மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 31: 'ஆடலே எங்கள் ஆராதனை!'

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

ஆடல் கலையின் நாயகனான ஈசனுக்கு, அந்த ஆடல் கலையையே திருப்பணியாகச் செய்து தொண்டு புரிந்து வாழும் இரண்டு சிறுமிகளையே இந்த இதழில் சந்திக்கவுள்ளோம்.

அந்தப் பரமாணு அசைந்தது; ஆடியது. ஆடலோடு அது தமது அலகிலா விளையாட் டைத் தொடங்க, வெடித்தது; பிரபஞ்சமாய் விரிந்தது.

தானே சகலமுமாய் வியாபித்து அண்டசராசரங்களாகவும் அவற்றிலுள்ள ஜீவன்களாகவும் எழுந்தது. எல்லையில்லாத அந்தக் கருணாமூர்த்தி எல்லாமுமாக ஆடிக் கொண்டிருந்தார்!

உருவமே இல்லாத ஈசன் பிரபஞ்சமாக விரிந்தபோது, அந்த வடிவத்தை நம் ஞானியர் அருவுருவமாக - சிவலிங்கத் திருமேனியாக வடித்தார்கள்; வழிபட்டார்கள். ஆடிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச இயக்கத்தை உருவமாக - நடராஜ மூர்த்தியாக உருவாக்கினார்கள். இப்படித்தான் மாபெரும் தத்துவ வடிவமாக நடராஜ மூர்த்தி தோன்றினார்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

ஆடல் கலையின் நாயகனான ஈசனுக்கு, அந்த ஆடல் கலையையே திருப்பணியாகச் செய்து தொண்டு புரிந்து வாழும் இரண்டு சிறுமிகளையே இந்த இதழில் சந்திக்கவுள்ளோம். ஆலயம் தோறும் சென்று ஈசனின் மகிமைகள் குறித்து விளக்கி ஆடி வரும் இவர்களைக் காண புதுச்சேரிக்குச் சென்றோம்.

புதுச்சேரி அனந்தீஸ்வரர் ஆலயத்தில் இருவரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஆடல்வல்லானின் பெருமைகளை சொல்லாமல் சொன்னது அவர்களின் தாண்டவம். பம்பரமாக சுழன்று ஆடும் அவர்களின் தாண்டவத்தை மெய்சிலிர்க்க உடல் விதிர்க்க பார்த்துக் கொண்டிருந்தோம்.

சிவமாக ஆடிக்கொண்டிருந்த சிறுமி எஸ்.சிவகலை; சக்தியாக சதிராடிக் கொண்டிருந்தது ஆர்.குணேஸ்வரி.

சிவசக்தி நாட்டியமா அது... இல்லையில்லை, சீவன் சிவனைத் தேடும் ஒரு யோக அசைவா கவே நிகழ்ந்துகொண்டிருந்தது. அசாத்திய வேகத்தில் அந்தக் குழந்தைகள் ஆடும்போது, அங்கு அவர்களை இயக்கிய ஒரு சக்தி அந்த நாட்டியத்தில் தென்பட்டது. அது வெறும் கலையாகத் தோன்றவில்லை; ஒரு ஆத்மார்த்த வேள்வியாகத் தோன்றியது. விசாரித்தோம்.

சிவகலையின் தந்தை செந்தில்குமரன், தாய் அமுதா. வாழ்வது புதுச்சேரி லாஸ் பேட்டையில். எளிமையான குடும்பம் அது. தாயும் தந்தையும் உழவாரம், தேவாரம், அதுவே வாழ்வின் ஆதாரம் என்று தொண்டு செய்து வாழ்பவர்கள். தங்கள் பெண் பிள்ளையும் தங்களைப் போலவே ஈசனுக்குச் சேவை செய்து வாழவேண்டும் என்று விரும்பினார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

அடியார்கள் வழிகாட்ட ஈசனுக்கு விருப்பமான நாட்டியக் கலையை பயிற்றுவித்து ஆலயம்தோறும் எந்த எதிர்பார்ப்புமின்றி ஆடவைக்க விருப்பம் கொண்டார்கள். ஞானக் குழந்தையான சிவகலையும் பரதகலா மண்டலம் என்ற நாட்டியப் பள்ளியில், நான்கு வயது முதலே ஆடக் கற்றுக்கொண்டார்.

