருக்கவில்லை; பேசுவதும் மிகக் குறைவு. ஆனாலும் என்ன... ஈசனிடமும் அவர் தம் அடியார்களிடத்தும் அதீத பக்தியைக்கொண்டிருக்கிறார். ஈசனைப் பற்றி எவர் பேசினாலும் உருகிவிடுகிறார். அடியார் களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் புண்ணிய புருஷரைச் சந்திக்க காஞ்சிபுரம் மாவட்டம் சங்கரன்பாடிக்குச் சென்றோம்.

அழகான கிராமம். ஊரின் எல்லையில் இருக்கும் சிறு கோயிலில் ஆத்மநாதர் எனும் திருப்பெயருடன் ஈசன் குடிகொண்டுள்ளார். அவருக்கு பூஜைகள் செய்வதும் அந்தக் கோயிலைப் பராமரிப்பதும்தான் நம் அடியாரின் பணியாக இருக்கும் என்று எண்ணினோம். ஆனால், “இல்லை ஐயா” என்று பதில் வந்தது அவ்வூர் அடியார்களிடமிருந்து.

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

அவர்களே நம் புண்ணிய புருஷரைப் பற்றிச் சிலாகிப்புடன் விவரித்தார்கள். “பிறருக்காகவே வாழும் நல்ல ஆன்மா இவர். எங்கள் ஊரில் எண்ணிக்கையில் அதிகமான அடியார் கூட்டம் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இந்த ஐயாதான். நாங்கள் ஈசனுக்குத் தொண்டு செய்து வாழ்கிறோம் என்றால், இவர் ஈசனின் அடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்கிறார்.சிவனடியார்கள் உழவாரத் திருப்பணிக்காக வெளியூர் சென்றால், இவர்தான் அவர்களின் தோட்ட வேலைகளை, வீட்டு வேலை களைப் பார்ப்பார். எல்லோரும் ஏதேனும் சிவாலயத் திருவிழாவுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தால், இவர் வரமாட்டார். எங்கள் ஊர் சிவாலயப் பணிகளை மேற்கொள்வார். அதுமட்டுமா... அடியார்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடிச்சென்று உதவுவார். அதேநேரம் தான் அவர்களுக்கு உதவுகிறோம் என்பதைக்கூட உணராத கருணை உள்ளம் கொண்டவர்” என்றார்கள் நெகிழ்ச்சியுடன்.

அடியார்கள் சொல்லச் சொல்ல நமக்குப் புரிந்தது... அந்த அடியாரைப் பார்த்ததும் நமக்குள் ஏன் கண்ணப்பருடன் அவரை ஒப்பிட்டு நோக்க தோன்றியது என்று?!

நாயன்மார்களில் கண்ணப்பருக்குச் சிறப்பிடம் உண்டு. மற்றவர்கள், ஈசனை வணங்கினால் முக்தியும் பிறவா பேரின்பமும் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள். ஆனால், திண்ணனான கண்ணப்பனுக்கோ ஒன்றுமே தெரியாது. ஜன்ம ஜன்மமாய்த் தொடர்ந்த அன்பின் விளைவால், மலைமீது சுவாமியைப் பார்த்ததும் தழுவிக் கொண்டார்.

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

லிங்கத் திருமேனியை ஜடப்பொருளாகக் கருதாமல் உயிராகக் கருதினார். சிவாசார்யர் செய்யும் உபசாரங்களைக் கண்டு, தானும் அதுபோலவே செய்து குடுமிநாதரைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார். பணியைத் தொடங்கினார். அனுதினமும் தனக்குத் தெரிந்தபடி உபசாரம் செய்தார், பசியாற்றினார், மிருகங்கள் தாக்கிவிடுமே என்று காவல் நின்றார், அன்பால் கனிந்து சிவத்தை அணைத்துக்கொண்டு உரையாடி மகிழ்ந்தார். அன்பின் உச்சமாய்க் கண்ணையும் கொடுத்து ஈசனின் கண்ணைக் காக்க முயன்றார்.

இவையெல்லாம் நடந்தது ஆறே நாள்களில். எவ்வித நியதியும் வேண்டு கோளும் இல்லாத அன்பான வழிபாடு அது. அதனால்தான் கண்ணப்பர் ஈசனோடு கலந்துவிடும் பெரும் பாக்கியத்தை அடைந்தார். ஈசனை வணங்குவதும் கண்ணப்பரை வணங்குவதும் ஒன்றே என்ற நிலையைப் பெற்றார். வழிபாட்டில் அன்புக்கு அவ்வளவு வலிமையுண்டு. அதிலும், பிறருக்காக வாழும் நிபந்தனையற்ற அன்பு கடவுளை எளிதாக அடைய உதவும் என்பார்கள். அத்தகைய அன்போடு சிவத்தொண்டு செய்பவர் தான் இவர் என்று அடியார் கூட்டமே இவரைக் குறிப்பிடுகிறது.

