மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

எல்லாம் ஈசன் கொடுத்தது; இதில் நமக்கென்று எது உள்ளது என்று அள்ளி அள்ளிக் கொடுத்து ஈசனருளைத் தேடிக்கொண்ட அடியார்களைப் பலரும் பார்த்திருக்கலாம். அவர்களுள் முக்கியமான ஒருவரே, இந்த இதழின் புண்ணிய புருஷர்!

ஓர் இலை உதிர்வதுகூட வேருக்குத் தெரியாமல் நடப்பதில்லை! அப்படித்தான் ஈஸ்வரனின் சித்தம் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை.

`எல்லாமே ஈஸ்வர கிருபை’ என்று வாழ்வதுதான் அடியார்களின் வாழ்க்கை முறை. எது நடந்தாலும் நம்மை ஈசன் காப்பான் என்ற வைராக்கியமே அவர்களின் அடையாளம்.

வைராக்கிய பக்தி கொண்ட ஒருவனை ஈசன் ஓடோடி வந்து காப்பான் என்ற செய்தியை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது பெரிய புராணம். தவங்கள் செய்தும், யாகங்கள் இயற்றியும், ஆலய தரிசனம்; திருப்பணிகள் ஆயிரம் செய்தும் காண முடியாத இறைவனை, நாயன்மார்கள் பலரும் தங்களின் வீடு தேடி ஓடிவரச் செய்தது, இந்த வைராக்கிய பக்தியால்தான்.

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

எல்லாம் ஈசன் கொடுத்தது; இதில் நமக்கென்று எது உள்ளது என்று அள்ளி அள்ளிக் கொடுத்து ஈசனருளைத் தேடிக்கொண்ட அடியார்களைப் பலரும் பார்த்திருக்கலாம். அவர்களுள் முக்கியமான ஒருவரே, இந்த இதழின் புண்ணிய புருஷர்!

இவர் பெயர் பாபு ஐயா. ஷண்முகம் என்ற இயற்பெயர் இருந்தாலும் அடியார் கூட்டத்தில் இவர் பாபு ஐயாதான். எங்கு யாருக்கு எந்தக் குறை என்றாலும் அதை முடிந்தவரை சரி செய்யப் பார்க்கும் அன்புள்ளம் கொண்டவர். ஈசனின் திருப்பணியா, ஈசனின் பூசைக்கு ஏதும் தேவைப் படுகிறதா... கடன் வாங்கியாவது பணம் கொடுத்து உதவும் வைராக்கிய பக்தி கொண்டவர் பாபு ஐயா.

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

“எல்லாமே ஈசன் போட்ட பிக்ஷை ஐயா. நமதென்று ஒன்று இல்லவே இல்லை. ஆடிய ஆட்டத்தைக் கழிக்க கொஞ்ச நாள் இங்கு இருக்க வைத்திருக்கிறார் ஈசன். நாமோ மேலும் மேலும் ஆடி, பாவத்தைச் சுமந்து கொண்டிருக்கிறோம். இருக்கும்போது கொடுப்பது பெரிதல்ல; ஏழ்மையின் உச்சத்தில்கூட கொடுத்துப் பேறு பெற்றவர்கள் நம் நாயன்மார்கள்.

மனித குலத்தின் மாண்புமிக்க ஆசான்களான அவர்களின் வாழ்க்கையே நமக்கான பாடங்கள். இந்த எளியோன் ஒன்றுமே செய்யவில்லை. தியாக வடிவான பல அடியார்களின் தொடர்பால், அவர்களின் அன்பால் இந்தச் சிறியேனும் அடியார்களின் திருப்பாதங்களுக்கு ஏதோ சேவை செய்கிறேன், அவ்வளவுதான்!’’ என்று பணிவுடன் பேசியவர், தொடர்ந்து நாயன்மார் ஒருவரின் திருக்கதையை விளக்கிப் பேசினார்.