நல்லாசிரியரான பக்தன் காயத்ரி என்பவர் வழிகாட்ட, இந்த ஐந்து ஆண்டுகளில் நடனத்தில் தேர்ச்சிபெற்று வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் குழந்தை புதுச்சேரி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, மரக்காணம் போன்ற பகுதிகளிலுள்ள பல சிவாலயங்களில் ஆடி வருகிறார். எந்தக் கோயிலிலும் எந்த பயனையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் விசேஷம்.

“வந்துபோகும் செலவுக்கென சிறிது பணம் கொடுத்தோம். அதையும் மறுத்துவிட்டார்கள். ஏழ்மையிலும் பக்குவமான இவர்கள், அடியார் களுக்கு ஓர் அடையாளம்.

இவர்கள் வீட்டு ஆண்கள் பிழைப்புக் காக வேறு வேலைகளுக்குப் போய்விட்டால், இந்தக் குழந்தைகளின் தாயார்கள்தான் அழைத்துக் கொண்டு வருவார்கள். இரவு எவ்வளவு நேரமானாலும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அழைத்துப் போவார்கள். எவ்வளவு அர்ப்பணிப்பு; ஈசன் மேல் எவ்வளவு ஈடுபாடு’’ என்று வியக்கிறார்கள் அடியார்கள்.

சிவகலையைப் போலவே சக்தியாக நடனமாடும் குணேஸ்வரியும் நாட்டியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்தான். தந்தை ரமேஷ், தாய் தமிழரசி. இவர்களும் ஈசனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களே. `எல்லாமே ஈசன்’ என்று அடியார்களுக்குத் தொண்டு செய்யும் தூய மனம் கொண்டவர்கள்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

குணேஸ்வரியும் சிவகலையும் ஒரே கால கட்டத்தில் ஆடல்கலையை கற்றுக்கொண்டதும் ஆட வந்ததும் ஆச்சர்யமான விஷயம். இத்தனைக்கும் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் பயில்பவர்கள்; வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள்; வெவ்வேறு நடன ஆசிரியர்களிடம் பயில்பவர்கள். எனினும் இவர்கள் இருவரையும் இணைத்து ஆடவைத்ததும் ஈசனின் திருவிளையாடல்தான் என்று நெகிழ்ந்து கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

“மரக்காணம் - கூனிமேடு அருகே உள்ள சூர்யநாதேஸ்வரர் கோயிலில் நடனமாட குணேஸ்வரியோடு சென்றிருந்தோம். அங்கு ஏற்கெனவே சிவவேடத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தார் சிவகலை.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

வேறொரு சிவநாட்டியம் ஆட வந்திருந்த குணேஸ்வரியை அங்கிருந்த அடியார் பெரு மக்கள்தான், வழிகாட்டுதல் தந்து சக்திதேவியாக இணைந்து சிவனோடு ஆட வைத்தார்கள். அன்று முதல் முதலாக இரு குழந்தைகளும் இணைந்து ஆடிய சிவ-சக்தி நடனம் பெருத்த வரவேற்பை அளித்தது.

அங்கு வந்திருந்த பக்தர்கள் எல்லோரும் கூடி மலர் தூவி வாழ்த்தினார் கள். எங்களுக்கு நெகிழ்ச்சியால் அழுகையே வந்துவிட்டது. அன்று முதல் `இது ஈசனே இணைத்து வைத்த நாட்டிய பந்தம்’ என்று கருதி ஒவ்வொரு கோயிலாக அழைத்துப் போகிறோம்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

கும்பாபிஷேகம் முதல் மாத பிரதோஷம் வரை எந்த விசேஷமானாலும் எங்களைப் பல கோயில்களில் அழைப்பார்கள். நாங்களும் அதை ஒரு ஈஸ்வர கட்டளையாகக் கருதி செய்துவருகிறோம். அடியார்கள் கூட்டம் எங்களை வழிகாட்டி நடத்துவதால், ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்’’ என்றார்கள் குணேஸ்வரியின் தாய்-தந்தை.

குணேஸ்வரியின் மூத்த சகோதரி ரேஷ்மிதா குணேஸ்வரிக்கு முன்பாகவே நடனம் கற்று தனியாக ஆலயங்களில் ஆடி வந்துள்ளார். `ஈசனுக்காகவே தன் நாட்டியம்’ என்று ஆடும் வைராக்கியம் கொண்ட இவரும் தற்போது இந்தக் குழந்தைகளோடு சேர்ந்து வேறுவித சிவ நாட்டியங்களை ஆடி வருகிறார்.