அடியாரின் பெயர் சுப்பிரமணியன். 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறுவயது முதலே உலக வாழ்க்கை எதிலும் நாட்டம் இல்லாமல் பொதுத் தொண்டிலும் இறை வழிபாட்டிலும் மனத்தைச் செலுத்தி வாழ்ந்து வந்துள்ளார். யாரோ ஓர் அடியார் சொல்லக் கேட்டு, தம்மிடமிருந்த பால் மாடுகளையும் வண்டி மாடுகளையும் கொடுத்துவிட்டு, விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டாராம்!

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

ஏன் என்று கேட்டதற்கு ‘பிற உயிர்களை இம்சித்து வாழ்வது வாழ்க்கையல்ல என்று அடியார் ஒருவர் சொன்னார். அதன்படியே வாழ முடிவு செய்து விட்டேன்’ என்று சொல்லி விட்டாராம். சிறு வயது முதலே பணத்துக்கு ஆசைப்படாத இவரது குணம் ஆச்சர்யமானது என்கிறார்கள் இவ்வூர் அடியார்கள். யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். யாராவது பணம் கொடுத்தாலும் அதை அப்படியே கோயிலுக்குக் கொண்டு வந்து சுவாமியிடம் வைத்துவிடுவார். சுவாமியிடமும் தனக்கென்று எந்த வேண்டுதலும் இல்லாத எளியவர் எங்கள் சுப்பிரமணியன் ஐயா” என்கிறார்கள். இவர் மட்டுமா, இவரின் குடும்பமும் அப்படித்தான்.

துணைவியார் பெயர் ஜெகதா. மகள் மோனிகா. மகன் தாமரைச்செல்வன். இவர் விருப்பம் போல செயலாற்றும் அன்பான குடும்பம். அனைவருமே சிவனுக்காகத் தொண்டாற்றும் எளிமையான தொண்டர்கள். எளிய வாழ்வில் தொண்டர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்கிறது சுப்பிரமணியனின் குடும்பம்.

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

இவரின் அன்பு எல்லையில்லாதது என்கிறார்கள் அடியார்கள்.

``உண்மையைச் சொல்வதானால்... நாங்கள் செய்து வரும் தொண்டு, வழிபாடு எல்லாவற்றின் புண்ணிய பலா பலன்களிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. நாங்கள் ஈசனுக்கான கடமையைச் செய்ய, இவர் எங்களுக்கான கடமையைச் செய்வார். இவர் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் எங்கள் வேலைகளை அப்படி அப்படியே விட்டுச் செல்கிறோம்.

தோணி பலரையும் கரையேற்றிவிட்டு அது ஆற்றிலேயே கிடப்பதைப் போல், சிவப்பணிக்காக யார் எங்கு சென்றாலும் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, இவர் அவர்களின் வேலைகளைப் பார்ப்பது வழக்கம். தானும் ஆலயங்களைப் பார்க்க வேண்டுமே, திருவிழாவைக் காண வேண்டுமே என்ற எந்த விருப்பமும் இல்லாத மனிதர்’’ என்று நெகிழ்ந்து போகிறார்கள் அடியார் பெருமக்கள்.

கடுமையான உழைப்பாளி. சிந்தனை முழுக்க சிவத்தையே கொண்டவர். எவரிடமும் பழக மாட்டார்; அடியார் என்று ஒருவரை இவர் கண்டுகொண்டால், அவருக்கே தன்னைத் தொண்டராக மாற்றிக்கொள்வார். சதா பதிகம் பாடியபடியே இருப்பார். அவருக்கான உலகம் தனியானது. அதில் சிவமும், நாயன்மார்களும், அடியார்களும் மட்டுமே இருப்பார்கள். அந்தக் காலம் தொடங்கி இப்போது வரை கடுமையாக உழைத்தும் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதியதே இல்லை. நாவுக்கரசப் பெருமான் உழவாரத்தின்போது கண்டெடுத்த பொன்னையும் மணிகளையும் குப்பையோடு சேர்த்தே அகற்றியதைப் போல், தமக்கும் செல்வம் எப்போதுமே புறம்பானது என்று விலக்கிவிடுவாராம்.