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

``அன்று கஞ்சாறு திருத்தலமே திருவிழாக் கோலமும் மணவிழாக் கோலமும் ஒருங்கே பூண்டிருந்தது. சேனாதிபதி கஞ்சாறர் எல்லை யில்லா பெருமிதத்தால் ஈசனைத் துதித்தபடி இருந்தார். அவரின் ஒரே திருமகளுக்கு மறுநாள் திருமணம். அதுகுறித்த நினைவே அவருக்கு ஆனந்தத்தை அளித்தது. அதுவும் சிவபக்தியில் சிறந்த மாவீரர் ஏயர்கோன் கலிக்காமரே மணமகன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மணமகன் ஊர் எல்லைக்கு வந்து விட்டார் என்று கேள்விப் பட்டதும் அவரை எதிர்கொண்டு அழைக்க கஞ்சாறர் புறப்பட்டார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்றிருந்தார் ஒரு மாவிரதர். அந்த மகாயோகியை வரவேற்ற கஞ்சாறர், அவரிடம் தன் குடும்பத்தில் இருப்பவரை ஆசீர்வதிக்கச் சொன்னார்.

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

அப்படியே அனைவருக்கும் ஆசி கூறிய மாவிரதராகிய அந்த யோகி, கார்மேகத்தைப் பழிக்கும் கருங்கூந்தலைப் பின்னலாகப் பின்னி அலங்கரித்து மணமகனுக்காகக் காத்திருந்த மணமகளைக் கண்டார். தனக்கு உதவக்கூடிய அந்தக் கருங்கூந்தலைக் கொடுக்கும்படி கேட்டார். அடியார்கள் கேட்டு எதையும் மறுக்காத கஞ்சாறர், கொஞ்சமும் தயங்கவில்லை; தாமதிக்கவில்லை. மகளின் கூந்தலை நறுக்கித் தரத் தொடங்கினார்!

‘ஐயோ... நாளை திருமணம், இன்று மணமகன் வந்து மண மகளைக் காணவுள்ளார். இந்த நிலையில் கூந்தலை அறுப்பது நியாயமா! பெண்ணுக்குக் கூந்தல்தானே அழகு. அதைச் சிதைப்பது மானம் அழிக்கும் செயலன்றோ!’ என்று சுற்றம் தடுத்தது. ஆனால், ‘கேட்பது சிவம்... கொடுப்பது என் பாக்கியம். எவர் தடுத்தாலும் அது சிவக்குற்றம்’ என்றபடி கூந்தலை அறுத்து யோகியிடம் கொடுத்தார் கஞ்சாறர். மறுகணம் யோகி மறைந்தார். எல்லோரும் திடுக்கிட்டனர்.

புண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை!'

சேய்கறி கேட்டு திருவிளையாடல் புரிந்த சிவத்தின் லீலை எல்லோரும் அறிந்ததன்றோ! அன்றும் சகலரும் காண விடையேறிய பெருமானாய் காட்சி தந்து கருணை பொழிந்தார் அந்த ஈசன். சகலருக்கும் ஆசி தந்தான். மணமகள் முன்னிலும் ஜொலிக்கும் திருமகளானாள். கஞ்சாறர் ‘மானக்கஞ்சாறர்’ என்றானார்.

எதைக் கொடுக்க ஒருவன் தயங்குவானோ அதைக் கொடுத்து பேறுபெற்றவர் கஞ்சாறர். அவரின் வைராக்கிய பக்தியே நம்பிக்கையின் உச்சம். ஆக, `இதைக் கொடுக்கலாமா; அதைக் கொடுக்கலாமா’ என்று கணக்குப் போட்டுக் கொடுப்பதெல்லாம் புண்ணியக் கணக்கில் வராது ஐயா.

எங்கும் எப்போதும் எதையும் கொடுக்க சித்தமாக இருக்க வேண்டும் அதுவே பக்தி”

என்கிறார் பாபு ஐயா.

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட இவர் 11-ஆம் வகுப்புவரை படித்துள்ளார். தூசிமாமண்டூரில் பிறந்தாலும் காஞ்சிபுரம் `தாமல்’ பக்கத்தில் உள்ள கிராமங்களிலேயே வளர்ந்து, படித்து, வாழ்ந்துவருகிறார். பிறப்பிலேயே சிறந்த ஒழுக்கமும் பக்தியுமாய் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவர், கடந்த 15 ஆண்டுகளாக குருவின் வழிகாட்டலால் அடியாராக வாழ்ந்து வருகிறார்.

“குருதான் சகலமும்; நாங்கள் நேரிடையாக தரிசிக்கும் சிவத்தின் வடிவம் எங்கள் குருவே. குருவைச் சரணடைந்தால் போதும். எப்பேர்ப்பட்ட கடையனும் முக்தி பெற்று விடுவான். ஒன்றுமே அறியாத இந்த எளியவன் கடைத்தேறப் போவதும் குருவின் அருளாலேதான் ஐயா.”

பாபு ஐயாவின் பேச்சில் குருபக்தியை உணரமுடிந்தது. சங்கீதா என்ற இல்லறத் துணையும், நர்மதா, தேவராஜன் என்ற நன்மக்களும் கொண்ட இனிய அடியார் குடும்பம் இவருடையது. அடியாருக்குச் சேவையாற்றும் இனிய பணியை இவரது குடும்பமே செய்துவருகிறது. இவர் தோட்டத்தில் விளையும் பூக்கள், சுற்றுவட்டார சிவாலயங்கள் மட்டுமன்றி தமிழகமெங்கும் செல்கின்றன.

‘நால்வர்’ என்ற இவருடைய அறுவடை இயந்திரம் அடியார்களின் நிலத்தை உழுவதற்கு நாளும் இலவசமாகச் செயல்படுகிறது. எங்கே உழவாரப் பணி நடந்தாலும் அங்கே இவர் குடும்பமே அன்னம் பாலித்து அடியார்களின் பசியைப் போக்குகிறார்கள்.

தூசி மாமண்டூரில் விரிந்து பரந்துள்ள சித்ர மேகத் தடாகம் என்னும் பேரேரியைச் சுற்றி அடியார்கள் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்துள்ளார்கள். இந்தப் பணியில் இவரின் பங்கு சிறப்பானது. எங்கு எந்தப் புனித கைங்கர்யம் ஈசனின் பேரில் நடந்தாலும் சரி, அங்கு முன்னின்று பங்களிப்பைச் செய்வார் பாபு ஐயா. அதேநேரம், எங்கும் தன் பெயர் வந்துவிடாமல் ஆண்டவன் பெயரே நிலைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

“எப்போதும் எவருக்கும் தொந்தரவு கொடுக் காத வாழ்க்கையை வாழவேண்டும். அதுவே மிகச் சிறந்த வழிபாடு. என் உயிர், உடல், உறவுகள், சொத்து எல்லாமே ஈசன் போட்ட பிக்ஷை. எல்லாமே கொடுத்த என் ஐயனுக்கு நான் எதைக் கொடுப்பது; எப்படி ஆராதிப்பது.

என் கடைசி மூச்சுவரை அடியார் திருப்பாதங் களுக்குச் சேவை செய்து வாழவேண்டும். இதுவே இறைவனிடம் எப்போதும் நான் வேண்டிக்கொள்வது. எவருக்கும் பயன்படாத வாழ்க்கை வீண்தானே ஐயா...” என்று கேட்டு விட்டுச் சிரிக்கிறார் பாபு ஐயா.

அவர் சிரிக்கிறார்; நாமோ, அந்தக் கேள்வியின் வெம்மை தாங்காது நாங்கள் விழிக்கிறோம். உபயோகமற்று இருக்கும் ஒரு பொருளைக் கூட மற்றவருக்குக் கொடுக்கத் தயங்கும் இன்றைய சூழலில் இப்படியும் சில மனிதர்களா என்று வியக்கிறோம். கூட வந்தவர் சொன்னார்.

“நிச்சயம் பாபு போன்றோர்கள் ஆங்காங்கே வாழ்கிறார்கள். அதனால்தான் கடல் கரையை மீறாமல் இருக்கிறது; பூமி பாதையைவிட்டு விலகாமல் இருக்கிறது... இறை நம்பிக்கையும் பலரிடம் ஈரத்தோடு இருந்துவருகிறது...” என்றார்.

உண்மைதான். இவரைப் போன்ற அடியார் களால்தான் இந்த அகிலம் பழுதில்லாமல் இயங்குகிறது!

- அடியார்கள் வருவார்கள்...