“நாட்டியம் என்பதே சிவமாகி நின்று சிவத்தை வழிபடும் ஒரு யோக நிலைதான் ஐயா. நாட்டியத்தின் ஒவ்வொரு கூறும் சிவம் என்றே சொல்லலாம். அவனின்றி ஆட்டம் ஏது ஜீவனுக்கு. பிரபஞ்சமெல்லாம் அவன் அங்கம்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

அங்கு நிறைந்திருக்கும் நாதம் அவன் இசை; சூரிய-சந்திரன் மற்றும் தாரகைகள் அவன் ஆபரணங்கள். ஒரு கால் தூக்கி ஆடும் ஈசனின் ஆட்டமே ஜீவாத்மாக்களின் மூலத்தைச் சொல்லும் ரகசியம்.

பிறப்பு, வாழ்வு, மோட்சம், அருளல், மாயை ஆகியவற்றைக் குறிக்கும் தெய்விகக் குறியீடுதான் நடராஜப் பெருமான். ஆழ்ந்த ரகசியத்தைக் கொண்ட பெருமானை நம்மைப் போன்ற எளியோர்கள் எளிதில் வர்ணித்துவிட முடியாது. ஆம், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் வியக்கும் பேரதிசயம் நடராஜ மூர்த்தம்.

அனவரதமும் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனின் ஆடலில்தான் சகலமும் இயங்குகின்றன. மனிதன் மொழியைக் கண்டறிவதற்கு முன்பு தன் முக பாவனைகளாலும் கை-கால் அசைவுகளினாலும்தான் செய்திகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டான்.

அப்படித்தான் மனிதரின் ஆதி கலையாக நாட்டியம் உருவானது; கலைகளின் தாயாக அமையும் பெருமையை பெற்றது. உலக நாட்டியங்களில் பழைமையும் பெருமையும் கொண்டதாக பரதம் உருவானது. அதன் ஆதி குருவாக ஈசனே அமைந்தான்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

ஈசன் (ஆண்) ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி (பெண்) ஆடிய ஆடல் இலாசியம் என்றும் போற்றப்பட்டன. நால்வகை வேதங்கள் தோன்றி வழிபாடும் வாழ்க்கை நெறியும் முறைப்படுத்தப்பட்டன. அப்போது, அவற்றை இன்னும் எளிதாக எளிய மக்களும் உணர்ந்து போற்றும் வகையில், நாட்டியமே ஐந்தாவது வேதமாக - ஆண்டவனைத் தொழும் எளிய வழியாக ஈசனால் அருளப்பட்டது.

உச்சாடனத்தை ரிக் வேதத்திலிருந்தும், பாடலை சாம வேதத்திலிருந்தும், பாவனைகளை யஜுர் வேதத்திலிருந்தும், உணர்வுகளை அதர்வண வேதத்திலிருந்தும் பிரம்மன் எடுத்துக் கொடுத்தார். அதைப் பரத முனி முன்னின்று புதிய சாஸ்திரமாக உருவாக்கிட, நடனக்கலை ஐந்தாவது வேதமாக உருவானது.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

ஈசனே பலவகை நாட்டியங்களை ஆடி எல்லோருக்கும் நாட்டியக் குருவாகி நின்றார். விண்ணும் மண்ணும் ஆடல் அரங்கம்தான்; ஏன் நம் உடலே இடைவிடாத நாட்டிய அரங்கம்தானே! இதயம் இயக்க, ரத்த நாளங்கள் துள்ளிக் குதிக்க, எந்நேரமும் ஒரு நாட்டியம்... உறங்கும்போதும் நமக்குள் நடந்து கொண்டுதானே இருக்கிறது. இந்த நாட்டியத்துக்கும் சூத்திரதாரி அந்த மாயக் கூத்தன் தானே!” என்கிறார் சிவகலையின் தந்தை செந்தில்குமரன்.

“ராமனின் தம்பி பரதன், சகுந்தலையின் புதல்வன் பரதன், மாபெரும் ஆத்ம ஞானியான ஜடபரதர், பரத முனிவர் ஆகிய நான்கு பரதர்கள் பற்றி நம் புராணங்கள் கூறும். இவர்களில் பிரம்மாவிடம் உபதேசம் பெற்ற பரத முனிவரே இந்தக் கலையை வகுத்து நாட்டிய சாஸ்திரம் எழுதினார். பிரம்மமாகவே விளங்கிய ஜடபரதர் இக்கலையின் சூட்சுமங்களை, மேன்மைகளை எடுத்துரைத்து ஆசி வழங்கினார்.

சகுந்தலை மகன் பரதன் இக்கலையைப் பரவச் செய்தான். ராமனின் தம்பி பரதன் இந்தக் கலையில் சிறந்து விளங்கினான் என்று கூறப்படுகிறது. நான்கு பரதர்களும் இணைந்து பங்களித்த கலை என்பதால் இது பரதம் என்றானது என்பர்.

சம்ஹாரம் செய்யும் ஈசனே ஆனந்த நாட்டிய மும் ஆடுகிறான். நினைத்துப் பாருங்கள், ஈசனைத் தவிர உலகில் வேறெந்த கடவுளாவது சகல உணர்வுகளையும் கொண்டவராக இருத்தல் முடியுமா. அவன் ஆடுவான்; பாடுவான்; ஆக்குவான்; அருளுவான்; அழிப்பான் எல்லாமும் செய்வான்.

புண்ணிய புருஷர்கள் - 31: 
'ஆடலே எங்கள் ஆராதனை!'

வட்டத்துக்குள்தான் அந்த நாயகனே ஆடுகிறான். வட்டம் என்பது குறைந்த அளவு எதிர் விசை கொண்ட வடிவம். புரிகிறதா! அதிகம் கர்மாக்களை சேர்த்துக்கொள்ளாமல் உன் ஆட்டம் இருக்கட்டும் என்ற அடையாளமே வட்டத்துக்குள் ஈசனின் நாட்டியம் இருப்பது.

நம்முள் ஒளிந்திருக்கும் தெய்விகத் தன்மையை எடுத்துக்காட்டும் கலை வடிவம் நாட்டியமே. இவர்களின் உடலே ஒரு கருவியாகி ஈசனைத் தொழும் வழிபாட்டைச் செய்கிறது. ஆடும்போது, ஜீவன் சிவனைத் தேடுகிறது. கண்டுகொண்டு விட்டால், அங்கு நாட்டியம் யோகமாக மாறிவிடுகிறது.

எந்த நோக்கமுமின்றி காற்றுக்கு ஆடும் இறகாக உடல் அசைந்து பரமானந்தத்தை அனுபவிக்கிறது. உனக்காக ஆடாதே; உன் பார்வையாளர்களுக்காக ஆடாதே; பரமனுக் காக ஆடு; உன்னை ஆடவிட்டு அழகு பார்க்கும் தேவனுக்காக ஆடு என்போம்” என்கிறார் குணேஸ்வரியின் தந்தை ரமேஷ்.

“விருப்பம் வேண்டுதல் எதுவும் இல்லை ஐயா. ஈசனுக்கு தொடர்ந்து சேவை செய்து வரவேண்டும். தில்லையில் அந்த பொன்னம் பலத்தான் முன்னிலையில் இந்தக் குழந்தைகள் ஆடவேண்டும். இவர்களின் நாட்டியத்தை அந்தக் கூத்தபிரான் மகிழ்ந்து காணவேண்டும். அது போதும். எங்கள் பிறவிக்கான பெரும்பயன் அது” என்று உணர்ச்சிவசப்பட்டார்கள் அவர்கள்.

தில்லையில் மட்டுமல்ல, அந்த ஆடல்வல்லான் அருளும் எல்லா தலங்களிலும் இவர்கள் ஆடுவார்கள். உலகம் இவர்களை வாழ்த்தி வரவேற்கும் காலம் விரைவில் வரும். அதன்பொருட்டு நாம் அனைவரும் அந்த ஆடல்வல்லானை வேண்டிப் பிரார்த்திப்போம்.

- அடியார்கள் வருவார்கள்.

இரண்டு வகை பஞ்சாமிர்தம்!

றைவனுக்கான உபசாரங்களில் ஒன்று அபிஷேகம். பால், தயிர், பன்னீர் முதலான திரவியங்களால் அபிஷேகம் செய்வார்கள். அவற்றில் தனித்துவம் வாய்ந்தது பஞ்சாமிர்த அபிஷேகம்.

 பஞ்சாமிர்தம்
பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தத்தில் இரு வகை உண்டு. அவை: ரச பஞ்சாமிர்தம், ஃபல பஞ்சாமிர்தம். பால், தயிர், நெய், இளநீர், தேன், சர்க்கரை ஆகியவை கலந்தது ரச பஞ்சாமிர்தம்.

ரச பஞ்சாமிர்தத்துடன் வாழை, பலா, மாங்கனிகளைச் சேர்த்து செய்யப்படுவது ஃபல பஞ்சாமிர்தம் ஆகும்.

- ஏ.லக்ஷ்மி, சென்னை-44