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

பலமுறை நாம் பேச்சு கொடுத்தும் அமைதியாகக் கடந்துவிட்டார். எது கேட்டாலும் யாரையோ கேட்பதுபோல ஒரு தெய்விகப் பார்வையை மட்டும் பதித்துவிட்டுக் கடந்து போகிறார். சித்தம் முழுவதும் சிவம் நிரம்பியுள்ளதால் சிவப்பணிகளைச் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளார். மேலும், அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி விட்டுவிட்டோம். அவரைப் பற்றிய விவரங்களை அடியார்களே பகிர்ந்துகொள்கிறார்கள்.

``ஒரு பொருளின் எடை என்ன என்பதை பூமி (புவி ஈர்ப்பு விசை) தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் நிறம் என்ன என்பதை வானம் (சூரிய கதிர்கள்) தீர்மானிக்கிறது. உயிரின் தன்மையைக் காற்று தீர்மானிக்கிறது. ஜீவராசிகள் வாழும் நிலையை நீர் தீர்மானிக்கிறது. பிரபஞ்சத்தின் அசைவை வெப்பம் தீர்மானிக்கிறது. இப்படி சகலமும் பஞ்ச பூதங்களால் நடக்கின்றன என்றால், அவற்றின் தலைவனான ஈசனே முதன்மையானவன்.

சிவத்தைத் தவிர இங்கு யாரும் எப்போதும் சதமில்லை. எவருமே உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. சிவம் ஒன்றே நிலையானது. சிவத்தைப் பற்றிக்கொண்டால் சீவனுக்கு நிம்மதி உண்டாகும். அந்த நிம்மதியைக் கண்டுகொண்டவர் சுப்பிரமணியன் ஐயா. அபிராமியை உள்ளுக்குள் வைத்துக்கொண்ட சுப்ரமணியத்தைப் (அபிராமிப் பட்டர்) போல், இவர் சிவத்தைத் தன் இதயக் கமலத்தில் ஏந்திவிட்டார். இனி மற்றதைப் பற்றி இவருக்கு எந்தக் கவலையுமில்லை; கவனிப்பும் இல்லை’’ என்கிறார் இவரின் சகோதரர்.

``மற்றவர்களுக்காக வாழ்வதுதான் வழிபாடு. மற்றவையெல்லாம் ஆத்ம சடங்குதான். சுவாமிக்கு ஒன்றை மட்டுமே பூரணமாகக் கொடுக்க முடியும். அதுதான் சரணாகதி.

சுவாமியிடம் நாம் கேட்டுப் பெறுக்கூடியதும் ஒன்று மட்டுமே. அது, பிறப்பில்லா முக்தி நிலை. மற்ற எல்லா செல்வங்களையும் பாதுகாப்பையும் நாம் கேட்காமலேயே அவர் கொடுப்பார். கேட்டுப் பெற வேண்டியது சிவபதத்தை மட்டுமே.

ஆகவே, அன்பால் சுவாமியை வழிபடுங்கள். எங்கும் நிறைந்திருப்பது சிவம் என்று கருதினால், எல்லா உயிர்களையும் கருணையோடு நேசியுங்கள் என்பார் சுப்பிரமணியம் ஐயா. அதுவே தெளிவான உண்மை. திருமுறைகளின் உட்கருத்தும் அதுதானே. அதனால்தான் எங்கள் சுப்பிரமணியன் ஐயாவின் வாழ்வே அன்பால் மலர்ந்திருக்கிறது’’ என்கிறார்கள் அடியார்கள்.

விடைபெறும் நேரம் வந்தது. நல்ல வெயில். சுவாமிக்கு எதிரே நிழலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருந்தார் சுப்பிரமணியன் ஐயா. அவரின் அருகில் நாய்களும் ஆடுகளும் பசுவும் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. எது சிவம்... எது சிவமல்லாதது என்ற பேதமே தெரியாமல் மோனத்தில் அந்த இடம் மூழ்கியிருக்க... நம் மனதும் சிவத்தில் திளைத்தது. அந்தப் பேரின்ப திளைப்பிலிருந்து விலக எளிதில் மனம் இடம் கொடுக்குமா...

பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம்!

ஈசனுக்கு அருகே சுடர்விட்டுக்கொண்டிருந்த தீபம், தலை அசைத்து நமக்கு விடைகொடுத்தது.

- அடியார்கள் வருவார்கள்...

விருந்தளித்த ஈசன்!

திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத் துக்காக உறவினர் மற்றும் சிவனடி யார்களுடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் நோக்கி சென்றார். வழியில், மதிய நேரம் பசியின் காரணமாக அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 29: 
'இதயக் கமலத்தில் எம்பிரான்!'

அவர்கள் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் `உச்சிநாதர்' என்றும் `மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதியே `திருநெல் வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்குதான் கோயில் அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், அந்தக் குழந்தையின் வாழ்வில் வளமும் நலமும் கூடும் என்பது நம்பிக்கை.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன்